Thursday, April 3, 2025

இருகுரல்களின் இணைந்த இசைமுழக்கம்


 


 

   தமிழ்திரையிசையில் கடந்த நூற்றாண்டில் பாடகர் குரல்களை எளிதில் கேட்டறிய முடிந்தது. ஏனெனில், பாடகர்களின் எண்ணிக்கை குறைவு, பாடல்வரிகளின் தெளிவும் பாடகர்களின் எண்ணிக்கை குறைவும்,அவர்களின் தனித்தன்மை வாய்ந்த குரலும்,தானே அவர்களை அடையாளம் காட்டின. டி.எம்.சௌந்தராஜன்,சீர்காழி கோவிந்த ராஜன்,திருச்சி லோகநாதன் ஆகிய மூவரும் உரத்த குரல்களால் உள்ளங் களை வென்றனர்.

   சிதம்பரம் ஜெயராமனின் குரல் சிறப்பு எழுச்சி கொண்டதாக அமைந்திருந் தது..ஏ.எம்.ராஜா, கண்டசாலா,P.B.ஸ்ரீனி வாஸ் போன்றோர், மிருதுவான அதிர்வு களை உள்ளடக்கி, இசையை தங்கள் வசமாக்கினர். K.J. யேசுதாசும் ஜெயச் சந்திரனும், S.P. பால சுப்ரமணியமும் பின்னர் வந்து,திரையிசைக்கு திரட்சி யூட்டினர்.இன்றைக்கு தொழில் நுட்பம் குரல்களாலும் உத்திகளாலும்,வித்தை கள் பல புரிகிறது..

   மேற்சொன்ன கடந்தகால பாடகர்களில், டி.எம்.எஸ்ஸும்,சீர்காழியாரும் இணைந்து,பாடிய சில பாடல்கள் குரல் களால் உச்சம் தொட்டு கோபுரக் கலசங் களாயின.

  தொடக்க  காலத்திலேயே அமரதீபம் கற்புக்கரசி குலதெய்வம் போன்ற திரைப்படங்களில் அவர்கள் இணைந்து பாடியிருந்தாலும் 'சபாஷ் மீனா'திரைப் படத்தில் அவர்கள் இருவரும் இணைந்து பாடிய T.G.லிங்கப்பாவின் இசையில் அமைந்த கு.மா.பாலசுப்ரமணியத்தின் வரிகளான, 

"ஆசைக்கிளியே கோபமா 

என் அருகில் வரவும் நாணமா"

எனும் ஆரவாரப்பாடல் பட்டையைக் கிளப்பியது.

  இதனைத் தொடர்ந்து இருவரும் 'சம்பூரண ராமாயணம்' திரைப்படத்தில் இணைந்து, A.மருதகாசியின்,

"பாதுகையே துணையாகும் 

என்நாளும் உன் பாதுகையே

 துணையாகும்" 

   எனும் இதமான பாடலை,கே.வி.மகா தேவன் இசையில் பதித்துத்திளைத் தனர்.அதற்குப்பின்னர் இவர்கள் இரு வரும்,அல்லி பெற்ற பிள்ளை,உத்தம புத்திரன்,தாய் மகளுக்குக் கட்டிய தாலி, சிவகங்கைச் சீமை போன்ற பல படங்க ளில் இணைந்து பாடினர். ஆனால், 'கர்ணன்'திரைப் படத்தில் அவர்கள் பாடிய, 

"ஆயிரம் கரங்கள் நீட்டி 

அணைக்கின்ற தாயே போற்றி" 

   எனும் கண்ணதாசனின் வரிகள், விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் மனம் நிறைய அதிர்வுகளை ஏற்படுத் தின.பின்னர் 'பழனி' திரைப்படத்தில், மீண்டும் அவர்கள் இணைந்து பாடிய கண்ணதாசனின், 

   "ரோடும் மண்ணில் என்றும் நீரோடும்" பாடலிலும் ,

"அண்ணாச்சி வேட்டி கட்டும் ஆம்பளையா நீங்க"

 எனும் பாடலிலும் இருவரும் மீண்டும் இணைந்து அதே விஸ்வநாதன் ராம மூர்த்தி இசையில் மனதை இளைப் பற்றி,ஆரவாரமூட்டினர்.இந்த மூன்று  பாடல்களில்,முதல் பாடலில் திருச்சி லோகநாதனும் ஸ்ரீனிவாசும்,இரண்டா வது பாடலில் ஸ்ரீனிவாஸ் மட்டும் இணைந்தும், பாடல்களுக்கு மெருகேற்றி னர்.

   சௌந்தராஜனும் சீர்காழியாரும் மீண்டும் மகிழ்ச்சிக்கலவரமூட்டிய பாடலே 'வல்லவனுக்கு வல்லவன்'திரைப்படத் தில் வேதாவின் இசையில் இவர்கள் பாடிய, 

"பாரடி கண்ணே கொஞ்சம் 

பைத்தியமானது நெஞ்சம் 

தேடுதடி மலர் மஞ்சம் 

சிரிப்புக்கு ஏனடி பஞ்சம்" 

  எனும் பாடல் P. சுசீலாவும் இப்பாடலில் இணைந்தார் என்பது குறிப்பிடத் தக்க தாகும் 

  இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக சந்திரோதயம் திரைப்படத்தில் இவர்கள் மீண்டும் இணைந்து குரல்களால் பிரபலமாக்கிய எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் வாலியின்,

"காசிக்குப்போகும் சந்நியாசி 

உன் குடும்பம் என்னாகும் நீ யோசி 

கங்கைக்குப்போகும் பரதேசி 

நீ நேற்றுவரையில் சுகவாசி" 

   எனும் பாடல்,வரிகளால் முழுவதும் கிண்டலில் களைகட்டி  எம்.ஜி.ஆரை யும் நாகேஷையும் இசைக்கூத்தில் மோதவிட்டு ரசிக்கச்செய்தது.

  மீண்டும் 'லட்சுமி கல்யாணம்' திரைப்படத் தில் இருகுரல்களும் எம்.எஸ் விஸ்வ நாதன் இசையில்,

"தங்கத்தே ரோடும் வீதியிலே

ஊர்க்கோலம் போகுதடா

செவ்வாழைப் பந்தலிலே

லட்சுமி கல்யாணம்''

  என்று கண்ணதாசன் வரிகளைப்பாடி, திருமண விழாவின் ஆரவாரத்தையும் உற்சாகத்தையும்,ஊரெங்கும் பறைசாற்றின.

 இந்த இரு இசைமேதைகளின் குரல் ஒலியின் கோபுரமாக மாறி காலத் தால் அழிக்க முடியாத காப்பிய கீதமே, ஏ.வி.எம் நிறுவனத்தில் உருவான 'ராமு' திரைப்படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் கண்ணதாசன் வரிகளால் வரலாறு படைத்த,

"நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு 

நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு"

 என்று தொடங்கி,  

"கண்ணன் வந்தான்

அங்கே கண்ணன் வந்தான் 

ஏழைக் கண்ணீரை கண்டதும் 

கண்ணன் வந்தான்"

   என்று உருக்கமும் உணர்வு ஊட்டமும் ஒருங்கிணைந்து,மனதை உலுக்கிய மகத்தான பாடல்.

"தென்னகமாம் இன்பத்திருநாட்டில்" 

  என்று சீர்காழியார் ஒரு நீண்ட தொகை யறா தொடங்க, அவருடன் எஸ். ஜானகி யும் தொகயைறாவாக சிலவரிகளைத்  தொடர்ந்து அதற்குப்பிறகு

"நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற 

இந்த நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற"

  என்று வாழ்த்துரைக்க, உடனே டி.எம். சௌந்தராஜனும் அந்த இருவருடன் இணைந்து, 

"உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள் 

உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்" 

   என்று முழங்க,கவஞர். புலமைப்பித்த னின் வரிகளில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசை யில் 'இதயக்கனி' திரைப்படத்தின் இந்த கோவிந்தராஜனுடன் சௌந்த ராஜன் சேர்ந்து பாடிய பாடலைக்கேட்டு, எம்.ஜி. ஆர் ரசிகர்களின் கரகோஷத் துடன்,திரை யரங்குளே அதிர்ந்து போன தெல்லாம் தமிழ்த்திரை வரலாற்றின் பொற்காலமே! 

    பின்னர் கே.பாலச்சந்தரின்'அனுபவி ராஜா அனுபவி'மற்றும்'பூவா தலையா' ஆகிய இருபடங்களிலும் இந்த இருவரும் வலுவுடன் குரல்களால் கொடிகட்டினர்,

"அழகிருக்குது உலகிலே 

ஆசையிருக்குது மனதிலே 

அனுபவிச்சா என்னடா கண்ணு 

அனுபவிப்போம்" 

என்று முத்துராமன் மற்றும் நாகேஷின் களிப்பைப்  பகிர்ந்தும்,    

"பூவா தலையா போட்டா தெரியும் 

நீயா நானா பார்த்துவிட்டு 

பூவிழுந்தா நீ நெனைச்சபடி 

தலை விழுந்தா நான் கேட்டபடி" 

   என்று  நாகேஷ் ஜெய்ஷங்கருக்காக போட்டியை களத்தில் இறக்கி களை கட்டி பாடிட, கேட்போர் நெஞ்சங்களில் உற்சாகத்தையும் மகிழ்ச்சி யையும் அள்ளி வீசினர்.இந்த இரண்டு படங்களுக்கும் எம்.எஸ்.விஸ்வ நாதன் இசையமைக்க முதல் பாடலை கண்ணதாசனும் இரண் டாம் பாடலை வாலியும் கவிதைக்  கபடி யாக்கினர்.

  'மகிழம்பூ' திரைப்படத் தில் D,B ராமச்சந்திரனி்ன் இசையில் இவர்கள் இருவரும் இணைந்து பாடிய  கவிஞர் மாயவநாதனின்,

"தனக்கு தனக்கு என்று ஒதுக்காதே 

செய்த தர்மம் தலைகாக்கும்  மறக்காதே"  

என்று ஒருவரும், 

"இருக்கு இருக்கு என்று கொடுக்காதே 

பணம் இல்லாத காலத்தில் தவிக்காதே" 

  என்று மற்றவரும், வாழ்க்கைத் தத்துவத் தின் இருகோணங்களை வரிகளால் செவிகளுக்கு வாய்மை ஒலிகளாக்கி னர்.      

  இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக 'அகத்தியர்' திரைப்படத்தில், குன்னக்குடி வைத்தியநாதன் இசையில்,இவர்கள்   மேடைகட்டி போட்டியில் இறங்கிய, 

"வென்றிடுவேன் நாதத்தால் வென்றிடுவேன்  

நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்"

 என்று சௌந்தராஜனும், 

"வென்றிடுவேன் 

உன்னை வென்றிடுவேன்  

அந்த பைரவி துணைவன் பாதம் பணிந்து 

உன்னை வென்றிடுவேன்"

  என்று சீர்காழியாரும்,கவிஞர் உளுந்தூர் பேட்டை சண்முகத்தின் வரிகளை வேல்க ளாக்கி பாடல் போர் புரிந்தனர்.இறுதியாக தேவரின்'தெய்வம்'திரைப் படத்தில் அதே குன்னக்குடி வைத்தியநாதன் இசை யில் இருவரும் முருகன் அருளால் இணைந்து கிட்டத்தட்ட ஒற்றைக்குரலாகிப் பாடிய,

"திருச்செந்தூரின் கடலோரத்தில் 

செந்திநாதன் அரசாங்கம் 

தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் 

தினமும்கூடும் தெய்வாம்சம்" 

  எனும் கண்ணதாசன் வரிகள்,கந்தனின் உருவத்தை கம்பீரமாய் பக்தர்கள் மனதில்  பதியச் செய்தன. 

   இப்படி தமிழ்திரைக்கடலில் இசை அலைகளாய் அடிக்கடி இணைந்து ஆர்ப்பரித்து எழுந்து கரையைத்தொட்டு பின்னர் மீண்டும் பக்குவமாய் கடலில் இசைந்தனர்,டி.எம்.செளந்தராஜனும் சீர்காழி.கோவிந்தராஜனும்!.

   தமிழ்த்திரை இசை வரலாற்றின் இந்த இரண்டு மாபெரும் அத்தியாயங் கள் அடிக்கடி ஒரே பக்கத்தில் இடம்பெற்று இசைப்புத்தகத்தின் இதிகாசங்களா யின! கடந்த நூற்றாண்டின் ஐம்பதுகளில் தொடங்கி எண்பது வரை அடிக்கடி இணைந்து குரல்களால் செவிகளுக்கு விருந்தாகவும், இறைவன் பாதங்களுக்கு காணிக்கையாகவும், இசை இன்பத்தை இருமடங்காக்கின.

   திருச்சி லோகநானும் சீர்காழியாருடன் குரலால் பலமுறை இணைந் திருந்தா லும  இந்த இரட்டையரின் இணைவும் இசைவும்,தனித்தன்மை வாய்ந்ததாக அமைந்து, தமிழ்த்திரை யிசை உலகத் தின் நாத பலத்தினை, விண்ணெட்டும் வீச்சுடன்,விரிந்து பரந்து பறக்கச்செய்தது என்பதே,காலம் உரைக்கும் சான்றாகும்!

   பி.கு:- இந்த இரு பாடகர்களும் இன்னும் சில பாடல்களில் இணைந்திருந் தாலும், அடிக்கடி கேட்கப்பட்டு நினைவுகளை வலுவாக ஆக்கிரமித்த பாடல்கள் மட்டுமே, இப்பதிவில் குறிப்பிடப்பட்டுள் ளன.

                                                ===============0==============        

             

1 comment:

  1. *திருச்செந்தூரின்கடலோரத்தில் செந்திநாதன் அரசாங்கம் நிலைத்திருக்கும் வரை இரு குரலோசையும் திக்கெட்டும் எதிரொலிக்கும்*

    ReplyDelete