நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது
என்கிறார் வள்ளுவர். அதாவது தன் நிலையிலிருந்து மாறாத ஒருவனின் தன்னடக்கம் மலையைக்காட்டிலும் உயர்ந்ததும்,வலுவானதுமாகும் என்பதே, இக்குறள் கூறும் உண்மை!
மலைதான் சிலையாகிறது; இதைத்தான் 'வணங்காமுடி' திரைப்படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய.
"மலையே உன் நிலையே நீ பாராய்
கலைஞனின் உளியாலே
காவியச் சிலையான
மலையே உன் நிலையே நீ பாராய்"
எனும் ஓங்காரப்பட்டாலும்,'கார்த்திகை தீபம்' என்னும் திரைப்படத்தில் டி எம் சௌந்தராஜன் பாடிய,
"மலை சாய்ந்து போனால் சிலையா கலாம்
மரம் சாய்ந்து போனால் விலையாகலாம்
மலர் சாய்ந்து போனால் சரமாகலாம்
இந்த மனம் சாய்ந்து போனால் என்ன செய்யலாம்"
எனும் மனதை சோகத்தில் தத்தளிக்கச் செய்த பாடலும், மலையின் கம்பீரத்தை யும்,அந்த மலைகூட இயற்கையின் சீற் றத்தில் சரியலாம் எனும் உண்மையை யும், தத்துவங்களாய் உணர்த்தின.மலை சிலையாவதைப் போல மனிதனும் சில நேரம் சிலையாவதுண்டு என்பதைத்தான் 'இரத்தத்திலகம்' திரைப்படத்தி டி.எம். சௌந்தராஜன் பாடிய,
"பனிபடர்ந்த மலையில் மேலே
படுத்திருந்தேன் சிலையைப்போலே
கனி தொடுத்த மாலையைப்போலே
கன்னி வந்தாள் கண் முன்னாலே"
என்று கவித்துவம் மேம்பட்ட வரிகள் உணர்த்தின.மனம் துன்பத்தில் சாய் வதை, துன்பமே மலையென மண்டை யைக்குடைவதும் அப்படி தலைதூக்கும் இடரை தர்மம் வழிமறித்து காக்கும் என்பதையும், 'தர்மம் தலைகாக்கும்' எனும் டி.எம்.சௌந்தராஜனின் பாடலுக் கிடையே தோன்றும்,
"மலை போலே வரும் சோதனை யாவும்
பனிபோல் நீங்கிவிடும்
நம்மை வாழவிடாதவர் வந்து நம் வாசலில்
வணங்கிட வைத்து விடும்
செய்த தர்மம் தலைகாக்கும்
தக்க சமயத்தில் உயிர்காக்கும்"
எனும் பாடல் வரிகள் மூலம் உணரலாம். மலைகளுக்கிடையே மல்லுக்கட்டும் காற்றும் அக்காற்றோடு கலந்து வரும் கானமும், காதலர்களின் உணர்வுகளை ஊஞ்சலாட்டுவதுண்டு.'பாடு நிலாவே' திரைப்படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய,
''மலையோரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு கேட்குதா"
எனும் பொதுப்படையான பாடலும் 'கரகாட்டக்காரன்' திரைப்படத்தில் மனோவும் சித்ராவும் இணைந்து பாடிய,
"குடகு மலை காற்றில் வரும்
பாட்டு கேட்குதா என் பைங்கிளி"
மற்றும் கிழக்கு வாசல் திரைப்படத்தில் மனோ பாடிய,
"பச்சமலை பூவு
நீ உச்சிமல தேனு
குத்தங்குறை ஏது
நீ நந்தவனத் தேரு"
என்று குறிப்பிட்ட மலைகளை கடந்து தவழ்ந்துவரும் பாடல்களும், மலையும், காற்றும்,காதலும்,ஒரு முக்கோணப் பரிமாணமாவதை முன்னி றுத்தின.
இறைவனை மலைமேல் ஏற்றிவைத்து இறைவனைப் போற்றும் வண்ணம் அமைந்த சில பாடல்களும் உண்டு.அந்த வகையில் வரிக்குவரி மலையேறிய பாடலே 'தெய்வம்'திரைப்படத்தில் மதுரை எஸ். சோமு அவர்கள் பாடிய,
"கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை
கொங்குமணி நாட்டினிலே குவிழ்ந்த மலை அந்த மலை
தேடிவந்தோர் இல்லமெல்லாம்
செழிக்கும் மலை எந்தமலை
தேவாதி தேவரெல்லாம் தேடிவரும் மருத மலை"
எனத் தொடங்கி
"மருத மலை மாமணியே முருகைய்யா"
என்று முருகனை மூச்சிறகை்க புகழ்ந்து பாடிய பாடல்.
இதே முருகனை போற்றித்தான் 'கந்தன் கருணை' திரைப்படத்தில் P.சுசிலாவும் சூலமங்கலம் ராஜலட்சுமியும் சேர்ந்து பாடிய,
"திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்"
எனும் பாடல் அமைந்திருந்தது.
இப்படிப்பட்டதோர் மனநிலையில் பெரு மாளை தலை தாழ்த்தி வணங்கிப்பாடிய 'திருமலை தென்குமரி'படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய,
"திருப்பதி மலை வாழும் வெங்கடேசா
திருமகள் மனம் நாடும் ஸ்ரீநிவாசா
ஏழுமலைவாசா"
எனும் இறைவனுள் இதயம் சங்கமிக்கச் செய்த பாடல். மேற்கண்ட பாடல்களில் வணங்காமுடி பாடலை தஞ்சை ராமையா தாஸ் எழுதி,ஜி இராமநாதன் இசைய மைக்க 'கார்த்திகை தீபம்'திரைப்படப் பாட லை ஆலங்குடி சோமு எழுத,ஆர். சுதர் சனம் இசையமைத்திருந்தார்.'இரத்தத் திலகம்' 'தர்மம் தலைகாக்கும்''தெய்வம்' திரைப்படப்பாடல்களை கண்ணதாசனும், 'கந்தன் கருணை' பாடலை பூவை செங்குட்டுவனும் 'திருமலை தென்குமரி' பாடலை உளுந்தூர்பேட்டை ஷண்முகமும் புனைந்திருந்தனர்.
'பாடு நிலாவே'பாடலை வாலியும் 'கரகாட்டக்காரன்'பாடலை கங்கை அமர னும்'கிழக்கு வாசல்'திரைப் படப் பாடலை ஆர்.வி. உதயகுமாரும் வடிவமைத்திருந் தனர். கடைசி மூன்று படப்பாடல்கள் இசைஞானியின் இசையில் இன்பத்தே னூட்டின.இதர இறைவன் சார்ந்த திரைப் படங்களுக்கு கே.வி.மகாதேவனும் குன்னக்குடி வைத்யநாதனும் இசைப் பங்காற்றினர்.
இதுபோன்ற பாடல்கள் மட்டுமின்றி திரைப்பட தலைப்புகளான 'மலை மலை' 'ஏழுமலை''மருதமலை''அழகர் மலைக் கள்வன்''நீலமலைத் திருடன்''தங்கமலை ரகசியம்''திருமலை தென்குமரி' மலைக் கோட்டை,போன்றவை தமிழ்த்திரையை வெகுவாக அலங்கரித் திருக்கின்றன.
=================0===================
No comments:
Post a Comment