கவிதையின் மகத்துவம்,கற்பனையின் தனித்துவம்.கருத்துக்களை களமாக்கி, சொல்லெனும் வில்லெடுத்து,உள்ளங்களை இலக்காக்கி, கவிதைக் கணைகளை கச்சிதமாய்த் தொடுப்பவனே,காலத்தை வெல்லும் கவிஞன். காலத்தை வெல்லும் கவிஞனின் கற்பனையும் கவிதையும், அவன் வாழும் காலத்தை வரலாற்றுப் பக்கங்களாய் வாழ்க்கையோடு இணைத்து,என்றென்றும் காலப்புத்தகத்தில் காட்சிகளாய் இடம்பெறச் செய்கிறது.
கவிஞர்கள் சிலநேரங்களில் ஒரே சொல்லை வைத்து ஒரு கவிதை முழுக்கப் பயணித்து,அச்சொல்லுக்கு அமரத்துவம் அளிக்கின்றனர். அவ்வாறு அழகான மாலையாகி,அலங்காரமாய் மணம் பரப்பிய அழியா சில தமிழ்திரைப்பாடல்களை, இப்பதிவில் காண்போம்.தமிழ்திரைப் பாடல்களில்,சொற்களின் சுந்தரத் தாண்டவம் ஒவ்வொரு காலத்திலும் வெவ்வேறு சொற்களால்,தமிழ் மேடையை ஆரவாரப் படுத்தியிருக்கிறது.
'பலே பாண்டியா' திரைப்படத்தில்'காய்'எனும் சொல்லை வைத்தே கவிதையை கனியச் செய்தார் கவியரசு கண்ணதாசன். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் காலம் வென்ற,
அத்திக்காய் காய் காய்
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே
என்னுயிரும் நீ அல்லவோ
கன்னிக் காய் ஆசைக் காய்
காதல் கொண்ட பாவைக் காய்
அங்கே காய் அவரைக்காய்
மங்கை எந்தன் கோவைக்காய்
மாதுளங்காய் ஆனாலும்
என் உள்ளங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீ அல்லவோ
இரவுக்காய் உறவுக்காய்
ஏங்கும் இந்த ஏழைக்காய்
நீயும் காய் நிதமும் காய்
நேரில் நிற்கும் இவளைக் காய்
உறவங்காய் ஆனாலும்
பருவங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவோ
ஏலக்காய் வாசனை போல்
எங்கள் உள்ளம் வாழக் காய்
ஜாதிக் காய் பெட்டகம் போல்
தனிமை இன்பம் கனியக் காய்
சொன்னதெல்லாம் விளங்காயோ
தூது வழங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவோ
உள்ளமெல்லாம் மிளகாயோ
ஒவ்வொரு பேர் சுரைக்காயோ
வெள்ளரிக்காய் கிளர்ந்தது போல்
வெண்ணிலவே சிரித்தாயோ
கோதை என்னை காயாதே
கொற்றவரங்காய் வெண்ணிலா
இருவரையும் காயாதே
தனிமையிலேங்காய் வெண்ணிலா
{அத்திக்காய் காய் காய்
ஆலங்காய் வெண்ணிலா
இத்திக்காய்
காயாதே என்னுயிரும் நீ அல்லவோ}
எனும் பாடல் 'பலே பாண்டியா' திரைப்படத்தை திரையரங்குகளில் முன்னுக்குத் தள்ளுவதில் பெரும் பங்கு வகித்தது.
'ஊர்' எனும் சொல்லை வைத்து கவிதை வரிகளால் ஊர்சுற்றிவந்த பெருமையும் கவியரசு கண்ணதாசனுக்கு உண்டு.'காட்டு ரோஜா' எனும் திரைப்படத்தில் திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் இசையில் உருவான,
எந்த ஊர் என்றவனே
இருந்த ஊரை சொல்லவா
அந்த ஊர் நீயும் கூட
அறிந்த ஊர் அல்லவா
உடலூரில் வாழ்ந்திருந்தேன்
உறவூரில் மிதந்திருந்தேன்
கருவூரில் குடி புகுந்தேன்
மண்ணூரில் விழுந்து விட்டேன்
கண்ணூரில் தவழ்ந்திருந்தேன்
கையூரில் வளர்ந்திருந்தேன்
காலூரில் நடந்து வந்தேன்
காளையூர் வந்துவிட்டேன்
வேலூரைப் பார்த்து விட்டேன்
விழியூரில் கலந்து விட்டேன்
பாலுறும் பருவமெனும்
பட்டணத்தில் குடி புகுந்தேன்
காதலூர் காட்டியவள்
காட்டூரில் விட்டுவிட்டாள்
கன்னியூர் மறந்தவுடன்
கடலூரில் விழுந்துவிட்டேன்
பள்ளத்தூர் தன்னில் என்னை
பரிதவிக்க விட்டு விட்டு
மேட்டூரில் அந்த மங்கை
மேலேறி நின்று கொண்டாள்
கீழுரில் வாழ்வதற்கும்
கிளிமொழியாள் இல்லையடா
மேலூர் போவதற்கு
வேளை வரவில்லையடா
எனும் வசீகரப்பாடல் P.B. ஸ்ரீனிவாசின் காந்தக்குரலில் கச்சிதமாய் நம் செவிகளை சுண்டியிழுத்து,நெஞ்சோடு நிறைவானது;நினைவானது.
இதேபோன்று,'தேன்'எனும் சொல்லை சுவையாக்கி,ஒவ்வொரு வரியை யும் இனிக்கச் செய்த இரண்டு பாடல்கள் உண்டு.ஒன்று ஏ.வி.எம் ராஜனும் காஞ்சனா வும் நடித்த 'வீர அபிமன்யு'திரைப்படத்தில் 'பார்த்தேன் ரசித்தேன்'என்று தொடங்கும் இரண்டாவது பாடல் கே.பாலச்சந்தரின் 'எதிர் நீச்சல்'திரைப்படத்தில்'தாமரைக் கன்னங்கள் 'என்று தொடங்கும்.
'வீர அபிமன்யு'திரைப்படத்தில் வரிக்கு வரி'தேன்' எனும் சொல்லைக் கூட்டி தேன்சுவை தந்த
பார்த்தேன் சிரித்தேன்,
பக்கத்தில் அழைத்தேன்
அன்று உனை தேன்,
என நான் நினைத்தேன்
அந்த மலை தேன்,
இதுவென மலைத்தேன்
கொடி தேன், இனி எங்கள் குடி தேன்
என ஒரு படி தேன், பார்வையில் குடித்தேன்
துளி தேன் சிந்தாமல் களித்தேன்
ஒரு துளி தேன் சிந்தாமல் களித்தேன்
கைகளில் அணைத்தேன், அழகினை ரசித்தேன்
மலர் தேன், போல் நானும் மலர்ந்தேன்
உனக்கென வளர்ந்தேன்,பருவத்தில் மணந்தேன்
எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன்
எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன்
இனி தேன் இல்லாதபடி கதை முடித்தேன்
எனும் எழில்மிகு கவிதை வரிகள் P.B.ஸ்ரீனிவாஸ் P.சுசீலா குரல்களில் ஏகாந்தமாய் ஒலித்த இப்பாடலை,கவியரசு எழுத,திரையிசைத்திலகம் மென்மையான இசையால் மெருகூட்டினார்.
The Hindu ஆங்கில நாளிதழில்,சுதா பாலச்சந்திரன் அவர்கள்,சகானா ராகத்தில் அமைந்த இப்பாடலின் சந்தம்,எதுகை மோனைக்காக,கவிஞர் கண்ணதாசனை வியந்து பாராட்டியிருந்தார்.திரை விமர்சகர் பரத்வாஜ் ரங்கன் இப்பாடலின் வரிவடிவினை 'dazzling rhymes'என்று ஆங்கிலத்தில் வருணித்தார்.
கே.பாலச்சந்தரின் 'எதிர் நீச்சல்' திரைப்படத்தில்
தாமரை கன்னங்கள்
தேன் மலர் கிண்ணங்கள்
என்று P.B.ஸ்ரீனிவாஸ் தொடங்க,அதனைத் தொடர்ந்து P.சுசீலா,
மாலையில் சந்தித்தேன்
மைய்யலில் சிந்தித்தேன்
காதலன் தீண்டும்போது
கைகளை மன்னித்தேன்
எனும் கவிஞர் வாலியின் தேன்சிந்தும் வரிகளை வி.குமாரின் இதமான இசையில் தெவிட்டாமல் பாடுவார்.இப்பாடலும் திரையிசை விமர்சகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.நாகேஷுக்கு பெரும் வெற்றியினைத் தேடித்தந்த 'எதிர் நீச்சல்'திரைப்படத்திற்கு இப்பாடல் மிகச் சிறப்பான இடத்தை பிடித்தது .
மேலும் 'குடியிருந்த கோயில்'திரைப்படத்தில்'யார்'எனும் சொல்லை வைத்து அற்புதமாக கவிதை விளையாட்டு காட்டினார் பெருமைமிகுக் கவிஞர் புலமைப்பித்தன். எம்.ஜி.ஆருக்காக டி.எம் சௌந்தராஜன் பாடிய,
நான் யார் நீ யார்
நாலும் தெரிந்தவர்
யார் யார்
தாய் யார்
மகன் யார் தெரியார்
தந்தை என்பார்
அவர்யார் யார்
உறவார் பகையார்
உண்மையை உணரார்
உனக்கே நீ யாரோ
வருவார் இருப்பார்
போவார் நிலையாய்
வாழ்வார்யார் யாரோ
உள்ளார் புசிப்பார்
இல்லார் பசிப்பார்
உதவிக்குயார் யாரோ
நல்லார் தீயார்
உயர்ந்தார் தாழ்ந்தார்
நமக்குள் யார் யாரோ
அடிப்பார் வலியார்
துடிப்பார் மெலியார்
தடுப்பார்யார் யாரோ
எனும் அர்த்தம் நிறைந்த,உணர்வுகளை உள்ளடக்கிய இப்பாடலுக்கு, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் கம்பீரமாய் இசையமைத்திருந்தார் .
இந்த வகையிலேயே,'கை'எனும் சொல்வைத்து கவிஞர் முத்துலிங்கத்தின் கைவண்ணத் தில் உருவான பாடலே எம்.ஜி.ஆரின் கடைசி படமான 'இன்றுபோல் என்றும் வாழ்க' திரைப்படத்தில் மெல்லிசை மன்னரின் இசையில் டி.எம்.எஸ் பாடிய
இது நாட்டைக் காக்கும் கை
உன் வீட்டைக் காக்கும் கை
இந்தக் கை நாட்டின் நம்பிக்கை
இந்தக் கை நாட்டின் நம்பிக்கை
இது எதிர்கால தாயகத்தின் வாழ்க்கை
இது எதிர்கால தாயகத்தின் வாழ்க்கை
அன்புக் கை இது ஆக்கும் கை
இது அழிக்கும் கையல்ல
சின்னக் கை ஏர் தூக்கும் கை
இது திருடும் கையல்ல
நேர்மை காக்கும் கை
நல்ல நெஞ்சை வாழ்த்தும் கை
இது ஊழல் நீக்கும் தாழ்வைப் போக்கும்
சீர் மிகுந்த கை
வெற்றிக் கை படை வீழ்த்தும் கை
இது தளரும் கையல்ல
சுத்தக் கை புகழ் நாட்டும் கை
இது சுரண்டும் கையல்ல
ஈகை காட்டும் கை
மக்கள் சேவை ஆற்றும் கை
முள் காட்டைச் சாய்த்து தோட்டம் போட்டு
பேரெடுக்கும் கை
உண்மைக் கை கவி தீட்டும் கை
கறை படிந்த கையல்ல
பெண்கள் தம் குலம் காக்கும் கை
இது கெடுக்கும் கையல்ல
மானம் காக்கும் கை
அன்ன தானம் செய்யும் கை
சம நீதி ஓங்க பேதம் நீங்க ஆள வந்த கை
எனும் ஒப்பற்ற,சித்தாந்தம் உள்ளடக்கிய பாடலாகும்.
'எதிர் நீச்சல்'திரைப்படத்தில்'தேன்'எனும் சொல் வைத்து சுந்தரகாண்டம் எழுதிய வாலி இன்னும் ஒருபடி மேலே சென்று,'பால்'எனும் சொல்கொண்டு பருவமழை பொழிந்த பாடலே,எம்.ஜி.ஆர் ஜெயலலிதா நடித்து பத்மினி பிக்ச்சர்ஸ் தயாரித்து வெளியான 'ரகசிய போலீஸ் 115'திரைப்படத்தில் இடம்பெற்ற,
பால் தமிழ் பால்
எனும் நினைப்பால்
இதழ் துடிப்பால்
அதன் பிடிப்பால்
சுவை அறிந்தேன்
பால் மனம் பால்
இந்த மதிப்பால்
தந்த அழைப்பால்
உடல் அணைப்பால்
சுகம் தெரிந்தேன்
உந்தன் பிறப்பால்
உள்ள வனப்பால்
வந்த மலைப்பால்
கவி புனைந்தேன்
அன்பின் விழிப்பால்
வந்த விருப்பால்
சொன்ன வியப்பால்
மனம் குளிர்ந்தேன்
விழி சிவப்பால்
வாய் வெளுப்பால்
இடை இளைப்பால்
நிலை புரிந்தேன்
இந்த தவிப்பால்
மன கொதிப்பால்
கண்ட களைப்பால்
நடை தளர்ந்தேன்
முத்து சிரிப்பால்
முல்லை விரிப்பால்
மொழி இனிப்பால்
என்னை இழந்தேன்
இந்த இணைப்பால்
கொண்ட களிப்பால்
தொட்ட சிலிர்ப்பால்
தன்னை மறந்தேன்
எனும் ஆண் பெண் உணர்வுகளை,டி.எம்.எஸ்&எல்.ஆர் ஈஸ்வரி குரல்களில் மோகனமூட்டிய பாடலாகும்.மெல்லிசை மன்னரின் இசையில்,இப்பாடல் பலருக்கும் இன்பத்தை கூட்டியது.
தமிழ்திரையிசை வரலாற்றில் மிகச் சிறப்பான பக்கங்களாய் இடம் பெற்ற இரண்டு அருமையான பாடல்கள்,'பட்டினப்பிரவேசம்'திரைப் படத்திலும் 'மௌனம் சம்மதம்' திரைப்படத்திலும் இடம்பெற்றன.அந்த இரண்டு பாடல்களுமே'லா'எனும் ஒலியை யும்'நிலா'எனும் சொல்லையும் வரிக்குவரி பயன்படுத்தின.முதல் பாடல்வரிகளை கவியரசும்,இரண்டாம் பாடலை புலமைப்பித்தனும் எழுதி, திரைப்பாடலுக்கு இலக்கிய நயம் கூட்டினர்.மெல்லிசை மன்னரும் இசைஞானியும் தனித்தனியே இசையமைத்த அந்த இரு பாடல்களும் இதோ!
1}வான் நிலா அல்ல
உன்வாலிபம் நிலா
தேன் நிலா
எனும் நிலா
என் தேவியின் நிலா
நீ இல்லாத நாள்
எல்லாம் நான் தேய்ந்த
வெண்ணிலா
மான்இல்லாத ஊரிலே
சாயல் கண்ணிலா
பூ இல்லாத மண்ணிலே
ஜாடை பெண்ணிலா
தெய்வம் கல்லிலா
ஒரு தோகையின் சொல்லிலா
பொன்னிலா
பொட்டிலா புன்னகை
மொட்டிலா அவள்
காட்டும் அன்பிலா
இன்பம் கட்டிலா
அவள் தேகம் கட்டிலா
காதலா ஊடலா கூடலா
அவள் மீட்டும் பன்னிலா
வாழ்க்கை வழியிலா
ஒருமங்கையின்ஒளியிலா
ஊரிலா நாட்டிலா
ஆனந்தம் வீட்டிலா
அவள் நெஞ்சின்ஏட்டிலா
சொந்தம்இருளிலா
ஒருபூவையின் அருளிலா
எண்ணிலா ஆசைகள்
என்னிலா கொண்டது
ஏன் அதைச் சொல்வாய்
வெண்ணிலா
தேவியின் நிலா
நீ இல்லாத நாள்
எல்லாம் நான் தேய்ந்த
வெண்ணிலா
{2}கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா
தேயாத வெண்ணிலா
உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா
கல்யாண தேன்நிலா
காய்ச்சாத பால் நிலா
தென்பாண்டி கூடலா
தேவாரp பாடலா
தீராத ஊடலா
தேன் சிந்தும் கூடலா
என் அன்பு காதலா
எந்நாளும் கூடலா
பேரின்பம் மெய்யிலா
நீ தீண்டும் கையிலா
பார்ப்போமே ஆவலா
வா நிலா
உன் தேகம் தேக்கிலா
தேன் உந்தன் வாக்கிலா
உன் பார்வை தூண்டிலா
நான் கைதி கூண்டிலா
சங்கீதம் பாட்டிலா
நீ பேசும் பேச்சிலா
என் ஜீவன் என்னிலா
உன் பார்வை தன்னிலா
தேனூறும் வேர்ப்பலா
உன் சொல்லிலா
ஒரு ஒலியும் ஒரு சொல்லும்,பலவரிகளாகி,பரவச விருந்தளித்த பாடல்கள் சிலவற்றை இப்பதிவில் பார்த்தோம்.திரைப்பட பாடல்கள் வெறும் இசைக்காக மட்டும் கேட்கப்படாது,கருத்துத்துச் செறிவுள்ள, கற்பனை வளம் நிறைந்த,இலக்கிய ஊற்றாகி,படப் பாடல் எனும் நிலைகடந்து,மொழியையும்,சிந்தனை செழுமையையும் உள்ளடக்கி, காலம் வென்ற கவிதைகளாய் நிலைபெற்ற காலம் ஒன்றிருந்தது என்பது,தமிழ் மொழிக்கும் தமிழ்த்திரை உலகிற்கும் பெருமை சேர்க்கும் பார்வையாகும்.
ப.சந்திரசேகரன் .
=============0===============
அன்பு நடமாடும் kalaikkoodamaye
ReplyDeleteஆசை மழை மேகமே
என்ற பாடலில் ஒவ்வொரு வரியின் இறுதியில் may enru முடியும்.
இதுவும் கண்ணதாசன் அவர்களின் அருமையான பாடல்.
இன்னுமொரு பாடலை நினைவூட்டியமைக்கு நன்றி Prof.TKC
Delete