Thursday, January 11, 2024

தமிழ்த் திரையிசையில் பொதுவுடைமை

 ''எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்

இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்

வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை

நீங்கி வர வேண்டும் திருநாட்டில் பொதுவுடமை"

  எனும்'கறுப்புப்பணம்'திரைப்படத்தில்,  கண்ணதாசன் எழுதி,அவரே திரையில் தோன்றி,அவருக்காக சீர்காழி கோவிந்த ராஜன் பாடிய இப்பாடலை கேட்கும்போ தெல்லாம்,நல்லெண்னம் கொண்டோர்க் கும்,சமத்துவம்  பேணுவோர்க்கும், நெஞ்சத்தில் செவிகளால் தேன் நிறையும்.

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்லது அரசு

  எனும் வள்ளுவனின் கூற்றுப்படி,இயற்றிய ஆணையால் ஈட்டிய செல்வததை,வகுத்துப் பிரிக்கையில்,தனிவுடமை தகர்த்து,சமத்து வம் பொதுவுடமைமையை புணரமைக்கும் என்பது,நிர்வாகத்தின் நெறியியல் பாடமாக அமைந்தது.

  பொதுவுடமைக் கருத்தினை 1954 -லில் வெளிவந்த,"எத்தனை காலந்தான் ஏமாற்று வார் இந்த நாட்டிலே"எனும் தஞ்சை ராமைய் யா தாஸ் எழுதிய பாடலின் இடையே,

"தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம்

கல்வி தெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம்"

மற்றும்,

"ஆளுக்கொரு வீடு கட்டுவோம் 

அதில் ஆட கலைகளை சீராகப் பயில்வோம்" 

    போன்ற வரிகளால்,கல்வியையும், இல்லத்தையும்,அனைவர்க்கும் பகிர்ந்த ளிக்கும் வேட்கையினை உணர முடிந்தது. பின்னர் பட்டுக்கோட்டையார்'திருடாதே' திரைப்படத்திற்கு எழுதிய, 

  "திருடாதே பாப்பா திருடாதே"பாடலுக்கு இடையே,

"இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால் 

பதுக்குற வேலையும் இருக்காது"

   எனும் வரிகளும்,'அரசிளங்குமரி'திரைப் படத்திற்கு அவர் புனைந்த, 

"சின்னப்பயலே சின்னப் பயலே சேதி கேளடா"

 என்ற பாடலுக்கிடையே தோன்றும்,

"தனி உடமை கொடுமைகள் தீர தொண்டு செய்யடா

தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யாடா"

  எனும் மெய்யான வரிகளும்,பொதுவுடமை சித்தாந்தத்தை பொதுநீதி ஆக்கின.

  பொதுவாக,எம்.ஜி.ஆரின் திரைப்படப் பாடல்களில்,பொதுவுடமைச் சிந்தனைகள் மிதமிஞ்சியிருக்கும்.அவரின்'சந்திரோத யம்'திரைப்படத்தில் மிகவும் பிரபலமான,

"புத்தன் ஏசு காந்தி பிறந்தது 

பூமியில் எதற்காக"

எனும் ஏற்றமிகு பாடலில் இழையோடும்,

"சிரிப்பவர் அழுவதும் அழுதவர் சிரிப்பதும் விதிவழி வந்ததில்லை;

ஒருவருக்கென்றே இருப்பதை எல்லாம் இறைவனும் தந்ததில்லை"

எனும் வரிகள்,தனியுடமையைச் சாடும்.

அதற்கு முன்பே'படகோட்டி'திரைப்படத்தில்

"கொடுத்ததெல்லாம் கொடுத்தான்

அவன் யாருக்காக கொடுத்தான்

ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை

ஊருக்காகக் கொடுத்தான்"

  எனும் அழுத்தமான பாடல் வரிகள்,தடித்த சொற்களால் தனியுடமையைத் தாக்கி,

"எதுவந்த போதும் 

பொதுவென்று வைத்து

வாழ்கின்ற பேரை 

வாழ்த்திடுவோம்"

   என்று பொதுவுடமை கோட்பாட்டிற்கு கெட்டி மேளம் கொட்டி,வாழ்த்துரை வழங்கியது.

 'புதிய பூமி'திரைப்படத்தில்"நான் உங்கள் வீட்டுப்பிள்ளை"எனும் பாடலின் நடுவில்,

"உன்கொரு பங்கும் எனக்கொரு பங்கும்

  உலகில் நிச்சயம் உண்டு" 

  எனும் வரிகள் மூலம் எல்லார்க்கும் எல்லா மும் உண்டு என்று சமத்துவக் குரலினை உயர்த்திப் பிடித்தது.

  ஆனால்,இப்படி படிப்படியாக பொதுவுடமை சிந்தனைத்தூவல்களை சிதறவிட்ட, எம்.ஜி.ஆர் திரைப்படப்பாடல்களுக்கு முற்றி லும் மாறுபட்டு,தனியுடமைப் பாடலொன்று அவரின்'பாசம்'திரைப்படத்தில் பிரபலமாகி அதுவும் வெகுவாக ரசிக்கப்பட்டது.

"உலகம் பிறந்தது எனக்காக

ஓடும் நதிகளும் எனக்காக

மலர்கள் மலர்வது எனக்காக

அன்னை மடியை விரித்தால் எனக்காக"

  என்று தன்னாட்சியை ஆர்ப்பரிக்கும் வண்ணம் கம்பீரமாய் ஒலித்த இப்பாடல் மூலம் எம்.ஜி.ஆர் தன்னை முதன்மைப் படுத்தி,தன்னையே ரசிக்கும் ஒரு ரசிகன் தான் என்பதை,முன் நிலைப்படுத்தினார். எம்.ஜி.ஆரின் "நான் ஆணையிட்டால்" மற்றும்"நினைத்ததை நடத்தியே முடிப்ப வன் நான்"போன்ற பாடல்களும் அவரின் தன்னிலை தாக்கத்தை முன்னுக்குத் தள்ளின.

  'கறுப்புப்பணம்'திரைப்பாடலைத் தவிர மேலே குறிப்பிட்ட,எம்.ஜி.ஆர் பாடல்கள் அனைத்தையும் டி.எம்.சௌந்தராஜன் தன் தனித்துவக்குரலால் பாடி 'தனிவுடமை'ஆக் கினார் என்பது குறிப்பிடத்தக்கது.     

   'படகோட்டி'&'சந்திரோதயம்'திரைப்பட பாடல் களுக்கு வாலியும்'புதியபூமி'பாட லுக்கு பூவை செங்குட்டுவனும் அற்பு தமாய் வரிக ளமைத்தனர் என்பதையும்,'மலைக் கள்ளன்' திரைப்படத்திற்கு,எஸ்.எம். சுப்பைய்யா நாயுடுவும்'அரசிளங்குமரி'க்கு ஜி.ராமநாதனும் இசையமைக்க,இதர பாடல் வரிகளுக்கு,விஸ்வநாதன் ராமமூர்த்தி இணைந்தும் எம்.எஸ்.வி தனித்தும், இசை யமைத்து அமர்க்களப்படுத்தினர் என்பதை,இன்று கேட்டாலும் இனிக்கும் அப்பாடல்கள் உணர்த்துகின்றன.

  வாழ்க்கையில்,சமத்துவமும் பொதுவுடமை யும் முழுமை பெறாவிட்டாலும்,'சமரசம் உலா வும் இடமான,' மயானமும் கல்லறையும், மரணத்தை மனிதனுக்கு பொதுவுடமை ஆக்கி,பல வழிகளில் வந்தாலும்,மரணம் அனைவர்க்குப் பொதுவான ஒன்று என்பதை பாடமாக்கியது'ரம்மையின் காதல்' திரைப்படத்தில் கே.ஏ.தங்கவேலுக்காக் குரல் கொடுத்த சீர்காழி கோவிந்தராஜனின்

"சமரசம் உலாவும் இடமே

நம் வாழ்வில் காணா சமரசம் 

உலாவும் இடமே".

  எந்த அற்புதமான பாடலுக்கிடையே,ஆழ்ந்த வாழ்வியல் உண்மைகளை உள்ளடக்கிய,

"சாதியில் மேலோரென்றும்

தாழந்தவர் தீயோர் என்றும்

பேதமில்லாது 

சேர்ந்திடும் காடு

தொல்லை இன்றியே

தூங்கிடும் வீடு"

என்றும்,

"ஆண்டி எங்கே

அரசனும் எங்கே;

அறிஞன் எங்கே

அசடனும் எங்கே;

ஆவி போனபின், 

கூடுவார் இங்கே.

ஆகையினாலே,

நம் வாழ்வில் காணா,

சமரசம் உலாவும் இடமே"

  என்றும்,பொன்னான வரிகளை பதமாய்ச் சேர்த்து,மரணத்தில் பொதுவுடமையை, பகிர்ந்தளித்தது.A.மருதகாசியின் இந்த மகத்தான வரிகளை,T.R.பாப்பாவின் பவித்திரமான இசையும் சீர்காழியாரின் சீரிய குரலும் சேர்ந்து,சிந்தையில் சமத்து வத்தை,சிகரமாக்கியது.

  பொதுவுடமைச் சித்தாந்தத்தை பாரில் மாந்தர் பாங்குடன் உணர்ந்தால்,மண்ணில் போரில்லை.மத மாச்சரியங்களில்லை.இன எரிச்சல்களில்லை.செல்வச் செறுக்          கில்லை.வறுமையின் வாட்டமில்லை. சாதிச்சகதிகளின் சங்கடங்களில்லை.

 "உயர்ந்தரென்ன;தாழ்ந்தவரென்ன

உடல் மட்டுமே கறுப்பு

அவர் உதிரம் என்றும் சிகப்பு"

  என்று நிறபேதமில்லா மனிதச்சகோதரம் படர்ந்து,மனிதம் மடமடவென தழைக்கும். பொதுவுடமை ஒன்றே,பித்தம் போக்கி பெரு மிதம் பரப்பும் பண்புடைமை என்பதை, அவ்வப்போது மனிதவெளிச்சமாய்ப் பரவச் செய்த தமிழ்த்திரை,போற்றுதலுக்குரியது.

               ========0======0========


  

1 comment:

  1. சின்னக் குழந்தை, பைசா நகரக் கோபுரத்தை முதலில் பார்த்த உணர்வு. சட்டென எதுவும் வரவில்லை. அவ்வளவு பிரமிப்பு. 🥇

    ReplyDelete