நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.
எனும் வள்ளுவரின் குறள்,காலம் நீட்டித்தல்,மறதி, சோம்பல், தூக்கம் ஆகிய நான்கும் கெடுகுணம் கொண்டோர் விரும்பி ஏறும் மரக்கலமாகும் என்று,பொருளுரைக்கிறது.தமிழ்த்திரையிசையில் தூக்கத்தின் இன்றியமையாமை பற்றியும்,கும்பர்கர்ணனைப் போல நீண்ட தூக்கம் கொண்டோரின் ஆக்கமின்மை பற்றியும், மரணமென்னும் மீளாத் தூக்கம் பற்றியும்,குறிப்பிட்டுச் சொல்லும் படியான மறக்கவொண்ணா பாடல்கள் சில உண்டு.
தூக்கத்தை மருந்தாக்கி,தன்னையே தூக்கமாக்கி,,தூங்க முயற்சிக்கும் தான் நேசிக்கும் நபரை,தாலாட்டுவது போன்ற ஒரு பாடலை,'ஆலயமணி' திரைப்படத்தில் விஜயகுமாரிக்காக எஸ்.ஜானகி பாடியிருந்தார்.கண்ணதாசன் வரிவடிவமைத்த,
தூக்கம் உன் கண்களைத்
தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
அந்த தூக்கமும் அமைதியும்
நானானால் உன்னை
தொடர்ந்திருப்பேன் என்றும்
துணை இருப்பேன்
எனும் அப்பாடலுக்கு மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இதமாய் இசையமைத்திருந்தனர்.என்றைக்கும் உறக்கம் வராவிடில் இப்பாடலை கேட்கும் வேளையில் தூக்கம் தானாக வந்து விழிகளைத் தழுவும்.
இதற்கு சற்று மாறாக'காத்திருந்த கண்கள்'திரைப்படத்தில் தன் காதலி சாவித்திரி உறங்குவதை ரசித்து,ஜெமினிகணேசனுக்காக P.B.ஸ்ரீனிவாஸ் பாடிய பாடலே,
துள்ளித் திரிந்த
பெண்ணொன்று துயில்
கொண்டதேன் இன்று
தொடர்ந்து பேசும் கிளி
ஒன்று பேச மறந்ததேன்
இன்று
எனும் அமுத கீதம்.இப்பாடலையும் கண்ணதாசன் எழுத மெல்லிசை மன்னர்கள் ஏகாந்தமாய் இசையமைத்திருந்தனர்.
கணவனின் சந்தேகத்தால் தூக்கம் தொலைத்த மேடைப்பாடகி யான ஒரு பெண்,தன் மகளை தூங்கவைப்பதாய் காட்சியமைந்த பாடலே,கோவை தம்பியின்'உன்னை நான் சந்தித்தேன்' திரைப் படத்தில் சுஜாதாவுக்காக எஸ்.ஜானகி மனமுருகி குரல்கொடுத்த கவிப்பேரரசு வைரமுத்துவின்,
தாலாட்டு மாறிப் போனதே
என் கண்ணில் தூக்கம் போனதே
பெண் பூவே வந்தாடு…...
என் தோளில் கண் மூடு……
என் சொந்தம் நீ
எனும் நெஞ்சில் சுமையேற்றும் பாடல்.இந்த அற்புதமான பாடலுக்கு இசைஞானி இசையமைத்திருந்தார்.இதற்கு முற்றிலும் வித்தியாசமாக தன் தாயை அளவுகடந்து நேசிக்கும் மகன் தனது மடியில் தாயினை தூங்கச்செய்யும் பாடல் அமீர் இயக்கத்தில் உருவான'ராம்'திரைப்படத்தில் இடம் பெற்றது.கே.ஜே.யேசுதாஸின் அதிர்வுக்குரலில் நம்மைப் பரவசமூட்டிய,
ஆராரிராரோ நானிங்குப்பாட
தாயே நீ கண்ணுறங்கு
என்மடி நீ சாய்ந்து
எனும் கவிஞர் ஸ்நேகனின் ஆழமான கவிதை வரிகளுக்கு,யுவன் ஷங்கர் ராஜா இசைமூலம் ஆன்மசுகம் தந்தார்.
காதல் வயப்படுபவர்களை உயிர்க்காதலின் மனச்சுமை எந்த அளவிற்கு தூங்கவிடாமல் செய்கிறது என்பதற்கு மூன்று திரைப் பாடல்களை சுட்டிக்காட்டலாம்.முதலாவது பாடல் ராஜாமணி பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான'குங்குமம்'திரைப்படத்தில் இடம்பெற்றது.
தூங்காத கண்ணென்று ஒன்று
துடிக்கின்ற சுகமென்று ஒன்று
தாங்காத மனமென்று ஒன்று
தந்தாயே நீ என்னை கண்டு
எனும் இப்பாடலை திரையிசைத்திலகம் கே.வி மகாதேவன் இசையில் டி. எம்.சௌந்தராஜன் பி.சுசீலா உணர்வுகளுடன் இசைந்து பாடியிருந்தனர். இதே போன்றொரு கருத்தினை இருவிழிவிழி மூடா நிலையாக காட்டிய பாடலே,'அக்னி நட்சத்திரம்'திரைப்படத்தில் இசைஞானியின் இசையில் கே.ஜே யேசுதாசும் எஸ்.ஜானகியும் ஆனந்தம் தேடிப் பாடிய
தூங்காத விழிகள்
ரெண்டு உன் துணை தேடும்
நெஞ்சம் ஒன்று செம்பூ மஞ்சம்
விரித்தாலும் பன்னீரைத்
தெளித்தாலும் ஆனந்தம்
எனக்கேது அன்பே நீ இல்லாது
எனும் செம்மையாய் செவிகளில் ரீங்காரமிடும் பாடலாகும். மேற்கண்ட இருபாடல்களும் டூயட் பாடல்களாக்கிட, தூக்கத்தை விழுங்கிய காதலை நெஞ்சில் தாங்கி,ஏக்கத்துடன் நடிகை ராதாவுக்காக எஸ்.ஜானகி குரல் கொடுத்து ஏ.வி.எம் தயாரிப்பில் உருவான'மெல்லத் திறந்தது கதவு' திரைப்படத்தில் இடம்பெற்ற,
ஊரு சனம்
தூங்கிருச்சு ஊதக்
காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியல்லையே
எனும் ஒற்றைக்குரலில் தனிச் சுகம் கூட்டிய பாடல்,தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். இப்பாடலுக்கும்,இசைஞானியே இசையமைத்திருந்தார். இம் மூன்று பாடல்களில் முதலாவதை கவியரசு எழுத இரண்டாம் பாடலை வாலியும் மூன்றாம் பாடலை கங்கை அமரனும் கவின்மிகு கவிதையாக் கினார்.
தூங்காதே தம்பி தூங்காதே
நீயும் சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
..................................................
நல்ல பொழுதையெல்லாம்
தூங்கி கழித்தவர்கள்
நாட்டைக்கெடுத்ததுடன்
தானும் கெட்டார்.
.........................................................................
விழித்துக் கொண்டோரெல்லாம்
பிழைத்துக்கொண்டார்
உன்போல் குறட்டை விட்டோரெல்லாம்
கோட்டை விட்டார்
எனும் வாழ்க்கையின் யதார்த்த நிலையினையும் வாழ்வின் நடை முறைக் கோட்பாடுகளையும் அர்த்தமுடன் அடித்துச் சொன்ன பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரத்தின் பொன்னான வரிகள்!எம்.ஜி.ஆருக்காக எழுதப்பட்ட இப்பாடல்,அவரின் புரட்சிசித்தாந்தத்திற்கு மெருகூட்டி அவருடைய அரசியல் செல்வாக்கினை மேம்பட ச் செய்தது. எஸ் எம் சுப்பைய்யா நாயுடுவின் சிறப்பான இசையோட்டத்தில் உருவான இந்த பாடலின் அமோக வெற்றியே,பின்னர் ஏ.வி.எம் தயாரிப்பில் கமல் நடித்து வெளி வந்த 'தூங்காதே தம்பி தூங்காதே' எனும் திரைப்பட தலைப்பா யிற்று .
இறுதியாக,தூக்கத்தை இறப்பிற்கும் தூங்கி எழுவதை பிறப்பிற்கும் ஒப்பிட்டு வள்ளுவர் வரைந்த
உறங்குவது போலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு
எனும் குறளின் உயரிய அர்த்தத்தை உறுதிபட உரைத்த பாடலொன்று, கே.ஏ.தங்கவேலுவும் பி.பானுமதியும் நடித்து வெளிவந்த 'ரம்பையின் காதல்'திரைப்படத்தில் இடம்பெற்றது.நாம் பலமுறை கேட்டு மெய்மறந்த அப்பாடல்,
சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே
.........................................
ஜாதியில் மேலோர் என்றும்
தாழ்ந்தவர் கீழோர் என்றும்
பேதமில்லாது
எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு
தொல்லையின்றியே தூங்கிடும் வீடு
உலகினிலே இதுதான்
நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே
எனும் தத்துவ வரிகளால்,சீர்காழி கோவிந்தராஜனின் வெண்கலக் குரலில் மயான சிந்தனையின் மகத்துவத்தை மனதில் பதித்தது.மரணம் ஏற்படுத்தும் மீளாத்தூக்கமெனும் மெய்ஞானத்தை,மேம்பட விளக்கிய இப்பாடலை,A.மருதகாசி எழுத,டி.ஆர்.பாப்பா திவ்யமாய் இசையமைத் திருந்தார்.
தூக்கத்தைப் பற்றி பல்வேறு பாடல்கள் தமிழ்திரையில் இடம் பெற்றிருந் தாலும்,தூக்கத்தின் தேவை/ரசனை,மிதமிஞ்சிய தூக்கத்தின் பாதிப்பு மீளாத்தூக்கம் காணும் மரணம் ஆகிய மூன்று நிலைகளையும் மைய்யப் படுத்திய பாடல்கள் சில இப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளன.இலக்கியமும் இலக்கியத்தில் குறிப்பாக கவிதையும் வாழ்க்கை புல் வெளியை விடாது மேயும் பசுவைப்போல மேய்ந்து பல்வேறு சுவைப்படும் கருத்துக்களை நமது பார்வைக்கு காணிக்கையாக்குகின்றன.அந்த வகையில் தமிழ்த் திரையிசை கவிதை வரிகள் பலவும் இலக்கியத்தின் நாடித் துடிப்பினை நம்முடையதாக்குகின்றன என்றால் அது மிகையாகாது!
==================0=================
No comments:
Post a Comment