Thursday, November 11, 2021

தமிழ்த்திரையின் திருப்புமுனைகள்

 

உலகத்தோடு ஓட்ட ஒழுகல் கல்லார் பலகற்றும்

கல்லார் அறிவிலா தார் 

  எனும் குறளை வள்ளுவரின் வாழக்கை நெறியாக எடுத்துக்கொண்டாலும், காலத்தோடு ஓட்ட ஒழுகலே உலகு.வாழும் காலமே வாழ்க்கைக்கு பொருள் கூறுவதாகும்.காலத்தோடு உலகம் பயணிக்கையில்,நடந்ததையும்,நடந்து கொண்டிருப்பதையும் நினைவில் கொண்டு,நடக்கவிருப்பதற்கான வழித்தடத்தை அமைக்க முயலுவதே, மனித இயக்கத்தின் பயன்பாடு.         

  இலக்கியம்,அறிவியல்,சமூகவியல்,அரசியல்,பொருளியல் அனைத்தையும் வரலாறே தாங்கி நிற்கிறது.எனவே காலமே மனித இயக்கத்தின் குறியீடு.கால ஓட்டத்தில் மனித இனத்தின் சிந்தனையும் செயல்பாடுகளும் மாற்றம் கண்டு புதிய தலைமுறைகளை உருவாக்குகின்றன.அவ்வாறு உருவாகும் புதிய தலைமுறைகள், திருப்புமுனைகளைத் தோற்றுவித்து புதிய வரலாறு படைக்கின்றன.

  திரைத்துறையாது,இலக்கியம் அறிவியல் சமூகவியல்,அரசியல் மற்றும் பொருளியல் போன்று இந்த அனைத்து துறைகளையும் தன்னுள்ளே தாங்கி பயணித்து புதிய வரலாறு படைப்பதோடு நில்லாது, சில நேரங்களில் வரலாற்றையே மாற்றி எழுதுவதும் உண்டு.

   பல படைப்பாளிகள் போட்டிபோட்டு பங்கேற்கும் திரைத்துறையில்,ஒரு சிலரால் மட்டுமே வரலாறு படைக்கவோ வரலாற்றை மாற்றி எழுதவோ முடிகிறது.திரைப்படத் தயாரிப்பாளர்கள்,இயக்குனர்கள்,நடிகர்கள், கவிஞர்கள்,பாடகர்கள் மற்றும் இசை மேதைகள் எல்லோருமே களமிறங்கும் திரைத்துறையில், ஒவ்வொரு காலகட்டத் திலும் இவர்களில் ஏதேனும் ஒரு பிரிவினர் திரைப்பயணத்தில் எல்லைக்கற்களை கடந்து அவற்றை மாற்றிப்பொறுத்துகின்றனர்.அவ்வாறு செய்ய முடிந்தவர்களே அவர்கள் வாழும் காலத்தில், அவர்கள் சார்ந்த துறையில்,புதிய மன்னர்கள் ஆகின்றனர்.இந்த மாற்றங்கள் உருவாக்குவதில் தமிழ்த்திரை ஒருபோதும் பின்வாங்கியதில்லை. 

   இந்தியாவின் சுதந்திரத்திற்கு முற்பட்ட காலகட்டத்தில்,அனைத்து இந்திய மொழிகளிலும் திரைத்துறை அடிக்கல் நாட்டியதனை பெரும் வெற்றியாகக் கருதலாம்.அன்றைய சூழலில்,சமூக,கலாச்சார,மற்றும் மொழி மாற்றங்கள், அடிமைத்தளையை முறித்துக்கொண்டு வெள்ளித் திரை கண்டதே பெரும் புரட்சியாகும்.தமிழ் மொழி வட மொழி தாக்கத்தின் பிடியிலிருந்து வெளிவரும், மகப்பேறு காலத்தில் இருந்தது.சிறிய வட்டத்திற்குள் களமமைத்த தமிழ்த்திரை, இயல்,இசை,நாடகம் ஆகிய மூன்று நிலைகளையும் தன்னகத்தே கொண்டு ஒரு மாபெரும் காலத்திற்கான புள்ளிகளை வரைந்ததே,தமிழ் திரைத்துறையின் மாபெரும் வெற்றியாகும்.  

  தமிழ்த்  திரைவரலாற்றில் இரண்டு திருப்புமுனைகைளை ஏற்படுத்திய பெருமை மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்திற்கு உண்டு.முதன் முதலில் 1940 இல்'உத்தம புத்திரன்'திரைப்படத்தில் கதாநாயகனை[பி.யு. சின்னப்பா] இரட்டை வேடத்தில் அறிமுகப்படுத்தி வரலாறு படைத்தது. பின்னர் இதே மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் கருப்பு வெள்ளை பட வரலாற்றைக் கடந்து,முதன் முதலாக முற்றிலும் வண்ணப் படமான  எம்.ஜி.ஆர் &பி.பானுமதி நடித்த ,'அலிபாபாவும்  நாற்பது திருடர்களும்' திரைப்படத்தை 1956 இல் வெளியிட்டு அமோக வெற்றி கண்டது.டி.ஆர். சுந்தரத்தின் இயக்கத்தில் வெளியான இந்த இரண்டு திரைப்படங்களையும் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் திருப்பு முனைகளாகக் கொண்டாட லாம்.

   இதே  போன்று'சந்திரலேகா','வஞ்சிக்கோட்டை வாலிபன்'எனும் இரண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க திரைப்படங்களைத் தயாரித்த ஜெமினி பிக்செர்ஸ் நிறுவனம், வெள்ளித் திரையில் பிரம்மாண்டத்தை உருவாக்கி, திருப்புமுனை ஏற்படுத்தியது. இயக்குனர்களைப் பொறுத்தவரை கூட்டுக் குடும்பப்பெருமை, வாழ் வியல் மகத்துவம்,மற்றும் னித நேயம் போற்றும் திரைப் படங்களை அதிகமாக இயக்கிய,ஏ.பீம்சிங், பி.மாதவன் இரட்டையர் கிருஷ்ணன் பஞ்சு,ஏ.சி.திருலோக் சந்தர் போன் றோருக்கு மத்தியில் வசனங்களை முன்னிறுத்தி ஆழ்ந்த  உணர்வு களை  வலுவான வார்த்தைகளால் நெஞ்சில் நிறுத்திய கே.எஸ்.கோபாலகிருஷ்ண னும்,கதாபாத்திரங்களின் அறிவாற்றலையும் திறமையையும் அரங்கேற்றி , கதைக்களத்தை நிறுவுவதில் புதுமையைப் புகுத்தி, திரைப்பட இயக்கத்தின் மேலாண்மையை மேம்படச் செய்த, கே.பாலச்சந்தரும், தமிழ்த் திரையுலகின் புதிய மன்னர்களாயினர். 

  ஒருவர் இயக்குனர் திலகமானார்;மற்றொருவர் இயக்குனர் சிகரமானார். இவர் களுக்கிடையே,முக்கோணக் காதலை முழுமையாய் சுவாசித்த ஸ்ரீதரும்,புராணங் களை வைத்தே தமிழ்த்திரைக்கு புதிய வரலாறு படைத்த ஏ.பி.நாகராஜனும்,தமிழ்த்  திரையினை மேலும்  லை  நிமிரச்  செய்தனர். ஸ்ரீதர் முதன்முதலாக திரைப் படத்தின் பெரும்பகுதி காட்சிகளை வெளி நாட்டில் எடுத்து'சிவந்த மண்'என்னும் பிரம்மாண்டமான திரைப் படத்தை களமிறக்கி  மாபெரும் வெற்றிகண்டார். உமா பதியின் தயாரிப்பில் ராஜ 'ரராஜா சோழன்' எனும் முதல் சினிமாஸ்கோப் தமிழ்த் திரைப் படத்தை இயக்கி,திருப்புமுனை கண்ட பெருமை ஏ.பி.நாகராஜனுக்கு உண்டு .  

  நடிப்பிலும் பாடலிலும், தன்னம்பிக்கை,தாய்மையின் பெருமை,பெண்மை போற்றுதல்,உண்மை உள்ளுடைமையாக்கல், நன்மை நாடுதல்,தீமைக்கு எதிரான போராட்ட எழுச்சியினை ஏற்படுத்துதல்,போன்றவற்றால் திருப்புமுனை கண்டவரே, புரட்சி நடிகரும் மக்கள் திலகமுமான எம்.ஜி.ஆர். இந்த முன்னோட்டங்களே,அவரின் அரசியல் பிரவேசத்திற்கான பலத்தினையும் மக்கள் சக்தியையும் முன்னுக்குத் தள்ளியது. 

  செவாலியர் சிவாஜி கணேசனோ,தனக்குள்ளே பண்ணுயிர்களை உருவாக்கி, மனித இனத்தின் ஒட்டுமொத்த தாக்கத்தையும் தன்னுடைமையாக்கி,ஒரு நடிகனால் திரையில் என்னவெல்லாம் சாதிக்க இயலும் என்பதை,உலகிற்கு உணர்த்தினார். ஒன்பது கதாபாத்திரங்களை ஒருவராய்ச் சுமந்து,நடிப்பிற்கு புதிய இலக்கணம் வகுத்தவர் நடிகர் திலகம்.இன்றைக்கு பல நடிகர்களிடமும்,அவரது நடிப்பின் நாடித் துடிப்பை காணலாம்.இதுவே அவர் ஏற்படுத்திய காலமெல்லாம் நிலைத்து நிற்கும் திருப்புமுனை.

  எம் .ஜி.ஆறும் சிவாஜி கணேசனும் இணைந்து நடித்த ஒரே ஒரு திரைப் படமான  டி.ஆர்.ராமண்ணாவின் இயக்கத்தில் உருவான'கூண்டுக்கிளி' அந்த இரண்டு பறவைகளும் கூண்டைவிட்டு பறந்து சென்று மீண்டும் தமிழ்திரையில் இணையாத ஒரு திருப்புமுனையாயிற்று.  

  பின்னர் 1974-இல் உடல்மொழியின் உல்லாசத்தால் நிறக்குறைபாடுகளை பின்னுக்குத் தள்ளி,அங்க அசைவுளின் புதிய பரிமாணங்களாலும்,அரிய வசனத் தூவல்களாலும்,ஆர்ப்பாட்ட அதிர்வுகளாலும்,,குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவரையும் தன்னைத் திரும்பிப்பார்க்கவைத்தார் ரஜினிகாந்த். அவர் நிகழ்த்திய திருப்புமுனை காட்சிகளே,அவரை சூப்பர் ஸ்டார் ஆக்கியது. 

   உலக நாயகன் கமலோ  சில்மிஷங்களினாலும்,சிகைஅலங்காரங்களாலும், சிறகடித்துப்பறக்கும் நடிப்பாற்றலாலும்,பேசியும் பேசாமலும் நடித்து,உருவ மாற்றங்களை வாடிக்கையாக்கி,ஆணாகவும் பெண்ணாகவும் அசத்தி, ஆடியும் பாடியும் வேடிக்கை காட்டினார்.நடிகர் திலகத்தின் ஒன்பது முகங்களை பத்தாக்கி, தசாவதாரம் படைத்தவர் கமல்.திரையில் இவரால் சாதிக்க இயலாதது எதுவுமே இல்லை என்பதே,இவர்கண்ட திருப்புமுனை.

  உடலில் ஒல்லியானாலும்,நடிப்பில் கில்லி என விருதுகளால் விடைகண்டு திருப்பு முனையின் திசைகள் பலவாம் என்று நிரூபித்தவர்,நடிகர் தனுஷ். தோற்றம் தகர்த்த திருப்புமுனை நாயகர்களின் தனிப்பட்டியலில்,முதலிடம் பிடிக்கும் தகுதியினை, இவர் யாருக்கும் விட்டுக்கொடுப்பதாகத் தெரியவில்லை.  

  சம்பிரதாய நடிப்பு வரையறைக்குள் நிற்காமல் தனக்குள் இருக்கும் தன்னை புறந்தள்ளி,தன்னைத் தானே வித்தியாசமாக ஒவ்வொரு முறையும் அடையாளம் மாற்றி,தமிழ்திரையில் நடிப்பால் தடித்துநிற்கும் திருப்பு முனையே விஜய் சேதுபதி எனும் விகட கவி கதாநாயகன். நாயக பிம்பத்தின் மாயத்திரையினை கிழித் தெறிந்த பெருமை,என்றென்றும் தமிழ் திரையுலகில் இவர் பெயர்  நிலைக்கச் செய்யும். 

   1970-களின் பிற்பகுதியில்  தமிழக கிராமங்களைத் திரும்பிப்பார்த்து இயக்கத் தாலும் இசையாலும் மண்னின் மணம் நுகரச்  செய்தவர்களே இயக்குனர் பாரதி ராஜாவும் இசைஞானி இளையராஜாவும்.அன்னக்கிளியின்"மச்சானை பார்த்தீங் களா"பாடல் எப்படி தமிழ்திரையிசையின் திருப்புமுனையானதோ,அதே போன் றொரு வெண்திரையின் புது நிகழ்வே'பதினாறு வயதினிலே'திரைப்படம்.

   கல்லூரி பருவத்தை கதைக்களமாக்கி,ஒருதலைக் காதலை மைய்யப்புள்ளி ஆக்கி, பின்னால் தொடரும் பல கல்லூரி காதல் கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டிய பெருமை தாடி இயக்குனர் டி.ராஜேந்தருக்கு உண்டு.

  பாரதிராஜாவின் சீடர்களான பாக்யராஜும் பார்த்திபனும் யதார்த்தமான நிகழ்வு களுக்கு நகைச்சுவை சாயம் பூசியும்,நெஞ்சைத் துளைக்கும் வசனங்களாலும் முறையே, சுவரில்லாத சித்திரங்களையும்,புதியபாதையும் படைத்தது,திருப்பு முனைக்கு வழி வகுத்தனர். 

  சமூகக் குறைபாடுகளை அரசியலின் அழுக்குச் சாக்கினில் மூட்டை கட்டி,ஒரு கலியுக மண்டியை பிரம்மாண்ட காட்சிப்பொருளாக்கி,வெண்திரையில் புதிய சகாப்தம் படைத்தார் இயக்குனர் சங்கர். 

   சமீப காலமாக,அடிமனதில் அங்கலாய்ப்புகளையும்,வன்மையுடன் ஆட்டக்களம் எதுவாக இருப்பினும் ன் எல்லைக்கும் சென்று அதனை அடையத்துடிக்கும் துரோகச் சிந்தனைகளையும் முன்னிறுத்தி,பாலா,வெற்றி மாறன் போன்றோர் திரை இயக்கத்தில் திருப்புமுனை காச் செய்கின்றனர்.அதே போன்று,அடித்தட்டு மக்களின் ஆக்கச் சிந்தனைகளையும், ஆகாச வேட்கையினையும்,ஆழ்மன எழுச்சியினையும் முன்னிறுத்தி இயக்கத்தின் பலத்தை நிலை நாட்டுகிறார் ப.ரஞ்சித்.

   இருப்பினும்,இதே போன்றொரு கருவுருவாக்கத்தின் கதிர்களை கே.எஸ் கோபாலகிருஷ்ணனின்'குறத்தி மகன்'திரைப்படத்திலும் கே.விஜயனின் இயக்கத்தில் உருவான'புது வெள்ளம்'போன்ற திரைப்படங்களிலும் காண முடிந்தது.கதைக்கருவாலும் கதை பயணிக்கும் விததாலும்,கதாபாத்திரத்தில் ஒன்றிப்போன நடிப்பாலும்,அடித்தட்டு மக்களான  மலைவாழ் பழங் குடியினரின் நியாயக்குரலை வெண்திரை நிகழ்வாக்கி,தற்போது வெளியான ஜெய் பீம் திரைப்படம்  செயற்கைத் தன்மை துளிகூட இல்லாது,சமூக நீதிக்குரலினை உயர்த்தி,ஆன்ம வேதனையை ஆழப்படுத்தியுள்ளது.   

   இன்றைய தலைமுறையின் தேவையின் அடிப்படையிலான செயல் வேகமே, இன்னும்  எத்தனையோ திருப்புமுனைகளை தமிழ்திரையுலகு காணவிருக்கிறது எனும் எதிர்பார்ப்பினையும்,உறுதியான நிலைப்பாட்டினையும்,அவ்வப்போது தோற்றுவிக்கிறது.மாற்றங்கள் இல்லாத துறைகள் இல்லை;மனிதம் தழைக்க மாற்றங்கள் மட்டுமே மாண்புறும் வழி. மாற்றங்களின் பாதையில் புலன் ஈர்க்கும் திருப்பு முனைகள், அதிசிய கோலங்கள் படைக்கும் புள்ளிகளாகும்.

ப.சந்திரசேகரன்

                                                      +++++++++++++++++++++           

No comments:

Post a Comment