திரையின் வெண்மை அரங்கித்திற்கழகு. வெண்திரையில் திரண்டு வரும் நிறங்கள் திரைக்கே அழகு.மனிதரில் நிறம் மாறாத பூக்களுண்டு; 'மனிதரில் இத்தனை நிறங்களா?'எனும் வியப்புக் குரிய கேள்வியும் உண்டு.
நிறம் சார்ந்த தமிழ்திரைப்படத் தலைப்புகளாக,ஆரஞ்சு மிட்டாய்,சிவந்த மண்,சிவப்பு மல்லி,சிவப்புச் சூரியன்,சிகப்பு ரோஜாக்கள்,கண் சிவந்தால் மண் சிவக்கும்,கீழ் வானம் சிவக்கும் வறுமையின் நிறம் சிவப்பு,செக்கச் சிவந்த வானம்,மஞ்சள் மகிமை,மஞ்சப்பை,பச்சை விளக்கு, பச்சைக் கிளி முத்துச்சரம்,சிகப்பு மஞ்சள் பச்சை,நீல வானம்,நீல மலர்கள்,ஊதா பூ கண் சிமிட்டுகிறது,வெள்ளை ரோஜா,கருப்புப் பணம்,கருப்பு நிலா,என பல திரைப் படங்கள் காலம் கால மாய் தமிழ்த்திரை உலகை வலம் வந்து கொண்டிருக்கின்றன.
நிறங்களைத் தாங்கிய எண்ணற்ற பாடல்கள் தமிழ்திரையில் உண்டு. அவற்றில் சிலவற்றை நிறங்களின் அடிப்படையில்,இப்பதிவினில் காணலாம்.கருப்பு வெள்ளை என்ற நிறக்கணக்கில் துவங்கினால்,
"கருப்பு நிலா நீதான் கலங்குவதேன்
துளித்துளியாய் கண்ணீர் விழுவது ஏன்".( என் ஆச மச்சான்)
எனும் இனிய பாடலும்,
"வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு
வேடிக்கை காட்டுது தூக்கமின்னு"
(பத்தாம் பசலி)
எனும் மற்றொரு மனமுவக்கும் பாடலும்,இரவில் கேட்டால் ஒருசேர நம்மை உறங்கச்செய்யும்.கவிஞர் காளிதாசனும்,ஆலங்குடி சோமுவும் எழுதிய இந்த மென்மையான பாடல் வரிகளுக்கு,முறையே தேவாவும் வி.குமாரும் இதமாய் இசையமைத் திருந்தனர்.இதில் முதல் பாடலை கே.எஸ்.சித்ரா தனித்தும்,இரண்டாம் பாடலை டி.எம்.எஸ் &கே.ஸ்வர்ணா இணைந்தும்,பாடியிருந்தனர்.
கருப்பையும் சிகப்பையும் மைய்யப்படுத்தி எம்.ஜி.ஆரின்'பரிசு'திரைப் படத்தில் இடம் பெற்ற பாடலே,
"கூந்தல் கருப்பு
ஆஹா
குங்குமம் சிகப்பு
ஓஹோ
கொண்டவள் முகமோ ரோஜாப்பூ"
கண்ணதாசனின் இந்த எளிமையான வரிகளுக்கு,கே.வி.மஹாதேவன் இசையமைத்திருந்தார்.டி.எம்.சௌந்தராஜனும் பி.சுசீலாவும் பாடிய பழைய பாடல்களில் இது ஒரு மனசுக்கேத்த பாடலாய் வலம் வந்தது.
சிகப்பு நிறத்தினை மையப்படுத்தி 'எல்லோரும் நல்லவரே'எனும் திரைப்படத்தில்,
"செவப்பு கல்லு மூக்குத்தி
சிரிக்கவந்த மான்குட்டி
தங்கமுகத்தில குங்கும பொட்டு வச்சுகிட்டு
நீ எங்கடிபோற சுங்கிடிச்சேல கட்டிகிட்டு"
எனும் டூயட் பாடலை,டி.எம்.சௌந்தராஜனும் பி.சுசிலாவும் நாவினிக்கப் பாடியிருந்தனர்.கண்ணதாசனின் இவ்வரிகளுக்கு வி.குமார் நிறம் மாறாமல் இசையமைத்திருந்தார்.
பச்சை நிறம் பிரசவித்த தமிழ்த்திரைப் பாடல்களில்,இரண்டு பிரதான எம்.ஜி.ஆர் படப்பாடல்களை குறிப்பிட்டாக வேண்டும்.முதலில்'உலகம் சுற்றும் வாலிபன்'திரைப்படத்தில் பலரையும் பரவசமூட்டிய,டி.எம்.எஸ். P.சுசீலா பாடிய,
"பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக் கொடி யாரோ
பாவை என்னும் பேரில் வரும் தேவன் மகள் நீயோ"
எனும் வாலியின் வரிகளுக்கு வேக மூட்டிய,மெல்லிசை மன்னரின் இசையில் அமைந்த ஆனந்தப் பாடலை குறிப்பிட்டாக வேண்டும். இன்னொரு பாடல்,எம்.ஜி.ஆரின்'நீதிக்குத் தலை வணங்கு'திரைப் படத்தில் இருமுறை யாக எஸ்.வரலட்சுமி குரலிலும் கே.ஜே.ஏசுதாஸ் குரலிலும் இடம் பெற்றது.எம்.எஸ் விஸ்வநாதனும் அமரர் புலமைப் பித்தனும் இணைத்து செவிகளுக்குச் சுகம் சேர்த்த,
"இந்த பச்சைக்கிளிக்கொரு
செவ்வந்திப் பூவில் தொட்டிலைக்
கட்டி வைத்தேன்
அதில் பட்டுத்துகிலுடன் அன்னச் சிறகினை
மெல்லென இட்டு வைத்தேன்"
எனும் தாலாட்டுப் பாடல்.
பச்சை நிறத்தின் புகழ் பரப்புவதாக அமைந்த பாடலே 'அலை பாயுதே' படத்தில் ஹரிஹரன் சல்லாபமாய்ப் பாடிய,
"பச்சை நிறமே பச்சை நிறமே
இச்சை ஊட்டும் பச்சை நிறமே
புல்லின் சிரிப்பும் பச்சை நிறமே
எனக்கு சம்மதம் தருமே
பச்சை நிறமே பச்சை நிறமே
இலையின் இளமை பச்சை நிறமே,
உந்தன் நரம்பும் பச்சை நிறமே
எனக்கு சம்மதம் தருமே".
ஏ.ஆர்.ரெஹ்மானின் பரவச இசையோட்டத்தில்'சகியே'என்று வைர முத்துவின் வரிகளுடன் தொடங்கும் இப்பாடல் வரிகள்,இளமைக்கு பூபாளம் பாடின.
மங்கையர்த்திலகம் திரைப்படத்தில் உள்ளம் கவர்ந்த தாலாட்டுப் பாடலான,
"நீல வண்ணக்கண்ணா வாடா
நீ ஒரு முத்தம் தாடா"
தொடங்கி,'வீரத்திருமகன்'திரைப்படப் பாடலான P.சுசிலா குழுவினருடன் பாடிய
"நீலப்பட்டாடை கட்டி
நிலவென்னும் பொட்டும் வைத்து
பால்போல சிரிக்கும் பெண்ணே
பருவப்பெண்ணே"
எனும் அழகான பாடலும்,'அன்னை வேளாங்கன்னி'திரைப்படத்தில் T.M.சௌந்தராஜன் மனமகிழ்ந்து பாடிய,
"நீலக்கடலின் ஓரத்தில் நீங்கா இன்ப
காவியமாம்"
பாடலும்,
'வாழ்வே மாயம்' திரைப்படத்தில்,
"நீலவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா
நான் வரைந்த பாடல்கள் நீலம் பூத்த கண்ணிலா
வராமல் வந்த என் தேவி"
எனும் காதலை கனியச்செய்யும் பாடலும்,'வருத்தப்படாத வாலிபர் சங்கம்'திரைப்படத்தில் தேன்சுவை கலந்த,
"ஊதா கலரு ரிப்பன்
உனகு யாரு அப்பன்"
எனும் நகைச்சுவையும் நமட்டலும் நிறைந்த பாடலும்,நீல நிறத்தை வரிகளாலும் இசையாலும் காலத்தில் அழியாது நின்று நிலைபெறச் செய் தன.இவற்றில் முதல் A.மருதகாசி பாடலை SR பாலசரஸ்வதி தேவியின் கனமான குரலிலும்,இரண்டு மற்றும் மூன்றாம் கண்ணதாசன் வரிகளை முறையே,P.சுசிலா/ LR ஈஸ்வரி மற்றும்,T.M சௌந்தராஜனின் குரல் களிலும், நான்காம் வாலியின் வரிகளை பாடு நிலா எஸ்.பி.பாலசுப்ர மணியத்தின் வசீகர வளைவிலும்,ஐந்தாவது பாடல் யுகபாரதி எழுத, சூப்பர் சிங்கர் ஹரிகரசுதனின் குரலிலும் ஒலித்து,ரசிகர்களுக்கு பல்வேறு உணர்வுகளை தோற்று வித்தன.
இந்த ஐந்து பாடல்களையும் எஸ்.தட்சிணாமூர்த்தி,விஸ்வநாதன் ராமமூர்த்தி,ஜி.தேவராஜன்,கங்கை அமரன் மற்றும் D.இம்மான் ஆகியோர் அவரவர் இசைப்பரிமாண எல்லைக் குட்பட்டு இசையமைத்திருந்தனர்.
மஞ்சள் நிறத்தை குறிவைத்த பாடலொன்று எம்.ஜி.ஆரின்'வேட்டைக் காரன்'திரைப்படத்தில் வளமாய் வலம் வந்தது.கண்ணதாசன் வரிகளுக்கு திரையிசைத் திலகம் மண்மணக்க இசையமைத்த,
"மஞ்சள் முகமே வருக
மங்கள விளக்கே வருக
கொஞ்சும் தமிழே வருக
கோடான கோடி தருக"
எனும் பாடல் மிகச்சிறந்த பழைய பாடல்களில் ஒன்றாகும்.இதற்கு முன்னர் சிவாஜி கணேசன் நடித்த'காவேரி'எனும் திரைப்படத்தில் எம்.எல்.வசந்தகுமாரியும் சி.எஸ்.ஜெயராமனும் அகமகிழ்ந்து பாடிய
"மஞ்சள் வெயில் மாலையிலே
வண்ணப் பூங்காவிலே
பஞ்சவர்ண கிளிகள் கொஞ்சும்
பரவசம் பார்"
எனும் உடுமலை நாராயண கவியின் பாடலொன்று ஜி.ராமநாதனும் விஸ்ஸ நாதன் ராமமூர்ததி,ஆகிய மூவருக்கும் சிறப்பு முகவரி தேடித் தந்து,சிங்காரமாய் வலம் வந்தது.
'மனிதன் அவ்வப்போது நிறம் மாறி னாலும் மாறாத நிறங்களாக,தமிழ்த் திரைப்படத் தலைப்புகளாகவும் பாடல்களாகவும் பல வண்ணங்கள், தமிழ்த்திரையுலகிற்கு தாரளமாய் பெருமை சேர்த்தன என்று சொன்னால் அது மிகையாகாது.இப்பதிவின் நோக்கமே இயன்றவரை தமிழ்த் திரை யின் பல வண்ணங்களை பிரகடனப்படுத்தி பிரசித்திப்பெறச் செய்வதே யாகும்.
≈====≈=====≈0=====≈=====≈
சிறப்பு சார்..... அருமையான சுவராசியமான பதிவு... உங்கள் நினைவுத்திறன் பிரம்மிக்க வைக்கிறது.. நான் மறந்தே போன பல பாடல்களை நினைவுபடுத்தி விட்டீர்கள்.. நன்றி
ReplyDeleteநன்றி மணிகண்டன்.
Delete