உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்
என்று,விநாயகர் தாய் தந்தையரை சுற்றி வந்து உலகத்தைச் சுற்றியாதாக உணர்ந் தது போல,இரண்டே வரிகளில் உலகின் மகத்துவத்தை உரைத்தார் வள்ளுவர். தமிழ்ததிரையோ,தலைப்புகளாலும் பாடல் களாலும்,உலகம் சுற்றிய உயிர்த் துடிப்பை, நமது விழிகளுக்கும் செவிகளுக்கும் சிந்தனை விருந்தாக்கியது.
ஒரு புறம் உலகு நாம் நினைப்பது போல் இல்லை எனும் பாணியில்'உலகம் பல விதம்'எனும் தலைப்பையும் இன்னொரு புறம் நாம் வியக்கும் வண்ணம் உலகம் இல்லை எனும் பொருள் கொண்டு,'உலகம் இவ்வளவுதான்'எனும் தலைப்பையும் தமிழ்த்திரை நம் கவனத்திற்கு கொண்டு வந்தது.அறநெறிக்குட்படாது மனித இனம் தடம் புரளும் வேளைகளில்,உலகமே ஏளனமாய் மனிதனைப் பார்க்கும் என்பதைத்தான்,"உலகம் சிரிக்கிறது"{1959}எனும் திரைப்படம் உணர்த்தியது. இதுவே பின்னர்"உன்னைப்பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது"எனும் எம்.ஜி.ஆரின் 'அடிமைப் பெண்'திரைப்படப் பாடலானது.
மேலும் உலகத்தையே தன் வயப்படுத்தும் மனப்போக்கில்'உலகம் பிறந்தது எனக்காக' என்றும்,உலகைச்சுற்றி இளமைக்கு உவகை ஊட்டும் விதமாக,'உலகம் சுற்றும் வாலிபன்' என்றும் தலைப்புகளைக் கண்டது தமிழ்த் திரை.உலகம் சுற்றும் வாலிபனுக்கு எதிராக பொருளுரைக்கும் விதமாக 'உன்னைச் சுற்றும் உலகம்' எனும் தலைப்புடன் வெளி யானது மற்றோர் திரைப்படம். இவையெல் லாம் போதாதென்று'வேதாள உலகம்' என்னும் வித்தியாசமான திரைப் படத்தை யும் தமிழ்த்திரை கண்டது.
திரைப்படத் தலைப்புகளை சற்றே தள்ளி வைத்து பாடல்களைப் பார்க்கையில், முதலில் நம் சிந்தனையைத் தட்டும், அன்னாள் பிரலப்பாடகர் கண்டசாலாவின் இருநிலை மனப்போக்கை வெளிப்படுத்திய இரு பாடல்கள் உண்டு.முதல் பாடல்,விரக்தி யில் விளைந்த 'தேவதாஸ்' திரைப்படத்தில் நாம் கேட்டு மனம் நொந்த,
"உலகே மாயம்;வாழ்வே மாயம்
நிலையேது நாம் காணும் சுகமே மாயம்"
எனும் உடுமலை நாராயணகவியின் கனமான வரிகளில் அமைந்திருந்தது.இந்த மறக்கமுடியா பாடலுக்கு சி.ஆர்.சுப்பிரமணி யம் இதயம் நனையும் வண்ணம் இசை யமைத்திருந்தார்.இதற்கு முற்றிலும் மாறான மனப்போக்கில் 'அலிபாபாவும் நாற்பது திருடர்களும்'திரைப்படத்தில் அதே கண்டசாலா பாடிய,
"உல்லாச உலகம் உனக்கே சொந்தம்
செய்யடா செய்யடா செய்யடா
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா"
எனும் A.மருதகாசியின் வரிகளில் திளைத்து,எஸ்.தட்சிணாமூர்த்தியின் தேனிசையில் ஊறி,இன்பமழை பொழிந்த பாடலாகும்.
இன்டர்நெட் யுகத்தில் வாழும் பலருக்கும், ஒரு காலத்தில்,பத்திரிக்கைமட்டுமே சார்ந்து வாழ்ந்த தலைமுறை,ஒரு தனி உலகமாகவோ அல்லது உலகத்தை பிரதி பலிக்கும் சக்தியாகவோ விளங்கியது என்பது,தெரிந்திருக்க நியாயமில்லை. இதைத் தான் 'குலமகள் ராதை' திரைப் படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் டி.எம்.எஸ் பாடிய கண்ணதாசனின்,
"உலகம் இதிலே அடங்குது
உண்மையும் பொய்யும் விளங்குது
கலகம் வருத தீருது
அச்சுக் கலையால் நிலைமை மாறுது"
எனும் வரிகள் விளம்பரப்படுத்தின.
உலகத்தையே தன்வயப்படுத்தி தன் நிலை முன்னுயர்த்தும் வண்ணம் அமைந்த பாடலே எம்.ஜி.ஆரின் 'பாசம்'திரைப்படததில் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராம மூர்த்தியின் இசையில் விண்ணதிரச் செய்த,
"உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக
அன்னை மடியை விரித்தாள் எனக்காக"
எனும் அமர்க்களப்பாடல்.
கண்ணாதாசனின் கம்பீரமான வரிகளா லும் டி.எம்.எஸ்ஸின் ஒப்பில்லாக் குரலாலும் உயரம் கண்டது இப்பாடல்.
இதற்கு மாறாக,விலகி நின்று உலக அதிசியங்களை விந்தையுடன் தரிசித்த மற்றுமொரு எம்.ஜி.ஆர் பாடலே,'உலகம் சுற்றும் வாலிபன்'திரைப்படத்தில் டி.எம்.எஸ்ஸும் எஸ் ஜானகியும் சேர்ந்து பாடிய,
"உலகம் உலகம்
அழகு கலைகளின் சுரங்கம்
பருவச் சிலைகளின் அரங்கம்
காலமே ஓடிவா
காதலே தேடிவா"
எனும் கண்ணதாசனின் வரிகளில் எழுந்து எம்.எஸ்.விஸ்வநாதனின் தேனிசையில் திளைத்த பாடலாகும்.ஆனால் இதற்கு சற்று மாறான பாடலே'மாறன்'திரைப்படத்திற்காக கவிஞர் விவேக் எழுதி தனுஷும் அறிவும் பாடிய,
"இது பொல்லாத உலகம்.
நீ கொஞ்சம் ஷார்ப்பா இரு.
யாருக்கும் யார் என்ன கொறச்சல்
நீ கொஞ்சம் மாஸா இரு"
எனும் தமிழாக்கம் செய்யப்பட்ட ஆங்கிலச் சொற்கள் உள்ளடக்கிய ஆரவாரப் பாடல். இப்பாடலுக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் பேசும் பாணியில் இசையமைத்திருந்தார்.
பொல்லாத உலகம் எனும் வரிகளைக் காண்கையில்'நிச்சயதாம்பூலம்' திரைப் படத்தில் டி.எம்.எஸ்,எல்.ஆர் ஈஸ்வரி இணைந்து குழுவினருடன் பாடிய,
"இது வேறுலகம் தனி உலகம்
இரவில் விடியும் புது உலகம்
விதவிதமாக மனிதர்கள் கூடும்
வேடிக்கை உலகமிதே"
எனும் வாழ்க்கையை சல்லாபத்திற்குச் சரணடையச்செய்த கவியரசின் வரிகள், மகிழ்சியில் நனைந்து நிறைந்து,நெஞ்சை குளிரச்செய்தது..
ஒரு சில பாடல்களுக்கிடையேயும் உலக நீதி பற்றிய சில அருமையான வரிகள் இடம் பெற்றுள்ளன.'பணத்தோட்டம்'படத்தில் டி.எம்.எஸ் பாடிய "என்னதான் நடக்கும் நடக்கட்டுமே"எனும் அர்த்தம் நிறைந்த பாடலில்,
"உலகத்தில் திருடர்கள் சரிபாதி
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
கலகத்தில் பிறப்பதுதான் நீதி
மனம் கலங்காதே மதி மயங்காதே"
எனும் சமூக சிந்தனை சார்ந்த வரிகளும் 'எங்க வீட்டுப்பெண்'எனும் திரைப்படத்தில்
"சிரிப்பு பாதி அழுகை பாதி
சேர்ந்ததல்லவோ மனித ஜாதி
நெருப்பும் பாதி நீரும் பாதி
நிறைந்ததல்லவோ உலக நியதி"
என்ற P.B.சீனிவாஸ் குரலில் இடம்பெற்ற தத்தவ ரீதியில் அமைந்த பாடல் வரிகளும், எற்றென்றும் நினைவில் நிற்கும்,கண்ண தாசனின் கவித்திறன் வெளிப்பாடுகளா கும்.இதில் முதல் பாடலுக்கு விஸ்வநாதன் ராமமூர்த்தியும் இரண்டாம் பாடலுக்கு கே.வி.மகாதவனும் இசையமைத்திருந் தனர்.
"உலகத்தில் சிறந்தது எது" எனக் கேள்வி எழுப்பி அது நட்பல்ல,காதலல்ல தாய்மை என்று, உணர்வுபூர்வமாக அறிவித்த பாடலொன்று 'பட்டணத்தில் பூதம்'எனும் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்தது.டி.எம். சௌந்தராஜன் ஏ.எல்.ராகவன் மற்றும் பி.சுசீலா இணைந்து பாடிய கண்ணதாச னின் இவ்வரிகளுக்கு கோவர்த்தனம் எழுச் சியுடன் இசையமைத்திருந்தார்.நாம் வாழும் சிறந்ததோர் உலகில் தாய்மையே அனைத்திலும் சிறந்தது என்பது பிறப்பின் பெருமையன்றோ!.
உலகம் சுற்றிவந்த தமிழ்த்திரையில்,மனித உணர்வுகளும் படைப்பாற்றல் மிக்க சிந்தனைகளும்,உலகைச் சுற்றிவந்தது, திரைத்துறைக்கு மட்டுமல்லாது,நாம் வாழும் உலகிற்கும் பெருமை சேர்த்தது என்பது,படைப்பாற்றலுக்கே பரவசம்தானே!
===========0==========
👏👏
ReplyDeleteசுற்றியது எது? உலகம் தமிழ்த் திரையையா? தமிழ்த் திரை உலகத்தையா என்ற ஐயம் படித்து முடித்த போது ஏற்பட்டது
ReplyDelete