Saturday, June 22, 2024

ஒருவனும் ஒருத்தியும்

 "தொல் உலகில்

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு

எல்லார்க்கும் பெய்யும் மழை"

என்கிறது தமிழ் மூதாட்டி  அவ்வையின் மூதுரை

  ஒருவர் நல்லவராயின் அவர் தயவில் உலகே மாண்புறுமாம்.அவ்வை மூதாட்டி யாகத் தோன்றி 'திருவிளையாடல்' திரைப்படத்தில் K.B. சுந்தராம்பாள் பாடிய, 

"ஒன்றானவன் உருவில் இரண்டானவன்"

 என்று சிவபெருமானை வரிசைப்படுத் திப்பாடிட,ஒருமை இல்லையேல் பன்மை இல்லை என்பதை உணரமுடிந்தது.

   அதே கே.பி.எஸ் 'பூம்புகார்' திரைப் படத்தில் கவுந்தி டிகளாகத் தோன்றிப் பாடிய, 

"ஒருவனுக்கு ஒருத்தி எனும் உயிர் மூச்சை உள்ளடக்கி 

அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.

 எனும் திருக்குறளை மறவாதே;திசை தவறிப்போகாதே" 

  என்று பாடிட,அப்பாடலில் பொதிந்துள்ள ஒருவன் ஒருத்தியின் உரமேற்றிய பொரு ளையும் உறுதியான நிலைப் பாட்டையும் ஒருசேர உள்வாங்க முடிந்தது.

'தாய் சொல்லைத் தட்டாதே' திரைப் படத்தில் P..சுசீலா குரலால் குழைந்து பாடிய, 

"ஒருத்தி மகனாய்ப் பிறந்தவனாம்

உருவில் அழகாய் வளர்ந்தவனாம்

ஒருத்தி மனதில் நிறைந்தவனாம்

உயிரில் உயிராய்க் கலந்தவனாம்"

    எனும் பாடலில்,ஒருத்தியில் கலந்த ஒருவனின் பலத்தால்,ஒருத்தி வலுப் பெறுவதையும்,ஒருவனை தன்னுள் கரைக்கும் பலத்தினை,ஒருத்தி பெற்றி ருப்பதையும் ஒருத்தியை ஒருவனாகவும் ஒருவனை ஒருத்தியாகவும்,ஒரு அத் வைதத் கோட்பாடாக அனுபவப் பூர்வமாக அறியமுடிகிறது.

  ஆனால் ஒன்றுபட்ட ஒருவனும் ஒருத்தி யும் வாழ்க்கைப்பந்தலில் படர்ந்து பயணிக்கையில்,பன்முகத்தன்மை பெறுவதை,'சாரதா' திரைப்படத்தில் அதே P. சுசீலா P.B ஸ்ரீநிவாஸுடன் இணைந்து  பாடிய, 

"ஒருத்தி ஒருவனை

நினைத்து விட்டால்

அந்த உறவுக்குப் பெயரென்ன

காதல்

அந்த ஒருவன் ஒருத்தியை

மணந்து கொண்டால்

அந்த உரிமைக்குப் பெயர் என்ன

குடும்பம்"

 என்று பரந்து விரியச் செய்தது. மகிழ்ச்சிக் கூத்தாட்டத்தில் இணையும் ஆணும் பெண்ணும்,ஒருவன் ஒருத்தி என்பதை மறந்து,

"ஒருவர் ஒருவராய் பிறந்தோம் 

இருவராய் இணைந்தோம் 

உறவு மழையிலே நனைந்தோம்

உலக சுகத்திலே  மிதந்தோம்" 

   என்று டி.எம்.சௌந்தராஜனும் P.சுசிலா வும் 'பணத்தோட்டம்' திரைப் படத்தில் பாடிய பாடல் தனி ராகம்.அதே ஒருவன், தனிமைப்பட்டு நிற்கையில்,அவனைக் கண்டு,

"உறவு சொல்ல ஒருவரின்றி வாழ்பவன் 

அவன் உலக வாழ்க்கை பள்ளியிலே மாணவன்" 

  என்று பிரமிப்புடன்,அவனது தன்னம் பிக்கையையும் மனப்பலத்தையும் புருவம் உயர்த்தி,ஆச்சர்யத்தில் பார்ப்பதும் உண்டு. இப்படிப்பட்ட ஒரு ஆச்சர்யத்தை, P.சுசீலா தன் பாடல் மூலம் 'பாசம்' திரைப் படத்தில் வெளிப்படுத்தியிருந்தார்.

 ஒருவனாய்,மண்ணில் உயர்குணங் களால் உலகுக்கு எடுத்துக்காட்டாய் வாழ்வோரை,'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தில் P.சுசிலா பாடியது போல,

"உன்னை நான் சந்தித்தேன்

நீ ஆயிரத்தில் ஒருவன்

என்று நெஞ்சாரப் பாராட்டுவதும்"

  கள்ளம் கபடமற்ற பெண்ணின் கறைபடாத் தன்மையினை,கனிவுறும் சொற்களால் பாராட்டி,'கை கொடுத்த தெய்வம்' திரைப்படத்தில் டி.எம்.சௌந்த ராஜன் நெகிழ்ந்துப் பாடியது போல,

"ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ

உலகம் அறிந்திடாத பிறவியம்மா நீ"

 என்று உலகின் உத்தமப் பெண்ணாக ஒருத்தியை வார்த்தைகளால் வருணிப் பதும்,

"ஓடம் நதியினிலே

ஒருத்தி மட்டும் கரையினிலே" 

  என்று ஒரு அபலைப் பெண்ணிற்காக 'காத்திருந்த கண்கள்' திரைப்படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் குரலில் மனம் அங்கலாய்ப்பதும்,தமிழ்த்திரை ஒரு வனையும் ஒருத்தியையும் ஒன்றுபடக் கொண்டாடியதன் உட்கருவாம்.

  இவற்றையெல்லாம் கடந்து,"ஒன்றே குலம் ஒருவனே தேவன்"என்ற உறுதியுடன் இறைவன் ஒருவனே எலாலார்க்கும் மேலானவன் என திட்டவட்டமாய் 'முத்து' திரைப்படத்தில் S.P.பாலசுப்ரமணியன் பாடிய,

'ஒருவன் ஒருவன் முதலாளி 

உலகில் மற்றவன் தொழிலாளி"

  எனும் பாடல் இறைவனை ஒருவனாய் உயர்த்திப் பிடித்தன. 

  ஒருவனுக்கும்,ஒருத்திக்கும்,தமிழ்த் திரை ஒருதனி இடம் கொடுத்து வந்துள் ளதை,பாடல்களில் மட்டுமல்லாது,திரைப் படத் தலைப்புகளான,ஒருவன் எவனோ ஒருவன்,எனக்குள் ஒருவன்,என்னைப் போல் ஒருவன்,உன்னைப் போல் ஒருவன் தனி ஒருவன்,ஆயிரத்தில் ஒருவன், கோடியில் ஒருவன்,கூட்டத்தில் ஒருவன், வெற்றிக்கு ஒருவன்,ஒருவனுக்கு ஒருத்தி,ஆயிரத்தில் ஒருத்தி,ஒருத்தி மட்டும் கரையினிலே,போன்ற பல மாறு பட்ட தலைப்புகளால் ஒருவனுக்கும் ஒருத்திக்கும் வெண்திரையில் விசால மாய் இடம் தந்து வண்ணக் கோலங்க ளால் அலங்கரித்தது.

   மேலே குறிப்பிட்ட திரைப்படப் பாடல் களில் பூம்புகார் திரைப்படப் பாடலுக்கு கலைஞர் கவிபுனைய 'ஆயிரத்தில் ஒருவன்' பாடலுக்கு வாலியும்,'முத்து' திரைப்படத்திற்கு வைரமுத்துவும் வரிகள் எழுத,இதர பாடல்கள் அனைத்துமே கவியரசு கண்ணதாசனின் கற்பனையில் ஊற்றாகி உவகை யூட்டும் கவிதைக் களஞ்சியமாகின 

  அதே போல பூம்புகாரில் கலைஞரின் வரிகளுக்கு சுதர்சனமும்'தாய் சொல்லைத் தட்டாதே','காத்திருந்த கண்கள்'திரைப்படங்களுக்கு கே.வி.மகா தேவனும்  இசையமைக்க இதர திரைப் படங்கள் அனைத்திற்கும் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர். ஒருவனும் ஒருத்தியும் உலகில் மனித இனத்தின் ஆரம்பப்புள்ளிகள் மட்டுமல்ல. ஒவ்வொரு ஆணும் பெண்ணும் ஒருவனாய் ஒருத்தியாய் தனித்தன்மை வெளிப்படுத்தாவிடில் உலகில் மனித இனத்தின் உன்னதம் கடலில் கலந்த பெருங்காயமாகவிடும்.வாழ்க்கைப் பூங்காவில் ஒருவனாய் ஒருத்தியாய், ஒவ்வொருவரும் தனி மணம் பரப்பிட, வாழ்க்கை வசந்தம் பெறுகிறது.


3 comments:

  1. நிறை குடத்தில் மேலும் நீர் வார்ப்பது, மண்ணில் தான் சிந்தும், சிதறும். மண்ணில் வீண். 💜.

    ReplyDelete
  2. நிறை குடத்தில் மேலும் நீர் வார்ப்பது, மண்ணில் தான் சிந்தும், சிதறும், மண்ணில், வீணாகிப் போகும். 💜.

    ReplyDelete