அகிலம் விரிந்து,அகன்று விசாலமாகி,மண்ணின் மகத்துவத்தை பறைசாற்று கிறது.மண்ணின் பெருமை இனத்தால்,மதத்தால், மொழியால், கலாச்சாரத்தால், வேறுபட்டு மனித வாழ்க்கைக்கு மணம் சேர்க்கிறது. கலாச்சாரம்,மனித சமூகத்தின் மண்சார்ந்த சிந்தனையை, வாழ்க்கை முறைகளை வெளிபபடுத்துகிறது.
கலாச்சாரத்தின் ஒரு முகப்பே,மண்சார்ந்த மனிதரின் ஆடை பழக்க வழக்கங்கள். ஆடை கலாச்சாரத்தின் முதன்மையாக விளங்குவோர் பெரும்பாலும் பெண்களே!இந்த கோணத்தில் பார்க்கையில், வட இந்தியாவைக் காட்டிலும் தென்னிந்தியா வில்,புடவைக் கலாச்சாரம், பெண்களின் அன்றாட வாழ்க்கையிலும் விழாக்காலங் களிளும், விண்ணதிரச் செய்யும் அற்புதமே!.
மனிதன் ஆடையின்றி பிறக்கிறானே ஒழிய ஆசையின்றி பிறப்பதில்லை. இக்கருதினைத்தான் தமிழ் மூதாட்டி அவ்வை தனது
உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்
எண்பது கோடி நினைந்து எண்ணுவன - கண்புதைந்த
மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையும் சஞ்சலமே தான்!’
எனும் கருத்தாழம் நிறைந்த சொற்களால் எழுதிவைத்தார்.இதன் பொருளாக நாம் அறிவது.
"நாழி உணவும் நான்கு முழ ஆடையும் போதுமானதாய் இருக்க,எண்பது கோடி விஷயங்களுக்கு ஆசை கொள்வது ஏன்?"என்பதாகும்"மண்கலம் போல் உடையப் போகும் வாழ்வில் அளவுக்கு மீறிய ஆசை எப்போதும் சஞ்சலத்தையே தரும்" என்பதே அவ்வை,தனது ஆழ்ந்த அனுபவத்தின் அடிப்படையில் சிந்தனையால், சொற்களால்,தமிழ் மொழிக்கு சூட்டிய ஆடையாகும். தத்துவங்கள் ஆயிரம் இருப்பினும்,அவை எவையுமே மனித இனத்தின் நீண்டகால பழக்க வழக்கங்களை மாற்றுவதாக இல்லை. குறிப்பாக பெண்கள் புடவை அணிகையில் ,அதுவும் பட்டுப்புடவை அணிகையில்,மிகுந்த ஆனந்த பரவசத்திற்கு உள்ளாகின்றனர்.
பட்டு எனும் சொல்லையும் பட்டுத் துணியின் பாரம்பரிய சிறப்பினையும் ஆசை களாய்,ஆடைகளாய்,ஆனந்த வேட்கையாய் பாடல்களாக்கி,பெரும்பாலும் ஆண்களின் குரலிலும் சிலநேரம் பெண்களின் குரலிலும் பிரசவித்து,தமிழ்த் திரைப்படங்கள் ஆலாபனை செய்துள்ளன.காதலும் கவித்துவமும் ஒருசேர பெண்மையை வருணிப்பதற்கு,பட்டு எனும் சொல்லும் பட்டுத் துணியின் பாங்கும் திரைப்படப் பாடல்களில் ஒய்யார மாக பவனிவந்துள்ளன.
இதுபோன்ற பாடல்களில் ஒரு சில முக்கியமான வரிகளை எம்.ஜி.ஆருக் காக டி.எம் சௌந்தராஜன் பாடினார் என்பது தமிழ்த்திரைப்பட வரலாற்றின் தனிச்சிறப்பாகும். இந்த வகையில்,1961- இல் தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த,'தாய் சொல்லை தட்டாதே'திரைப்படத்தில் இடம்பெற்ற,
பட்டுச்சேலை காத்தாட
பருவமேனி கூத்தாட
கட்டு கூந்தல் முடித்தவளே என்னைக்
காதல் வலையில் அடைத்தவளே
எனும் பாடலை குறிப்பிடலாம். இப்பாடலுக்கு கே வி மகாதேவன் இசையமைத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து 1963-இல் வெளிவந்த'பரிசு'திரைப்படத்தில் பட்டின் மேன்மையுடனும் பொலிவுடனும்,பெண்ணின் தன்மையை ஒப்பிட்டு,எம். ஜி.ஆர் வாயசைக்க அவருக்காக கே.வி.மகாதேவன் இசையில் டி.எம்.எஸ் பாடி நம்மில் பலரும் கேட்டு ரசித்த அழகான பாடலே,
பட்டு வண்ண
சிட்டு படகு துறை விட்டு
பார்ப்பதுவும் யாரையடி
அன்ன நடை போட்டு
அதற்குப்பின்னர் 1966-இல் ஆர்.ஆர் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் திரை அரங்குகளில் கூட்டம் திரட்டிய'பறக்கும் பாவை'திரைப்படத்தில் மீண்டும் எம்.ஜி.ஆருக்காக டி.எம்.எஸ் பாடிய,
பட்டுப் பாவாடை எங்கே
கட்டி வைத்த கூந்தல் எங்கே
பொட்டெங்கே பூவும் எங்கே
சொல்லம்மா சொல்லம்மா
எனும் கம்பீரமான பாடல்,எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் நம் ஜெஞ்சங்களை கொள்ளை கொண்டது.
மேற்கண்ட மூன்று எம்.ஜி.ஆர் திரைப்படங்களுக்கிடையே,ஏ.வி.எம் தயாரிப்பில் வெற்றிநடைபோட்ட வீராதிருமகன்{1962} திரைப்படத்தில் பி.சுசீலாவும் எல்.ஆர். ஈஸ்வரியும் இணைந்து பாடிய,
நீலப் பட்டாடை கட்டி
நிலவென்னும் பொட்டும் வைத்து
பால் போலச் சிரிக்கும் பெண்ணே
பருவப் பெண்ணே பெண்ணே
பந்தாடும் காதல் பெண்ணே
கன்னிப் பெண்ணேஎனும்
எனும்பாடல் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையில் இனிமையாக செவிகளுக்கு விருந்தளித்தது.உருவாக்கமும் உவமையும் கலந்து, இலக்கிய நயத்துடன் அமைந்த இப்பாடலையும்,இப்பதிவில் மேலே கண்ட மூன்று எம்.ஜி.ஆர் திரைப்படப் பாடல்களையும் எழுதியவர்,கவியரசு கண்ணதாசன் என்பது,இந்த நான்கு பாடல்களும் நான் மாடாக்கூடல் போன்ற சந்திப்புத் தாக்கத்தினை,சந்தோஷ விளைச்சலாக்கியது.
பட்டு எனும் சொல்லை மெல்லிய நூலிதழால் பெண்ணின் மென்மை யுடன் இணைத்து,பெரிதுவக்கும் ஆண்மையின் அழகிய மனநிலையை பிரதிபலிக்கும் இரண்டு அருமையான பாடல்களை,மலேஷியா வாசு தேவன் குரலில் கேட்டிருக்கிறோம்.முதலாவதாக,
எஸ்.ஏ ராஜ்கண்ணுவின் தயாரிப்பில் திரைக்கு வந்த கன்னிப்பருவத்திலே {1979}திரைப்படத்தில் …
பட்டு வண்ணரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்
பாசம் என்னும் நீர்இறைச்சேன்
ஆசையில நான்வளர்த்தேன்
அள்ளி வச்ச வேளையிலே
முள் இருந்து பட்டுதம்மா
பட்டாலும் குத்தமில்ல
பாவம் அந்த பூவுக்கிள்ள
என்ற அரவணைப்புச் சொற்களால் பெண்மைக்கு ஆறுதல் வழங்கும் புலமைப் பித்தனின் பாடலை,சங்கர் கணேஷ் இசையில்,பலமுறை தாலாட்டுப் பாடலாய்க் கேட்டு கண்ணயர்ந்தோம்.
அதனைத் தொடர்ந்து இசைஞானி இளையராஜாவின் இசையில் பஞ்சு அருணாச்சலத்தின் வரிகளான
பட்டு வண்ண சேலைக்காரி
எனைத்தொட்டு வந்த சொந்தக்காரி ஹோய்..
ஒரு பெண்ணிடத்தில் என்ன என்ன புதுமை
அவள் புன்னகையில் தொட்டில் கட்டும் இளமை
எனும் நம் இதயங்களில் தொட்டில் கட்டி இளைப்பாறிய பாடலை ரஜினிகாந்தின் இயல்பான நடிப்பில் உருவான'எங்கேயோ கேட்டகுரல்' {1982}திரைப்படத்தில் கேட்டு மெய்மறந்தோம்.
பட்டுத்துணி என்றாலே தமிழகத்தில் தலைக்குமேல் கிரீடமென தரம் கூட்டுவது காஞ்சிப் பட்டு.எனவே பட்டினைப்பற்றி பாட்டெழுத்துகையில், கவிஞர்களின் கற்பனையை களவாடுவது காஞ்சி எனும் சொல்லாகும். இந்த வகையில் 1978-இல் கே.ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'வயசுப் பொண்ணு'திரைப்படத்தில் கே.ஜே.யேசுதாசும் பாடகர் சாவித்திரியும் இனிமையாய்ப் பாடிய
காஞ்சி பட்டுடுத்தி
கஸ்தூரி பொட்டும் வைத்து
தேவதைபோல் நீ நடந்து வரவேண்டும்
அந்த திருமகளும்
உன் அழகைப் பெறவேண்டும்.
எனும் பரவசப் பாடல் நம் நினைவலைகளை தட்டி எழுப்பும்.கவிஞர் முத்துலிங்கத் தின் நளினமான வரிகளை மெல்லிசை மன்னரின் இசை ஆட் கொண்டது.
பட்டாடையின் பண்பாட்டு மகத்துவம் கடந்த நூற்றாண்டுக்குப்பிறகு அவ்வளவாக திரையிசைப்பாடல்களில் இடம்பெறவில்லை. இருப்பினும், கடந்த நூற்றாண்டின் /ஆயிரம் ஆண்டின் முடிவில் அஜித்குமார் நடிப்பில் 'ரெட்டை ஜடை வயசு'{1997}எனும் வித்தியாசத் தலைப்புடன் வெண்திரை யை அலங்கரித்த திரைப்படத்தில், ஹரிஹரனின் இலவம்பஞ்சுக் குரலில்,
காஞ்சிப்பட்டு சேலை கட்டி
கால் கொலுசில் தாளம் தட்டும்
கன்னிப் பொண்ணே நின்னு கேளம்மா.
எனும் பாடல்,தேனிசைத் தென்றல் தேவாவின் இசையோட்டத்தில்,கவிஞர் வாசனின் வரிகளுக்கு,தங்கமுலாம் பூசி,ஹரிஹரன் குரலால் தனிச் சுவை கூட்டியது.
காலங்கள் மாறிவருகையில்,ஆடைக்கலாச்சாரமும் அபரிமிதமான மாற்றங்களை தரணியெங்கும் காணச்செய்கிறது.பன்னாட்டு வணிகத்தின் படையெடுப்பும், தகவல் தொழில் நுட்பத்தின் தாக்கத்தில் மயங்கிக் கிடக்கும் சமூக ஊடக நிலைப் பாடுகளும்,தமிழக மகளிரின் புடவை பாரம்பரியத்தை கணிசமாக புறந்தள்ளியிருக் கிறது என்ற யதார்த்த நிலையினை,காலத்துடன் பயணிக்கும் தமிழ்த்திரை உணர்ந்ததாலோ என்னவோ,பட்டுச் சேலை பற்றிய பாடல்களை தமிழ்த்திரை தரிசிக்க தயங்குகிறது.
ப.சந்திரசேகரன் .
=============0=============
No comments:
Post a Comment