மனித வாழ்வின் வளமான முன்னேற்றத்திற்கும் வெற்றியின் இலக்கிற்கும், ஒற்றுமையே உலகாளும் ஒரே இயக்கக் கோட்பாடாகும். இதைத்தான்,
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
நம்மில் ஒற்றுமை நீங்கிடின்
அனைவர்க்கும் தாழ்வு
என்றார் மகாகவி பாரதி.இவ்விரண்டு வரிகளில் முதல் வரியினைத் தலைப்பாகக் கொண்டு டி .ஆர்.ராமண்ணாவின் இயக்கத்தில் 'ஒன்று பட்டால் உண்டு வாழ்வு' {1960} எனும் திரைக்காவியமும்'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' எனும் அடிப்படை யில்'ஒன்றே குலம்'{1956எனும்} திரைப்படமும் தமிழில் வெளிவந்தன .
தமிழ்த் திரை வரலாற்றில்-1959ஆம் ஆண்டு திரையரங்குகளை பெருமைப் படுத்திய நடிகர் திலகத்தின்'பாகப்பிரிவினை'திரைப்படம் குடும்ப ஒற்றுமையை மையப்படுத்தி,நாட்டின் ஒற்றுமையையும் வலி யுறுத்தியது.ஏ.பீம்சிங்கின் இயக்கத்தில் வெற்றி நடைபோட்ட இத்திரைப் படத்திற்கு1959 -ஆம் ஆண்டின் சிறந்த படத்திற்கான வெள்ளிப் பதக்கத்தை வழங்கி கௌரவித்தது இந்திய அரசு. இந்த தனிச்சிறப்பு வாய்ந்த படத்தில்,சீர்காழி கோவிந்தராஜன் குழுவினருடன் பாடிய,
மந்தரையின் போதனையால் மனம்மாறி கைகேயீ
மஞ்சள் குங்குமம் இழந்தாள்;
வஞ்சக சகுனியின் சேர்க்கையால் கௌரவர்கள்
பஞ்ச பாண்டவரை பகைத்து அழிந்தார்.
நெஞ்சினில் இவையெல்லாம் சிறிதேனும் கொள்ளாமல்,
மந்த மதியால் அறிவு மயங்கி
மனம் போனபடி நடக்கலாமோ..
என்று இதிகாச பார்வையுடன் தொடங்கி பின்னர்,
ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே
வேற்றுமையை வளர்ப்பதினாலே விளையும் தீமையே
என்று தொடரும் பாடல் கவிஞர் A. மருதகாசியின் கருத்துச் செறிவான வரிகளாலும், மெல்லிசை மன்னர்களின் மேலான இசையாலும், சீர்காழியாரின் கனமான குரலாலும் காலம் வென்ற பாடலாயிற்று.
சமூக ஏற்ற தாழ்வுகள் அகற்றி ஒன்றுபட்ட சமூதாயம் உருவாக்க அரும் பாடு பட்ட சமூக நீதி போற்றிய பாதையில்,தமிழ்த் திரையின் ஒளிவிளக் காய் விளங்கிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் திரைப்படங்களில், ஒற்றுமையின் தேவையும் தாக்கமும் பாடல் வரிகளாக பல திரைப்படங் களின் உயிர்நாடி யானது.இந்த வகையில் பி.எஸ் .வீரப்பாவின் தயாரிப் பில் வெளியான 'ஆனந்த ஜோதி' திரைப்படத்தில் டி.எம்.சௌந்தராஜனின் உரத்த குரலில் ஒலித்த,
ஒரு தாய் மக்கள் நாமென்போம்
ஒன்றே எங்கள் குலமென்போம்
எனும் ஒப்பற்ற பாடலும் பின்னர் 'பணக்கார குடும்பம்'திரைப்படத்தில் அதே டி.எம்.எஸ் மற்றும் எல்.ஆர்.ஈஸ்வரி குரல்களில் நாம் கேட்டு மகிழ்ந்த
ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே
பாடலும்,என்றும் இனிக்கும் தமிழ்த்திரை கானங்களாகும்.இவ்விரண்டு பாடல்களுக்கும் கவியரசு கண்ணதாசன் தமிழுயிர் கொடுக்க,மெல்லிசை மன்னர்கள் இசையூட்டி வாழவைத்தனர்.
மக்கள் திலகத்தின் சத்யா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளிவந்த இன் னொரு வெற்றிப்படமான 'இதயக்கனி'யில் சீர்காழி கோவிந்தராஜன் டி. எம்.சௌந்தராஜன் மற்றும் எஸ்.ஜானகி இணைந்து பாடிய நீங்க "நல்லா இருக்கணும் நாடு முன்னேற"எனும் பாடலுக்கிடையே தோன்றும்
உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
எனும் அருமையான வரிகள் ஒற்றுமையின் பலத்தினை,டி.எம்.எஸ் குரலில் ஓங்கி உரைத்தது.'இதயக்கனி'திரைப்படத்தின் இப்பாடலை, கவிஞர் புலமைப்பித்தன் எழுத,மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மனமுயர்த்தும் விதமாக இசையமைத்திருந்தார்.ஒற்றுமையைப்பற்றி இன்னொரு இயல்பான பாடலை, நடிகர்திலகத்தின் 'அன்புக்கரங்கள்' திரைப்படத்தில் காணலாம். கே.சங்கரின் இயக்கத்தில் உருவான இந்த சோகமான திரைப்படத்தில்,டி எம்.எஸ்.குரலில் பேச்சுத் தமிழால் பெருமை யூட்டிய பாடல் இதோ!
ஒண்ணா இருக்க கத்துக்கணும்
இந்த உண்மைய சொன்னா ஒதுக்கணும்
காக்கா கூட்டத்த பாருங்க
அதுக்கு கத்துக்குடுத்து யாருங்க
இந்த வாழ்க்கை நெறியினைத்தான் வள்ளுவரின்
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்ன நீ ரார்க்கே உள
எனும் அற்புதமான திருக்குறள் வரிகள் உணர்த்தின.'அன்புக்கரங்கள்' திரைப்படத்தின் எல்லா பாடல்களையும் வாலி எழுத,அவைகளுக்கு ஆர். சுதர்சனம் இசை வடிவம் தந்து,நீங்காமல் நிலைபெறச் செய்தார்.
குடும்ப ஒற்றுமையையும் கூட்டுக்குடும்பத்தில் பலத்தையும் ஆழமான கதையம்சத்தாலும்,அழுத்தமான காட்சிகளாலும்,திரையரங்குகளில் உணர்வு பூர்வமாக ஒற்றுமையை நிலைநிறுத்திய,பாகப்பிரிவினை,பழனி பாரத விலாஸ், அன்பு சகோதரர்கள்,ஆனந்தம்,இணைந்த கைகள், வானத்தைப்போல,பாண்டவர் பூமி,போன்ற திரைப்படங்களை அவ்வப் போது மனதில் அசைபோட்டுப் பார்ப்பதில் ஏற்படும் சுகத்தினை, அதனை அனுபவிப்போரே அறிவர்.
ஒற்றுமையை வெள்ளித்திரை நிகழ்வுகளாகவும்,பாடல் வரிகளாகவும் எடுத்துக்காட்டி வாழ்வில் அறநெறி போற்றுவதற்கு ஒற்றுமையே ஆணி வேராக அமைகிறது என்பதை உணர்த்திய தமிழ்த்திரையினை, மனமுவந்து பாராட்டுவதே,தமிழ்த் திரைப்படத்துறைக்கு நாம் செலுத்தும் மரியாதையும் நன்றிக்கடனுமாகும்.
ப.சந்திரசேகரன் .
==========================
No comments:
Post a Comment