Wednesday, April 23, 2025

விளக்குகளின் விளக்கங்கள்.

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்கு 

பொய்யா விளக்கே விளக்கு 

  என்று 'வாய்மை' எனும் அதிகாரத்தில் பொய்மையற்ற விளக்கு அகத்தின் ஒளிக்கூட்டி வாழ்வில் வெளிச்சம் படைக்கும் என்கிறார் வள்ளுவர். மின் விளக்குகள் இல்லாக் காலத்தில் தீயைக்கொண்டு தீபம் பல ஏற்றினான் மனிதன்.சூரிய ஒளியும் நிலவொளியும், பகலுக்கும் இரவுக்கும் இயற்கை மனிதனுக்களித்த வரப்பிரசாதங்கள்.

   இந்து கோவில்களின் எண்ணை மற்றும் நெய் தீபங்களும்,கிறித்துவ தேவாலயங் களின் மெழுகுவர்த்தி ஒளியும்,ஆன்மீக ஒளியை முதன்மைப் படுத்துகின்றன. இஸ்லாமியர்கள் கூன்பிறையைத் தொழுதே ஒளி வீச்சினை உணருகின் றனர்.இருப்பினும்'விளக்கு'எனும் சொல் தமிழ் மொழியில் ஒளிக்கான ஊட்டமாகி றது.அப்படிப்பட்ட விளக்கினை தமிழ்த் திரை,தலைப்புகளாலும் பாடல்களாலும், திரியேற்றி தீபமேற்றி கொண்டாடுகிறது.

  'பாவை விளக்கு''குடும்ப விளக்கு''பச்சை விளக்கு''ஒளி விளக்கு''அணையா விளக்கு''விளக்கேற்றியவள்'போன்ற பிரதான திரைப்பட தலைப்புக்கள் விளக்குகளுக்கு விழா கொண்டாடின.  இத்திரைப்பட தலைப்புகளில் 'குடும்ப  விளக்கு'என்பது பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய கவிதைத்தொகுப்பின் தலைப் பாக,தமிழையும் கவிதையையும் ஒருசேர அலங்கரித்தது. 

"விளக்கேற்றி வைக்கிறேன் விடிய விடிய எரியட்டும்

நடக்கப்போகும் நாட்களெல்லாம் நல்லதாக நடக்கட்டும்"

என்று 'சூதாட்டம்' என்னும் திரைப்படத் தில் P.சுசீலா பாடிய பாடலும்,

"குத்துவிளக்கெறிய கூடமெங்கும் பூமணக்க 

மெத்தை விரிந்திருக்க மெல்லிடையாள் காத்திருக்க" 

 என்று 'பச்சை விளக்கு' திரைப்படத்தில் டி.எம்.சௌந்தராஜனும் P. சுசீலாவும் பாடிய முதலிரவுப்பாடலும், வாழ்க்கைப் பாதையின் வெளிச்சம் கூட்டின.

  இந்த இரண்டு பாடல்களையும் கண்ணதாசன் எழுத,'சூதாட்டம்' திரைப் படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் தனித்தும்,'பச்சை விளக்கு' திரைப்படத் திற்கு ராமமூர்த்தியுடன் இணைந்தும், இசையமைத்திருந்தார். 

  சில நேரங்களில் ஒரே திரைப்படத்தில் 'விளக்கு' எனும் சொல் கொண்ட இரு பாடல்கள் அமைவதுண்டு அதற்கு ஒரு உதாரணமாக'ஏழை பங்காளன்' திரைப் படத்தில் அமைந்த இரு பாடல்களை கூறலாம். இந்த இரண்டில் டி.எம்.எஸ் தனித்துப்பாடிய 

"விளக்கு எரிகின்றது 

வெளிச்சம் தெரிகின்றது 

உறக்கம் கலைகின்றது 

உலகம் புரிகின்றது" 

எனும் தத்துவார்த்த தெளிவுப் பாடலும் P.சுசீலா பாடிய, 

"வீட்டுக்கு வந்த மச்சான் 

விளக்கை ஏத்தி வச்சான் 

இதையும் மாத்தி 

அதையும் மாத்தி 

கதையை மாத்தி வச்சான்"

  எனும் வேடிக்கையான பேச்சுமொழிப் பாடலும்,விளக்கினை திசைமாற்றி  ரியச் செய்தன.இதில் கே.வி.மகா தேவன் இசையில் உதித்த இவ்விரு பாடல்களில்,டி.எம்.எஸ் பாடலை கண்ண தாசனும் P.சுசிலாவின் பாடலை வாலியும் எழுதியிருந்தனர்..

  விளக்கின் ஒளியினை தன் காதலியிடம் காண்பவரின் மனத்திரியினை பாடலாக் கினார் கவியரசு கண்ணதாசன் 'நிறைகுடம்' திரைப்படத்தில். 

"விளக்கே நீ கொண்ட ஒளி  நானே 

விழியே நீ கண்ட நிழல் நானே 

முகமே நீயிட்ட திரை நானே 

முள்ளும் நானே மலர் நானே" 

  எனும் இந்த அருமையான வரிகளுக்கு, வி.குமார் மிக மென்மையாய் இசை யமைத்திருந்தார் 

'ஒளி விளக்கு' திரைப்படத்தில் 

"இறைவா உன் மாளிகையில் 

எத்தனையோ மணிவிளக்கு; 

தலைவா உன் காலடியில், 

என் நம்பிக்கையின் ஒளி விளக்கு" 

   என்ற P. சுசீலாவின் பாடல்  வரிகளில் உணர்வுகளை கண்ணீரால் இறை வனின் பாதங்களில்காணிக்கையாக்கி னார் வாலி.எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் வலுவாக மக்கள் மனதில் வேரூன்றியது, இப்பாடல். திராவிட சித்தாந்தத்தில் இறைநம்பிக்கையை புகுத்தி எம்.ஜி.ஆரின் இத்திரைப் படப்பாடல் ,விமர்சனத்துக்குள்ளாது என்பதும், இப்பாடலுக்கு வலுக்கூட்டியது. 

  விளக்குக்கும் எண்ணெய்க்கும் உள்ள தொடர்பையும்,விளக்குக்கும் திரிக்கும் உள்ள உறவையும்,வெளிப்படுத்திய இரண்டு திரைப்படப் பாடல்கள் உண்டு 'படித்தால் மட்டும் தெரியுமா'படத்தில் டி.எம்.எஸ் பாடிய "ஓஹோஹோ மனிதர்களே"பாடலுக்கிடையே சத்தான அர்த்தமுடன் ஒலித்த, 

"விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரமாகாது 

விளக்கிருந்தாலும் எண்ணையில்லாமல் வெளிச்சம் கிடைக்காது" 

  எனும் கண்ணதாசனின் வரிகளும், 'தேவதையைக்கண்டேன்' திரைப்   படத்தில் யுகேந்திரனும்,கிரேஸ் கருணாஸும் பாடிய, 

"விளக்கு ஒன்னு திரிய பாக்குது; 

அது கொழுந்து விட்டு 

எரிய ஏங்குது" 

   எனும் விளையாட்டுத்தனமான வரி களும்,விளக்கு,திரி,எண்ணெய், ஆகிய வற்றின் முக்கோண பரிமாணத்தை பளிச்சென விளக்கினை.

  இந்த இரண்டு பாடல்களில் முதல் பாடலுக்கு விஸ்வநாதன் ராம மூர்த்தி யும் இரண்டாவது பா.விஜய்யின் வரிகளுக்கு, தேவாவும் இசையமைத் திருந்தனர். 

   திரைப்பட உலகைக்கடந்து, விடுகதை கள் பலவற்றிற்கு விடைகாண முடியா மனித வாழ்வில்,விளக்கங்களும் விடைகளும் காண்பதற்கு,அறிவே விளக்காகிறது என்பதே,நிச உலகின் ஒளிதரும் யதார்த்தமாகும். 

                                   =============0=============

1 comment: