"முத்தைத்திரு பத்தித்திருநகை
அத்திக்கிறை சத்திச்சரவண
முதிக்கிக்கொரு வித்துக்கொருபர எனவோதும்"
என்று 'அருணகிரிநாதர்' திரைப்படத் தில் T.M சௌந்தராஜன் குரலில் ஒலித்த திருப்புகழ் பாடலின் வரிகள் ஜி.ராம நாதன் மற்றும் T.R பாப்பா இருவரின் இசையில் முருகனின் திருவருளை நெஞ்சில் வேலென பாய்ச்சின. வெண் முத்திற்கிணையான பல்வரிசையும், இளநகையும் அமைந்த தேவயானை தேவியின் தலைவனாகிய, சக்திவேல் தாங்கிய முருகன், மோட்ச வீட்டிற்கு விதையாக விளங்குபவன் என்று பொருளு ரைத்தது அப்பாடல்.
இதே T.M.சௌந்தராஜன் குரலில், 'மதுரைவீரன்' திரைப்படத்தில் ஜி.ராம நாதன் இசையில் 'வாங்க மச்சான்' பாடலுக்கிடையே தோன்றும்.
"முத்துப்போல பல்லழகி
முன்கோபச் சொல்லழகி
கத்திபோல் கண்ணனழகி
கனிவான பெண்ணழகி"
என்று தஞ்சை N.ராமைய்யாதாஸின் வரிகளில் அமைந்த பாடல், இறைவன் தடத்திலிருந்து கீழிறங்கி,மனித மேடை யின் குறும்புத்தனமான கற்பனையை அரங்கேற்றியது.
'முத்து' எனும் சொல் பற்களை மட்டும் குறிக்காது விழிகளையும் குறிக்கக் கூடும் எனும் வகையில் 'நெஞ்சிருக்கும் வரை'திரைப்படத்தில் எம்.எஸ். விஸ்வ நாதன் இசையில் T.M.சௌந்தராஜனும் P.சுசீலாவும் இணைந்து பாடிய கண்ண தாசன் பாடலே,
"முத்துக்களோ கண்கள்
தித்திப்பதோ கன்னம்
சந்தித்த வேளையில்
சிந்திக்கவேயில்லை
தந்துவிட்டேன் என்னை"
என்று இதமாக நெஞ்சில் நிறைந்த வரிகள்.இதுபோன்ற கற்பனைகளி லிருந்து சற்று விலகி குழந்தைகளை முத்துக்களாய் கொண்டாடும் பாடல்கள் தனி முத்திரை பதித்த,
"முத்தான முத்தல்லவோ
முதிர்ந்து வந்த முத்தல்லவோ
கட்டான மலரல்லவோ
கடவுள் தந்த பொருளல்லவோ"
எனும் 'நெஞ்சில் ஓர் ஆலையம்'திரைப் படப் பாடலும்,'கண்ணேபாப்பா' திரைப் படத்தில் இடம் பெற்ற,
"கண்ணே பாப்பா
கனிமுத்து பாப்பா
அன்னையும் இங்கே
சிந்தும் புன்னகை எங்கே"
என்று தொடங்கி,
"பனித்துளி ஒன்று
சிப்பியில் விழுந்து
வந்தது முத்து
என் மன்னவன் சொத்து"
என்று தொடரும் பாடல் வரிகள் முத்துக் களால் குழந்தைச் செல்வங்களை அலங் கரித்தன. இந்த இரண்டு கவியரசின் பாடல்களும் எம்.எஸ்.விஸ்வநாதன் இசை யில் P.சுசிலாவின் குயிலோசைக் குரல் குணம் கூட்டின.
மனித வாழ்க்கையில் ஒவ்வொரு பொழு தும் வெண்முத்தாக அதனை முறையாக கோர்த்து ஒரு நாளை அழகாக்கிக் கொண்டாட முனையும் நபர்களுக்கு, குறிப்பாக குடும்பத் தலைவிகளுக்கு, அழகான வாழ்க்கை அழிந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகையில்,மனம் தவிப்பதாய் அவர்கள் உணருவர்.அப்படி ஒரு மனநிலையை வெளிப்படுத்தும் பாடலே, 'சொர்க்கம்' திரைப்படத்தில் P. சுசீலா பாடிய,
"ஒரு முத்தாரத்தில் முப்பது முத்து
கோர்த்து வைத்திருந்தேன்
அதன் முன்னும் பின்னும்
தங்கக்கோடுகள் போட்டு
வைத்திருந்தேன்"
எனும்கண்ணதாசனின் வரிகளை எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் முழங்கிய முத்தான பாடலாகும்.இதே போன்றொரு கருத்தினை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்திய பாடலே, 'பாமா விஜயம்' திரைப்படத்தில் P.சுசீலா,எல் ஆர் ஈஸ்வரி சூலமங்கலம் ராஜலட்சுமி மூவரும் இணைந்து கொண்டாடிய,
"ஆனி முத்து வாங்கிவந்தேன்
ஆவணி வீதியிலே
அள்ளிவைத்து பார்த்திருந்தேன்
அழகு கைகளிலே"
என்று தொடங்கி,
"எண்ணிவைத்தேன்
ஏழெட்டு முத்துக்கள் காணவில்லை
ஏறிட்டு நான் அதை பார்க்கவில்லை
மார்பிலும் நான் அதை சூடவில்லை
அந்த கன்னத்தில் என்னடி முத்து வண்ணம்
எந்த கள்ளத்தனத்தினில் வந்ததடி
வாங்கிக்கொடுத்ததும்
தாங்கிப்பிடித்ததும்
முத்துக்கள் போல் வந்து சிந்துதடி.
ஒரு முத்து,இரு முத்து, மும்முத்து
நால்முத்து அம்மம்மா "
என்ற கண்ணதாசனின் பொன்னான வரிகளைக்கொண்ட,எம்.எஸ். விஸ்வநாத னின் இசையில் அர்த்தங்களை அழகுடன் கோர்த்து, செவிகளுக்கு அலங்கார மூட்டிய,பாடலாகும்.
முத்தான பாடல்களின் முத்துக்களின் வரிசையில் 'அனுபவி ராஜா அனுபவி' திரைப்படத்தில் T.M.சௌந்தராஜனும் எல்.ஆர் ஈஸ்வரியும் பாடிய,
"முத்துக்குளிக்க வாரீகளா
மூச்சை அடக்க வாரீகளா"
என்று தூத்துக்குடி மொழிதாங்கி வந்த உற்சாகப்பட்டாலும்,'அன்பு சகோதரர்கள்' படத்தில் கண்டசாலா மனமுருகிப் பாடிய,
"முத்துக்கு முத்தாக
சொத்துக்கு சொத்தாக
அண்ணன் தம்பி பிறந்து வந்தோம்
கண்ணுக்கு கண்ணாக
அன்பாக இனைந்து வந்தோம்
ஒண்ணுக்குள் ஒண்ணாக"
எனும் நெஞ்சில் அதிர்வலையினை தோற்றுவித்த பாடல் வரிகளாகும். இந்த கண்ணதானின் இப்பாடல்களில் முதலா வது பாடலுக்கு எம்.எஸ் விஸ்வநாதனும் இரண்டாவது பாடலுக்கு கே.வி.மகாதேவ னும் பாங்குடன் இசையூட்டினர்.இப்பதி வில் குறிப்பிட்ட முத்துக்கோர்வையாய் அமைந்த பாடல்களை முதலிரண்டைத் தவிர இதர பாடல்கள் அனைத்தையுமே கண்ணதாசான் மட்டுமே எழுதியது, கவியரசுக்கு மட்டுமின்றி தமிழ்த் திரைக்கே பெருமை சேர்ப்பதாகும்.
பாடல்களால் மட்டுமல்லாது வெண்தமிழ்த்திரை,தலைப்புகளாகவும்'முத்து' 'முரடன் முத்து''நத்தையில் முத்து'சிப்பிக் குள் முத்து''முத்து எங்கள் சொத்து' 'முத்துக்கு முத்தாக'போன்ற முத்துக்கள் முன்னோக்கிச் செல்வதை காணலாம். மொத்தத்தில்,வெண்தமிழ்த் திரையில் நல் முத்துக்கள், தமிழோடு விளையாடி, திரைகளைக் கடந்து விழிகளிலும் செவி களிலும் வெற்றி மாலைத் தோரணங்கள் கட்டுகின்றன.
=============0==============
👌
ReplyDelete