Wednesday, October 20, 2021

நகைச்சுவையின் இசைக்குரல்


    


   தமிழ்திரையிசையில் இசைக் குரல்கள் பலவண்ணத்தில் வலம் வந்துள்ளன.இன்றைய சூழலில் இளைஞர்கள் பலரின் இசைக்குரல்கள், குரல்வளையினை இசைக்கருவி போலவும் நாவினை நர்த்தன மேடை யாகவும் மாற்றி சாகசங்கள் புரிந்து வருவதை,விஜய் சூப்பர் சிங்கர் போன்ற இசை அரங்கங்களில் நம்மால் உணரமுடிகிறது. 

   ஆனால்,கடந்த நூற்றாண்டில் சி.எஸ் ஜெயராமனின் தனித்துவம் வாய்ந்த குலைத் தவிர மற்றவை அனைத் துமே.பரந்த சமவெளி போல வும்,உயர்ந்த கோபுரம் போலவும் விரிந்து விசாலமாகவோ உயர்ந்து கம்பீர மாகவோ,இசையின் விரிந்து உயர்ந்த பரிமாணங்களை மட்டுமே நமக்கு விருந்தாக்கின.இசையின் நெளிவு சுளிவுகள் பாடுவோர்க்கு தெரிந்திருந் தாலும் அவர்கள் தங்களின் குரலை நேரிடையாக மக்களுக்கு நெருக்க மாக்கி,சங்கீதத்தை அனைவருக்கும் சமமாக்கி விருந்து படைத்தனர். 

   அவர்களின் குரல்கள் ராகங்களை மீறியதில்லை;தாளங்களை கடந்த தில்லை.ஆனால் உணர்வுகளை,தங்களது திறந்த குரல் ஓசையால்  உயிரோட்டத்துடன்,கேட்போர் நெஞ்சங்களில் இசையின் எழுச்சியுடன் சங்கமிக்கச் செய்தனர். இந்த குரல்களுக்கிடையே சோகத்தை தள்ளி வைத்து, நகைச்சுவை உணர்வுகளை நளினமாய் தன்னுள் பிரசவித்து, ரசிகர்கள் மடியில் இளைப்பாறச் செய்த ஒரு இசைக்கலைஞர் உண்டு. அவர்தான் S.C.கிருஷ்ணன். 

  நகைச்சுவை நடிகர்களில் தமிழ்த் திரைப்படங்களில் அதிகமாக பாடல் காட்சிகளில் இடம்பெற்றவர்கள் நான்குபேர். இந்த நால்வரில் கலை வாணரும்,J.P சந்திரபாபுவும்,அவர்களின் சொந்தக்குரலால் பாடி ரசிகர் களை மகிழ்வித்தவர்கள்.ஆனால் பாடல் காட்சிகளில் அதிகமாக இடம் பெற்றவர் கே.ஏ.தங்கவேலு.அதற்குப் பிறகுதான் நாகேஷ்.

   இதற்கு தங்கவேலுவின் திரைப் பிரவேசம் நாகேஷுக்கு முன்னர் ஏற்பட்ட தும்,கடந்த நூற்றாண்டில் நகைச்சுவை நடிகர்களுக்கு பாடல் காட்சிகள் அதிகம் இருந்ததுமே காரணமாகும்.இந்த இருவரில், நாகேஷின் பாடல் களுக்கு குரல் பொருத்தத்துடன் பாடியவர் ஏ.எல்.ராகவன் ஆவார்.'சந்தி ரோதயம்'போன்ற ஒரு சில படங்களில் சீர்காழி கோவிந்தராஜனும் பாடியுள்ளார். ஆனால் தங்கவேலுவுக்கு சீர்காழியார் நிறைய பாடல் களுக்கு குரல் கொடுத்திருந்தாலும் அதற்கு இணையாக குரல் கொடுத்த இன்னொரு பாடகர் S.C.கிருஷ்ணன் என்பது குறிப்பிடத் தக்கதாகும். 

  சிவகங்கை மாவட்டத்தை தன் பெயரின் முதல் எழுத்தாகக் கொண்டுள்ள S.C.கிருஷ்னன் இளமைப்பருவத்திலிருந்தே இசையோடு நடிப்பையும் உளமார நேசித்தவர்.நடிப்பில் வற்றாத ஆர்வம் கொண்ட இவருக்கு,நடிப் பிசைப்புலவர் கே.ஆர்.ராமசாமியின்  நாடகக்குழுவில்  நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

  பின்னர் அறிஞர் அண்ணாவின் 'ஓர் இரவு''வேலைக்காரி'போன்ற திரைப் படங்கள்,முதலில் நாடகமாக அரங்கேறியபோது,அவற்றில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால் முழுமையான நடிகராகவேண்டும் என்ற அவரது நீண்ட நாள் கனவு நிறைவேறவில்லை.மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவன படங்களில் சிறிய வேடங்களில் நடித்திருந்தாலும்,முடிவில் ஒரு பாடகராக மட்டுமே,அவரால் கலைத்துறையில் கணிசமான இடத்தை பெறமுடிந்தது.

  1952 முதல் 1984 வரை முப்பது ஆண்டுகளுக்கு மேல் பின்னணி பாடகராக இருந்த S.C.கிருஷ்ணன் கடந்த நூற்றாண்டில், இளையராஜாவைத் தவிர, மற்ற பெரும்பாலான முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில்  பாடியுள்ளார் என்பது  தனிச் சிறப்பாகும். அவர் கர்நாடக இசையில் ஈடுபாடு கொண்டிருந்தாலும்'அமுதவல்லி'  திரைப்படத்தில் டி.ஆர் மகாலிங்கத்துடன் இணைந்து பாடிய "இயல் இசை நாடகக் கலையிலே " எனும்  போட்டிப் பாடல் மட்டுமே நிலைத்தது.

   S.C.கிருஷ்ணன் எம் ஜி ஆருக்காக 'ராஜராஜன்'திரைப்படத்தில் பாடிய "ஆயி மகமாயி ஆங்கார தேவி"எனும் பாடலும்'ராஜா ராணி'திரைப்படத் தில் சிவாஜி கணேசனுக்காக பாடிய"லீலா ராணி லீலா போலி"என்று தொடங்கி "பூனை கண்ணை மூடிக்கொண்டாள் பூலோகமே இருண்டு போகுமா மியாவ் மியாவ்"எனும் கலைஞரின் வரிகளில் அமைந்த பாடலும் இரண்டு மிகப் பெரிய காதாநாயகர்களுக்காக  அவர் பாடிய பாடல்களா கும்.  

  முதன்முதலாக  S.C.கிருஷ்ணனுக்கு சிறப்பான அங்கீகாரம் பெற்றுத் தந்த பாடல்,மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் வெளியான நடிகர் திலகத்தின் 'திரும்பிப்பார்.திரைப்படத்தில் காளி N.ரத்தினத்திற்காக அவர் பாடிய "கலப்படம் கலப்படம் எங்கும் எதிலும் கலப்படம்" எனும் பரவசமாய்க் கேட்கப்பட்ட பாடலாகும். அதற்குப் பின்னர் 'மக்களைப்பெற்ற மகராசி' திரைப்படத்தில் அவர் பாடிய, 

சீமைக்குப் போயி படிச்சவரு 

சின்ன எஜமான் நல்லவரு 

  எனும் குழுப்பாடலும் நல்ல வரவேற்பைப்பெற்றது.இதேபோன்று பல முறை நாம் கேட்ட இன்னுமொரு பாடலே,'தெய்வப்பிறவி' திரைப்படத்தில் இடம்பெற்ற,  

கட்டத்துக்கு மனப்பொருத்தம் அவசியம் 

காதலுக்கும் மனப்பொருத்தம் அவசியம் 

எனும் அர்த்தமுள்ள சொற்களை உள்ளடக்கிய பாடலாகும்.

   'தில்லானா மோகனாம்பாள்' திரைப்படத்தில் ''பாண்டியன் நானிருக்க ஏண்டி உனக்கு நேரம்" என்ற பாடலை எல்.ஆர்.ஈஸ்வரி தொடங்க,S.C கிருஷ்ணன் தனது குரலை உச்சத்தில் உயர்த்தி, "நானிருக்க"எனும் சொல்லை  பாடுகையில்,அவர் எப்படிப்பட்ட குரல்வளமிக்க பாட்டுக்காரர் என்பதை அனைவரும் அறிந்திருக்கக்கூடும். 

   இவை எல்லாவற்றையும் மிஞ்சி இன்றைக்கும் செவிகளில் தேனெனப் பாயும் பாடலே,மாடர்ன் தியேட்டர்ஸின் 'வண்ணக்கிளி'திரைப்படத்தில் இடம்பெற்ற,

 சித்தாட கட்டிக்கிட்டு சிங்காரம் பண்ணிக்கிட்டு 

மத்தாப்பு சுந்தரி ஒருத்தி மயிலாக வந்தாளாம்.

கோரஸ் பாடல்களில் அமரத்துவம் பெற்ற பாடலாகும்.

 S.C. கிருஷ்ணன் 'மல்லிகா' திரைப்படத்தில் பாடிய"பகட்டிலே உலகம் ஏமாறுது"'குலேபகாவலி'யில் நாகூர் ஹனீபாவுடன் பாடிய "நாயகமே.நபி நாயகமே"சமய சஞ்சீவி'யில் கேட்ட"வெளிய சொன்னா வெட்கம்", 'பாக்யலட்சுமி' திரைப்படத்தில் மனம் மகிழ்ந்துப் பாடிய "பார்த்தீரா ஐயா பார்த்தீரா" 'திலகம்'திரைப்படத்தில் இடம்பெற்ற 

B.O.Y boy, Boy இன்னா பைய்யன் 

G.I.R.L girl Girl இன்னா பொண்ணு 

இந்த பொண்ணை கண்டதும் 

போதை உண்டாகுதே 

மற்றும் 'எதிர் நீச்சல்' திரைப்படத்தில் என்றென்றும் நினைவில் நிற்கும் வண்ணம் பாடிய,

 சேதி கேட்டோ சேதி கேட்டோ 

சேட்டன் பற்றிய சேதி கேட்டோ 

போன்ற எல்லா பாடல்களுமே இசை ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன.  

  S.C.கிருஷ்ணன் பாடல்கள் பலவற்றில் எப்போதுமே,எதுகை மோனை சற்று தூக்கலாகவே அமைந்திருந்தது.அதற்கு கீழ்காணும் பாடல்களை எடுத்துக்காட்டாகக் கூறலாம். 

1}சாத்துக்குடி சாறுதானா பாத்துக்குடி  {'வண்ணக்கிளி'}

2}சின்னஞ்சிறு சிட்டே 

எந்தன் சீனா கற்கண்டே {அலிபாபாவும் நாற்பது திருடர்களும்} 

3}உன் அத்தானும் நான்தானே 

சட்ட பொத்தானும் நீதானே{சக்ரவர்த்தித் திருமகள் }   

4}அடி தாராபுரம் தாம்பரம் உன் தலையிலே கனகாம்பரம் 

அட ஏகாம்பரம் சிதம்பரம் உன் இடுப்புல பீதாம்பரம்  

{மக்களைப்பெற மகராசி}

5}ஐயப்பா இது மெய்யப்பா {ரத்த பாசம்}

6} தங்கமே உன்போல தங்கப்பதுமையை

எங்கெங்கும் தேடியும் காணலையே{மாயா பஜார் } 

7}மண்ண நம்பி மரமிருக்கு கண்ணே சஞ்சலா 

  ஒன்ன நம்பி நானிருக்கேன் சோக்கா கொஞ்சலாம் 

  ஒலக இன்ப வெள்ளத்திலே ஒண்ணா நீஞ்சலாம் 

  இந்த ஒலக இன்ப வெள்ளத்திலே ஒண்ணா நீஞ்சலாம்{எங்க வீட்டு மகாலட்சுமி} 

8} மை டியர் மீனா 

    ஓ ஐடியா என்னா {மஞ்சள் மகிமை} 

9} வெத்தல பாக்கு சுண்ணாம்பு 

    பத்திரி ஏலங் கிராம்பு  {நீமலைத் திருடன்}

10}அச்சா பஹூத் அச்சா

      உனக்கு அழகை யாரு வச்சா  {திருடாதே}

11} சந்தேகம் எனும் ஒரு சரக்கு 

      அது பெண்கள் மனதிலேதான் இருக்கு {திலகம் }

இப்பாடல்கள் அனைத்துமே நாம் பலமுறை கேட்டு ரசித்த நகைச்சுவை பாடல்களாகும்.  

  குரலில் நாசியுடன் கலந்த இனம்புரியா இனிமையும்,அதிர்வும் நிரம்பப் பெற்ற ஒரு அற்புதமான பாடகரான S.C கிருஷ்ணன்,நகைச்சுவைப் பாடல்களில் நளினமான  குரலால்   இரண்டறக் கலந்ததோடு,டி.எம்.எஸ், சீர்காழி கோவிந்தராஜன், ஏ.எல்.ராகவன் மற்றும் பல ஆண் குரல்களுடன் இணைந்தும் பி.சுசீலா பி.லீலா,ரத்னமாலா,டி.வி ரத்னம், ஜமுனா ராணி எல்.ஆர்.ஈஸ்வரி,ஏ .பி.கோமளா மற்றும் சூலமங்கலம் ராஜலட்சுமி உட்பட அனைத்து பெண் குரல்களுடன் இணைந்தும்,தமிழ் திரையிசைப் பாடல் பயணத்தில் டூயட் பாடல்களுக்கும் கோரஸ் பாடல்களுக்கும்,தனிப் பெருமை கூட்டினார்.

  எண்ணற்ற பாடல்களை திரையிசை கீதங்களாய் தமிழ்த்திரைப்பட உலகத்திற்கு வழங்கிய S.C.கிருஷ்ணனுக்கு வழங்கப்பட்ட கலைமாமணி விருது அவரது திறமைக்குக் கிடைத்த மிகச் சிறிய அங்கீகாரமே!.முதன் மைப் பாடகர்களின் குரல்களுடன் கலந்து கரைந்து போகாமல்,தனது குரலின் தரம் போற்றிய தனித் திறமையால் நிலைத்து நின்றதே,அவரது மிகப்பெரிய ஆற்றலாகும்.அந்த ஆற்றலே இன்றும் நம்மில் பலரை,அவர் பற்றி நினைப்பதோடு நில்லாது,மனம் நிறைந்து பேசவைக்கிறது.இப் பதிவும் அவரின் இசைத் திறமைக்கு செலுத்தும் ஒரு சிறிய மரியாதையே  கும்.

ப.சந்திரசேகரன் 

                               *****************0********************     

No comments:

Post a Comment