" எத்தனைக்கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா."
என்று உள்ளத்து உவகையை வெளிப்படுத் தினார் மகாகவி பாரதி.'எத்தனை'எனும் சொல் எண்களையும் அளவீடுகளையும் குறித்தது மட்டுமல்லாது ஒரே நேரத்தில் நம்பிக்கையையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்த வல்லதாகும்.உதாரணத் திற்கு 'மலைக்கள்ளன்' திரைப்படத்தின்,
"எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே
சொந்த நாட்டிலே"
எனும் டி.எம்.சௌந்தராஜனின் உரத்த குரலில் எழுந்த பாடல்,சமூதாயம் தொடர்ந்து ஏமாற்றப்படும் நிலை விரைவில் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையை ஒருபுறமும், இன்னும் பலகாலம் ஏமாற்றப்படுமோ எனும் அச்சத்தை மறுபுறமும்,ஒரே வேளையில் உணரச் செய்யும்.தஞ்சை ராமைய்யா தா சின் கருத்தாழம் மிக்க இப்பாடல், எஸ்.எம். சுப்பைய்யா நாயுடுவின் இசையில், எம்.ஜி.ஆருக்கு புரட்சிப்பாதை வகுத்தது.
ஆனால்,'அன்பு எங்கே'திரைப்படத்தில் வேதாவின் இசையில்,பி.சுசீலா பாடிய கண்ணதாசனின்,
"எத்தனைக்கோடி பணமிருந்தாலும்
நிம்மதி வேண்டும் வீட்டிலே"
எனும் தெளிவான பாடல்,பணத்தால் மனிதனுக்கு நிம்மதியை உறுதிசெய்ய முடியாது என்பதை,அறுதியிட்டுக் கூறியது. மாறாக,'யாருக்குச்சொந்தம்'திரைப்படத் தில் P.B.ஸ்ரீநிவாஸ் பாடிய மருதகாசியின் பாடலான,
"எத்தனை எத்தனை இன்பமடா
இவை எல்லாம் உனக்கே சொந்தமடா"
எனும் இதமான பாடல்,கே.வி,மகாதேவன் இசையில்,பாரதியின் சிந்தனையை சிறகடித்துப் பறக்கச் செய்தது.
தாய்மைப் பாடல்களுக்குத் தரமூட்டிய எம்.ஜி.ஆர்,அவரது 'தாயின் மடியில்' திரைப்படத்தில்,டி எம் சௌந்தராஜனைப் பாடவைத்த,
"எத்தனை செல்வங்கள் வந்தாலுமே
எத்தனை இன்பங்கள் தந்தாலுமே
அத்தனையும் ஒரு தாயாகுமா
அம்மா,அம்மா,எனக்கது நீயாகுமா"
எனும் வாலியின் வரிகள் மூலம்,'எத்தனை' எனும் சொல்லுக்குட்பட்டது அல்ல தாய்மை. அது அத்தனையும் கடந்த அளவற்ற அன் பின்,பாசத்தின் அடையாளம் என்று,வலு வாக உணரவைத்தார்.இதே எம்.ஜி.ஆர், மனிதனை எள்ளி நகையாடும் வகையில், வாலியின் வரிகளால் வதம் செய்த பாடலே, 'ஆசை முகம்' திரைப்படத்தில் அவருக்காக டி.எம். எஸ் பாடிய,
"எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு
எத்தனை சிறிய பறவைக்கு,
எத்தனை பெரிய அறிவிருக்கு."
எனும் நைய்யாண்டிப்பாடல்.
மேற்சொன்ன இருபாடல்களுக்கும்,எஸ்.எம் சுப்பைய்யா நாயுடு இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மனித வாழ்க்கையில் அன்றாடம் ஏற்படும் மாற்றங்களையும்,மாறிவரும் உறவுகளை யும்,தத்துவரீதியாகச் சித்தரித்தப் பாடலே, 'பந்தபாசம்' திரைப்படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் ஆழ்ந்துணர்ந்து பாடிய, கவிஞர் மாயவநாதனின்,
"நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ
நெஞ்சில் நினைத்ததிலே நடந்துதான் எத்தனையோ
கோடுபோட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ.
கொண்ட குறியும் தவறிப்போனவர்கள் எத்தனையோ"
எனும் காலத்தால் அழிக்கமுடியாதப பாடல். மெல்லிசை மன்னர்கள் இசையில் ஒலித்த இப்பாடல்,என்று கேட்டாலும்,சிந்தனையை இசையெனும் தேனில் முக்கி,செவிகளுக்கு தெவிட்டா சுகம் தரும்.
இதேபோன்றொரு தத்துவத்துளிகளை நம் நெஞ்சங்களில் இதமாக தெளித்த பாடலே, எம்.ஜி.ஆரின் 'நீதிக்குத் தலைவணங்கு' திரைப்படத்தில்,எம்.ஜி.ஆருடன் ஒரு ரயில் பயணத்தில் ஈடுபட்டிருக்கும் பல மனிதர் களின் நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி, பின்னணிப்பாடலாக,அதிர்வுக்குரல் நாயகன் ஜெயச்சந்திரன் பாடிய,நா.காம ராசனின் வரிகளில் அமைந்த,
"எத்தனை மனிதர்கள் உலகத்திலே
அம்மா எத்தனை உலகங்கள் இதயத்திலே"
எனும் மெல்லிசை மன்னரின் மேலான இசையில்,ஏகாந்தம் பரப்பிய பாடல்.
தான் நேசிக்கும் காதலை கண்ணனுடன் உருவகப்படுத்தி எம்.ஜி.ஆரின் 'வேட்டைக் காரன்'திரைப்படத்தில் பி சுசீலா பாடிய,
"கண்ணனுக்கெத்தனை கோவிலோ
காவலில் எத்தனை தெய்வமோ
மன்னனுக்கெத்தனை உள்ளமோ
மனதில் எத்தனை வெள்ளமோ
அவன் தோட்டத்தில் எத்தனை மான்களோ
அவன் தோள்களில் எத்தனை கிளிகளோ
அவன் பாட்டுக்கு எத்தனை ராகமோ
அவன் பார்வையில் எத்தனை பாவமோ"
எனும் கண்ணதாசன் புனைந்து கே.வி. மகாதேவன் இசையூட்டிய,பாடலில்தான் எத்தனை அடுக்குகள்!.
இப்பாடலில் 'அவன் பார்வையில் எத்தனை பாவமோ'என்பதன் அடிப்படையில் சலன முள்ள ஆண்மகன்,பட்டாம்பூச்சியாய் எத்தனை மலர்கள் காண்பானோ,எனும் பெண் மன வேதனையை விளக்கும் பாடலே,
"எத்தனை மலர்கள் தாவும் பட்டாம் பூச்சி அது
எத்தனையோ தாவுமடி அன்பு மீனாட்சி
ஆடவரில் எத்தனைபேர் பட்டாம்பூச்சி
நான் ஆயிரம் பேர் பார்த்துவிட்டேன் அன்பு மீனாட்சி"
'பட்டாம்பூச்சி' எனும் திரைப்படத்தில் டி.எம்.எஸ்ஸும் எஸ்.ஜானகியும் பாடிய கண்ணதாசனின் இப்பாடலுக்கு சோகம் பிழிந்தெடுத்து இசைவடித்தார் M.B ஸ்ரீநி வாசன்.
தமிழ்த்திரைப்பாடல்களில் இதுபோல எத்தனையோ,'எத்தனைகள்' உண்டு.அதே கண்ணதாசன் 'அபூர்வ ராகங்கள்' திரைப்படத்திற்கு வரிவமைத்த,
"ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதயச்சுரங்கத்துள் எத்தனை கேள்வி"
எனும் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் வாணி ஜெயராம் குரலில் இதயம் நுழைந்த பாடல்,எத்தனை அழகுடன் வாழ்க்கைக்கு இசையால் இதிகாசம் படைத்தது.இப்பதி வில் கண்டது போல "எத்தனை" எனும் சொல்லடக்கிய இன்னும் எத்தனை பாடல் களை எத்தனை பேர் அறிவரோ!.
"எத்தனை"என்பதில்தான்,எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது.எத்தனை வாழ்வியல் சித்தாந்தங்கள் குவிந்து கிடக்கின்றன.
===============0================
எத்தனை என்ற ஒரு வார்த்தை பிரசவிக்கும் அத்தனை பொருள் சிசுக்களும் எத்தனை அழகு! அத்தனையும் பேரழகு.
ReplyDelete