Friday, August 12, 2022

காற்றினில் வலம்வரும் தமிழ்த்திரையிசை

  உலகம் முழுமையும் காற்றில் உலவுகிறது.மூச்சுக்காற்று இல்லை னில் பூமியில் வாழ்க்கையில்லை.இதனைத்தான் வள்ளுவர், 

அல்லல் அருள்ஆள்வார்க்கு இல்லை வளிவழங்கும்

மல்லல்மா ஞாலங் கரி

  எனும் குறளில் ,அருள் உலவும் உலகில் துன்பம் வராது என்பதை, காற்றுலவும் பேருலகின் நன்மையுடன் ஒப்பிடுகிறார்.

'மீரா'{1945} திரைப்படத்தில் இசைப்பேரரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி 

"காற்றினிலே வரும் கீதம் 

கண்கள் பனித்திட பொங்கும் கீதம்" 

  எனும் பாபநாசம் சிவனின் வரிகளை மெய்மறந்து பாட, அதில் தமிழறிந் தோர் எவரேனும் மயங்காதோர் உண்டோ! எஸ்.வி வெங்கடராமனின் இதயம் துளைக்கும் இசையமைப்பில் காற்றின் வேகமென நெஞ்சுக்கு பரவசமூட்டிய பாடலிது.இப்பாடலின் முதல் வரியே பின்னர் 1978 -ல்  எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில், பஞ்சு அருணாச்சலத்தின் கதையில் களித்து,R.முத்துராமன், கவிதா ஆகியோர் இணைந்து நடித்த, திரைப்படத்தின் தலைப்பயிற்று.

  காற்றைப்பற்றி P.B ஸ்ரீனிவாசும் P. சுசீலாவும் சேர்ந்து ரம்யமாய்ப் பாடிய இரண்டு பாடல்கள்,என் நினைவைத் தாலாட்டுகிறது.அதில் ஒன்று, 'காத்திருந்த கண்கள்'திரைப்படத்தில் கவியரசு கண்ணதாசன் வரிகளாய், விஸ்வநாதன் ராமமூர்த்தியின் தேனிசையில், 

"காற்று வந்தால் தலைசாயும் நாணல் 

காதல் வந்தால் தலைசாயும் நாணம்" 

     என்று கற்பனைக்களஞ்சியத் திலிருந்து களமிறங்கி,கேட்போர் செவிகளுக்கு பேரானந்தத்தை தோற்றுவித்தது.மற்றொரு பாடல்,  மகாகவிபாரதியாரின் வரிகளான, 

"காற்று வெளியிடை கண்ணம்மா 

நின்றன் காதலை எண்ணி களிக்கின்றேன்" 

  எனும் இதமான பாடலாய், 'கப்பலோட்டிய தமிழன்'திரைப் படத்தில், இதயத்தை குளிர்வித்தது. இந்த ஏகாந்த பாடலுக்கு ஜி,ராமநாதன் இசை வடிவம் தந்தார். பின்னர் 'காற்று வெளியிடை'எனும் தலைப்பினைக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் ஒரு திரைப்படமும் வெளியாயிற்று.

   காற்றில் உலாவரும் கற்பனைகள்  கவிஞர்களை வெகுவாகவே ஆட் கொள்வதுண்டு.அப்படி உருவான ஒரு பாடல்தான்,வாலியின் வளமான கற்பனையில்,'கலங்கரை விளக்கம்' திரைப்படத்தில்,தனி முத்திரை பதித்த 

"காற்று வாங்க போனேன் 

ஒரு கவிதை வாங்கி வந்தேன் 

அதை கேட்டு வாங்கி போனாள்

அந்த கன்னி என்ன ஆனாள்"

   எனும் குறும்புத்தனமான பாடல்.எம். ஜி.ஆர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப்பெற்ற இப்பாடலுக்கு, மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் காற்று வேகத்தில் இசையமைத்திருந்தார்.

  வாலிக்கு ஒருபடி மேலே போய், அவருக்கு முன்னதாகவே காற்றையே பாடவைத்த பெருமை கண்ணதாச னுக்கு உண்டு 'வெண்ணிற ஆடை' திரைப்படத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தியில் இசையில்,P.சுசீலா பாடிய, 

"அம்மம்மா காற்றுவந்து ஆடை தொட்டு பாடும்" 

எனும் வரியில் தொடங்கும் அப்பாடல், பி சுசீலாவின் குரல் வேகத்தில் அனைவரையும் புத்துணர்ச்சியில் திளைக்கவைத்தது. 

  இதே கண்ணதாசன் பின்னர் பாலு மகேந்திராவின்'மூன்றாம் பிறை' திரைப்படத்திற்காக புனைந்த பாடலே, 

"பூங்காற்று புதிதானது

புதுவாழ்வு சதிராடுது" 

    எனும் வரிகளில் கே.ஜே.ஏசுதாஸின் அதிர்வுக்குரல்களால் மென்மை யான உணர்வுகளை காற்றுடன் சங்கமிக்கச் செய்தது.இசை ஞானியின் இசையில் இப்பாடல், இனிமையை இரட்டிப்பாக்கி யது.

 கே.ஜே.ஏசுதாசின் காந்தக்குரலில் நம்மை இளைப்பாற்றிய இன்னொரு பாடல் காற்றுக்குப் பெயரிட்டு நிற்கச் சொல்லி,காதலிக்குத் தூதுவிட்ட விளிப்பாடலானது.

வைகைக்கரை காற்றே நில்லு.

வஞ்சிதனைக் கண்டால் சொல்லு.

மன்னன் மனம் வாடுதென்று

மங்கைதனைத் தேடுதென்று

காற்றே பூங்காற்றே

கண்மணி அவளைக் கண்டால் நீயும்

காதோரம் போய்ச்சொல்லு

  எனும் இவ்வுருவகப் பாடலுக்கு  வரிவடிவமும் இசைவடவமும் தந்தார் பன்முனை படைப்பாளி டி.ராஜேந்தர். அவர் இயக்கிய'உயிருள்ளவரை உஷா' திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் காற்றோடு கலந்துவந்து நம் இதயங்களை ஆரத்தழுவியது.

  கே.பாலச்சந்தரின் 'அவர்கள்' திரைப் படத்தில் எம்.எஸ் விஸ்வநாதன் இசையில் காற்றைப்பற்றி எஸ்.ஜானகி பாடிய ஒரு அமர்க்களமான பாடலே, 

"காற்றுகென்ன வேலி 

கடலுக்கென்ன மூடி 

கங்கை வெள்ளம்

சங்குக்குள்ளே 

அடங்கி விடாது 

மங்கை நெஞ்சம்

பொங்கும் போது 

விலங்குகள் ஏது"

  இந்த அற்புதக்கற்பனையும்,கவியரசு கண்ணதாசனின் கவிதை காணிக்கையே.இப்பாடலின் முதல் வரியும் பிறகு 2001-இல்,ஒரு திரைப்பட தலைப்பாகவும் ஆயிற்று. 

 'வெண்ணிற ஆடை'திரைப் படத்தில்,சுசீலாவின் பாடலில்,ஆடை தொட்டுப் பாடிய காற்று,'ஜானி' திரைப்படத்தில் ஜானகியின் குரல்வீச்சில்,வேகம் நிறைந்த மற்றொரு பாடலின் மூலம்,  கண்ணுக்குப் புலப்படாத  ஏதோ ஒன்றினை,மனம் மூச்சு முட்டத் தேடுகின்றது என்பதை,ஆழமாய் உணர்த்தியது, 

"காற்றில் எந்தன் கீதம் 

காணாத ஒன்றைத் தேடுதே". 

   எனும் அந்த பாடல் வரிகள்,  ஸ்ரீதேவி யின் மனம் நிறைய ஏக்கம் தாங்கி, காதல் வேதனையின் விளிம்பைத் தொட்டு  கங்கை அமரனினின் கவிதையையும் அவரது தமையன் இளையராஜாவின் இசையையும் ஒருசேரப்பிழிந்து கான வெள்ளமாய் நம் நெஞ்சங்களில் வழிந்தோடியது. இதுவே'காற்றின் மொழி'யாகி,பின்னர் இயக்குனர் ராதா மோகனின் ஒரு திரைப்படத்தலைப்பாயிற்று. 

  உருவமில்லா காற்றுக்கு பல உருவங்கள் உண்டு.தென்றலும் புயலுமாய் நிறைந்த வாழ்வில், 'தென்றல் வந்து என்னைத்தொடு' என்று காற்றை விளிப்பதும்,மனச் சுமை வெடிக்கையில்,'பூவுக்குள் பூகம்ப'மாக மூச்சுக் காற்று வெடிப்ப தையும்,சில நேரம்'தென்றல் சுடும்' என்று நினைப்பதும் பனிக் காலத்தில் இரவுநேர குளிர்க்காற்றை தவிர்ப்பதும் வாழ்வின் வாடிக்கைகளை. எல்லோரும் உறங்கியபிறகு குளிர்க் காற்று வீச அச்சூழலிலும் காதல் வயப்பட்டோர் கண்ணுறங்காமல் இருப்பதுண்டு. அப்படிப்பட்ட ஒரு மன நிலையைத்தான் மெல்லத் திறந்தது திரைப்படத் தில் எஸ். ஜானகி பாடிய 

ஊரு சனம் தூங்கிடுச்சு 

ஊதக்காற்றும் அடிச்சிடுச்சு 

பாவிமனம் தூங்கலையே 

அதுவும் ஏனோ புரியலையே 

   என்று கண்ணுறங்கா காதல் தவிப்பை வெளிப்படுத்திய பாடல். இப்பாடலையும் கங்கை அமரன் எழுத அதற்கு இசைஞானியே தேனிசை ஊட்டினார். 

  கண் காணாக் காற்றினில்,நாம் கட்டுண்ட எத்தனையோ பாடல்கள் தமிழ்த்திரையில் உண்டு.அவற்றில் ஒருசில தேன் துளிகளே,இப்பதிவில் காற்றுடன் கலந்தன.வாடைக்காற்றும் 'எதிர்காற்று'ம் நிறைந்த வாழ்வில், காற்றில் மிதந்துவரும் கானங்கள், மனதிற்குள் மத்தாப்பாக மின்னியும், பட்டாம்பூச்சிகளாய்ப் பறந்தும், வாழ்வினை வாழுதற்குரியதாக்கு கின்றன. 

                       ===============0=================                

2 comments:

  1. சிறப்பு சார்... அருமையான பாடல்களை பற்றிய பதிவு..... ஏ. ஆர் ரஹ்மான் இசையில் உயிரே படத்தில் இடம் பெற்ற " பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாக தேடி பார்த்தேன்" மற்றும் ஒரு பழைய படம் எச்சில் இரவுகள் என்று நினைக்கிறேன் " பூ மேலே வீசும் பூங்காற்றே என் மேல் வீச மாட்டாயா " இந்த பாடல்களையும் கேட்டு பாருங்கள் சார்.. அருமையான பாடல்களை பதிவிட்டதற்கு நன்றி சார்

    ReplyDelete
  2. 'உயிரே' படப்பாடல்,விட்டுப் போனதற்கு வருந்துகிறேன்.விட்டுப்போன இன்னொரு அழகான பாடல், 'நவக்கிரகம்'திரைப்படத்தில் இடம்பெற்ற, "உன்னை தொட்ட காற்று வந்து என்னை தொட்டது"

    ReplyDelete