Saturday, May 11, 2024

நினைவுகளைக் கொண்டாடும் தமிழ்த்திரை..

   நினைவுகள் நெஞ்சின் அலைகளோ, அல்லது மூளையின் மூலை முடுக்கெல் லாம் முடுக்கி விடப்படும் உணர்வுகளின் தாக்கமோ,அறிவியல் அறிந்தோரே அறிவர். ஆனால்,இலக்கிய படைப்பாளிகளுக்கு, நெஞ்சமே நினைவுக்களஞ்சியம். அதனால் தானே,'நெஞ்சம் மறப்பதில்லை'என்கி றோம்.

   மனிதர்கள் மாண்டபிறகு அவர்களுக்கு நினைவாலயம் எழுப்புவது ஒரு புறமிறுக்க, நெருங்கியவர்கள் நம்மை விட்டு தற்காலிக மாகவோ அல்லது நிரந்தரமாக வோ பிரிந்த பின்னர்,மகிழ்ச்சி,ஏக்கம்,துக்கம் போன்ற உணர்வுகள்,அவ்வப்போது நம்சிந்தனை யை நினைவுகளாய் ஆட் கொள்ளுவதை, எவரும் மறுப்பதற்கில்லை.

    தமிழ்த் திரைப்படங்களில்,நினைவுகளில் ததும்பி வழியும் தலைப்புகளும் பாடல்களும் நம் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளை உணர்வுகளால்,தத்துவங்களால்,சக்கரங் களை உருவாக்கி,  நினைவுச் சாலைகளில் பயணிக்கச் செய்கின்றன.'நீங்காத நினைவு''நினைவுச் சின்னம் 'நினைவெல் லாம் நித்யா','நினைவில் நின்றவள்' நினைவே ஒரு சங்கீதம்','உன்னை நினைத்து' என்று ஏக்கங்களாய் ஒருபுற மும்,'நினைப்பதற்கு நேரமில்லை','நினைத் தேன் வந்தாய்' 'நினைத்ததை முடிப்பவன்' 'நினைப்பது நிறைவேறும்' என்று நினைவு களை உதாசீனப் படுத்தியும், வென்றெடுத் தும் புதிய அத்தியாயங்கள் படைக்கும் பல் வேறு தலைப்பு களை,தமிழ்த்திரை தந்தி ருக்கிறது. 

  பிரிவின் நினைவுகள் பெரும் சுமையாகி நெஞ்சத்தை வாட்டி வதைக்கும் வரிகளாய்,

"நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே

நீங்கிடாத துன்பம் பெருகுதே

அனைந்த தீபமாய் ஆகிப் போனதே

அமைதி இன்றியே அலைய நேர்ந்ததே"

  எனும் உச்சக்குரலில் ஒலித்த டி.எம்.எஸ் பாடிய'சதாரம்'திரைப்படத்தில் இடம்பெற்ற அ.மருதகாசியின் பாடலும்,பின்னர் 'தெய்வத்தின் தெய்வம்' திரைப்படத்தில், கண்ணதாசன் வரிகளில் இதமாய் சோக மலர்களைத் தூவி P.சுசிலா பாடிய,

"நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை

உன் நினைவில்லாத உலகத்திலே 

சிந்தனை இல்லை" 

எனும் பாடலும்,

  பிரிவின் நினைவுகளை எண்ணி பெருந்துயர் படைத்தன.இந்த இரு பாடல் களுக்கும் ஜி.ராமநாதன் ரம்யமாய் இசை கலந்தார். நினைவுச்சுமை நெஞ்சில் நெருஞ்சி முள்ளாக,மறக்கத்துடிக்கும் மனம்,

"நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு

மறக்க தெரியாதா

பழக தெரிந்த உயிரே உனக்கு 

விலக தெரியாதா"

  என்று குமுறி அழுவதுண்டு.இந்த மனக் குமுறல் P.சுசிலாவின் குரலில் 'ஆனந்த ஜோதி'திரைப்படத்தின் துன்பச் சுமையை மறக்கமுடியா வண்ணம் இறக்கிவைத்தது. விஸ்வநாதன் ராமமூர்த்தியின் மேலான இசையில் கண்ணதாசனின் இவ்வரிகள், காலம் வென்றன.

  ஆனால் நினைவுகள்,மாறுபட்ட மனநிலை யில் நம்பிக்கை ஊற்றாகவும், எதிர்பார்ப்புக ளின் இன்ப நிகழ்வுகளாகவும் ஏற்றம் பெரு வதுண்டு. அவ்வாறு அமைந்த உணர்வூட் டங்களே,

"நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு

நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு"

என்று 'நினைப்பது நிறைவேறும்' திரைப் படத்தில் எம்.எல்.ஸ்ரீகாந்த் இசையமைத்து, வாணி ஜெயராமுடன் பாடிய வாலியின் பாடலும்,

"நினைத்தேன் வந்தாய் நூறு வயது

கேட்டேன் தந்தாய் ஆசை மனது"

  என்று 'காவல்காரன்'திரைப்படத்தில் டி.எம்.எஸ்ஸும் P.சுசிலாவும் மகிழ்ச்சி ஆர வாரத்துடன் பாடிய,எம்.எஸ் விஸ்வநாத னின் இசைமுழக்கத்தில் இன்பமூட்டிய, வாலியின் வரிகளும்,

 "நினைத்ததை நடத்தியே முடிப்பவன்

நான் நான்"

 என்று டி.எம்.எஸ் &எல்.ஆர்.ஈஸ்வரி குரல் களில் நம்பிக்கைய ஆணவத்துடன் வெளிப்படுத்திய,எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் உரக்க ஒலித்த,வாலியின் வரிகளுமாகும்.

காதலர்களுக்கிடையே,

"என்ன நெனச்சே,நீ என்ன நெனச்சே,

என் நெஞ்சுக்குள்ள உன்ன வச்சு

 தச்சபோது"

('சொக்கத்தங்கம்'திரைப்படத்தில் அனு ராதா ஸ்ரீராமும் உன்னி கிருஷ்ணனும் தேவாவின் இசையில் பாடிய ஆர்.வி.உதய குமாரின் பாடல்)

எனும் கேள்விகளும்,

"நான் உன்ன நெனச்சேன் நீ என்ன நெனச்சே

தன்னாலே ரெண்டும் ஒன்னாச்சு"

(படம்:-'கண்ணில் தெரியும் கதைகள்'. வாலின் பாடலுக்கு,சங்கர் கணேஷ் இசை அமைக்க,எஸ்.பி.பி வாணி ஜெயராம், மற்றும் ஜிக்கி பாடியது)

என்ற எசப்பாட்டோ,அல்லது,

"உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன் 

தங்கமே ஞான தங்கமே"

எனும் ஏமாற்றம் ததும்பும் பதிலுரைப் பாடலோ,

   நினைவுகளின் இரு திசைப்போக்கினை வெளிப்படுத்தக்கூடும்.

   நினைவுகளால் காதலுக்கு சிலைவைத்து போற்றும் பாணியில்

"நினைவாலே சிலை செய்து  உனக்காக

வைத்தேன்.

திருக்கோவிலே ஓடிவா"

  எனும் கே.ஜே.ஏசுதாசும் வாணி ஜெயராமும் பாடிய'அந்தமான் காதலி' திரைப்படப் பாடல்,ஒரு தனி ரகம்.கண்ணதாசனின் சிலையாக ரசிகர்களின் மனதில் நின்ற இப்பாடலின் இனிமைக்கு,எம்.எஸ்.விஸ்வ நாதனின் மகத்தான இசையும் முக்கிய காரணமானது.

  முடிவாக,நினைவுகள் வாழ்க்கைத் தடத் தில் பெரும் பங்கு வகிப்பதோடு நில்லாமல், வாழ்க்கைத் தத்துவங்களை வடிவமைதிலும் சிறப்பு நிலை வகிக்கின்றன என்பதை, 'நெஞ்சில் ஓர் ஆலயம்'திரைப்படத்தில் P.B.ஸ்ரீநிவாஸ் மெய்சிலிர்க்கப் பாடிய,

"நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்

தெய்வம் ஏதுமில்லை

நடந்ததையே நினைத்திருந்தால்

அமைதி என்றுமில்லை"

  விஸ்வநாதன் ராமமூர்த்தியின் மயிலிறகு மென்மையுடன் என்றென்றும் நம் நினைவு களை ஆரத்தழுவிய கண்ணதாசனின் இப் பாடல், நினைவுகளுக்கு ஒரு ஆராதனை யாக அமைந்தது என்றால்,அது மிகையா காது.நினைவகளே வாழ்க்கை நிசங்களின் நிழல்கள்.நினைவுகளில்லா மயக்கத்தில் வாழந்த வாழ்க்கை,தொலைந்து போகிறது. இன்பமும் துன்பமும் நிறைந்த வாழ்வில் நினைவுகளே,அனுபவங்களின் நினைவுச் சின்னங்கள்.

                    ======/=========/======



2 comments:

  1. இன்பமும் துன்பமும் நிறைந்த வாழ்வில் மட்டும் அல்லாமல் நிலையற்ற வாழ்விலும் கூட, நினைவுகளே, நினைவுச் சின்னங்களாகிறன

    ReplyDelete
  2. நினைத்து நினைத்து எல்லா பாடல்களையும் சேர்த்து விட்டீர்கள். 👏👏

    ReplyDelete