Friday, October 1, 2021

காதலில் விழுந்த தமிழ்த் திரை

 

"காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி 

ஓதுவார் தம்மை நன்னெறிக் குய்ப்பது

வேதம் நான்கிலும் மெய்ப்பொரு ளாவது

நாதன் எந்தன் நமச்சி வாயவே" 

    என்று மனமுருகப் பாடினார்,நாயன்மார் அறுபத்துமூவரில்,ரி  நால்வரில் ஒருவரான,திருஞான சம்பந்தர். 'திருச்சிற்றம்பலம்'எனும் சொல்லில் தான் எத்தனை அழகு.!உமையவளின் தாய்ப்பால் பருகிய ஞானசம்பந்தர் எம்பெருமான் சிவன்மீது கொண்ட,உயிருடன் ஒன்றிப் போன ஈர்ப்பினை காதலாக்கி,'அன்பே சிவமென்று'அற்புதமாய் உலகிற்கு உணர்த்தினார்.தேவாரப் பாடல்கள்,வேதம் நான்கின் மெய்ப்பொருளை உள்ளடக்கி உருவாகிட,அவையனைத்தும் நான்மறைக்கு இணையான வையே!

   இவ்வரிகளை பாடலாக 'திருவருட்ச் செல்வர்'திரைப்படத்தில் திருச்சி லோகநாதனின் மகன் டி.எல்.மகாராஜன் சிறுவனாய் இருக்கையில் பாடியதைக் கேட்டு,நாம் அனைவரும் மெய்சிலிர்த்திருப்போம். இப்பாட லுக்கு திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் தெய்வீகமாய் இசையமைத் திருந்தார்.  

   பற்றற்று இறைவனை,'சிக்கெனைப் பற்றினேன் எங்கெழுந்தருள்வது இனியே'எனும் மெய்ப்பொருள் இணைவதே இறைநெறி.இதே போன்று சுயநலம் அகற்றி,முழுமையாய் அன்பும் பரிவும் கொண்டு,தன்னை, தன் மனதை மற்றவர்க்கு,தரமுடன் அர்ப்பணித்து,ஆண் பெண் உறவில் இருமனம் இரண்டற இணைவதே,உன்னதக் காதலாம்.காதலை தலைப்பு களாகவும் கவிதை வரிகளாகவும் கொண்டாதுவதே,வெள்ளித் திரையில் விரிந்த விழாவாகும்.இதில் தமிழ்த்திரை வேறு எந்த மொழிக்கும் எப்போதும் சளைத்தது இல்லை.

   காதலுக்கு ஆலாபனை செய்த தலைப்புகளில்'காதல்''என்றென்றும் காதல்','ரம்பையின் காதல்'காதலன் 'கண்ணன் என் காதலன்,'காதல் மன்னன்''காதல்பரிசு','காதல் கோட்டை', 'காதல் வாகனம்','காதல் பறவைகள்', 'காதலிக்க நேரமில்லை','அந்தமான் காதலி''காதலில் விழுந்தேன்'  'காதலில் சொதப்புவது எப்படி','காதலே நிம்மதி', 'காதலா காதலா'போல இன்னும் எத்தனையோ விதவிதமான தலைப்புகளை,தமிழ்த்திரையில் பார்த்திருக்கிறோம்.  

  'பாதாள பைரவி' திரைப்படத்தில் கண்டசாலா இசையமைத்து பி. லீலா வுடன் சேர்ந்து பாடிய,"காதலே தெய்வீக காதலே"எனும் புனிதமான,காதல் வரிகளாய்த் தொடங்கி,தமிழ்திரையிசையில் கவிதை வரிகள்,காதல்  களத்தில் பல் வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தியுள்ளன. 'சக்கரவர்த்தித் திருமகள்'திரைப்படத்தில் சீர்காழி கோவிந்தராஜனின் வெண்கலக்குரலில்,

"காதலெனும் சோலையிலே ராதே ராதே,

நான் கண்டெடுத்த பொன் மயிலே ராதே ராதே"

 எனும் சுவையான பாடலொன்று, ஜி.ராமநாதன் இசையில்,கு.மா.பால சுப்ரமணியத்தின் கவிதையாய்,காதலை சோலையாக்கி களிப்புற்றது.

  "விழியில் விழுந்து இதயம் நனைந்து உயிரில் கலக்கும்" காதலை மறைப்பதும் மறப்பதும் கடினமே என்பதை,மனதில் பதியவைக்கும் பாடலே,சிவாஜி பத்மினி நடித்து,கலைஞர் வசனத்தில் உருவான 'ராஜா ராணி' திரைப்படத்தில் ஏ.எம்.ராஜா, ஜிக்கி குரல்களில் இதமாய் செவி களில் நுழைந்து நெஞ்சில் நிலைபெற்ற, 

திரைபோட்டு நாமே மறைத்தாலும் காதலை 

தெளிவாக நாளை தெரியாமல் போகுமோ 

  எனும் உண்மை உள்ளடக்கிய பாடல்.ஏ.மருதகாசியின் இந்த அழகான வரிகளுக்கு டி ஆர் பாப்பா இனிமையாய் இசையமைத்திருந்தார்.  

  காதலில் விழுந்த தமிழ்த் திரையின் பயணத்தில்'கல்யாண பரிசு' திரைப்படத்தில்"காதலிலே தோல்வியுற்றான் காளை யொருவன்"/தோல்வியுற்றாள் கன்னியொருத்தி"என்று  பட்டுக்கோட்டை யார் எழுதி, ஏ.எம்.ராஜா இசையமைக்க, ஏ.எம்.ராஜா, பி.சுசீலா குரல்களில், சோகத்தில் ஊறிய பாடல்களில்,மனதை பறிகொடுத்தோம்.

  பின்னர்'பாதகாணிக்கை'திரைப் படத்தில் P.B ஸ்ரீனிவாஸ் J.P சந்திரபாபு குழுவினர் குரல்களில்"காதல் என்பது துவரை கல்யாண காலம் வரும் வரை"என்று காதலுக்கு காலவரையறை கொடுத்தமெல்லிசை மன்னர்கள் சையில் அமைந்த,கண்ணதாசனின் பாடலைக் கேட்டு,சிரித்தோம். 

 'சொல்லத்தான் நினைக்கிறேன்'என்று காதலை,சொல்லத் துடித்து சொல்லாமல் தோற்றுப்போனவர் பற்றியும்,அவர்கள் மத்தியில் 'சொன் னால் தான் காதலா'என்று விதண்டாவாதம் செய்வோரையும், திரைக்கதை நிகழ்வுகளில் பார்த்து காதலிக்காமல் போனவர்கள் எத்தனைபேரோ! 

"ச்சீ ச்சீ"என்று எட்டமுடியா பழத்தினை புளித்ததாகக் கூறும்  நரியின் நகைப்புக் கதையினைப்போல்,கிட்டாக் காதலை, கைக்கு எட்டா காதலை, 

காதல் கசக்குதயா

மனம்தான் லவ் லவ்வுன்னு அடிக்கும்

லவ்வுன்னுதான் துடிக்கும்

தோத்து போனா குடிக்கும்

பைத்தியம் புடிக்கும்

காதல் கசக்குதயா

வர வர காதல் கசக்குதயா!


யாராரோ காதலிச்சு

உருப்படல ஒண்ணும் சரிப்படல

வாழ்கையிலே என்றும் சுகப்படல

காதல்ல படம் எடுத்தா ஓடுமுங்க

தியேட்டரிலே ஜனம் கூடுமுங்க

தேவதாஸ் அவன் பார்வதி

அம்பிகாபதி அமராவதி

கதைய கேளு முடிவ பாரு

கடைசியில் சேராம..........

 என்று கரிசனமின்றி,கிண்டலடிப்பவரும் உண்டு.வாலியின் நகைச்சுவை ததும்பும் வரிகளுக்கு,இசைஞானி இளையராஜா மெட்டமைத்து தானே பாடிய வித்தியாசமான இப்பாடலை,பாண்டியராஜனின் முதல் இயக்கத் தில் உருவான 'ஆண்பாவம்'திரைப்படத்தில் கண்டு கேட்டு, குலுங்கி குலுங்கி சிரித்தோம்! 

  இவற்றையெல்லாம் மிஞ்சிய தேன்சுவைப் பாடலே,'பாலும் பழமும்' திரைப்படத்தில், பி.சுசீலா அனுபவித்துப் பாடிய, 

"காதல் சிறகை காற்றினில் விரித்து 

வான வீதியில் பறக்கவா 

கண்ணில் நிறைந்த கணவர் முன்னாலே 

கண்ணீர் கடலில் மிதக்கவா" 

என்ற எண்ணற்ற இதயங்களை கொள்ளையடித்த பாடல். 

   கண்ணதாசனின் ப்பாடலுக்கு, மெல்லிசை மன்னர்கள் சையமைத் திருந்தனர்.இவையனைத்துமே என்றும் இனிக்கும் திரையிசை காங் களாம். 

  காலத்தை நதியாக்கி அதில் காதலை படகாக்கி,தண்ணீரில் தத்தளிக்கும் படகுபோல காதலில் தவிப்போரின் சோகத்தை,ஓரிரண்டு அழாகான வரிகளில் கவியரசு கண்ணதாசன் வடித்த பாடலே, 

காலம் என்னும் நதியினிலே 

காதல் என்னும் படகு விட்டேன் 

மாலை வரை ஓட்டி வந்தேன் 

மறுகரைக்கு கூட்டி வந்தேன் 

  எனும் பி.சுசீலாவின் அமுதக்குரலில் நாம் பலமுறை கேட்டு மகிழ்ந்த பாடலாகும்.எம்.ஜி.ஆரும் சாவித்திரியும் இணைந்து நடித்து D.யோகா னந்தின் இயக்கத்தில் உருவான, 'பரிசு'திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடலுக்கு,திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் மனம் நிறைந்து இசையமைத்திருந்தார். 

  காதலை பொன் வீதியாக்கி,அதில் காதல் வாகனமேறி,இலக்கியப் புரித லோடு காதல் உணர்வுகளை பகிர்ந்துகொள்ளும் காதலரும் உண்டு. அப்படிப்பட்ட அழகியக் காதலை, 'பூக்காரி'எனும் திரைப்படத்தில் கீழ்க்  காணும் கவிதை வரிகளாய், டி.எம்.சௌந்தராஜன் எஸ்.ஜானகி குரல்களில் கேட்டு பரவசமுற்றோம். 

"காதலின் பொன் வீதியில்

காதலன் பண் பாடினான்

பண்ணோடு அருகில் வந்தேன் நான்

கண்ணோடு உறவு கொண்டேன்

காதலின் பொன் வீதியில்

நானொரு பண்பாடினேன்

பண்ணோடு ஒருத்தி வந்தாள் என்

கண்ணோடு ஒருத்தி வந்தாள்'

  பஞ்சு அருணாசலத்தின் ந்தஅழகான வரிகளுக்கு,மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் ரம்யமாய் இசைமெருகூட்டினார். 

  மெய்மறந்து காதல் வயப்பட்டோரிடம், காதல் என்னவெல்லாம் எதிர் பார்க்கக்கூடும் என்பதை ஆழமாய் சித்தரித்த பாடலே, 'டூயட்'திரைப் படத்தில் எஸ்.பி.பி குரலில் நம் இதயங்களில் இனம்புரியா வலியைத் தோற்றுவித்த, 

என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப் போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்
சிலுவைகள் சிறகுகள் ரெண்டில்
என்ன தரப் போகிறாய்
கிள்ளுவதை கிள்ளி விட்டு
ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்
..............................................
காதலே நீ பூவெறிந்தால்
எந்த மலையும் கொஞ்சம் குழையும்
காதலே நீ கல்லெறிந்தால்
எந்தக் கடலும் கொஞ்சம் கலங்கும்
இனி மீழ்வதா, இல்லை வீழ்வதா
உயிர் வாழ்வதா, இல்லை போவதா
அமுதென்பதா விஷமென்பதா
உன்னை அமுத விஷமென்பதா
.......................................................
காதலே உன் காலடியில்
நான் விழுந்து விழுந்து தொழுதேன்
கண்களை நீ மூடிக்கொண்டாய்
நான் குலுங்கிக் குலுங்கி அழுதேன்
இது மாற்றமா தடுமாற்றமா
என் நெஞ்சிலே பனி மூட்டமா
நீ தோழியா இல்லை எதிரியா
என்று தினமும் போராட்டமா.............................

   எனும் விரக்தியில் விளைந்த நரகவேதனையை,காதலின் வினைப் பயனாய் ஆழமான உணர்வுகளுடன் அழுத்தமாய் பிரதிபலித்த பாடல்.  இசைப்புயல் ரஹ்மானின் உள்ளம் கொள்ளையடிக்கும் ஆலமர இசை  நிழலில்,வைரமுத்துவின் வசந்த வரிகள் சோகத்தில் இளைப்பாறின. 

   காதலின் மையப்புள்ளியாய் என்றென்றும் விளங்குவது கண்களே யாகும்."கண்களின் வார்த்தைகள் புரியாதோ?"என்று கேட்பதும் 'கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிட மண்ணில் ஆடவர்க்கு மாமலையும் ஒரு கடுகாம்'என்று நினைப்பதும்,கண்களால் கைது செய்யச் சொல்வதும்,காதல் வலையின் மாய லீலைகளாம். இதுபோன்றே, விழிக ளின் வட்டத்திற்குள் சுற்றிவந்த பலதிரைப்பட பாடல்கள் உண்டு. இந்த வகையில் விஜைய்யும்,பூமிகாவும் நடித்து வெளிவந்த 'பத்ரீ'திரைப் படத்தில்,பழனி பாரதி எழுதி,ஸ்ரீனிவாசும்,சுனிதா உபத்ரஷ்தா பாடிய, 

"காதல் சொல்வது உதடுகள் அல்ல

கண்கள் தான் தலைவா" 

  எனும் தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்த பாடலும்,லிங்குசாமியின்'பையா' திரைப்படத்தில் அமரர் ந.முத்துக்குமாரின் வரிகளுக்கு யுவன் ஷங்கர் ராஜா தானே இசையளந்து,உயிர்கலந்து பாடிய, 

"என் காதல் சொல்ல நேரம் இல்லை

உன் காதல் சொல்ல தேவை இல்லை

நம் காதல் சொல்ல வாா்த்தை இல்லை

உண்மை மறைத்தாலும் மறையாதடி …......

காதல் வந்தாலே கண்ணோடு தான்

கள்ளத்தனம் வந்து குடி ஏறுமோ

கொஞ்சம் நடித்தேனடி கொஞ்சம் துடித்தேனடி

இந்த விளையாட்டை ரசித்தேனடி"

   எனும் அசத்தலான பாடலும், 'செல்லலமே'திரைப்படத்தில் கேகே, சின்மயீ,திம்மி,மஹத்தி இணைந்து,ஹாரிஸ் ஜெயராஜின் அதிவேக இசைக்கு ஆனந்தமாய் பாடிய, 

"காதலிக்கும் ஆசை இல்லை

கண்கள் உன்னை காணும் வரை

உள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால்

பட்டினத்தார் பாடல் மட்டும்

பாடம் செய்து ஒப்பித்தேன்

கண்ணே நான்

உன்னை காணும் முன்னால்"

  எனும் வைரமுத்துவின் வாலிப வேட்கை உணர்த்தும் வரிகளும்,காதல் கோட்டையின் கவின்மிகு முகப்புகளாகும். 

  காதலில் விழுந்த தமிழ்திரையின் அழியாத கோலங்களில் ஒருசில அழ கான வரைவுகள் மட்டுமே,இப்பதிவில் கோடிட்டு காட்டப்பட்டிருக்கின் றன.தமிழ்திரையிசை வரிகளில்'மனித காதலை வென்ற புனித காதல் வரிகள்'இன்னும் எத்தனையோ உண்டு. இவையனைத்துமே வரிகளின் வலிமையால்,இசையின் துடிப்பால்,இதயம் வென்று தமிழ்த்திரையின் பலத்தை பறைசாற்றுகின்றன!. 

ப.சந்திரசேகரன்

                                        ==============0================

 

      

No comments:

Post a Comment