Thursday, January 1, 2026

வாழ்த்தும்,வரமும்

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் 

நிலமிசை நீடுவாழ்வார் 

   என்கிறார் வள்ளுவர்.'மலர்போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்று வோரின் புழ் வாழ்வு, உலகில் நெடுங் காலம் நிலைத்து நிற்கும்' என்று அதற்குப் பொருளுரைக்கிறார் கலைஞர். வாழ்த்துவதும் வாழ்த்துப் பெறுவதும், வாழ்நாளின் பெரும் வரங்களே!

  தமிழ்திரைப்படல்கள், வள்ளுவரின் கடவுள் வாழ்த்து அகராதியைப் போன்று, பல்வேறு வாழ்த்துப்பாடல்களைத் தந்து, மனிதர் மனங்களில் மலர்தூவியிருக் கின்றன. 'பேசும் தெய்வம்' திரைப்படத் தில், 

"நூறாண்டு காலம் வாழ்க 

நோய் நொடியில்லாமல் வளர்க 

ஊராண்ட மன்னர் புகழ்போலே 

உலகாண்ட புலவர் தமிழ்போலே" 

  என்று கே.வி.மகாதேவன் இசையில் கோவை சரளா, எல்.ஆர்.ஈஸ்வரி,சூல மங்கலம் ராஜலெஷ்மி, ஆகிய மூவரும் இணைந்து பாடிய வாலியின் வரிகள், வாழ்த்துக்கவிதைகளில் முதல் இடம் பிடிக்கும். 

  இதே கவிஞர் வாலி வாழ்த்துரைக்க, மனோவும் எஸ்.ஜானகியும் 'பணக்காரன்' திரைப்படத்தில் இளையராஜா இசையில் மகிழ்ச்சி பொங்கப்பாடிய,

"நூறு வருஷம்

இந்த மாப்பிள்ளையும் பொண்ணுந்தான்

பேருவெளங்க இங்கு வாழனும் 

சோலவனத்தில் ஒரு சோடிக்குயில் போலத்தான் 

காலம் முழுக்க சிந்து பாடனும்" 

எனும் ஆரவாரத்துள்ளல் பாடல். 

  'பணக்காரன்' திரைப்படப்பாடல் திருமணத்தம்பதியரை பொதுவாக வாழ்த்துவதாக அமைந்திருந்ததது. ஆனால் 'கீழ்வானம் சிவக்கும்' திரைப் படத்தில் டி.எம் .எஸ் குரலில் இடம் பெற்ற

"கடவுள் நினைத்தான் 

மணநாள் கொடுத்தான் 

வாழ்க்கை உண்டானதே 

கலைமகளே நீ வாழ்கவே; 

அவனே நினைத்தான் 

உறவை வளர்த்தான் 

இரண்டும் ஒன்றானதே 

திருமகனே நீ வாழ்கவே. 

ஆயிரம் காலமே, 

வாழவே திருமணம்" 

  என்ற கண்ணதாசன் பாடல், எம்'எஸ். விஸ்வநாதன் இசையில்,தந்தை மகனையும் மருமகளையும் வாழ்த்து வதாக அமைந்திருந்தது. 

   அறிவோடு வாழ்பவரை உலகம் தானே முன் வந்து வாழ்த்துரைக்கும் என்ற கருத்தைத்தான்,'சாந்தி' திரைப்படத்தில் டி. எம்.எஸ்ஸும் P.B ஸ்ரீனிவாசும் பாடிய, 

"வாழ்ந்து பார்க்கவேண்டும் 

அறிவில் மனிதனாக வேண்டும்

வாசல் தேடி உலகம் உன்னை 

வாழ்த்து பாடவேண்டும்"

   எனும் அருமையான பாடல் வரிகள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் இதயத்தில் வாழ்த்துக்களை நிரப்பியது. 

    ஆண்டுகள் பல வாழச்சொல்லி வாழ்த் துவது வாடிக்கை. ஆனால்,மனதையும் குணத்தையும் வாழ்த்துவது,பரிச்சி யத்தின், புரிதலின் எடுத்துக் காட்டாகும். அப்படி அமைந்த பாடலே,'ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது' திரைப்படத்தில் தட்சிணாமூர்த்தி இசையமைப்பில் கே.ஜே.ஏசுதாஸ் மனம் நெகிழ்ந்து பாடிய, கண்ணதாசனின் மேலான வரிகளில் அமைந்த,

"நல்ல மனம் வாழ்க 

நாடுபெற்ற வாழ்க

தென் தமிழ் போல் 

வான் மழைப்போல் 

சிறந்து என்றும் வாழ்க"

   என்று, வானம்போல் விரிந்து,வார்த் தைகளை மழைத்துளிகளாக்கி,நீர் தெளித்து, வாழ்த்திய பாடல். நலம் பேணி, வாலி வாழ்த்துக்குரல் எழுப்பிய மற்று மொரு பாடலே,'மறுபடியும்' திரைப்படத் தில், இளையராஜாவின் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மயிலிறகால் மனம் வருடிய,

 "நலம் வாழ எந்நாளும் என்வாழ்த்துக்கள்

 தமிழ்கூறும் பல்லாண்டு

 என்வார்த்தைகள்" 

   என்று தன்னபிக்கையோடு வாழ்த் துரைத்த அற்புதமான வரிகள். 

  நேசித்த காதலி காலச்சூழல் காரணத் தால் வேறொருவரை மணந்தாலும், மனமார காதலித்த பெண்ணை வாழ்த் தும்'நெஞ்சில் ஓர் ஆலயம்' திரைப்படத் தில் ஏ.எல்.ராகவன் பாடிய,விஸ்வ நாதன் ராமமூர்த்தி இசையில் நெஞ்சுருகச் செய்த,

"எங்கிருந்தாலும் வாழ்க 

உன் இதயம் அமைதியில் வாழ்க 

மஞ்சள் வளத்துடன் வாழ்க 

உன் மங்கலக் குங்குமம் வாழ்க"

  என்று பரந்த மனதுடன் பாடிய பாடலில், வரிக்கு வரி 'வாழ்க' எனும் சொல் வழிந்துப் பொழிவதைப்பார்க்கலாம். காதலியை வாழ்த்துவதைப்போன்று காதலனை எதிர்நோக்கி வருமுன்பே வாழ்த்தும் மற்றொரு பாடலே,'நூற்றுக்கு நூறு' திரைப்படத்தில் வி.குமாரின் இசை யில் P. சுசீலா பாடிய,

"நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் 

நீ வரவேண்டும்; 

உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் 

நீ வரவேண்டும்" 

   எனும் வாலியின் வரிகளில் அமைந்த மற்றொரு பாடல்.இவற்றையெல் லாம் கடந்து,மக்களெல்லாம் ஒன்றுகூடி ஒரு தனி நபரை வாழ்த்திய பாடலே, 'இதயக்கனி' திரைப்படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் குழுவினருடன் பாடிய, 

"நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற

இந்த நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற" 

   என்று குதூகலக்குரலெழுப்பி கூட்ட மாய்ப் பாடிய எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் களிப்பூட்டிய புலமைப்பித்த னின் பாடல்.வாழ்த்துரைப்பதில், பாடல் களோடு நில்லாது,வாழ்த்துங்கள் 'பெண்ணே  நீ வாழ்க','பல்லாண்டு வாழ்க' 'இன்றுபோல் என்றும் வாழ்க' போன்ற வளமாக வாழ்த்தும் தலைப்புக் களும் உண்டு. எப்படி நாம் வாழ்ந்தாலும், பிறரை வாழ்த்துவதும் வாழ்த்துப் பெறு வதும், வாழ்வின் நிறைவான வரங்க ளாகும்!

                   ================0=================== 

No comments:

Post a Comment