Saturday, June 1, 2024

தமிழ்த் திரைக்கடலில் அன்பின் அலைகள்.

 

"அன்பு என்பதே தெய்வமானது

அன்பு என்பதே இன்பமானது"

   எனும் கண்ணதாசனின் வரிகளில் அமைந்த 'ஆசை அலைகள்'திரைப்படப் பாடல்,அன்பை இன்பமாக்கி இறைவனுடன் ஐக்கியப்படுத்தியது.சீர்காழி கோவிந்த ராஜன்,எல்.ஆர்.ஈஸ்வரி,மற்றும் ஜமுனா ராணியுடன் இணைந்து பாடிய இப்பாடல், கே.வி.மகாதேவன் இசையில் இதமாய் நெஞ்சில் ரீங்காரமிட்டது.

  அன்புடையார் நெஞ்சமே உயிர் தாங்கியது. அன்பற்றோர் நெஞ்சம் வெறும் எலும்புகள் சுமந்த உடலே எனும் கருத்தினை மைய்யப் படுத்தி அமைந்த வள்ளுவரின் குரளே,

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்பு போர்த்திய உடம்பு

   என்பதாகும்.மேலும் வள்ளுவனின் அன்பு அதிகாரத்தின்,

"அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு"

  எனும் குரளை,'பல்லாண்டு வாழ்க'திரைப் படத்தில் கே.ஜே.ஏசுதாஸ் பாடிய "ஒன்றே குலமென்று பாடுவோம்"எனும் பாடலின் அறிமுக வரிகளாகக் கேட்டு மகிழ்ந்தோம்.

 தமிழ்த்திரை,அன்பை தலைப்புகளால் உயர்த்திப்பிடித்த திரைப்படங்களே,அன்பு, அன்புக்கோர் அண்ணி,அன்புள்ள அப்பா, அன்பு சகோதரர்கள்,அன்பு எங்கே,அன்பே வா,அன்பைத்தேடி,அன்பே ஆருயிரே, அன்பே சிவம்,அன்புக்கு நான் அடிமை, அன்பே அன்பே,போன்றவையாகும்.

 "உள்ளம் என்றொரு கோவிலிலே

தெய்வம் வேண்டும் அன்பே வா"

  என்று அன்பால் காதலை மேன்மைப்படுத் தும் டி.எம்.சௌந்தராஜனின் 'அன்பே வா' திரைப்படப்பாடலும்,

"அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம்

தங்கம்"

  என்று அன்பால் மனையாளைப் போற்றும் 'தெய்வப்பிறவி' படத்தின் சி.எஸ்.ஜெய ராமின் பாடலும்,

"அன்புள்ள அத்தான் வணக்கம் 

உங்கள் ஆயிழை கொண்டால் மயக்கம்"

  என்று கணவனை ஆலாபனை செய்யும் பி.சுசிலா பாடிய'கைராசி'திரைப்படப் பாடலும்,

"அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்

அன்புள்ள மன்னவரே ஆசையில் ஓர் கடிதம்"

  என்று கடிதம் மூலம் அன்பைப் பரிமாறும், கணவன் மனைவியின் பிரிவின் தாக்கத்தை வெளிப்படுத்தும் டி.எம்.எஸ்& பி.சுசிலா பாடிய,'குழந்தையும் தெய்வமும்' திரைக்கீதமும்,பல்வேறு கோணங்களில் அன்பின் குறியீடுகளை வரையறுத்துக் காட்டின.

"அன்பே அன்பே கொல்லாதே

கண்ணே கண்ணை கிள்ளாதே"

  என்று ஹரிஹரன்,அனுராதா குரல்களில் இனிமையாய் ஒலித்த,'ஜீன்ஸ்' படப்பாடல் காதலின் வேதனை உள்ளடக்கிய அன்பின் சுகத்தை வெளிப்படுத்திய பாடலும்,

 'மக்களைப் பெற்ற மகராசி'திரைப்படத்தில் P.B.ஸ்ரீநிவாஸ் & ஜமுனா ராணி குரல்களில் நாம் கேட்டு மகிழ்ந்த, 

"ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா

உண்மை காதல் மாறிப்போகுமா"

  எனும் காதலாய்க் கசிந்து அன்பின் நிரந் தரத்தை உறுதி செய்த பாடலும்,அன் பெனும் ஊர்தியே,உறவுகளின் உல்லாசப் பயணத்தை உறுதிப்படுத்தும் என்று, சத்தமிட்டு சத்தமிட்டு கவிபாடின.

  'அன்பே சிவம்' என்கிறோம்.எல்லா மதங் களுக்கும் அன்பே கடவுளாகும்.இக்கருத் தினை இனிமையாய் நெஞ்சில் தவழச் செய்த பாடலே,

"அன்பென்ற மழையிலே 

அகிலங்கள் நனையவே 

அதிரூபன் தோன்றினானே"

  எனும் 'மின்சாரக்கனவு'திரைப்படத்தில், அனுராதாவின் அபூர்வக்குரலில்,அன்பால், கேட்போரை அற்புதமாய் அரவணைத்த வரிகள்.

  அன்பின் மகத்துவத்தை உணர்ந்தே பலரும் அன்புக்கு அடிமையாகின்றனர். அன்பு மனிதப் பண்பினை,மாண்புறச் செய்கிறது என்பதை உணர்த்தியது,'இன்று போல் என்றும் வாழ்க'திரைப்படத்தில், கே.ஜே.ஏசுதாஸ் அதிர்வலைகளை எழுப்பிப் பாடிய,

"அன்புக்கு நான் அடிமை

தமிழ் பண்புக்கு நான் அடிமை

நல்ல கொள்கைக்கு நான் அடிமை

எனும் அன்பால் பரவசமூட்டிய பாடல்".

  அன்பைப்பற்றி இன்னும் எத்தனையோ திரைப்படப் பாடல்கள் உண்டு.மேலே குறிப் பிட்ட பாடல்களில்'அன்பே வா'மற்றும் 'குழந்தையும் தெய்வமும்'திரைப்பட வாலி யின் வரிகளுக்கும்,'இன்றுபோல் என்றும் வாழ்க'வின் கவிஞர் முத்துலிங்கத்தின் பாடலுக்கும்,எம்.எஸ்.விஸ்வநாதன் இசை யமைக்க 'தெய்வப்பிறவி' உடுமலை நாயாயண கவியின் பாடலுக்கு ஆர்.சுதர் சனமும்,'மக்களைப்பெற்ற மகராசி'படத்தின் அ.மருதகாசி பாடலுக்கு கே.வி.மகாதேவ னும்,'கைராசி'படத்தின் கண்ணதாசன் வரிகளுக்கு கோவர்த்தனமும்,'ஜீன்ஸ்' மற்றும்'மின்சாரக்கனவு'திரைப்படங்களின் வைரமுத்து வரிகளுக்கு ஏ.ஆர் ரெஹ்மா னும்,தேன்சவை கலந்து இசையமைத்தி ருந்தனர்.

   இன்றைக்கு அன்பு கிடைக்கப்பெறாமல் தவிப்பதும்,உளமார செலுத்தும் அன்பு உதாசீனப்படுத்தப்படலும், அன்பின் ஆன்மா வை உலுக்கிக்கொண்டிருக்கிறது.அன்பை போற்றவேண்டிய மதம்,வெறுப்பை விதை நெல்லாக்கிக் கொண்டிருக்கிறது.ஆலயங்  கள் பழைய வரலாற்றுப் பக்கங்களை கிழித்து,புதிய வரலாற்றுச் சித்திரங்களை புனைந்து,அன்பற்ற மதப்பிரச்சாரப் புத்த கங்களை பதிப்பீடு செய்யும் களங்களாக, மாறிவருகின்றன.நடைமுறை வாழ்வில், நடை பிணமாகிக்கொண்டிருக்கும் அன்பை, எப்படி வெண்திரைவடிவாக்க இயலும்?

  ஒட்டாத அன்பு என்றும் ஒட்டுண்ணியே!. 'அன்பே சிவம்'என்பதை,தவமாக்குதலைக் காட்டிலும்,சுவாசிக்கும் காற்றாக,இதயத் தின் துடிப்புளாக,ரத்த நாளங்களை சுத்தீ கரிக்கும் சத்தான உணவாகக் கருதுவதே அனபுச்சாலை வழியாம்.

  அன்பு ஆண்டவனை தரிசிக்க ஆன்மாவை உள்ளொளியாய் ஆட்கொண்டு,புறநிலைக் கோலங்களை புத்துயிர் பெறச்செய்யும். புத்தன் கூறிய,"அன்புதான் உலக மகா ஊர்தி" என்பதே,அன்பை உலகமயமாக்கும்.

ப.சந்திரசேகரன்.


1 comment:

  1. அன்பு ஒன்று தான் ஆன்மாவின் இனிய கீதம்...

    ReplyDelete