Wednesday, February 16, 2022

வெள்ளித்திரையில்,வெட்டும் வசனங்கள்

    திரைப்படங்களின் திரளான வரவேற்புக்கும் வெற்றிக்கும்,காரணங்கள் பலவாம். நல்ல கதையையும்,காணவருவோர் மனநிலையையும், ஆழமாகப் புரிந்த இயக்குன ரின் ஆற்றல்,அந்த ஆற்றலின் பின்னணியில் உருவாகும் திரைப்பட  தயாரிப்பு , கதாபாத்திரங்களின் கருவறிந்து அதில் பங்கேற்கும் நடிகர்களின் தனித்திறன், திரைப்பட தொழில் வல்லுனர் களின் வலுவான ஒத்துழைப்பு, இவற்றையெல்லாம் ஒருநிலைப்படுத்தும் காட்சியமைப்புகளும் வசனங்களும் என்று,ஒரு திரைப்பட உருவாக்கலின் பல்வேறு அங்கங்களை வகைப்படுத்தலாம்.
   கடந்த நூற்றாண்டில் வெளியான பல்வேறு திரைப்படங்களில் வசனமே பெரும் பங்கு வகித்தது.ஆனால், இந்த நூற்றாண்டில் துவக்கம் முதல்,பல திரைப்படங் களில் வசனங்களைக் குறைத்து,செவிகளை ஒதுக்கிவைத்து, விழிகளை பிரதான மாக்கி காட்சியமைப்புகள் வெற்றி பெறுவதைப் பார்க்கிறோம். இருப்பினும்,  ன்றும் திரைப்பட வசனங்கள்,அளவோடு  திரைப்பட காட்சிகளை,துல்லியமாக நிர்ணயம் செய்கின்றன என்றுதான் கூற வேண்டும்.
     இந்த வலைப்பதிவில் ஏற்கனவே கதாநாயகர்கள் மற்றும் இதர கதா பாத்திரங் களின் மறக்கமுடியா சில ஒரு வரி வசனங்கள் பற்றியும்,வசனங்களின் அதிர்வு கள் பற்றியும்  பாடல்களில் இடம்பெறும் வசனங்கள் பற்றியும் கட்டுரைகள் வெளியிடப் பட்டுள்ளன. கருத்துச்செறிவும் சொல்லாண்மையும் உள்ளடக்கிய வசனங்கள்,என்றுமே திரைப்பட பழத்தோப்பில்,சுவைமிகு பழுத்த பழங்களாக சுவைக்கப்பட்டு, நினைவுகளில் அவ்வப்போது  அந்த சுவை பவனிவருவதுண்டு.
  இப்படிப்பட்ட வசனங்கள்  வெறும் வசனங்களாக நில்லாது, காட்சித் தொடரில் ஒருவர் பேசும் வசனத்தை மற்றொருவர் வெட்டிப்பேசுவதாக அமைந்து, சிரிப்பலை களைத் தோற்றுவித்து,சிந்திக்ச்செய்வதும்  ண்டு. அதுபோன்ற  சில வசனங் களை நினைவு கூறுவதே இப்பதிவின் நோக்கமாகும்!
    'பராசக்தி' திரைப்படத்தில் வீதியில் உறங்கும் சிவாஜிகணேசனை உலுக்கி எழுப்பும்  நகரக் காவலர் "என்னடா முழிக்கிற? "எனக்கேட்க, அதற்கு சிவாஜி  கணேசன்"தூங்கறவன எழுப்பினா முழிக்காம என்ன பண்ணுவான்"என்பதே வெண்திரையில் நான் கேட்ட முதல் வெட்டும் வசனமாகும்.இது கலைஞரின் எழுத்துக்கூர்மைக்கு எடுத்துக்காட்டானது. 
     நம் நாடு'திரைப்படத்தில்}எஸ் வி ரெங்கராவ் "நீ பாம்பு புத்துக்குள்ள கைய விடற ;அது ஒன்ன கடிக்காம விடாது".என்று எம்.ஜி.ஆரை அச்சுறுத்த அதற்கு பதிலடியாக, எம் ஜி ஆர்"நான் புத்துக்குள்ள கைய விடறதே,கடிக்கிற பாம்ப பிடிக்கறதுக்குத் தான்"என்று சட்டெனச் சொல்வார்.  
    'கல்யாண பரிசு' திரைப்படத்தில்}மனைவிக்கு பயந்த கே.ஏ.தங்கவேலு தனது வழக்கமான அண்டப்புபுளுகு பாணியில், "இப்பிடித்தான் ஒரு எடத்துல நான் பேசும்போது,எழுத்தாளர்கள்தான் இந்த நாட்டின் முதுகெலும்புன்னு சொன்னபோ, தட்டினாம்பாரு"என்று ஒரு உடான்ஸை எடுத்துவிட,அதற்கு கொஞ்சமும் சளைக்காத அவரது மனைவி  எம்.சரோஜா 'யார உங்களையா?'என்று வசனத்தால் குட்ட ,சற்றும்  திணறாத தங்கவேலு, "யார்ரி  இவ. சுத்த பயித்தியக்காரியா இருக்க.நீ அங்க வந்திருந்த,என்ன பாத்திருக்க முடியாது."என்றுரைக்க ,உடனே எம் சரோஜா  'ஏன்,ஓரமா நின்னீங்களா?'என வார்த்தையால் வெட்டிவிடுவார் 
    'சொர்க்கம்' திரைப்படத்தில்:- சிவாஜி கணேசன்,நண்பன் நாகேஷிடம் "என் மனசில ஒரு பெரிய ஆசையாயிருக்கு;இந்த ஊர்ல எல்லாரும் என்னப்பத்தியே பேசனும்"என்று தன ஆதங்கத்தை வெளிப்படுத்த,உடனே நாகேஷ்"நாலுபேருகிட்ட கடன்வாங்குடா; இந்த ஊரே உன்னப்பத்தி பேசும்"என கிண்டலடிப்பார்.  அதே'சொர்க்கம் ' திரைப்படத்தில் சிவாஜி  கணேசன் கே.ஆர்.விஜயாவிடம் "பீடி குடிச்சா லோ கிளாஸ்; சிகரெட் குடிச்சா ஹை கிளாஸ்" என்று சொல்ல, உடனே  கே.ஆர்.விஜயா ''கெட்டுப் போறதிலேயே கிளாஸ் வேறயா ?"என்று சொல்லால் சாட்டையடிப்பார். தொடர்ந்து  வேறொரு காட்சியில் சிவாஜி,'பங்களாவில் மகனுக்கு என்ன குறைச்சல்'என்று ஆத்திரத்தில் அளப்பறிக்க, சற்றும் பின்வாங்காமல் ''பங்களாத்தாங்க குறைச்சல்' என்று  ஓங்கி அறைவதுபோல் உண்மையை உரைப்பார் கே.ஆர்.விஜயா.
  'அன்பே ஆருயிரே'{1975}திரைப்படத்தில் "நான் அழகா பொறந்ததுதான் தப்பா போச்சு" என்று மஞ்சுளா புலம்ப,உடனே சிவாஜி கணேசன் ''இல்லாத ஒண்ண நெனச்சு நீ ஏன் வருத்தப்படுற''என்று கேலியுடன் மஞ்சுளாவை மடக்குவார். அதே திரைப்படத்தில் சிவாஜியும் மஞ்சுளாவும் நாகேஷும் டாக்சியில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை கடந்து செல்ல ,உடனே "அய்யோ சென்ட்ரல் போச்சு சென்ட்ரல் போச்சு''என்று அலறுவார் மஞ்சுளா. அதற்கு உடனே சிவாஜி, "சென்ட்ரல் தானே போச்சு என்னமோ உங்க அப்பன் சொத்து போனமாதிரி"அலற என்று கிண்டலாக மஞ்சுளாவை வெறுப்பேற்றுவார்.   
     சந்தித்த வேளை' திரைப்படத்தில்,ஒரு நேர்காணல் அதிகாரி விவேக்கிடம்,  "ஒனக்கு டைப் ரைட்டிங் தெரியுமா"? என்று காரியமாகக் கேட்க,உடனே விவேக் தனக்கே உரிய விவேகக் குறும்புடன், "என் ரைட்டிங் ஒரு டைப்பா இருக்கும்.ஆனா எனக்கு டைப் ரைட்டிங் தெரியாது'' என்பார்.
     'தூள்' திரைப்படத்தில் விக்ரம்,ரீமா சென்னிடம் சவடாலாக, அப்போ சுமார் எனக்கு எட்டு வயசு இருக்கும்; நான் மூணாவது படிச்சிக்கிட்டி ருந்தேன்'.என்று தனது பழைய கதையை ரீல் விட ,உடனே விவேக் குறுக்கிட்டு "டேய்,நீ இப்பவரைக்கும் அதுதான்டா படிச்சிருக்க"என்று தூரத்தில் நின்று விக்ரமை தோலுரிப்பார்.   
    'பொல்லாதவன்' திரைப்படத்தில் தனுஷின் சகோதரி,தனுஷிடம்:-"இந்த   மாதிரி பசங்களோடெல்லாம் சவகாசம் வச்சுக்காதேன்னு எத்தனை தரம் சொல்றது" .என ஏளனமாய் கடிந்துகொள்ள,உடனே நமது ஒன் லைனர் சந்தானம் "போடி, உங்க அண்ணனோட பழக பில் கேட்ஸ் அங்க வெய்ட் பண்ணிக்கிட்டுருக்கார்'' என்று  சீண்டுவார். 
  'சகலகலாவல்லவன்' {2005}திரைப்படத்தில் ‘’அவ மட்டும் எனக்கு கெடக்க லைன்னா அந்த நெனப்புலேயே நான் செத்துடுவேன்''என்று சூரி சொல்ல, உடனே ஜெயம் ரவி"உன்னோட இந்த நெனப்ப பத்தி கேட்டாலே, அவ செத்து போயிடு வாளேடா"என்று குறும்புடன் கலாய்ப்பார்.
  சந்தானத்தின் 'கண்ணா லட்டு திங்க ஆசையா.திரைப்படத்தில் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் "நான் உங்கள் பக்கத்துவீட்ல குடியிருக்கேன்"எனக்கூற உடனே கோவை சரளா "அப்ப நீங்க ஒங்க வீட்ல குடியில்லையா"என்று அசட்டுத்தனமாய் வெட்டுவார்.   
   இதேபோன்று சமீபத்தில் வெளிவந்த 'ராஜவம்சம்' திரைப்படத்தில் சசிகுமார் சதீஷிடம் 'எங்க பேமிலிய பத்தி உனக்கு தெரியாதுடா' எனச் சொல்ல 'என்ன பெரிய அம்பானி பேமிலியா'என்பார்  சதிஷ்.உடனே சசிகுமார் இல்லடா 'அன்பான பேமிலி' என்று சிலேடையாய் பதில் கொடுப்பார் 
   'கொம்பன்' திரைப்படத்தில் கோவை சரளா தன் மகன் கார்த்திக்கிடம்,"நீ இப்பிடியே பேசிக்கிட்டிரு;ஒருநாளைக்கு நீ  திங்கிற சோத்துல வெஷத்தை வைக்கப் போறேன்''என்று எரிந்து விழ,அதற்கு கார்த்திக் ''ஆமா,ஆமா! நீ ஏற்கனவே வெக்கற சோறே,வெஷமாத்தான் இருக்கு".என்று கலாய்ப்பார்.  
  'கிரி' திரைப்படத்தில் பெண்பார்க்க வரும் பாண்டியராஜன். 'மாப்பிள் ளைக்கு என்ன போடுவீங்க'என்று வெகுளித்தனமாய்க் கேட்க,'சொன்னபடி செய்ய லைன்னா மாப்பிள்ளையை போடுவோம்'என்று சர்வ சாதாரண மாக கூறுவார், பெண்வீட்டாரில் ஒருவர். 
   'பேரரசு' திரைப்படத்தில் இயக்குனர் டி.பி.கஜேந்திரன் பிரகாஷ் ராஜிடம்"ஒன்ன ஒழிச்சு கட்டாம விடமாட்டேன்டா"என்று குதித்து குதித்து சூளுரைக்க,அதற்கு வெறியுடன் பிரகாஷ்ராஜ்,"மொதல்ல உன் வேட்டியை ஒழுங்கா கட்டபாருடா"   என்பார். 
  'தோழா'திரைப்படத்தில் கார்த்திக் முகத்தினை அப்பாவித்தனமாக வைத்துக் கொண்டு  பிரகாஷ் ராஜுடன் காரில் இறங்கி அவரிடம்,'வீடு ரொம்ப நல்லா இருக்கு சார்;உங்குளுதா சார்?'' என்று கேட்க உடனே பிரகாஷ் ராஜ், 'இல்ல பக்கத்து வீட்டுக்காரன்கிட்ட இருந்து திருடுனது' என்பார். 
  'வெற்றிவேல் சக்திவேல்'திரைப்படத்தின் இறுதிக்காட்சியில்  குஷ்பு சத்யராஜிடம் "சீக்கிரம் நம்ம சக்திக்கும் மஞ்சுவுக்கும் கல்யாணத்துக்கு அய்யரை வச்சு நாள் குறிக்கனுங்க"என்று சொல்ல"உடனே அதற்கு சத்யராஜ்"ஏன் ஒரு முதலியாரையோ செட்டியாரையோ வச்சு நாள் குறிச்சா ஆகாதோ"என்று அவருக்கே உரிய குறும்புடன் கூறுவார்.   
   'கண்டேன் காதலை' திரைப்படத்தில்  தமன்னாவின் தாயார்"டேய் வெள்ளிக் கிழமை அதுவுமா பொண்ணு வீட்டைவிட்டு ஓடிபோய்ட் டாடா'' என்று சந்தானத்திடம் மனம் நொந்து கூற,அதற்கு வசனத்தால் எதிராளியை வெட்டியே பழக்கப்பட்ட சந்தானம் ''அப்ப சனிக்கிழம ஓடிப்போனா பரவாயில்லையா?''என்று வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவார். இங்கே பதிவிட்ட வசனங்கள் எல்லாம்,பெரும் வெள்ளத்தின் சில துளிகளே 
    மேலே குறிப்பிட்டது போன்று பல திரைப்படங்களில்,உன்னிப்பாக கவனிக்காமல் விட்டுவிட்டால்,விட்டதற்காக வருத்தப்படும் வெட்டும் வசனங்கள் நிறைய உண்டு. நாவினால் சுடும் வடுக்களோ, சொல்லால் அடிக்கும் சுகமான விளையாட்டோ, அறிவால் எழும் வசனங்கள் பல, அரிவாளென வெட்டும் கூர்மை வாய்ந்தவை என்பதை,திரைப்பட வசனகர்த்தாக்களின் திகைப்பூட்டும் சாதனையாகக் கருதலாம். 
     
ப.சந்திரசேகரன் . 

2 comments: