அன்பிலார் எல்லாம் தமக்குடையார் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு
எனும் வள்ளுவனின் குறளை 'பல் லாண்டு வாழ்க'திரைப்படத்தில கே. வி.மகாதேவனின் இதமான இசையில் கே.ஜே ஏசுதாஸின் காந்தக்குரலில் கேட்டபோது,அன்பின் அலைகள் நம் உள்ளங்களில் தேனென ஊற்றெடுப் பதை உணரமுடிந்தது.வள்ளுவரின் மற்றொரு குறளான,
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
என்பதிலும்,அன்புடையோருக்கும் அன்பில்லாதவற்கும் இடையிலான வேறுபாட்டை உணரமுடிந்தது.அன்பை பல்வேறு கோணங்களில் வருணித்த பாடலொன்று ஆசை அலைகள் என்னும் திரைப்படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் சீர்காழி கோவிந்தராஜன் எல். ஆர்.ஈஸ்வரி மற்றும் ஜமுனா ராணி இணைந்து பாடிய,
''அன்பு என்பதே தெய்வமானது
அன்பு என்பதே இன்பமானது....
மதத்தின் மீது வைத்த அன்பு
பக்தியானது....
மனிதன் மீது வைத்த அன்பு
பாசமானது....
இதயம் மீது வைத்த அன்பு
உண்மையானது....
ஏழை மீது வைத்த அன்பு
கருணையானது....''
எனும் உன்னத வரிகள் உள்ளத்தை புனிதமாக்கின.இதேபோன்று அன்பினை இறைவனுடன் இருகச்செய்து இன்ப முடன் பாடிய பாடல்,பின்னர்'மின்சாரக் கனவு'திரைப்படத்தில் இடம் பெற்றது.ஏ. ஆர்.ரெஹ்மான் இசையில்,
"அன்பென்ற மழையிலே
'அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே''
எனும் வைரமுத்து வரிகளை,அனுராதா ஸ்ரீராம் பாட,நம் இதயங்களிலெல்லாம் அன்பு நிறைந்திருக்கவேண்டும்.அன்பு உள்ளத்தில் ஒளியிடுவது,தெய்வமே உள்ளே இருப்பதற்கு இணையாகும். இதுபோன்றொரு மனநிலையை எம்.ஜி ஆரின் 'அன்பே வா'திரைப்படத்தில் இடம் பெற்ற
"உள்ளம்
என்றொரு கோவிலிலே
தெய்வம் வேண்டும்
அன்பே வா"
என்று எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் டி.எம்.எஸ் பாடிய கண்ணதாசனின் பாடல், நினைவுறுத்தியது.
அன்பெனும் சொல்லெடுத்து அறிவுடன் சேர்த்து,மனைவியை போற்றும் 'தெய்வப் பிறவி'யில் C.S.ஜெயராமன் பாடிய,
"அன்பாலே தேடிய என் அறிவு செல்வம் தங்கம்"
எனும் பாடலும், கடிதம் மூலம் கணவன் மனைவியை,
" அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்"
என்றும், அதேபோன்று மனைவி கணவனை,
"அன்புள்ள மன்னவரே ஆசையில் ஓர் கடிதம்"
என்றும்டி.எம்.எஸ்.ஸும் P.சுசிலாவும் பாடிய குழந்தையும் தெய்வமும்'படப் பாட லும், அந்த இரு திரைப்படங்களையும் ரசிகர்கள் மறக்காமலிருக்க மற்றுமொரு காரணமானது.உடுமலை நாராயணக் கவியின் 'தெய்வப்பிறவி' பாடலுக்கு ஆர்.சுதர்சனமும்'குழந்தையும் தெய்வ மும்' திரைப்படப்பாடலை வாலி எழுத, எம்.எஸ்.விஸ்வநாதனும் தென்றல் தழுவு வதுபோல இசையமைத்தனர்.
"அன்புக்கு நான் அடிமை
தமிழ் பண்புக்கு நான் அடிமை"
என்று எம்.ஜி.ஆருக்காக கே.ஜே.ஏசு தாஸ் பாடிய இதயத்துக்கு இதமான 'இன்று போல் என்றும் வாழ்க' திரைப்படப் பாடலின் முதல்வரி,பின்னர் ரஜினிகாந்த் நடித்த தேவர் பிலிம்ஸ் தயாரித்த ஒரு திரைப்படத் தலைப்பாயிற்று. கவிஞர் முத்துலிங்கம் இயற்றிய இப் படப்பாட லுக்கு எம்.எஸ்.விஸ்வ நாதன் இசைய மைத்திருந்தார்.
மன நிலையின் மாற்றங்களுக் கேற்ற வாறு அன்பு ஒளியாகவும்,வலியாகவும் மாறுவதுண்டு.அப்படி ஒரு உணர்வலை யை பேரலையாக்கிய பாடலே,'மௌனம் பேசியதே'திரைப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஷங்கர் மகாதேவன் பாடிய,
"என் அன்பே என் அன்பே
என் கண்ணுக்குள் கவிதாஞ்சலி
என் அன்பே என் அன்பே
என் நெஞ்சுக்குள் காதல் வலி"
இந்த அன்பின் அழுத்தமான பாடலை கவிஞர் காமகோடியன் புனைந்திருந்தார்.
இதேபோன்று கணவனை அன்பால் அகமகிழ்ந்து கொண்டாடும் பாடல்தான் 'கைராசி'எனும் திரைப்படத்தில் கோவர் தணம் இசையில் P.சுசிலா பாடிய கண்ண தாசன் வரிகளிலமைந்த,
"அன்புள்ள அத்தான் வணக்கம்
உங்கள் ஆயிழை கொண்டாள் மயக்கம்"
அன்புக்கு ஆலாபனை புரியும் அழகான பாடல்கள் இன்னும் எத்த னையோ தமிழ்த் திரையில் இருக்கக்கூடும்.அன்பில்லா வாழ்க்கையில் அர்த்தமில்லை என்பது அனைவரும் அறிந்ததே! அதனால்தான் 'அன்பே சிவம்' என்கிறோம்.அன்பை தலைப்பாகக் கொண்ட,அன்பு,அன்பைத் தேடி,அன்பே ஆருயரே,அன்புள்ள அப்பா. (அனைத்தும் சிவாஜி கணேசன் திரை ப்படங்கள்)அன்பில் அலைகள்,அன்பே வா அன்பே அன்பே,அன்புக்கு நான் அடிமை, போன்ற திரைப்படங்கள் நிறைய உண்டு.
மொத்தத்தில் அன்பில்லா வாழ்க்கை பிறப்பின் பொருளாவதில்லை; இறப்பில் இரக்கம் பெருவதுமில்லை. சூனியமாக வாழும் வாழ்க்கை.சுமைகள் நிறைந்த சுருள்கத்தியே!
=================0================

