Sunday, May 11, 2025

கைகள் தாங்கிய கவிதை வரிகள்

ஞாலம் கருதினுங் கைகூடும் காலம் 

கருதி இடத்தாற் செயின் 

  என்று உரிய காலத்தையும் இடத்தையும் ஆய்ந்தறிந்து செயல்பட்டால் உலகமே கூட கைக்குள் வந்துவிடும் எனும் பொரு ளுரைக்கும் குறளையும், 

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு

என் ஆற்றுங் கொல்லோ உலகு 

  என்று கைம்மாறு கருதி மழை பொழி வதில்லை;அந்த மழையைப் போன்ற வர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர் எனும் பொருள் தரும் குறளையும்,வள்ளுவரின் 'கை' எனும் சொல் கொண்ட திருக்குறள்களில் முதன்மையானவையாகக் கொள்ள லாம்.'கைவசம்' என்பது கைய்யிருப்பாக வும்,'கைம்மாறு' என்பது பலன் என்றும், 'கைய்யூட்டு' என்பது 'லஞ்சம்' எனும் பொருளையும் குறிப்பிடுவது நாம் அறிந்ததே! 

"கைய்யும் காலும் தான் உதவி 

கொண்ட கடமைதான் நமக்கு பதவி" 

  எனும் பழைய பாடல் வரிகள் கைக ளின்றி கடமையாற்றுவது சிரமம் என்பதை உணர்த்துகிறது.தமிழ் திரைப் படங்களில் 'கை'எனும் சொல் உள்ளடக் கிய பாடல் வரிகளை திரைப்பட தலைப்பு களாகவும் பாடல் வரிகளாகவும் பல வற்றை நாம் கடந்திருக்கிறோம். 'கைராசி' 'ஒரு கை ஓசை''ஒரு கை பார்ப்போம்' 'இணைந்த கைகள்''கை கொடுத்த தெய்வம்''கை நிறைய காசு''கை கொடுக்கும் கை''அன்னமிட்ட கை'போன்ற சில தலைப்புக்கள் நம் நினைவை விட்டு அகலாது. 

  பாடல் வரிகளில்'கை'எனும் சொல் பல நிலைகளில் தமிழ்த்திரையை கைப்பற்றி உள்ளது.

"கையிலே வளவி எல்லாம் கலகலன்னு ஆடையிலே 

காலிலே கொலுசு ரெண்டும் ஜதித் தாளம் போடையிலே

கஞ்சிப்பானை தூக்கிக்கிட்டு கண்டும் காணாம

சுண்டு நடை போட்டுகிட்டு"

என்று தொடங்கும் 'மக்களைப்பெற்ற மகராசி' திரைப்பட T.M.S& P. பானுமதி  பாடிய பாடல் தொடங்கி,

"அடிக்கிற கைதான் அணைக்கும் 

அணைக்கிற கைதான் அடிக்கும் 

னிக்கிற வாழ்வே கசக்கும் 

கசக்கிற  வாழ்வே இனிக்கும்" 

  என்று திருச்சி லோகநாதனும் P. சுசீலா வும் பாடிய 'வண்ணக்கிளி' பாடலைத் தொடர்ந்து,எண்ணற்ற பாடல்களில் கவிஞர்கள் தங்கள் கற்பனை வளத்தை யும் கைவரிசையையும் காட்டியிருக்கின் றனர். 

"கைய்யோடு கை சேர்க்கும் காலங்களே

கல்யாண சங்கீதம் பாடுங்களே"

 என்று 'காவியத்தலைவி'திரைப்படத்தில் P.சுசலா பாடிய பாடலில்,இரு கைகள்  சேரும் காதலால், இருமனம் இணையும் திருமணம் இசைந்து, இசையுடன் உரு வாகிறது என்பதை உணரமுடிந்தது.

   கைகள் இல்லையேல் உழைப்பே உழன்று போகும் எனும் கருத்தினை உயர்த்தும் வண்ணம், எம்.ஜி.ஆருக்காக டி.எம்.எஸ். பாடிய பாடல்களில் 'தனிப் பிறவி'திரைப்படத்தில் கம்பீரமாய் ஒலித்த 

"உழைக்கும் கைகளே

உருவாக்கும் கைகளே" 

எனும் பாடலிலும்,'நேற்று இன்று நாளை' திரைப்படத்தில் நாம் கேட்டு மகிழ்ந்த,

"இது நாட்டை காக்கும் கை 

உன் வீட்டை காக்கும் கை 

இந்தக்கை நாட்டின் நம்பிக்கை''

எனும் பாடலிலும் 'கை'எனும் சொல்  பல வரிகளில் இடம் பெற்றதும், 'அன்னமிட்ட கை' படத்தில்

''அன்னமிட்ட கை

நம்மை ஆக்கிவிட்ட.கை

உன்னை என்னை உயரவைத்து''

எனும் வரிகளை முதலாவதாகக் கொண்ட பாடலும்,

'ஆசை முகம்' திரைப்படத்தில் இடம் பெற்ற 

"எத்தனை பெரிய மனிதனுக்கு 

எத்தனை சிறிய மனமிருக்கு"

எனும் பாடலின் இறுதி வரிகளான,

 "உனக்கென்ன வேண்டும் உணர்ந்திடு தம்பி.

உழைத்திட வேண்டும் கைகளை நம்பி".

 போன்ற அனைத்துமே, உழைப்பை, தருமத்தை, கைகளுடன் இரும்பனெச் சேர்த்து. உறுதிபட உணர்வுக்களமாக்கின.

  ஆனால்,ஓற்றுமையில் கைகள் ஒன்றி ணைந்தால், வெற்றி என்பது விளைவா கும் என்பதை உரத்த குரலில் ஒலி எழுப்பிய பாடலே,'திரிசூலம்' திரைப்படத் தில் கே.ஜே.ஏசுதாசும் எஸ்.பி.பாலசுப்ர மணியனும் சேர்ந்து,

"இரண்டு கைகள் நான்கானால்

இருவருக்கே எதிர்காலம்.

பகைவர்களே ஓடுங்கள்

புலிகளிரண்டு வருகின்றன''

 எனும் ஒற்றுமகை் குரல்களால்,பகைவர் களை புறந்தள்ளிய பரவசப்பாடல்.

 கை களில் பணமிருந்தால் உழைக்கை யில் கால்களுக்கு பலம் கூடும்.நெஞ்சில் தைரியம் நிறையும்.

"கை நிறைய காசு

கை நிறைய நோட்டு" 

 எனும் முதல்வரியை தலைப்பாகக் கொண்ட திரைப்படத்தின் டி.எம்.எஸ் பாடலும், 

"கைய்யில வாங்கினேன் பைய்யில போடல 

காசு போன இடம் தெரியல

என் காதலி பாப்பா காரணம் கேட்பா

என்ன சொல்வதுன்னு புரியல"

 என்று 'இரும்புத்திரை' திரைப்படத்தில் திருச்சி லோகனாதனின் வரிகளும் கைய் யில் காசு வருகையில் ஏற்படும் குஷியை யும், அது கைய்யை விட்டு பைய்யில்கூட நிறையாது வந்தவழி பறக்கையில் விளையும் பதற்றத்தையும்,கைகள் கவிதை வரிகளால் பணத்தின்,பொருட்க ளின் வாகனமாகியதாகவே அறியப்பட வேண்டும்.

'சூரரைப்போற்று' திரைப்படத்தில் சைந்தவி பாடிய 

"கையிலே ஆகாசம் கொண்டுவந்த உன் பாசம் 

காலமே போனாலும் வாழ்ந்திடும் ராசா" 

  எனும் பாடல் வரிகள் கைக்கெட்டும் தூரத்தில் சாதாரண மக்களும் பயன் படுத்தும் வகையில் விமானச்சேவை கொண்டுவரப்பட்ட மகிழ்ச்சியினை பாடலாய்ப் பகிர்ந்தது. 

   இப்பாடல்கள் எல்லாம் வலியுறுத்துவது, திரைப்பட கவிதை வரிகள் எந்த அள விற்கு கைகளை,உழைப்பின்,தர்மத்தின், கருவிகளாய்,அன்பின் காதலின் அடை யாளமாய், நட்பின் நல்லிணக்கமாய், வரவேற்பின் பரவசமாய்,பிரிவின் சுமை தாங்கியாய்,காசு பணம் பண்டங்களின் வாகனமாய் பறைசாற்றின,என்பதேயா கும்.கைகளால் மனதிற்கு மணமூட்டிய பல பாடல்கள் நம் சீர்மிகு வாழ்வின் வழிகாட்டி கள்! ஒரு கை ஓசை என்பது விரக்தியின் விளிம்பெனில்,ஒரு கை பார்ப்போம் என்பது தன்னம்பிக்கையின், நெஞ்சுரத்தின் இருக்கை.உவகையுடன் பலகைகள் கோர்த்து பகைமை களைந்து உலகை  வெல்வோம்!

                               ==============0===============


   

No comments:

Post a Comment