Sunday, May 17, 2026

கடிதக் காலங்கள்

 

  சமூக ஊடக்காலத்தில் வாழும் நம்மில் பலரும்,குறிப்பாக கடந்த நூற்றாண்டின் இடைப்பகுதியில் பிறந்து இன்றும் வாழ்ந்துகொண்டிருப்போர் பலரும் ஏங்குவது, கடிதக்காலமே!இப்போது ஒரே அறையில் இருந்து கொண்டு 'வாட்ஸ் அப்ப்' செய்திகளை பரிமாறிக் கொள்ளும் உறவுகளும் உண்டு.இதற்கு காதலரும் கணவன் மனைவியும்கூட விதிவிலக்கல்ல. 

   ஆனால் கடிதங்கள் மட்டுமே நெஞ்சப் பரிமாற்றங்களின் கருவியாய் இருந்த காலத்தில்,ஒரு அஞ்சல் அட்டையும்,அதில் ஒரு நூலிழை இடம் கூட விடப்படாத செய்திகளும், மனதில் மகிழ்ச்சியையும் சோகத்தையும் ஒருசேர பரப்பியதுண்டு. தமிழ்திரைப்படங்களும் கடிதங்களை குறியிட்டு, பாடல் வரிகளால் நம் உணர்வு களை உசுப்பிக்கொண்டிருந்தன. இன்றைக்கு என்னதான் மின்னஞ்சல் இருந்தாலும்,அன்றைய காலணா, பின்னர் ஐந்து பைசா,பத்துபைசா,இருபத் தைந்து பைசா,என்று சுவரேறிக் கொண் டிருந்த அஞ்சலட்டைகள்,உச்சிமுதல் பாதம் வரை உள்ளன்பால் மெய்சிலிற்க வைத்தன.

    ஒரு கடிதத்தை அனுப்பும் நிலையில் அது கடிதமல்ல என்றும்,பின்னர் அது என்ன என்றும்,விளக்கும் 'பேசும் தெய்வம்'திரைப்படத்தில் கே.வி. மகாதேவன் இசையில் டி.எம்.எஸ் பாடிய,

"நான் அனுப்புவது கடிதம் அல்ல 

உள்ளம்;

அதில் உள்ளதெல்லாம் எழுத்துமல்ல, 

எண்ணம்;

உன் உள்ளமதை கொள்ளை கொள்ள!" 

என்று தொடங்கி, 

"நிலவுக்கு வான் எழுதும் கடிதம் 

நீருக்கு மீன் எழுதும் கடிதம் 

மலருக்கு தேன் எழுதும் கடிதம் 

மங்கைக்கு நான் எழுதும் கடிதம் "

. என்று பல்வேறு உருவகங்களை குறிப் பிட்டு வாலி எழுதிய கடித வரிகளை,நம் வாழ்நாள் உள்ளளவும் மறக்க இயலாது.

  இதேபோன்று 'குழந்தையும் தெய்வமும்' திரைப்படத்தில் எம்'எஸ்'விஸ்வநாதன் இசையில் மீண்டும் வாலி வரிகளமைத்து, டி.எம்.எஸ்ஸும் P. சுசீலாவும் பாடிய, 

"அன்புள்ள மான்விழியே 

ஆசையில் ஓர் கடிதம்; 

நான் எழுதுவதென்னவென்றால், 

உயிர்க்காதலில் ஓர் கவிதை." 

என்று ஆணும், 

"அன்புள்ள மன்னவரே

ஆசையில் ஓர் கடிதம்; 

அதை கைகளில் எழுதவில்லை;

இரு கண்களில் எழுதிவந்தேன்"

  என்று பெண்ணும் பாட, கடிதத்திலேயே காதலும்,இல்வாழ்வின் இணக்கமும் களைகட்டியது.    

   'தேவா' திரைப்படத்தில் தேவாவின் இசையில் எஸ்.பி.பி.யும்,நடிகர் விஜய்யும் இணைந்து பாடிய, அதே வாலியின் வரிகளில் அமைந்த,

"ஒரு கடிதம் எழுதினேன் 

அதில் என் உயிரை அனுப்பினேன்; 

அந்த எழுத்து வடிவிலே, 

நான் என்னை அனுப்பினேன். 

காதலி,என்னை காதலி" 

    என்ற பாடல் சொற்களால் உயிரை கடிதத்தில் மைய்யென கசியச் செய்தது. காதல் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பி விட்டு, அது கிடைத்ததா என்று மறு முனையில் உள்ள காதலியிடம் உறுதி செய்யும் காதலரும் உண்டு. அப்படி உறுதி செய்யப்பட்ட பாடலே,'சேரன் பாண்டியன்' திரைப்படத்தில் புலமைப் பித்தனின் வரிகளிலும் சௌந்தர்யன் இசையிலும், லோப்ஸன் ராஜ்குமார் மற்றும் ஸ்வர்ண லதா சேர்ந்து இதயத்துடிப்பில் இணக்கம் சேர்த்த, 

"காதல் கடிதம்

வரைந்தேன் உனக்கு; 

வந்தததா? வந்ததா? 

வசந்தம் வந்ததா?" 

என்று காதலன் வினவ, 

"காதல் கடிதம் 

வரைந்தாய் எனக்கு; 

வந்ததே,வந்ததே, 

வசந்தம் வந்ததே"

    என்று முறுமுனையில் காதலி ஏற்பளிக்க,காதல் பயணம் கடிதம் மூலம், கனிவாய் கரை கண்டது.

    கவிபுனைகையில் கற்பனை கரை புரண்டோடிட,உவமைகளும் உருக. உருவாக்கங்களும்,உல்லாசமாய் ஒருங் கிணைந்து, புதியதோர் அஞ்சல் துறை யையும், அஞ்சல் பரிமாற்றத்தையும், ஏற்படுத்தக் கூடும்.அப்படிதான் புதுப் பொலிவுடன் கடிதமொன்று, களிப்புறும் கடிதப்போக்குவரத்தை,செவிகளை தபால் பெட்டிகளாக்கி,மனமெனும் முகவரியை முத்த மிட்டது.'ஜோடி' திரைப் படத்தில் ஏ.ஆர்.ரெஹ்மான் இசையோட்டத்தில், கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகள், கடிதக் கருவிகளையும் கடிதப் போக்கு வரத்தையும்,கட்டுக்கடங்கா கருத் துக்களஞ்சியமாக்கின. எஸ்.ஜானகியும் உன்னி கிருஷ்ணனும் குரலொத்துப் பாடிய, 

"காதல் கடிதம் தீட்டவே, 

மேகம் எல்லாம் காகிதம். 

வானின் நீலம் கொண்டுவா! 

பேனா மையையோ   தீர்ந்திடும்.    

சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்; 

இரவு பகல் எப்பொழுதும், 

அஞ்சல் உன்னை சேர்ந்திடும்"

எனும் வரிகளால் கடிதக்காலத்தையே மாற்றியமைத்தது.

.  மொழி அறியாததாலோ,அல்லது தன்னால் எழுதமுடியாததாலோ,வரிகளை எடுத்துக்கொடுத்து மற்றவர்களை எழுதச் சொல்லும் காதல் கடிதங்களும் உண்டு. அப்படி எழுதப்பட்ட கடிதமே, கமல் குரல் கொடுத்து,அவருக்காக அவர் காதலி அபிராமிக்கு எழுதப்பட்ட,

"கண்மணி அன்போடு காதலன் நான்

எழுதும் கடிதமே"

என்று குணா திரை ப்படத்தில் கேட்கப் பட்ட கற்பனைக் கடிதப்பாடல்

    வாலியின், எளிமையாகத் தொடங்கி ஏற்றம் பெரும் இவ்வரிகளுக்கு, இசை ஞானியின் இசை, சாகா வரமளித்தது.

  ''ஆசையில் ஓர் கடிதம்" என்று கடிதம் எனும் சொல்லை தலைப்பில் ஏற்று வந்த திரைப்படத்தில், தேவாவின் இசையில் ஸ்ரீனிவாஸ் பாடிய, வைரமுத்துவின் வரிகளிலாலான, 

"ஆசையில் ஓர் கடிதம் 

வரைந்ததே ஓர் இதயம் 

எழுத்தினால் தலை எழுத்தை 

மாற்றியே விதி எழுதும்"

   என்ற மென்மையான பாடலினினூடே, சோகமும் இழைந்தோட அதை கேட்கும் பலர் மனதில்,கடிதத்தின் கனத்தை உணர முடிந்தது. 

   பொதுவாக ஒவ்வொரு கடிதமும் அதனை அஞ்சல் அட்டையில் எழுதி னாலும், அல்லது மூடி மறைத்து அனுப் பினாலும், அதனுள்ளே குடியிருக்கும் எழுத்துக்கள் எழுந்து நின்று, உணர்வு களை ஊஞ்சலாடச் செய்யவோ, ஊடல் கொள்ளத்தூண்டவோ, ஊக்கம் பெறச் செய்யவோ, அல்லது ஊனமுறச் செய்ய வோ,முடியும். காதலர்கள் கடிதங்கள் மட்டுமே, பெரும்பாலும் திரைப்படங்க ளில் இடம்பெற்றுள்ளன.

    அனால்,அன்றாட வாழ்வில், கடந்த நூற்றாண்டில் குடும்பத்து உறவு களால் எழுதப்பட்டு பெறப்பட்ட கடிதங்கள், சுறுக்குக்கயிறுகளாகவும், சொர்க்கச் சாயல்களாகவும்,இருந்திருக்கக்கூடும். இவை அனைத்தும் பெரும்பாலும் ஒவ்வொரு குடும்பத்தின் உறவு நடை முறைகளின் வெளிப்பாடே! 'படித்தால் மட்டும் போதுமா' திரைப்படத்தில் சுயநலத்தால் ஒரு சகோதரன் எழுதிய இரு கடிதங்கள்,குடும்பத்தின் பலரது வாழ்வினை புரட்டிப்போட்டதை, 

"தெரிந்தே கெடுப்பது பகையாகும் 

தெரியாமல் கெடுப்பது உறவாகும்" 

   எனும் கண்ணதாசனின் துல்லியமான சொற்களெடுத்து தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்தின.

     இன்றைக்கு கடிதங்கள் கால் நீட்டி படுத்துவிட்டன. கனிவான கருத்துக்க ளையும் கனமான சிந்தனையையும் எழுத்து மூலம் பகிர்ந்து கொள்ள, எழுத்துக்களே தடைக்கற்களாகிவிட்டன. சமூக ஊடகங்களில் சண்டையிடவே நேரம் போதவில்லை.அத்தலங்களிலும் பெருவாரியாக, சிந்தனை சீர்கேட்டையும், மொழியின் மூச்சு முட்டலையுமே,காண முடிகிறது. 

   தபால் துறையில் கடிதம் சேரவேண்டிய விலாசம் சரியாக குறிப்பிடப் படாதபோது அக்கடிதங்கள் அனுப்புனருக்கே திருப்பி அனுப்பப்படும். அனுப்புனரின் விலாசமும் இல்லையெனில், அது போன்ற கடிதங் கள்  Dead Letter Office எனும். அலுவலகத் தில் புதைக்கப்படும். ஆனால்,இன்று,கடிதக் கலையே  குளிர் சாதனப்பெட்டி யைத்தேடி, இறுதிக் காலத்தின்  ஈமச் சடங்குகளுக்காக காத்திருப்பதாகவே தோன்றுகிறது.      

                                    ================0================= 

 

1 comment:

  1. கலி காலத்தில் கடிதங்களின் அவல நிலையை இவ்வளவு பட்ட வர்த்தனமாக சொன்ன தில்லை. ".... *கடிதங்கள் கால் நீட்டி படுத்துவிட்டன. கனிவான கருத்துக்க ளையும் கனமான சிந்தனையையும் எழுத்து மூலம் பகிர்ந்து கொள்ள, எழுத்துக்களே தடைக்கற்களாகிவிட்டன. சமூக ஊடகங்களில் சண்டையிடவே நேரம் போதவில்லை.அத்தலங்களிலும் பெருவாரியாக, சிந்தனை சீர்கேட்டையும், மொழியின் மூச்சு முட்டலை யுமே....* "🙏

    ReplyDelete