Tuesday, September 2, 2025

தனிமையின் தாளங்கள்

 

"தனித்திருந்து வாழும் மெய் தவமணியே 

தண்டபாணி தெய்வமே" 

    எனும் அமரர் K.B சுந்தராம்பாளின் தனிப்பாடலை கேட்கையில்,முருகன் மாம்பழக் கலவரத்தால் மலையேறி னாரா,அல்லது நிலத்தில் மனிதன் தரும் தொல்லையை மனதில் கொண்டு மனிதன் தன்னைக்கான சிரமம் கொண்டு மலையேறிவருவானா என்று சோதிக்க மலையேறினாரா என்பது, தமிழ்க்கடவுள் மட்டுமே அறிந்த தங்க மலை ரகசியமாகும். 

    பொதுவாக மனிதனுக்கு வறுமை வந்தால் தனிமை; நோய் வந்தால் தனிமை;காதல் வந்தால் தாங்கமுடியா தனிமையின் கொடுமை! முதுமையில் மூச்சுமுட்டும் தனிமை. தனிமையின் தாளங்களுக்கு,மரணம் கூட மாறுபட்ட ராகத்தில் இசை கூட்டுகிறது.

  தனிமையின் தவிப்பை ஒரு புறமும், தனிமை என்பது மனப்பிரமையே என்று மறுபுறமும்,ஒரு சேர உணர்த்திய ஏ.எம்.ராஜா இசையமைத்து அவரே P.சுசீலாவுடன் இணைந்து பாடிய K.D சந்தானத்தின் பாடலொன்று 'ஆடிப் பெருக்கு' திரைப்படத்தில் இடம்பெற்றது. 

"தனிமையிலே இனிமை காண முடியுமா 

நள்ளிரவினிலே சூரியனும் தோன்றுமா"

 என்று தொடங்கும் அப்பாடலுக்கு இடையே ஔியூட்டிய,

"மலரிருந்தால் மனமிருக்கும் தனிமையில்லை

செங்கனியிருந்தால் சுவையிருக்கும் தனிமையில்லை 

கடலிருந்தால் அலையிருக்கும் தனிமையில்லை 

நாம் காணும் உலகில் ஏதும் தனிமை இல்லை" 

  என்று இலக்கிய நுண்ணறிவை பறைசாற்றும் வரிகள், சிந்தனைத் தெளிவால் தனிமையில் தாக்கத்தை தோற்கடித்தன.

   இதேபோன்றொரு தனிமையின் ஏகாந்தத்தை வெளிப்படுத்தும் பாடலே 'சட்டம் ஒரு இருட்டறை' திரைப்படத்தில் பூங்குயிலன் வரிகள் புனைந்து, சங்கர் கணேஷ் இசையில்,எஸ்.என்.சுரேந்தரும் எஸ்.ஜானகியும் இணைந்து தனிமையின் தகைமையை நிலை நிறுத்திய,

 "தனிமையிலே ஒருராகம் 

ஒரு தாளம் உருவாகும் 

இளமையின் கவிதைகள் றந்தது

இனிமையின்  நினைவுகள் பிறந்தது"

    என்ற பாடல்,தனிமையை சிறகடித்து பறக்கச் செய்தது.இது போன்ற சிந்தனை களை தூரத்தள்ளிவைத்து,தனிமையின் பொறுமையையும் தவிப்பையும் வெளிப் படுத்திய பாடல்களும் உண்டு. 'ரிதம்' {Rhythm} திரைப்படத்தில் ஏ.ஆர். ரஹ்மா னின் இசை ஏற்றத்திலும் ஷங்கர் மகா தேவனின் குரல் உச்சத்திலும்,நம் அனை வரின் கவனத்தையும் ஆர்ப்பரித்த,

"தனியே தன்னந்தனியே 

நான் காத்து காத்து நின்றேன் 

நிலமே பொறு நிலமே

உன் பொறுமை வென்றுவிடுவேன்"

  என்ற பாடல்,தனிமைக் காத்திருப்பை பெரும் தவமெனக் கூறியது.வைரமுத்து வின் இவ்வசந்த வரிகள் செவிகளை செழிப்பாக்கின.

   தனிமையின் தவிப்பை இனிமையாக்கி J.P. சந்திரபாபு 'பாத காணிக்கை' திரைப் படத்தில் பாடிய,

"தனியா தவிக்கிற வயசு 

இந்த தவிப்பும் எனக்கு புதுசு 

நெனச்சா இனிக்கிது மனசு 

என்னை நெருங்க விடலையே இளசு"

  என்று விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையில் கண்ணதாசனின் வரிகள்  நெஞ்சுக்குள் தேன் வடித்தது.காதலின் தனிமைச் சுகமும் தவிப்பும்,காதலில் விழுந்தோர் கதையே.!

தனிமைக்கான காரணத்தை விளக்கும் 

"நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன் 

என் மகாராணி உனைக்கான ஓடோடி வந்தேன்" 

  எனும் 'இருவல்லவர்கள்' திரைப்படத் தில் டி.எம்.சௌந்தராஜன் P. சுசீலா பாடிய பாடலும்,தனிமைக்கான பரிசைப்பெறும் பெருமிதத்தை வெளிப்படுத்திய, 

"தன்னந்தனியாக நான் வந்த போது 

என்னையறிந்தாலே பூ முக மாது"

  என்று சங்கமம் { 1970 } திரைப்படத்தில் அதே பாடல் ஜோடிகள் பாடிய பாடலும், தனிமையின் பரிமாணங்களை தனிச் சுவையுடன் வெளிப்படுத்தின. இந்த இரண்டு பாடல்களையும் கண்ணதாசன் எழுத, முதல் பாடலுக்கு வேதாவும் இரண்டாம் பாடலுக்கு T.K.ராமமூர்த்தியும் இசையமைத்திருந்தனர்.

   தனிமையின் வலியினை ஆழமாகப் பதித்து வடுக்கள் ஏற்படுத்திய பாடலே, Three {மூன்று} திரைப்படத்தில் அனிருத் இசையமைத்து அவரும் Mohit  Chauhan  னும்  பாடிய,

"தனியாக தவிக்கிறேன் 

துணை வேண்டாம் அன்பே போ 

பிணமாக நடக்கிறேன் 

உயிர் வேண்டாம் தூரப்போ "

  என்று விரக்தியின் விளிம்பினைத் தொட்ட வரிகளாகும். நடிகர் தனுஷ் இவ்வரிகளை வலியுடன் விதைத்திருந் தார் என்பது குறிப்பிடத்தக்கது.தனிமை யை ஆராதிக்கும் இன்னும் சில பாடல் களை தமிழ்த்திரை தந்திருக்கும்;கண் டிருக்கும்.தனிமையை தரிசிக்கச்செய் யும்,தனிப்பிறவி,தனிக் காட்டு ராஜா,தனி ஒருவன் போன்ற தமிழ்த் திரைப்பட தலைப்புகளும் உண்டு.

  மொத்தத்தில் உணர்வுகளின் பாடலுக் கேற்ப,தனிமையின் தாளங்கள் மாறிக் கொண்டே இருக்கும்.இறுதியாக,

"விட்டுவிடும் ஆவி;பட்டுவிடும் மேனி;

சுட்டுவிடும் நெருப்பு சூனியத்தின் 

நிலைப்பு"

    என்று வெறுமை,தனிமையை வேட்டை யாடினாலும்,உயிர் காற்றுக்கும்,உடல் மண்ணுக்கும், தனிமையை தாரைவார்க் கும்.தனிமையின் தாளங்கள் தரணியில் சில நேரம் சுகம் கூட்டும்.சில நேரம் தவிப் பை தாராளமாக்கும்.மனம் நிறையும் தனிமை சில நேரம் மணம் பரப்பும்.சில நேரம் குணம் குலைக்கும்.தனிமையின் தாளங்கள் வாழ்க்கை மேடையில் வித வித ராகங்களில் கச்சேரி நடத்திக் கொண்டிருப்பதை,ஒவ்வொருவரும் தனித்தனியாக அவரவர் மனக்காணொ ளியில் கண்டு கலக்கலாம்;கலங்கலாம், அல்லது திளைக்கலாம்.

    ===============0=================



     

1 comment:

  1. "....தனிமையின் தாளங்கள் வாழ்க்கை மேடையில் வித வித ராகங்களில் கச்சேரி நடத்திக் கொண்டிருப் பதை,ஒவ்வொருவரும் தனித்தனியாக அவரவர் மனக்காணொ ளியில் கண்டு கலக்கலாம்;கலங்கலாம், அல்லது திளைக்கலாம்." Finishing, touches the Self Sr.🙏🏻

    ReplyDelete