இலக்கியத்தில்,குறிப்பாக கவிதைகளில்,உவமைகளும் உருவங்களும், கவிஞரின் கற்பனைக்கும்,கவிதையின் அழகிற்கும்,பலம் சேர்க்கின்றன. இது போன்று,உவமைகளையும் உருவகங்களையும் திரைப்படத் தலைப் புகளாகவும்,பாடல் வரிகளாகவும் சந்திக்கின்ற வேளையில்,அந்த தலைப் புகளும் பாடல்களுமே,ரசிகர்களை திரையரங்கிற்குள் வசியப் படுத்து கின்றன.
உவமைகளை உள்ளடக்கிய திரைப்பட தலைப்புகளில்,கடந்த நூற்றாண் டின் ஐம்பதுகளின் இறுதியில் கே.சோமுவின் இயக்கத்தில் உருவான,ஒரு சிறப்பான தமிழ்ப் பழமொழியான'தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை'என்பதை,உவமையுடன் பொருள் கூறும் உன்னத திரைப் படமாகக் கருதலாம்.பின்னர் தமிழ் எழுத்தாளர்களில் தனிமுத்திரை பதித்த ஜெயகாந்தனின்'உன்னைப்போல் ஒருவன்'எனும் புதினம்,திரைப் படமானது.அதற்குப்பிறகு சிவாஜி கணேசன் நடித்து வெளியான 'என்னைப் போல் ஒருவன்'விக்ரமனின்'வானத்தைப் போல'எனும் உவமை சார்ந்த திரைப்படங்கள் வெளியாயின.
திரைப்படப் பாடல்களில் உவமை பலநேரம் வலம் வந்திருக்கிறது. 'அன்னையின் ஆணை' திரைப்படத்தில்'அன்னையைப்போல் ஒரு தெய்வ மில்லை'{கவிஞர் க.மு.ஷெரிப்}எனும் மகத்தான பாடலும்,'பாச மலர்'திரைப்படத்தில்' மலர் களைப்போல் தங்கை உறங்குகிறாள்' {கவிஞர் கண்ணதாசன்}என்ற பாடலும்,பாவமன்னிப்பில் 'காலங்களில் அவள் வசந்தம்,என உருவகமாய்த் தொடங்கி அதன் இடையே வரும்,
'பால் போல் சிரிப்பதில் பிள்ளை;
பனிபோல் படர்வதில் கன்னி;
கண்போல் வளர்ப்பதில் அன்னை'{கவிஞர் கண்ணதாசன்}
எனும் உவமைகளும் 'பாசம்' திரைப்படத்தில் P.B.ஸ்ரீனிவாஸ் எஸ்.ஜானகி குரல்களில் இனித்த
"மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தில்
மயங்கிய ஒளியினைப் போலே
மன மயக்கத்தை தந்தவள் நீயே'{கவிஞர் கண்ணதாசன்}
எனும் இயற்கை போற்றும் உவமையும்,இந்த இயல்பான உவமைகளை பின்னுக்குத் தள்ளி நவீன உவமைகளை உள்ளடக்கிய கவிப்பேரரசுவின் வித்தியாசமான வரிகளைக் கொண்ட 'இந்தியன்' திரைப்படத்தில் ஹரிஹரன் ஹரிணி குரல்களில் நாம் கேட்டு ரசித்த
டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா
மெல்போர்ன் மலர்போல் மெல்லிய மகளா
எனும் இசைப்புயல் ரஹ்மானின் இசையில் மென்மையாய் மிதந்துவந்த பாடலும்
'ஐ'{I} திரைப்படத்தில் என்னோடு நீயிருந்தால் எனும் பாடலுக்கிடையே தோன்றும்
'தேங்காய்க்குள்ளே நீர்போலே,
உன்னைத் தேக்கிவைப்பேனே' {கவிஞர் கபிலன்}
எனும் வரிகளும் சேர்ந்து எல்லா காலக்கட்டங்களில் உவமையின் தனிச் சிறப்பினை திரைகானங்களாக வெளிப்படுத்தியுள்ளன இங்கே குறிப்பிட் டவை மிகக்குறைந்த உதாரணங்களே!
உருவகப் பயன்பாட்டினை பொறுத்தவரை,தொழிலாளர் விரோத மனப் பான்மை கொண்ட,முதலாளித்துவத்தின் ஆணவப்போக்கினையும் முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையே நிலவும் பனிப்போரி னையும்,பகைத்திரையுடன் ஜெமினி ஸ்டுடியோஸ் தயாரித்த,'இரும்புத் திரை'படம் வெளிக்காட்டியது.
பின்னர் ஸ்ரீதரின்'விடிவெள்ளி'முக்தா ஸ்ரீனிவாசனின்'பனித்திரை'& நிறைகுடம்'ஏ.பீம்சிங்கின்'பாசமலர்'கே.சங்கரின்'பணத்தோட்டம்'மற்றும் 'கலங்கரை விளக்கம்'பி.புல்லையாவின்'ஆசைமுகம்'கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த'இதயவீணை'ஆகிய திரைப்படங்கள் உருவகப் பின்னணியில்,தலைப்புகளை தருவித்தன.இயக்குனர்களில் தனித்தன் மை வாய்ந்த படைப்பாளியான கே.பாலச்சந்தரின்'நீர்க்குமிழி','நாணல்' 'புன்னகை''இருகோடுகள்'''நான்கு சுவர்கள்'விசுவின் 'மணல் கயிறு' போன்ற அனைத்து தலைப்புகளுமே ஆழ்ந்த அர்த்தத்தினை உள்ளடக்கி, அறிவு சார்ந்து நின்றன.
பாடல்களில் உருவகமாகப் பயணித்த
காலங்களில் அவள் வசந்தம்
கலைகளில் அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
எனும் எழில்மிகுப் பாடலும் {பாவ மன்னிப்பு;கவிஞர் கண்ணதாசன் }
"வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல்தான் எங்கள் வீடு"
எனும் மீனவர் வாழ்வின் சோகத்தை ஒற்றைவரியில் உருவகமாக வடித்துத்தந்த 'தரைமேல் பிறக்கவைத்தான் எங்களை தண்ணீரில் மிதக்கவிட்டான் பாடலும்'[படகோட்டி;கவிஞர் வாலி}
"அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்
தழுவிடும் இனங்களில் மானினம்"
எனும் ஏகாந்த வரிகளும் {உலகம் சுற்றும் வாலிபன்; கவிஞர் கண்ணதாசன் }
"தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே
ஆழியிலே கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே" {சின்னத்தம்பி; கவிஞர் வாலி }
எனும் ஒய்யாரத் தாலாட்டும்,திரையிசை உருவகத் தேன்துளிகளில் ஒரு சிலவாம்!
திரைப்படப் பாடல்களில்,வருணனையின் விசாலத்தை கண்டு,விழி களை உயர்த்தி வியந்திருக்கிறோம்.உவமை,உருவகம்,இலக்கிய நயம் வருணனை எல்லாவற்றியையும் ஒன்றாகத்திரட்டி கவியரசு கண்ண தாசனின் கற்பனை விருட்சமாய் தழைத்து உயர்ந்து நின்ற,காலத்தால் அழிக்கமுடியாத பாடலே,மாலையிட்ட மங்கை திரைப்படத்தில் இடம்பெற்ற
சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே
நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே
நின்றது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள்
நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம்
மணம் பெறுமோ வாழ்வே... ஆ... ஆ.ஆ.ஆ.ஆ.
செந்தமிழ் தேன் மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிட தலை குனிவாள்
காற்றினில் பிறந்தவளோ புதிதாய்
கற்பனை வடித்தவளோ
சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ
செவ்வந்திப் பூச்சரமோ
.........................................
கண்களில் நீலம் விளைத்தவளோ
அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ
பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ...
எனும் தமிழ் மொழியின் தன்னிகரில்லா தேன்சுவையை அள்ளித்தந்த அகம் மகிழும் வரிகள்.டி.ஆர் மகாலிங்கம் தனது ஒப்பற்ற குரலில் பாட, இப்பாடலுக்கு மெல்லிசை மன்னர்கள் அழியாப்புகழ் தேடித் தந்தனர். இன்றைக்கும் இப்பாடலை விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் மேடையில் இளைஞர்கள் பாடக் கேட்பதில்தான் எத்தனை சுகம்!பல தலைமுறைகளை கடந்து நிற்கும் இப்பாடலை,இலக்கிய நயமும்,இசை யின் மகத்துவமும்,காலச் சக்கரத்தின் நிற்கா பயணமாக்கின.
இதேபோன்று ,'பாசமலர்'திரைப்படத்தின் காப்பியமாகிய''மலர்ந்தும் மலராத பாதி மலர்போல''பாடலுக்கு இடையே தோன்றும்,
நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளம் தென்றலே
வளர்பொதிகை மலைதோன்றி மதுரை நகர்கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே
எனும் அமரத்துவம் பெற்ற வரிகளும்,
'போலீஸ்காரன் மகள்'திரைப்படத்தில் எஸ்.ஜானகி P.B ஸ்ரீனிவாஸ் குரல் களில்,
"இந்த மன்றத்தில் ஓடிவரும்
இளம் தென்றலை கேட்கின்றேன்
நீ சென்றிடும் வழியினிலே
என் தெய்வத்தை காண்பாயோ"
எனும் அமுதத்தால் மனம் நிறைத்த பாடலும், எம்.ஜி.ஆரின்'கலங்கரை விளக்கம்' திரைப்படத்தில் கம்பீரமாக எழுந்த,
"பொன்னெழில் பூத்தது புதுவானில்
வெண்பனித் தூவும் நிலவே நில்"
எனும் மனதில் வேரூன்றிய வரிகளும் 'பயணங்கள் முடிவதில்லை' திரைப்படத்தில் ஏகாந்தமாக ஒலித்த"இளைய நிலா எழுகிறதே இதயம் வரை நனைகிறதே"பாடலுக்கு நடுவே,இலக்கியத் தூவலாக இணைந்த,
"முகிலினங்கள் அலைகின்றதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தொலைந்ததினால்
அழுதிடுமோ அது மழையோ"
எனும் விண்ணைத்தொடும் வரிகளும்,
தமிழ்த்திரையின் திரைப்பூங்காவில் பூத்த வண்ணமிகு மலர்களாகக் கருதலாம்.இது போன்ற உருவகம் சார்ந்த எண்ணற்ற தமிழ்த்திரைப் பாடல்கள் உண்டு.எனவே இச்சிறு துளிகளை,பெரும் வெள்ளமாகக் காணலாம்.
மேற்கண்ட நான்கு பாடல்களில் முதல் இரண்டை கவியரசு புனைய, 'கலங்கரை விளக்கம்'பாடலுக்கு பஞ்சு அருணாச்சலமும் 'பயணங்கள் முடிவதில்லை'பாடலை வைரமுத்துவும் இலக்கிய உணர்வோடு திரைக் கவிதையாக்கினர்.
இலக்கியத்தில் படைப்பாளிகள் சிலநேரம் மனித உணர்வுகளையும் ஆற்றலையும் இயற்கைக்கோ,அல்லது உயிரற்ற,புலன்களுக்கு அப்பாற் பட்ட பொருட்களுக்கோ புகுத்தி,கற்பனையின் ஆதிக்கத்தில் களிப்புறுவ துண்டு.ஆங்கிலத்தில் இதனை 'Pathetic Fallacy'என்று கூறுவர்.
அவ்வாறு இலக்கிய கோட்பாட்டில் அமைந்த ஸ்ரீதரின்'இளமை ஊஞ்ச லாடுகிறது'கே.பாலச்சந்தரின்'தாமரை நெஞ்சம்'எஸ்.பி.முத்துராமனின் 'ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது'கே.ரெங்கராஜின்'பாடு நிலாவே' கே.பாக்கியராஜின் 'தாவணிக் கனவுகள்',ராஜிவ் மேனனின்'மின்சாரக் கனவு'பாரதிராஜாவின்'நாடோடித் தென்றல்'பேராசிரியர் ஏ.எஸ்.பிரகா சத்தின்'எச்சில் இரவுகள்'எஸ்.ஜெகதீசனின்'மேகத்துக்கும் தாகமுண்டு' கஸ்தூரி ராஜாவின்'வீரம் வெளஞ்ச மண்ணு''ராபர்ட் ராஜசேகரனின் 'சின்னப்பூவே மெல்லப் பேசு'மிஷ்கினின்'சித்திரம் பேசுதடி'ஸ்ரீதர் பிரசாத் தின்'அள்ளித் தந்த வானம்'போன்ற திரைப்பட தலைப்புகள் இலக்கிய தூவல்களாக,திரைத்துறைக்கு செழுமை சேர்த்தன.
இலக்கிய படைப்பாற்றலில் முரண்தொடை{ஆங்கிலத்தில் oxymoron}என்பது இன்னொரு முக்கிய வடிவாகும்.இரண்டு முரண்பட்ட கருத்துக் களை ஒன்று சேர்ப்பதையே முரண்தொடை என்பர்.இந்த வகையில் அமையப்பெற்ற திரைப்பட தலைப்புகளில்,ஏ பீம்சிங்கின் 'படிக்காத மேதை',தேவர் பிலிம்ஸின்'கன்னித்தாய்'கே.பாலச்சந்தரின்'நூல்வேலி' ராபர்ட் ராஜசேகரனின்'பாலைவனச் சோலை'கலைஞரின்'பாலைவன ரோஜாக்கள்'&'நீதிக்கு தண்டனை' I.V.சசியின்'பகலில் ஒரு இரவு'நடிகர் தியாகராஜன் தானே இயக்கி நடித்த'பூவுக்குள் பூகம்பம்' ஆபாவாணனின் 'ஊமை விழிகள்'மணிரத்னத்தின்'பகல் நிலவு''மௌன ராகம்' கமலின் 'உத்தம வில்லன்' ஆர்.அர்விந்தராஜ் இயக்கத்தில் உருவான,விஜயகாந் தின்'கருப்பு நிலா'ரகுவின் இயக்கத்தில் சுரேஷும் சுலக்க்ஷனாவும் இணைந்து நடித்த,'புத்திசாலி பைத்தியங்கள்'கே.பாக்கியராஜின்'மௌன கீதங்கள்'பாலாஜி மோகனின்'வாயைமூடி பேசவும்'ஆகியவற்றை பிரதான முரண்தொடை தலைப்புகளாகக் காணலாம்.
இதுபோன்ற இலக்கிய நயம்கொண்ட பல தலைப்புகளுக்கிடையே கவித்துவம் பெற்ற கே.விஜயனின்'தூரத்து இடி முழக்கம் 'T.ராஜேந்தரின் 'ஒருதலைராகம்'மணிவண்ணனின்'முதல் வசந்தம்'பாரதிராஜாவின் 'கல்லுக்குள் ஈரம்''கடலோரக் கவிதைகள்'கே.பாக்யராஜின் 'சுவர் இல்லா சித்திரங்கள்'கலைஞரின்'பாடாத தேனீக்கள்'பாசிலினின்'கண்ணுக்குள் நிலவு'ராதா மோகனின்'அழகிய தீயே,'எழிலின்'மனம் கொத்தி பறவை' போன்ற அழகுக் கோர்வைகளும் உண்டு.
அடுக்குத் தொடர்களும்,எதுகை மோனையும்,இரட்டைக்கிளவியும் சிலேடை/இரட்டுற மொழிதலும்,என்றென்றும் தமிழ் மொழிக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் இலக்கிய தோரணங்களாகும்.அடுக்குத் தொடருக்கு உதாரணங்களாக"ஓ மானே மானே மானே உன்னைத்தானே"[வெள்ளை ரோஜா] "அன்ப சுமந்து சுமந்து"{பொன்னுமணி}"சின்ன சின்ன வண்ணக் குயில்,யாரை எண்ணி பாடுதம்மா"{மௌன ராகம்}"கண்ணும் கண்ணும் கொள்ளையடித் தால் காதலென்று அர்த்தம்"{திருடா திருடா} போன்ற பாடல்களை ஒருசில குறியீடுகளாகக் கொள்ளலாம்.திரைப்பட தலைப் புகளில் 'தண்ணீர் தண்ணீர்'' திருடா திருடா''அண்ணே அண்ணே''அன்பே அன்பே''ஓ மானே மானே'என்ற அடுக்குத் தொடர்களை கண்டிருக்கி றோம் .
எதுகை மோனைக்கு"ராஜா,வேறெங்கும் தூக்காதே கூஜா'{அக்கினி நட்சத்திரம்}'தில்லானா தில்லானா நீ திதித்க்கின்ற தேனா திக்கு திக்கு திக்கு தில்லானா"{முத்து}"ஒட்டகத்த கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கொ வட்டவட்ட போட்டுக்காரி"{ஜென்டில் மேன்}எனும் பாடல்களையும் சில எடுத்துக்காட்டலாகக் கருதலாம்.இதில்'வட்ட வட்ட'தில்லானா தில்லா னா'அடுக்குத் தொடருக்கும் உதாரணமாகின்றன.
எதுகை மோனைக்கு 'பெற்ற மகனை விற்ற அன்னை''முத்து எங்கள் சொத்து' 'பெத்த மனம் பித்து''மண்ணுக்கேத்த பொண்ணு' 'விண்ணுக்கும் மண்ணுக்கும்''கண் சிவந்தால் மண் சிவக்கும்' 'கட்டிலா தொட்டிலா''வீட் டில எலி வெளியில புலி''மேகத்துக்கும் தாகமுண்டு'போன்ற பல போன்ற திரைப்படத் தலைப்புகளை சுட்டிக்காட்டலாம்.இது போன்றஇன்னும் எத்தனையோ தலைப்புகள் தமிழ்த்திரையில் உண்டு.
இரட்டைக்கிளவிக்கு உதாரணமாக'சமய சஞ்சீவி' திரைப்படத்தில் கேட்ட "கம கமவென நறுமலர் மனம் வீசுதே" எனும் பாடலில்'கம கம'என்பதை இரட்டைக்கிளவி எனக் கொள்ளலாம்.மேலும் மிஸ்ஸியம்மா திரைப்படத் தில் ஏ.எம்.ராஜா பாடிய'பழகத்தெரிய வேணும்'என்ற பாடலுக்கிடையே வரும்"கடு கடுவென முகம் மாறுதல் கர்நாடக வழக்கமன்றோ"எனும் வரி யில் 'கடு கடு'எனும் சொற்கள் இரட்டைக்கிளவியாகும்.அதே போன்று'பல் லேலக்கா' பாடலுக்கிடையே இரட்டைக்கிளவி சார்ந்த பல சொற்களை கேட்கலாம்."தகிட தகிட தகிட தகிட தந்தானா"{சலங்கை ஒலி}எனும் பாட லில்'தகிட தகிட'எனும் இரட்டைக்கிளவி இருமுறை வருவதைக் காண லாம்
இரட்டுற மொழிதலுக்கு உதாரணமாக'பாகப்பிரிவினை'திரைப்படத்தில் கேட்ட"பிள்ளையாரு கோவிலுக்கு பொழுதிருக்க வந்திருக்கும் பிள்ளை யாரு?"எனும் டி.எம்.எஸ் குழுவினருடன் பாடிய பாடலில் 'பிள்ளையார்' எனும் சொல் விநாயகக் கடவுளையும் ஏதேனும் ஒரு நபரையும் குறிக்கும் வகையில் அமைந்திருந்தது.
இரட்டுற மொழிதலின் இன்னும் சிறப்பான எடுத்துக்காட்டாக ஏ.வி.எம் தயாரிப்பில் உருவான'அன்னையும் பிதாவும்' திரைப்படத்தில் பி.சுசீலா மனமுருகி பாடிய'மலரும் மங்கையும் ஒரு ஜாதி' பாடலின் இடையே வரும் "ஒருக்காலும் இல்லை ஒரு காலும் இல்லை"எனும் வரி 'ஒருபோதும்' எனும் பொருளையும் ஒற்றைக்காலினையும்,அருமையாகக் குறிப்பிட்டது.இதில் முதல் பாடலை பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரமும் இரண்டாவதை கவியரசு கண்ணதாசனும் தங்களின் சொல்வன்மையால் புனைந்து, தமிழ்திரையிசைக்கு பெருமை சேர்த்தனர்.
'வீர அபிமன்யு'திரைப்படத்தில் ஸ்ரீனிவாசும் பி.சுசீலாவும் சேர்ந்து ரம்யமாய் பாடிய 'பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்'எனும் பாடலின் இடையே தோன்றும் 'மலைத்தேன் என நான் மலைத்தேன்'என்ற வரி மலைத் தேனையும்,வியப்பில் {மலைப்பில்} ஆழ்ந்தேன் எனும் கருத்தையும் இரு பொருளாகக் கொண்டு,கண்ணதாசனின் இலக்கிய நயத்தையும் கவிதை ஆற்றலையும் வெளிப்படுத்தியது.
இதே போன்று'முதல் மரியாதை' திரைப்படத்தில்"பூங்காற்று திரும்புமா" எனும் மலேஷியா வாசுதேவன்,எஸ் ஜானகி குரலில் ஒலித்த பாடலுக் கிடையே வரும்,"ஏதோ என் பாட்டுக்கு நான் பாட்டுக்கு நான் பாட்டு பாடி, சொல்லாத சோகத்தை சொன்னேனடி"எனும் வரியில் 'பாட்டுக்கு' எனும் சொல் பாடலையும்,ஒரு நபரின் போக்கினையும் {ஏதோ என் பாணியில் என்பதுபோல்}குறிப்பதாக உணரலாம்.இப்பாடலை வைரமுத்து எழுதி யிருந்தார்.இதுபோல இன்னும் பல இரட்டுற மொழிதல் சொற்கள் தமிழ்த்திரை கானங்களில் உண்டு.
திரைப்படத் தலைப்புகளில் 'ஆடிப் பெருக்கு' என்பதில்'ஆடி'எனும் சொல் தமிழ் மாதத்தையும்'நடனம்'எனும் பொருளையும் தருவதுபோல,'காட்டு ரோஜா'எனும் தலைப்பில்'காட்டு'எனும் சொல் 'வனம்' மற்றும் 'காண்பி' எனும் இருபொருள் கூறுவதையும் காணலாம்.
ஒன்றுக்கு மற்றொன்று பதிலாக அமையும் 'விடிஞ்சா கல்யாணம்' 'விடியும்வரை காத்திரு''போன்ற தலைப்களும்,ஒன்றுக்கு மற்றொன்று எதிர்மறை விடையாக அமைந்த,'சொல்லத் துடிக்குது மனசு'எனும் தலைப்பிற்கு'சொன்னால் தான் காதலா'போன்ற தலைப்புகளும்,ஒன்றின் விளைவாக மற்றொன்று அமைவது போல் A. பீம்சிங்கின் 'பார்த்தால் பசிதீரும்'கே.பாலச்சந்தரின் 'நினைத் தாலே இனிக்கும்'காளிதாசின் 'உன்னைக் கொடு என்னைத் தருவேன்' போன்றவைகளும் என்றென்றென் றும் நம் நினைவில் தங்குவதை,நாம் மறுப்பதற்கில்லை.
திரைப்பட பாடல்களுக்கு வரிகள் பிறப்பிப்பதும் திரைப்படத் தலைப் புக்கள் அமைப்பதும்,கருத்தரித்து,பெற்றடுத்து,பெயர்சூட்டும் தாய்மைக்கு ஒப்பான தென்றே கருதலாம்.எப்படி அவரவர் பிள்ளைகளுக்கு பெயர் சூட்டும் உரிமை பெற்றோர்களுக்குண்டோ,அதைப் போலவே,தாங்கள் உருவாக்கும் பாடல்களுக்கு வரிகள் வடிபதும்,திரைப் படங்களுக்கு தலைப்புகள் கொடுப்பதும்,சம்பந்தப்பட்ட கவிஞர்களின்,தயாரிப்பாளர் ளின் அல்லது இயக்குனர்களின் உரிமையே!.
வழக்கமாக திரைக்கதைக்கும் தலைப்புகளுக்கும்,நாம் தொடர்பு படுத்தி யோசிப்பதில்லை.பொழுதுபோக்கை மட்டும் மனதில்கொண்டு திரைப் படங்கள் பார்ப்பதால் சலிப்பு ஏற்படுத்தாமல் இரண்டரை மணி நேரம் திரைக்கதை சம்பவங்கள் நகர்ந்தால்,திருப்தியுடனும் மன நிறைவுடனும் நாம் திரை அரங்கத்தை விட்டு வெளியேறுகிறோம்.
ஆனால்,திரைப்படத்தின் கதைக்கருவையும் தலைப்பையும்,தொடர்பு படுத்தி பார்க்க முனைவோருக்கு,தலைப்புகளும் தரம் காட்டும் குறியீடே! அந்த வகையில் சமீப காலங்களில்'குண்டக்கா முண்டக்கா'ஜிகர் தண்டா' 'ஜில் ஜங் ஜக்''ஜூங்கா' 'ஜருகண்டி''தகலடி''ஜிங்கிலி புங்கிலி கதவை திற'தில்லுக்கு துட்டு'போன்ற பல வித்தியாசமான தலைப்புகளைக் கண்டு மிரண்டுபோன நமக்கு,திரைப்படத் தலைப்புகளை நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் நடுங்குகிறது.இருப்பினும்,திரைக்கருவை முறையாக நியாயப்படுத்தி நினைவுகூரும்'ஈரம்''சாட்டை''யாதுமாகி''ஏகன்'ஆண் தேவதை''அன்பிற்கினியாள்'போன்ற திரைப்பட தலைப்புகள் மனதிற்கு ஓரளவு ஆதரவு அளிக்கின்றன.
ப.சந்திரசேகரன் .
+++++++++++++++++++0++++++++++++++++++