கேட்டுப் பெறுவதும்,அளிப்பதுமே மன்னிப்பு.மாறாக உணர்வால் உந்தப்பட்டு நன்றி செலுத்துவதும்,அதே நேரத்தில், கைம்மாறுக்கு நன்றி எதிர்பாராமல் இருப்ப துமே,நன்றியறிதலாகும். மன்னிப்பை மனதில் ஏற்றிட,
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல தம்மை
இகழ்வாரை பொறுத்தல் தலை
எனும் வள்ளுவர் கூற்றை அறிதலே அதன் தரம் உயர்த்தும்.
ஆனால்,இதற்கு முற்றிலும் எதிர்ப்பட்டு, 'ரமணா'திரைப்படத்தின் எவரும் மறக்க முடியாத ஒற்றைவரி வசனமாக,"மன்னிப்பு, தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை"என்று அமரர் கேப்டன் விஜயகாந்தின் வாய் மொழிக் கூற்றாய் வெளியேறிய வசனம், பட்டி தொட்டியெல்லாம் எதிரொலித்தது. மனிதத்தை படுகுழியில் புதைப்போர்க்கு, மன்னிப்பே கிடையாது எனும் ஆவேச எழுச்சி,நியாயமானதாகவே பலராலும் கருதப்படுகிறது.
ஒருதார்க்கு ஒருநாளைக்கு இன்பம் பொறுத்தார்க்கு
பொன்றும் துணையும் புகழ்
எனும் வள்ளுவனின் அற(றி)வுரை,படு பாதகம் புரிவோருக்கு பொருந்தாதுதானே!
இருப்பினும்,இரும்பெனும் இதயம் கொண்டு சிறு தவறுகளையும் மன்னிக்கத் தவறுகையில்,மனிதமே தடம்புரண்டு இடம் தெரியாமல் போய்விடும் என்பதே,யதார்த் தமாகும்.இதைத்தான் 'விளக்கேற்றிய வள்'திரைப்படத்தில் டி.ஆர்.பாப்பாவின் அருமையான இசையில் டி.எம்.எஸ்.மிதமா கப் பாடிய,"கத்தியைத் தீட்டாதே உந்தன் புத்தியைத் தீட்டு"என்ற பாடலுக்கு இடையே வரும்,
"மன்னிக்க தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கோயிலப்பா
இதை மறந்தவன் வாழ்வு தடம்தெரியாமல் மறைந்தே போகுமப்பா"
எனும் ஆலங்குடி சோமுவின் அர்த்தமுள்ள வரிகள் அறிவுறுத்துகின்றன.
கிறித்துவ மதத்தில் பாவ மன்னிப்பு கோரலும்,பாவத்திற்கான தண்டனையும், விமோசனமும்,செய்த பாவம் அனுசரித்த வாறு அமைந்திருப்பதாக அறிகிறோம். 'ஞான ஒளி'திரைப்படத்தில் எம்.எஸ்.விஸ்வ நாதன் இசையில் டி.எம்.எஸ் பாடிய
"தேவரீர் என்னைப் பாருங்கள்
என் பாவங்கள் தம்மை
வாங்கிக் கொள்ளுவீர்;
ஆயிரம் நன்மை தீமைகள்
நாங்கள் செய்கிறோம்,
நீங்கள் அறிவீர்,
மன்னித் தருள்வீர்."
எனும் கவியரசின் வரிகள்,பாவத்திற்கும் மன்னிப்பிற்கும் இடையிலான இடைவெளி யை பக்குவமாய் புரியவைத்தது.
'ஜனனி'(1985) திரைப்படத்தில்,எம்.எஸ். விஸ்வநாதன் இசையில்,கே.ஜே.ஏசுதாஸ் மனமிறங்கிப்பாடிய,
"மன்னிக்க மாட்டாயா உந்தன் மனமிறங்கி" என்ற பாடல்,காதலியிடம் கெஞ்சி மன்னிப் புக் கேட்பதை,அதிர்வலைகளாய் சுகமாக தோற்றுவித்தது.
'இருமலர்கள்'திரைப்படத்தில் எம்.எஸ். விஸ்வநாதன் இசையில்,வாலியின் வித்தியாசமான வரிகளிலமைந்த
"மன்னிக்க வேண்டுகிறேன்
உந்தன் ஆசையைத் தூண்டுகிறேன்"
எனும் பாடலை பி.சுசிலா மற்றும் டி.எம்.எஸ் குரல்களில் கேட்கையில்,இப்பாடல் காத்தி ருப்பை ஈடு செய்ய மன்னிப்பை காணிக்கை யாக்குகிறதா அல்லது ஆசையைத் தூண்டு வதற்கான முன்னறிவிப்பாக மன்னிப்பு அமைகிறதா எனும் விளக்கத்தை அமரர் வாலிதான் அளிக்கவேண்டும்.(திரைப் படத்தை கண்டவருக்கு அது காத்திருக்கச் செய்தமைக்கான மன்னிப்புக்கோரலே என்பது புரிதலாயிருக்கும்).
மேலே குறிப்பிட்ட ஒரு சில பாடல்கள் மட்டு மல்லாது,மன்னிப்பை முன்னிலைப்படுத்தி, 'மன்னிப்பு'பாவமன்னிப்பு'போன்ற திரைப் படத்தலைப்புகளையும் தமிழ்த்திரை தந்தி ருக்கிறது.
மனிதவாழ்வின் மகத்துவம் எந்த அள விற்கு மன்னிப்பு கேட்பதிலும் அளிப்பதிலும் உள்ளதோ,அதே அளவிற்கு நன்றி பாராட்டு தலிலும் உள்ளது.செய்நன்றி எனும் அதி காரத்தில்,நன்றியறிதலின் மேன்மையை அற்புதமாய் வலியுறுத்திக்கூறியுள்ளார் வள்ளுவர்.தமிழ்த்திரைப்படங்களில் நன்றி கூறும் வகையில் குறிப்பிட்டுச் சொல்லும் வகையில்,சில நளினமான பாடல்கள் உண்டு.
காதலனைக் கண் முன் கொண்டுவந்து நிறுத்திய தன் விழிகளுக்கே,நன்றி சொல் லும் வண்ணம்,
"நான் நன்றி சொல்வேன் என்கண்களுக்கு
உன்னை என்னருகே கொண்டு வந்ததற்கு
நான் நன்றி சொல்லச் சொல்ல
நானும் மெல்ல மெல்ல
என்னை மறப்பதென்ன"
எனும் 'குழந்தயும் தெய்வமும்'திரைப்படத் தில்,பி.சுசிலா குரலால் குழைந்து பாடிய வசந்தமான வாலியின் வரிகள்,எம்.எஸ். விஸ்வநாதனின் பேரிசையில் பெரு மகிழ்ச்சி படைத்தது.இப்பாடலில்,எம்.எஸ்.வி யின் ஹம்மிங்,பி.சுசிலாவின் குரலோடு கூடவே பயணித்து,பாடலின் சுகத்தை இரட் டிப்பாக்கியது.
இதேபோன்று இல்லறத்தில் இணைந்த இருவரும் போட்டி போட்டுக்கொண்டு,
"நன்றி சொல்ல உனக்கு
வார்த்தையில்லை எனக்கு
நான்தான் மயங்குறேன்"
எனும் வாலின் வசீகரிக்கும் வரிகள் கொண்ட பாடல்,'மறுமலர்ச்சி'திரைப்படத் தில்,எஸ்.ஏ.ராஜ்குமாரின் மனம் கவரும் இசையில் இரண்டு காட்சிகளில் தனித் தனியே ஒலித்தது.இந்த ரம்யமான பாடலை ஹரிஹரனும் அம்ருதாவும் ஒரு முறையும், உன்னி கிருஷ்ணனும் கே.எஸ்.சித்ராவும் மறுமுறையும்,பாடியிருந்தனர்.
நன்றி எனும் சொல்லை உள்ளடக்கிய இடையில் வரும் அர்த்தமுள்ள வரிகள், P.B.ஸ்ரீநிவாசின் இரு பாடல்களில் இடம் பெற்றிருந்தன.'பனித்திரை'திரைப்படத்தில் இடம்பெற்ற,
"ஏதோ மனிதன் பிறந்துவிட்டான்"பாடலுக்கு நடுவே,
"நாயாய் மனிதன் பிறந்திருந்தாலும்
நன்றி எனும் குணம் நிறைந்திருக்கும்"
என்ற உருவக ஒப்பீட்டு வரிகளும்,
'வாழ்க்கைப்படகு'திரைப்படத்தில் அவர் பாடிய,
"சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ"
பாடலுக்கிடையே முள்ளெனத் தைக்கும்,
"நன்றிகெட்ட மாந்தரடா;நானறிந்த பாடமடா"
எனும் அனுபவக்கூற்றும்,நன்றி எனும் சொல்லுக்கு காப்பியம் படைக்கும்.இந்த இரு பாடல்களுக்கும் கவியரசு கச்சிதமாய்க் கவிபுனைய,முதலாவது பாடலக்கு கே.வி. மகாதேவனும்,இரண்டாவது பாடலுக்கு விஸ்வநாதன் ராமமூர்த்தியும்,வானுயர இசைகோபுரம் எழுப்பினர்.
வாழ்நாள் முழுவதும் மனிதனை வலம் வரும் நன்றி,அவன் மரணத்தில் மெனமாய் வெற்றி காண்கிறது.இதைத்தான் 'சங்கே முழங்கு'திரைப்படத்தில் டி.எம்.எஸ் தன் கம் பீரக்குரலால் முழங்கிய,
"நாலு பேருக்கு நன்றி அந்த
நாலு பேருக்கு நன்றி
தாயில்லாத அநாதைக்கெல்லாம்
தோள் கொடுத்து தூக்கி செல்லும்
நாலு பேருக்கு நன்றி"
எனும் பாடலும்,அப்பாடலின் முடிவில்,
"வாழும்போது வருவோர்க்கெல்லாம்
வார்த்தையாலே நன்றி சொல்வோம்.
வார்த்தை இன்றி போகும்போது
மௌனத்தாலே நன்றி சொல்வோம்"
எனும் தத்துவரீதியிலான முடிவுரையும்
'நன்றியறிதல்'எனும் நற்பண்பை,நான்கு திசையிலும் நாள்காட்டியாய்க் கொண்டு சென்றது.கண்ணதாசனின் கடலாழம் கொண்ட இப்பாடலை,எம்.எஸ் விஸ்வ நாதன்,இசையின் அமரத்துவத்தால்,இமய மாக்கினார்.
இத்தகைய வாழ்வின் வரப்பிரசாதமான நன்றியறிதலை,
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப்பெரிது
என்று உச்சந்தலையில் ஊட்டியும்,
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு
என்று நன்றியின்மையை மண்ணுக்குள் ஆழமாய்ப் புதைத்தும்,
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாய்க்
கொள்வர் பயன்தெரி வார்
என இயல்பாய் நன்றி பேணுபவரை மேன்மைப்படுத்தியும்,நன்றியறிதலை மனிதனின் நாடி நரம்புகளில் ஊறச்செய் தார் அறவழி நாயகன் வள்ளுவர்.
நன்றி பாராட்டுதலை'நன்றி மீண்டும் வருக'என்று பல ஊர் எல்லைப்பகுதியில் அறிவிப்புப் பலகையாய்ப் பார்க்கையில், விருந்தோம்பலும் நன்றியறிதலும் இணைந்து,அதனை மனிதம் உய்க்கும் அறநெறி களாய் உணரமுடியும்.இந்த "நன்றி மீண்டும் வருக"என்பது,ஒரு திரைப் படத் தலைப்பாகவும் வந்தது.மன்னிப்பை பின்பற்றலும், நன்றியை நடு நெஞ்சில் போற்றி வளர்த்தலுமே,மனித சமுகத்தின் தன்னிகரில்லா ஒழுக்க வரையறைகள் என்பதை,தமிழ் திரைப்படத்துறை திகட்டா மல் தந்திருக்கிறது என்பது,பெரும் பாராட் டுக்குரியதாகும்.
===========0===========0=============
👏👏
ReplyDelete