இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல்
இரக்கமில்லா காதலரை எண்ணி கண்களில் நீர் துள்ளுவதால் பயன் என்ன எனும் பொருள் கூறும் திருக்குறள் ஒன்று வள்ளுவரின் காமத்துப் பாலில் உண்டு. அல்லலில்லா வாழ்வில் துள்ளலுண்டு; ஆனால் துள்ள லில்லா வாழ்வனைத் துமே, துன்புறுவதுல்லை. துள்ளலும் துடிப்பும் மனச்சாயலின் மறுபிம்பங்களே! உள்ளம்,துள்ளியும் துள்ளாமலும் உடல் துள்ளும்.கேரளாவில் ஓட்டம் துள்ளல் என்றொரு நிகழ்ச்சி உண்டு. ஓட்டமும் துள்ளலும் வாழ்வின் வாட்டம் கடந்த வரப்பிரசாதமே!.
தமிழ்த்திரையுலகு தலைப்புகளாலும் பாடல்களாலும் துள்ளிக்களிப்பூட்டியதை கண்டிருக்கிறோம்.'துள்ளாத மனமும் துள்ளும்'துள்ளுவதோ இளமை','துள்ளி ஓடும் புள்ளிமான்'துள்ளித்திரிந்த காலம்' போன்ற திரைப்பட தலைப்புகளில் முதல் இரண்டும் முதலில் பாடல் வரிகளாகி மகிழ்ச்சியைக்கிளறி பின்னர் திரைப்படத் தலைப்புகளாயின.
"துள்ளாத மனமும் துள்ளும்
சொல்லாத கதைகள் சொல்லும்
கிள்ளாத ஆசையை கிள்ளும்
இன்பத்தேனையும் அள்ளும்"
என்று 'கல்யாண பரிசு'திரைப்படத்தில் ஏ.எம்.ராஜா இசையில் ஜிக்கி பாடிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல் வரிகள், இதமாய் செவிகளில் நுழைந்து, நெஞ்சைத் தாலாட்டி நம்மை உறங்கச்செய்தது, இன்றும் நினைத்துப் பார்த்து நெஞ்சுருகும் நிலையே!
"முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே"
என்று P. சுசிலா தொடங்க,அவரைத் தொடர்ந்து,T.M.செளந்தராஜன்,
"வெள்ளியலை மேலே
துள்ளும் கயல்போலே
அல்லி விழி தாவக்கண்டேன் என் மேலே"
என்ற, காதலியின் விழிகள் அலையின் மேலெழும் மீன்போல,தன்மீது துள்ளித் தாவுவதை, அ.மருதகாசியின் பாடல் வரிகளாய் G.ராமநாதன் இசையில் 'உத்தம புத்திரன்'திரைப்படத்தில் கேட்டு கற்பனைத் துள்ளலில் காதல் வயப்பட் டோர் பலர் இருந்திருக்கக்கூடும்.
இதிலிருந்து சற்று மாறுபட்டு துயில் கொண்ட காதலியை எண்ணி,
"துள்ளித்திருந்த பெண்ணொன்று
துயில் கொண்டதேனின்று
தொடர்ந்து பேசும் கிளியொன்று
பேச மறந்ததேனின்று"
என்ற கண்ணதாசன் வரிகளை விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் P.B. ஸ்ரீனிவாஸ் பாடிட,அதைக்கேட்டு பலரின் இதயங்கள் இதமாய்த் துள்ளிய துண்டு
இந்த இதமான துள்ளலை பெருங் கொண்டாட்டத்துள்ளளாய் மாற்றிய பாடலே,'குடியிருந்த கோயில்'திரைப் படத்தில் சௌந்தராஜனும் L.R.ஈஸ்வரியும் பாடிய,
"துள்ளுவதோ இளமை
தேடுவதோ தனிமை
அள்ளுவதோ திறமை
அத்தனையும் புதுமை"
என்ற வாலியின் ஆரவாரப்பாடல் வரி கள்,எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் திரையரங்குகளில் பட்டையைக்கிளப்பி யது. இப்பாடல் பின்னர் 'ரி டியூன்'{retune} செய்யப்பட்டு இன்றைக்கும் பெரும் வரவேற்பைப் பெற்று இசைமான்களாய், இனிதாய் துள்ளிக்குதிக்கின்றன.
பாடுகின்ற நபரை பாடலுடன் துள்ளச் செய்த'சிப்பிக்குள்முத்து' திரைப் படத்தில் இடம்பெற்ற இளையராஜாவின் நெஞ்சில் ஒரு ராகமாக அமைந்த, வைரமுத்துவின் வரிகளான,
"துள்ளி துள்ளி நீ பாடம்மா
சீதையம்மா"
எனும் எளிமையான கீதம்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக சூறைக்காற்றையே துள்ளச்செய்த வரிகளே,'இருதுருவம்'திரைப்படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய,கண்ணதாசன் வரிகளால் நெஞ்சைக் குடைந்த,
"துள்ளிவரும் சூறைக்காற்று
துடிக்கிதொரு தென்னங் கீற்று
இல்லை ஒரு பாதுகாப்பு
இதுதானா இறைவன் தீர்ப்பு"
என்று ஆக்ரோஷமாய், துடித்துத் துள்ளிய பாடல்.
இப்படிப்பட்ட கவிதை வரிகளின் துள்ளல்களாலும்,இசைமுழக்கங்களின் துள்ளல்களாலும்,என்றென்றும் திளைத்து துள்ளிக்கொண்டிருந்த கால மொன்று உண்டு. தமிழ்த்திரைக்கு இந்த தமிழ்த்திரையிசை துள்ளல்கள் என்றென்றும் நம் நெஞ்சங்களில் கிளர்ச்சியூட்டும் கிள்ளல்களாகும் .
===============0=================
No comments:
Post a Comment