Monday, January 10, 2022

தமிழ்த்திரையில் வள்ளுவரின் வீச்சு

    


=
          வள்ளுவர் தினம் 16-01-2024
                          ( மறு பதிவு  )

"செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத்

தேன் வந்து பாயுது காதினிலே" 

என்ற தனது ஒப்பற்ற பாடலில், 

"வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து

வான்புகழ் கொண்ட தமிழ் நாடு" - 

  என்று திருக்குறள் ஈன்ற மாபெரும் கவிஞரின் பெருமை போற்றினார், மகாகவி சுப்ரமண்ய பாரதி.    

  தமிழ்த்திரை வரலாற்றில் தமிழ் இலக்கியங்கள்,புராண மற்றும் சமூக சிந்தனை உள்ளடக்கிய திரைப்படங்களில், தடங்களை பதிந்துள்ளன என்பதை,தமிழ்த் திரைப்பட ஆர்வலர்களும்,ஆய்வாளர்களும் நன்கறிவர். குறிப்பாக,அவ்வையின் 'ஆத்திச்சூடி','கொன்றை வேந்தன்' ஆகியவற்றுடன் இணைந்து,உலகம் முழுக்க தமிழ் மணம் போற்றும் திருக்குறளும்,தமிழ்த்  திரைப்படங்களில் வசனங்களுக்கிடையேயும், பாடல்களுக் குள்ளும்,சூழ்நிலைக்கேற்றவாறு பங்களித்து, தமிழ்த்  திரைப்படங்களின் தரத்தினை மேம்படுத்தியுள்ளது என்பது, திரைப்படத்துறையே பெருமை யுறும்  வரலாற்றுச் சிறப்பாகும்.

  இந்த வகையில் முன்னோடியாக, இயக் குனர் சிகரம் அமரர் கே.பாலச்சந்தர்,தான் இயக்கிய கலாகேந்திரா, கவிதாலயா, மற்றும் இதர சில நிறுவனங்களினால் தயாரிக்கப்பட்ட படங்களில், திருவள்ளுவ ரின் சிலையை அறிமுகம் செய்து,அவரின்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 

பகவன் முதற்றே உலகு 

  எனும் குறளை ஒலிக்கச் செய்த பின்னரே, தலைப்பு நிரலை காண்பிப்பார். இந்த எடுத் துக்காட்டான  வழக்கத்தினை கே.பாலச் சந்தர் து கொள்கையாகக் கொண்டி ருந்தார் என்பதை, திரைப்படம் காண்போ ரும் ரசிகர்களும் மறந்திருக்க வாய்ப். பில்லை.

  திருக்குறளின் ஒட்டுமொத்த அருமை பெருமைகளை ஒன்று திரட்டி ஒரே பாடலுக்குள் கொண்டுவந்து,வெண் திரையில் திருக்குறளை உலகாளச் செய்த பெருமை, தமிழ்த்திரை கவிஞர்களில் ஒரு காலத்தில் முன்னணி வகுத்த A.மருத காசிக்கு உண்டு.சிவாஜி கணேசன் பானுமதி நடித்து  1963-இல் ஏ.டி.கிருஷ் ணசாமியின் தயாரிப்பிலும் இயக்கத்திலும் வெளியான, 'அறிவாளி' திரைப்படத்தில் இடம் பெற்ற, 

"அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே-வள்ளுவர்

ஆக்கி நமக்களித்த அரும்பொருளே

உடலுக்கு உயிர் போலே 

உலகுக்கு ஒளி போலே 

பயிருக்கு மழை போலே

பைந்தமிழ் மொழியாலே.

                                 {அறிவுக்கு ...}

றம் பொருள் இன்பம்  எனப்படும் முப்பாலே

அனுபவதாலேதான் சுவைத்ததற் கப்பாலே

அவனியில் உள்ளார்கள் அனைவரும் தனைப்போலே 

அவசியம் கற்றுணர்ந்து பயன்பெறும் நினைப்பாலே.

                                 { அறிவுக்கு ...}

வாழும் வழிமுறைக்கு இலக்கணமானது 

மனம் மொழி மெய்யினிக்க வார்த்திட்ட தேனிது

வானகம்போல் விரிந்த பெரும்பொருள் கொண்டது -

எம் மதத்திற்கும் பொதுவென்னும் பாராட் டைக் கண்டது"

   எனும் திரவியப் பாடலுக்கு, ஏ.வி.வெங்கட் ராமன் இனிமையாய்,இதமாய் இசையமைத் திருந்தார்.டி எம் சௌந்தராஜனின் குரல் கட்டுப்பாட்டிலும்,பாடிய முறையிலும், இப்பாடல் அழியா வரம் பெற்றது.    

     1964-இல்,கலைஞரின் எழுத்துவண்ணத் தில் உருவான 'பூம்புகார்' திரைப்படத்தில் கவுந்தி அடிகளாகத் தோன்றிய வணக்கத் திற்குரிய  கே.பி.சுந்தராம்பாள்,தனது கணீர் குரலில். 

'ஒருவனுக்கு ஒருத்தி என்ற

உயிர் மூச்சை உள்ளடக்கி

அறன் எனப் பட்டதே இல் வாழ்க்கை அதுவும்

பிறன் பழிப்பதில்லாயின் நன்று' 

எனும் திருக்குறளை மறவாதே,

திசை தவறிப் போகாதே 

   என்று கலைஞரின் கருத்துச்செறிவுள்ள வரிகளையும் திருக்குறளையும் இணைத்து கம்பீரமாக தொடங்கி,அதனைத் தொடர்ந்து மீண்டும், 

வாழ்க்கை எனும் ஓடம்

வழங்குகின்ற பாடம்

மானிடரின் மனதினிலே

மறக்க ஒண்ணா வேதம்

   என்று  இல்வாழ்க்கைப்பாடத்தை,அன்புடன் கோவலனுக்கும் கண்ணகிக்கும் புகட்டி னார்

  இந்த மறக்கவொண்ணா பாடலுக்கு ஆர்.சுதர்சனம் உன்னதமாய் இசையமைத் திருந்தார்.இதேபோன்று,பின்னர் 1975-இல் எம்.ஜி.ஆர் நடித்து வெளிவந்த 'பல்லாண்டு வாழ்க'திரைப்படத்தில் கே.ஜே.யேசுதாஸின் காந்தக்குரலில் நாம் கேட்டு மெய்மறந்த வரிகளே  

அன்பிலார் எல்லா தமக்குரியர் அன்புடையார் 

என்பும் உரியர் பிறர்க்கு

தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்

மெய் வருத்த கூலி தரும்

என்று இரண்டு திருக்குறள்களுடன் தொடங்கி,

"ஒன்றே குலமென்று பாடுவோம்

ஒருவனே தேவனென்று போற்றுவோம்

அன்னை இதயமாக அன்பு வடிவமாக

வந்து வழிகாட்ட வேண்டும் என்று வணங்குவோம்"

  எனும் அமரர் புலமைப்பித்தனின் அறநெறி போதிக்கும் அற்புதமான  பாடலாகும். இந்த இதமான பாடலுக்கு,திரையிசைத் திலகம் கே.வி.மகா தேவன் ஏகாந்தமாய்  இன்னிசை கலந்தார். 

   இப்படி திருக்குறளை பாடலுக்குள்ளும் வசனங்களுக்கிடையேயும் பக்குவமாய் நுழைத்து,பலமாய் நெஞ்சில் வேரூன்றச் செய்த படைப் பாளிகளை நினைத்துப் பார்க்கையில்,இவையனைத்துமே  தமிழ்திரையுலகை  உரமுடன் உயர்த்திய உத்திகளாகக் கருதலாம்.உதாரணமாக 'பாரத விலாஸ்' திரைப்படத்தின் இறுதிக்காட்சியில்,ஒரு பஞ்சாபியாகத் தோன்றிய மேஜர் சுந்தராஜன், 

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.

எனும் குறளை எழுச்சியுடன் கூறுவதையும்,இன்னொரு திரைப்படத்தில் 

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு. 

   என்ற மேன்மைமிகு குறளை பயன்படுத்து வதையும் கேட்டு ரசித்திருப்போம்.  இவ்வாறு திருக்குறளின் பொருத்தமான பயன்பாடு,மேலும் சில திரைப்படங்களில் பாடல் காட்சிகளுக்குள்ளும் வசனங்களா கவும் இடம் பெற்றிருக்க,கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியான ரா ரா{Ra Ra} எனும் திரைப்படத்தில் திருக்குறள்களை மட்டுமே உள்ளடக்கி ஒரு அருமையான பாடல் ஒலி வடிவம் பெற்று,நம்மில் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

   கீர்த்திகா உதயா தயாரித்து,சாண்டில்யன் எனும் இயக்குனர் கதை வசனம் எழுதி இயக்கிய இத்திரைப்படத்தில், திருக்குறளை நெஞ்சார நேசிக்கும் ஒரு துணி வணிகரின் குடும்பத்தில் பாடப்படும் காட்சியாக, அப்பாடல் அமைந்திருந்தது. 

1}அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

   பண்பும் பயனும் அது

  என்ற அழகிய குறளுடன் தொடங்கும் அப்பாடலில்,பின்வரும் எட்டு குறள்கள் இடம்பெற்றிருந்தன. 

2}யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

3}எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு.

4}தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினாற் சுட்ட வடு.

5}முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து

அகநக நட்பது நட்பு.

6}உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு.   

7}சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க

சொல்லிற் பயனிலாச் சொல்.

8}வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத் தனையது உயர்வு."

9}மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்

நன்கலம் நன் மக்கட் பேறு.

   மொத்தம் ஒன்பது குறள்களையம் இணைத்து,சவாலுக்குரிய இப்பாட லுக்கு ஸ்ரீகாந்த் தேவா தேனொழுக இசைமாலை கோர்க்க,சுர்முகி ராமனும் ஹரிஷ் ராகவேந் தராவும்,தங்களது பிசிரற்ற, மாசுமருவற்ற, மிருதுவான குரல்களினால், திருக்குற ளுக்கு நவக்கிரக கோபுரம் எழுப்பினர் என்று சொன்னால் அது மிகையல்ல. திருக்குறளுக்கு இசையமைப்பது அவ்வளவு எளிதல்ல.

   ஆனால்,ஆர்ப்பாட்டமில்லாத தனது இசையால்,ஒன்பது திருக்குறள்களை ஒரே பாடலில் இணைத்து,'அறிவுக்கு விருந் தாகும் திருக்குறளே' பாடலைப்போன்று  இசைக்கு விருந்தாகும் திருக்குறளே, என்று உணர வைத்தார் ஸ்ரீகாந்த் தேவா. இப்பா டலை அவர் தனது இசைப் பயணத்தில், இமயத்தில் கால் பதித்த ஒரு பிரம்மாண்ட சாதனையாகக் கொள்ளலாம்.  

  அலைபேசியில் நிமிடங்களை தொலைக் கும் நம்மில் எத்தனைபேர்  ப்பாடலை கேட்டிருப்போமோ!.இருப்பினும்,இது போன்ற ஒரு ஈடு இணையற்ற பாடல், கலைஞரின் 'குறளோவியம்'போன்று பிரகாசித்து,திருக்குறளுக்கும் திருவள்ளு வருக்கும்,மற்றொரு மகுடமானது.தமிழ்த் திரைப்புத்தகத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க பக்கங்களில்,திருக்குறளை பாடலாய், வசனமாய் பதித்த,படைப்பாளிகளின்  மைல் கற்களை,திரையுலகப்பாதையின் திவ்ய தரிசனமாகக் கொள்ளலாம்.

ப.சந்திரசேகரன் . 

                       

       


 

1 comment:

  1. Harrah's Casino Hotel & Racetrack - Mapyro
    Harrah's 동해 출장샵 Cherokee Casino Hotel & Racetrack is a Native American Casino in Cherokee, North Carolina. Harrah's 서귀포 출장샵 Cherokee Casino 부산광역 출장안마 Hotel is 서울특별 출장안마 owned and operated by  Rating: 7.6/10 · 동해 출장샵 ‎1,061 reviews

    ReplyDelete