Sunday, April 11, 2021

"உள்ளத் தனையது உயர்வு".

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத் தனையது உயர்வு.

  என்கிறார் வள்ளுவர்.உள்ளத்தின் உயர்வே வாழ்வின் உயர்வு,என்பதே இக்குறளின் உட்கருத்தாகும்."உள்ளத்தின் உள்ளூறும் கள்ளோடு  கவியாக்கி உயரத்தில் ஏற்று மனமே"என்கிறது மற்றொரு கவிதை.

   இலக்கியம் போற்றும் வாழ்க்கை நெறிகள்,வாழ்வின் உன்னத நிலை களுக்கு வழிகாட்டுகின்றன.எனவே உடல் நலம் பேணுதல் மட்டுமே வாழ்வின் இலக்கல்ல.ஒளியேற்றும் சிந்தனைகளால் உள்ளத்தை அருள்பெற்ற ஆலயமாய் உயரச் செய்தலே வாழ்தலின் வழிகாட்டுச் சின்னமாம்.இதையொட்டியே,

"நலம்தானா? நலம்தானா? 

உடலும் உள்ளமும் நலம்தானா?"  

   எனும் பாடல்,கே.வி மகாதேவனின் கர்நாடக இசை மழையில் பி.சுசீலா வின்  தெவிட்டாக்குரலில் 'தில்லானா மோகனாம்பாள்' படத்தில் இடம் பெற்றிருக்கவேண்டும்.

   கபடும் சூதும் அறியா உள்ளம் இறைவனின் இருப்பிடம்.'படிக்காத மேதை' திரைப்படத்தில் படிப்பறியா ரெங்கன் எனும் கதாப்பாத்திரத் திற்கு உயிரூட்டி, நடிகர் திலகம்,டி.எம்.எஸ் குரலுக்கு வாயசைத்த,

"உள்ளதை சொல்வேன் நல்லதை செய்வேன் 

வேறொன்றும் கிடையாது 

உள்ளத்தில் இருப்பதை வார்த்தையில் மறைக்கும்

 கபடம் தெரியாது" 

  எனும் மிக இயல்பான பாடல்,கபடற்ற நெஞ்சமே கடவுளின் களிப்பிடம் என்பதை உணர்த்தியது .இத்திரைப்படத்திற்கும் திரையிசைத்திலகம் கே. வி.மகாதேவனே இசையமைத்திருந்தார்.  

    'உள்ளம்''மனம்''நெஞ்சம்'என்ற சொற்கள் அனைத்துமே புலன்களுக்கு அப்பாற்பட்டவையே. ஆனால் இந்த புலன்களுக்கு அப்பாற்பட்ட ஒன்றை ஐம்புலன்களுக்கு உட்படுத்தும் வகையில்,  திரைப்படத் தலைப்புகளும் கவிதை வரிகளும் கற்பனையின் வரம்பினைக் கடந்து வியாபித்திருக் கின்றன.'உயர்ந்த உள்ளம்''இருவர் உள்ளம்'நெறஞ்ச மனசு''உள்ளதை அள்ளித்தா''உள்ளம் கொள்ளை போகுதே'போன்ற எண்ணற்ற திரைப்பட தலைப்புகளைக் காண்கையில்,உள்ளம் ஏதோ விழிகளுக்குப் புலப்படும் பொருளாக எண்ணத்தோன்றுகிறது. 

   தலைப்புகள் போதாதென்று, 

"நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா தா தா" {காதலிக்க நேரமில்லை}என்றும்,

"உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் 

 உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்"

 {அவளுக்கென்று ஓர் மனம் }என்றும்,பாடல் வரிகளாகக் கேட்கையில், உள்ளம் ஏதோ அள்ளித்தெளிக்கும் பொருளாகவோ,அல்லது அள்ளித் தரும் அன்பை அரவணைக்கும் அணையாகவோ,கவிஞர்கள் கற்பனை செய்து பார்ப்பது புரிகிறது.

   மேற்கண்ட இரண்டு திரைப்படங்களும் ஸ்ரீதரின் இயக்கத்தில் உருவான வை என்பதும்,இவற்றில்'காதலிக்க நேரமில்லை'க்கு விஸ்வநாதன் இராமூர்த்தி இணைந்தும்'அவளுக்கென்று ஓர் மனம்' திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் தனித்தும் இசையமைத்திருந்தனர் என்பதை அனைவரும் அறிந்திருக்கக்கூடும். 

   உள்ளத்தை உணர்வுகளின் உறைவிடமாக்கி,விழிகளை அவ்வுறைவிடத் தின் கதவுகளாக்கி,புலன்களுக்கும், ,புலன்களுக்கு புலப்படா உள்ளத் திற்கும்,பாலமைப்பதே கற்பனைக் களஞ்சியத்தின் முதலீடாகும். இப்படிப்பட்ட நிலையினை வெளிப்படுத்தும் பாடலே ஜெய்ஷங்கர் கதாநாயகனாக நடித்து வெளியான 'இரவும் பகலும்' திரைப்படத்தில்  டி.ஆர்.பாப்பாவின் இசையில் டி.எம்.எஸ் குரலில் ஒலித்த 

"உள்ளத்தின் கதவுகள் கண்களடா 

இங்கே உறவுக்கு காரணம் பெண்களடா 

உள்ளதை ஒருதிக்குக் கொடுத்துவிடு 

அந்த ஒருத்தியை உயிராய் மதித்துவிடு"   

   எனும் உளம் நிறையும் பாடலாகும். தானுண்டு தன் வேலையுண்டு எனும் உள்ளம் கொண்டோர்க்கு உறக்கத்திற்கு பஞ்சமில்லை.ஆனால் நீதிக்கும் நேர்மைக்கும், நியாத்திற்கும் போராடும் நல்ல உள்ளம் பெற்றோர்க்கு, உறக்கமே இல்லை என்கிறது'கர்ணன்' திரைப்படத்தில் சீர்காழி கோவிந்த ராஜனின் கோபுரக்குரலில் கோலோச்சிய, 

"உள்ளத்தில் நல்ல உள்ளம் 

உறங்காதென்பது 

வல்லவன் வகுத்ததடா,கர்ணா, 

வருவதை எதிர்கொள்ளதடா" 

எனும் காவியப்பொக்கிஷமாக அமைந்த பாடலாகும். 

   உள்ளம் ஒருவேளை உறங்கு மெனில்,அதில் உண்மையும் உறங்கக்கூடும் என்பதைத் தான்,'பார்த்தால் பசிதீரும்' திரைப்படத்தில் நாம் கேட்டு பரவச முற்ற, 

"உள்ளம் என்பது ஆமை 

அதில் உண்மை என்பது ஊமை 

சொல்லில் வருவது பாதி 

நெஞ்சில்  தூங்கி கிடப்பது மீதி" 

   எனும்,விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில்,டி எம் சௌந்தராஜன் பாடிய அமுத கானம் உணர்த்தியது. இங்கே எடுத்துரைக்கப்பட்ட பாடல்களில் "உள்ளத்தின் கதவுகள் கண்களடா"பாடலை மட்டும் ஆலங்குடி சோமு எழுத,இதர பாடல் கள் அனைத்துமே கவியரசு கண்ணதாசனின் கற்பனை ஊற்றின் புறப்பாடாகும்.  

 முடிவாக,வள்ளுவரின் 

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது

தள்ளினும் தள்ளாமை நீர்த்து.

  எனும் குறளில்  கண்டதுபோல்"எண்ணுவதெல்லாம் உயர்வைப்பற்றியே எண்ண வேண்டும், அவ்வுயர்வு கைகூடா விட்டாலும் அவ்வாறு எண்ணு வதை விடக்கூடாது"என்பதே வாழ்வின் நியதியாகும்.'விஜயபுரிவீரன்' திரைப்படத்தில் டி.ஆர்.பாப்பாவின் இசையில் A.M.ராஜா பாடிய, 

"உள்ளத்திலே உரம் வேணும்டா 

உண்மையிலே திறன் காணுமடா 

ஒற்றுமையால் வெற்றி ஓங்குமடா 

வல்லவன்போலே பேசக்கூடாது 

வானரம்போல சீறக்கூடாது

வாழத்தெரியாமலே கோழைத்தனமாகவே 

வாலிபத்தை விட்டுவிடக்கூடாது   .

மானம் ஒன்றே பிரதானம் என்றே 

மறந்துவிடாதே வாழ்வினிலே"

 எனும் தஞ்சை ராமையாதாஸ் பாடல்,இந்த உண்மை நிலையினை செழுமையாய் உள்ளத்தில் புகுத்துகிறது. 

ப.சந்திரசேகரன்

                              ==================================

2 comments: