Tuesday, July 19, 2022

வித்யாசமான விசேஷம்


   கிரேசி மோகனை பார்த்தாலே சிரிப்பு வரும்.பேசினால் அதுக்கும்மேலே. ஆனால், ஆர்.ஜே.பாலாஜி பார்க்கறதுக்கு பவ்யமா இருந்தாலும் நடிப்பில குறும்பும், வசனத்தில விவேகமும் எப்போதுமே தூக்கல் தான்.வயசான காலத்தில மீண்டும் அம்மா கர்ப்பமாக, அதை ஒட்டி களங்கப்படுத்தும் விமர்சனங்களும், கொடிகட்டிப் பறக்கும் வசனங்களும் தான் படத்தின் ஹிட் பாயின்ட்ஸ். 

  அப்பா சத்யராஜ் இளையமகனிடம் அதுபற்றி பேச முயல, அதற்கு அவன்,'அடிக்கடி கேக்கறதுக்கு இது என்ன ரெஹ்மான் பாட்டா'என்று சொல்லி கதவடைப்பதும் அம்மா ஊர்வசியை திருமண விழா ஒன்றில் பலரும் நக்கலடிப்பதும் நகைச் சுவைக்கும் சிந்தனையின் நச்சுத் தன்மைக்கும் எடுத்துக்காட்டுகள். 

  காதலியின் தாயிடம், தன் குடும்ப கௌரவத்தை விட்டுக்கொடுக்காமல் பாலாஜி பேசும் வசனக்காட்சியும், திருமண விழாக் காட்சியில் மருமகள் ஊர்வசியை தனது மகள் மற்றும் மூத்த மருமகளின் நச்சு வசனங்களுக் கிடையே நுழைந்து, உயர்ந்து நின்று இளைய மருமகளைத் தாங்கிப் பிடிக்கும்,மறைந்த பழம்பெரும் மலையாள நடிகர் KPAC லலிதாவின் வெட்டிவீழ்த்தும் சொற்களும் பாலாஜியின் பெருமை பேசும். 

   இயல்பாகவே நோயாளிபோல காட்சியளிக்கும் ஊர்வசி,படத்தின்   மையத்தில் சிறப்பாகப் பொருந்துகிறார். சத்யராஜும் KPAC லலிதாவும் திரைப்படத்தை வலிமையுடன் தாங்குகின்றனர்.இறுதி மருத்துவமனைக் காட்சிகள் கொஞ்சம் ஓவர்தான்.மூக்குத்தி அம்மன், தொடர்ந்து பாலாஜியைக் காக்கட்டும்.

No comments:

Post a Comment