Wednesday, March 9, 2022

தமிழ்த்திரைவானில் மேகக்கூட்டங்கள்

   வானமும் மேகமும்,வாழ்க்கைப்பாதையும் பயணமும் போன்றதாகும். வானம் விரிந்துகிடக்க,வெண்மேகமும் கார்மேகமும்,அதில் மாறி மாறி பயணிப்பது, இயற்கையின் நியதியாகும்.வெண்மேகத்தை விழிகள் விந்தையுடன் தரிசிக்க, கார்மேகத்தை, விழிகளோடு மண்ணும், ஆயிரம் எதிர்பார்ப்புகளுடன் அரவணைக்கும்.

  இருண்டுவரும்  மேகம்,திரண்டுவரும்  மழையாகி,மண்ணுக்கும் மண்ணில் வாழ் உயிர்களுக்கும் மறுவாழ்வு தேடித்தரும். கூடவே, பெருகி வரும் வெள்ளத்தால்,நாசம் நெருங்குமோ எனும் அச்சமும்,மனிதனையும்  மண்ணையும் வாட்டி வதைக்கும். ஆனால், வெண்திரைவானில் மேகக் கூட்டங்கள், தலைப்புகளாய், கவிதை வரிகளாய் நம்மை வியப்பில் ஆழ்த்தும். 

  வானமாய் விரிந்து பரந்த திரைப்பட தலைப்புகளில்,'வானம்''ஒரே வானம் ஒரே பூமி' 'வானமே எல்லை''வானம் வசப்படும்''கீழ் வானம் சிவக்கும்'' வானத்தைப் போல''செக்கப் சிவந்த வானம்'''போன்ற பல திரைப்படங்களை கூறலாம். மேகத்தை வானில் திரளவிட்ட திரைப் படங்களில்'மேகம்,''மேகம் கருத்திருக்கு', 'மேகத்துக்கும் தாகமுண்டு','கார்மேகம்',போன்ற திரைப்பட தலைப்புகளை பட்டியலிடலாம். 

   தமிழ்திரையில் வானமும் மேகமும் வெறும் தலைப்புகளுடன் நில்லாது,கவிதை மழையெனப்பொழிந்து,திரையிசை கானங்களாய் தெவிட்டா இசையானது. விளிப் பாடல்களாகவும்{Odes},உவமை உருவகங்க ளாகவும்,பல்வேறு திரைப்பாடல்களில், 'வானம்'' மேகம்'எனும் சொற்கள், நிரந்தரம் கண்டுள்ளன.கவியரசு கண்ணதாசன் வரிகளில் மூன்று விளிப்பாடல்களை முதலில் எடுத்துக்காட்டாய்க் கூறலாம். முதலாவது பாடல் 'ஆயிரத்தில் ஒருவன்'திரைப்படத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் டி.எம்.சௌந்தராஜனின் உரத்த குரலில், நெஞ்சில் கனத்துடன் மேகத்தை அழைத்து,சோகத்தை பகிர்ந்துகொண்ட,

ஓடும் மேகங்களே

ஒரு சொல் கேளீரோ 

ஆடும் மனதினிலே

ஆறுதல் தாரீரோ

எனும் என்றென்றும் மறக்கவொண்ணா வரிகளாகும்.

  கண்ணதாசனின் கற்பனை வளத்தில் விளைந்த மற்றொரு விளிப் பாடலே, 'ஆயிரம் ஜென்மங்கள்'திரைப்படத்தில் மெல்லிசை மன்னரின் இசையில்,எஸ்.ஜானகி குரலுயர்த்திப்பாடிய,  

வெண்மேகமே….. வெண்மேகமே

கேளடி என் கதையை

மோகம்….சோகம்….என் விரக தாபம்

தாகத்தில் பிறக்கும் இனிய ராகம்

இனிய ராகம்

எனும் அற்புத கீதமாகும் 

  இதே கண்ணதாசன் எழுதி,இசைஞானி இசையமைக்க ஜெயச்சந்திரன் T.Lமகராஜன்,கல்யாணி மேனன்,சசிரேகா குரல்களில் ஒலித்த, 

செவ்வானமே பொன்மேகமே

தூவுங்கள் மலர்கள் கோடி

சொல்லுங்கள் கவிதை கோடி

  எனும் செவிகளில் என்றும் ரீங்காரமிடும் விளிப்பாடல்,'நல்லதொரு குடும்பம்' திரைப்படத்தில் இடம்பெற்றது.  

  இந்த வரிசையில் 'பாலைவனச்  சோலை'திரைப்படத்திற்காக கவிப்பேரரசு வைரமுத்து புனைந்த விளிப்பாடலே,

   மேகமே மேகமே 

   பால் நிலா தேயுதே

   தேகமே தேயினும் 

   தேன்மொழி வீசுதே

    எனும் வாணி ஜெயராமின் வசியக்குரலில் அமைந்த,விரகதாம்  வெளிப் படுத்திய வரிகளாகும்.இந்த இதயம்தொட்ட பாடலுக்கு,சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர்.  

  மனதை மேடையாக்கி மேகக்கூட்டங்களை ஆடவிட்டு,மேகத்தோடு மேகமாய் இரண்டறக்கலந்து அனைவரையும் ஆட்டம் போடவைத்த பாடலே, 

மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு

மின்னல் வெட்டட்டும் பாட்டும் உண்டு

கானங்கள் தீராது படாமல் போகாது

வானம்பாடி ஓயாது!

   'எனக்குள் ஒருவன்'திரைப்படத்தில் இடம்பெற்ற வைரமுத்துவின் வரிகளுக்கு இசைஞானி இசையமைக்க,பாடும் வானம்பாடியின் வசீகரக்குரலிலும், கமலஹாச னின் ஆட்டத்திலும், திரையரங்குகளில் இளைஞர்கள் பலரையும் ஆடவைத்த இப்பாடல்,மேகவரிசை பாடல்களில் தனியிடம் பிடிக்கிறது. 

 மேகத்தை உருவகப்படுத்திய பாடல்களில்,'புன்னகை மன்னன்' திரைப்படத்தில் கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகளில் விளைந்த, 

வான் மேகம்

பூ பூவாய் தூவும் 

தேகம் என்னவாகும் 

இன்பமாக நோகும்

எனும் பாடலும்,'துள்ளாத மனமும் துள்ளும்' திரைப்படத்தில் நாம் பலமுறை கேட்டு மெய்மறந்த,கவிஞர் முத்துவிஜயனின், 

மேகமாய் வந்து போகிறேன் 

வெண்ணிலா உன்னைத்தேடியே 

யாரிடம் தூது சொல்வது 

என்றுநான் உன்னை சேர்வது 

 எனும் அமுத கீதமும்,குறிப்பிட்டுச் சொல்லியாகவேண்டும்.இவற்றில் முதல் பாடலை இசைஞானியின் இசையில் கே.எஸ்.சித்ரா பாட,இரண்டாம் பாடலை, எஸ்.ஏ ராஜ்குமாரின் ஏகாந்த இசையில், ராஜேஷ் கிருஷ்ணன் அற்புதமாய் பாடியிருந்தார்.  

 இதேபோன்று,'மேகம் கருக்குது'எனும் சொல்லெடுத்து நினைவில் தங்கிய இரண்டு பாடல்கள் உண்டு.முதல் பாடல் பஞ்சு அருணாச்சலம் வரிவடிவம் கொடுத்து இசைஞானியின் இசையில் கே.ஜே.யேசுதாசும் எஸ்.ஜானகியும் பாடிய, 

மேகம் கருக்குது 

மழவர பாக்குது 

வீசியடிக்குது காத்து  

  என்பது,'ஆனந்த ராகம்'திரைப்படத்தில் இடம்பெற்றது.இரண்டாவது, 'குஷி' திரைப்படத்தில்,தேனிசை தென்றல் தேவாவின் இசையில், வைரமுத்துவின் வரிகளான 

மேகம் கருக்குது 

மின்னல் சிரிக்கிது 

எனும் உருவகம் உள்ளடக்கிய,ஹாரிணி பாடிய பாடலாகும்.  

  மேகத்தை காதலர் இருவர் சேர்ந்து பிரியும் விபரீத தடமாக்கிய   வைரமுத்துவின் பொன்னான வரிகளில் அமைந்த, 

மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே

மழை நீராய் சிதறி போகின்றோம் அன்பே

   எனும் ஹரிஹரன் சுஜாதா குரல்களில்,நம் செவிகளோடு சேர்ந்து நெஞ்சத்தையும் கிள்ளிய பாடல்.

  இருண்டுவரும் மேகத்திரள்கள் மழைத்துளிகளாய்ச் சிதறி பிரிவது போல,காதலர் களும் மயக்கத்தில் கூடி கலக்கத்தில் பிரிகின்றனர். தேவாவின் தேனிசையில் இப்பாடல்,கிட்டத்திலிருந்து ஒலித்தாலும் தூரத்திலிருந்து ஒலிப்பது போன்றும், தூரத்தில் கேட்டாலும் பக்கத்தில் வந்து பரவசமூட்டுவது போன்றும், வித்தியாசமாக அமைந்திருக்கும்!   

   மேகங்கள் திரண்டு வருவதையும், மனிதர்கள் தவறான பாதையிலிருந்து திருந்தி வருவதையும் ஒப்பிட்டு, கருத்தாழமும்,தரமான தத்துவ சிந்தனையும் உள்ளடக்கிய பாடல் ஒன்றை பழம்பெரும் கவிஞர் ஆலங்குடி சோமு எம்.ஜி.ஆரின் சத்யா மூவிஸ் தயாரிப்பில் உருவான'நான் ஆணையிட்டால்' திரைப்படத்திற்கென அருமையாய் வரிவடிவம் அமைத்திருந்தார். மெல்லிசை மன்னரின் கரைபுரளும் இசைவெள்ளத் தில் நீந்தி வந்த 

மேகங்கள் இருண்டு வந்தால்

அதை மழை என சொல்வதுண்டு

மனிதர்கள் திருந்தி வந்தால்

அதை பிழை என கொள்வதுண்டோ

எனும் இந்த உள்ளதை உலுக்கிய பாடல் வரிகள்,தொடங்குவதற்கு முன்னர் சீர்காழி சௌந்தராஜனின் வெண்கலக்குரலில் கனமுடன் எழும் 

ஓடி வந்து மீட்பதற்கு ...

உன்னை போல் கால்கள் இல்லை ...

ஓய்ந்திருந்து கேட்பதற்கு ...

நீதிக்கோ நேரம் இல்லை ...

பார்த்த நிலை சொல்வதற்கு ...

பரமனுக்கோ உருவம் இல்லை ...

பழி சுமந்து செல்வதன்றி ...

இவனுக்கோ பாதை இல்லை ...

  எனும் மகத்தான வரிகள் இப்பாடலுக்கு மேலும் வலிமை கூட்டியன.சீர்காழியார் மற்றும் சுசீலாவின் குரல்களில் சமூக மேகத்திளில் தனி மனிதனின் அல்லல்களை மழையெனப்பெய்து தீர்த்தது. 

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்

வானம் வழங்கா தெனின் 

    எனும் வள்ளுவன் கூற்றுப்படி,வானம் மழை பொய்யாவிடில் மண்ணில் மாந்தர்க்கு தானமும் தவமும் தங்காது என்பதைப்போல, திரைப்படப் பாடல்களில் இயற்கையை போற்றுகையில்,வானத்தையும் மேகத்தையும் வரையாவிடில்,அதில் நிலவின் பயணத்தையும்,காதலின் கம்பீரத்தையும்,காண இயலாது.அதே போன்று 'வானத்தைப் போல'எனும் சொல்நயம் கூட்டியே,மனித மனதின் பரந்து விரிந்த பேராண்மையை, கவிதையின் பார்வைகளாய் காவியம் படைக்க முடியும்.எனவே, வெண் திரைவானில் மேகக்கூட்டங்களாய் மேன்மைமிகு பாடல்கள் உலாவந்து கொண்டே யிருக்கும் என்பது,கற்பனையின் கட்டாயம் மட்டுமல்ல; வாழ்க்கையின் நியதியும் படைப்பாற்றலின் வெகுமதியுமாகும்

ப.சந்திரசேகரன் . 

    

No comments:

Post a Comment