ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு கதாநாயகனின் செல்வாக்கு,ரசிகர் பலம் உட்பட பலகாரணங்கள் முன்னுரிமை பெறுகின்றன.கடந்த நூற்றாண்டில் வெளிவந்த திரைப்படங்களின் வெற்றிக்கு, கதையமைப்பு, இயக்கம்,இசை,நடிப்பு, பாடல்கள், என்று எல்லாவற்றையும் பட்டியலிட்டுச் சொல்லலாம்.இயக்குனர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் திரைப் படங்கள் வசனத்திற்காகவும், இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் திரைப்படங்கள் வசனங்கள் மட்டுமல்லாது இயக்க உத்திகளுக்காகவும் பெரும் வரவேற்பைப்பெற்றன.
பெரும்பாலும் நல்ல வசனத்திரளே கதைக்களத்திற்கு மெருகூட்டுகிறது. வசனங்கள் திரைக்கதை நகர்ச்சியின் எரிபொருளாக மட்டும் நின்று விடாது,சில சமயங்களில் பாடல்களின் துவக்கத்திலோ அல்லது இடையிலோ நுழைந்து, திரைப்பட வரலாற்றில் நீங்கா இடம் பெறுவதுண்டு. அப்படிப்பட்ட வசனங்கள் வளம்கூட்டிய பாடல்கள் சிலவற்றை இப்பதிவில் பார்ப்போம்.
1955-இல் ஏ.வி.எம் தயாரிப்பில் உருவான செல்லப்பிள்ளை திரைப் படத்தில் "மதனா எழில் ராஜா நீ வாராயோ"எனும் ஜிக்கி பாடிய பாடலொன்று வரும். அப்பாடலுக்கு இடையே,"மின்னல் இடையழகும் பின்னல் ஜடையழகும் கண்டு" எனும் வரியைப் பாடிய ஜிக்கி திடீரென்று நிறுத்த,உடனே சாவித்ரியின் குரலில் "நீங்களா?"எனும் கேள்வியும் அதைத் தொடர்ந்து கே.ஆர்.ராமசாமியின் குரல் "ஏன் நிறுத்திவிட்டாய் பாடு" என்று தொடங்கி,கோபமான வசனம் ஓரிரண்டு வரிகளில் வேல் போலப் பாயும்.பாடலும் வசனமும் இணைந்து 'செல்லப்பிள்ளை 'திரைப் படத்தின் மறக்கமுடியா காட்சியானது.எம்.வி.ராமன் இயக்கிய இத்திரைப்படத் திற்கு,R.சுதர்சனம் இசையமைத்திருந்தார்.
இதைத்தொடர்ந்து 1958-இல் வி.எஸ்.ராகவனின் இயக்கத்தில் வெளியான 'சாரங்கதாரா'திரைப்படத்தில் பாடலுக்கு முன்பாகவே''இந்த புறா ஆட வேண்டு மானால் இளவரசர் பாடவேண்டும்'' என்று நடிகை ராஜசுலோச்சனா கூற,உடனே நடிகர் திலகம்''ஓ பாடவேண்டுமா''என்று கூறி அமர்க் களமாய் அவர் வாயசைக்க,டி எம்.எஸ்.பாடிய ஒப்பற்ற பாடல்களில் ஒன்றே"வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண் புறாவே" காலம் வென்ற இப்பாடலுக்கு ஜி.ராமநாதன் இசையமைத்திருந்தார்.
அதே ஆண்டு ஜெமினி ஸ்டுடியோஸ் எஸ்.எஸ்.வாசன் தயாரித்து இயக்கிய, 'வஞ்சிக்கோட்டை வாலிபன்'திரைப்படம் திரையரங்குகளை நிறைத்தது. அப்படத்தில் வைஜயந்திமாலா&பத்மினி எனும் இருவரின் ஆர்ப்பாட்டமான நடனப்போட்டிக்காகப் பி.சுசீலாவும் பி.லீலாவும் இணைந்து பாடிய"கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே'' எனும் மிகச் சிறந்த பாடலுக்கிடையே ஒலிக்கும் பி.எஸ்.வீரப்பாவின் 'சபாஷ் சரியான போட்டி' எனும் ஒற்றை வரி வசனம் வில்லத்தனத்தில் வஞ்சகத்தோடு,'வஞ்சிக் கோட்டை வாலிபனை' நிலை நிறுத்தியது. இப்பாடலுக்கு சி.ராமச்சந்திராவும் ஆர்.வைத்யநாதனும் இணைந்து இசையமைத்திருந்தனர்.
1959-இல் ஜுபிடர் பிக்செர்ஸ் தயாரித்து ஏ.எஸ்.ஏ சாமியின் இயக்கத்தில் வெளிவந்த'தங்கப்பதுமை'திரைப்படத்தில் சி.எஸ்.ஜெயராமன் பாடிய "மனிதன் ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே" எனும் மனதை உலுக்கும் பாடலுக்கு நடுவே, கொடுங் கோல் இளவரசி எம்.என்.ராஜத்தின் அரக்கத்தனத்தால் சிவாஜிகணேசனின்,கண்கள் இரண்டும் பறிக்கப்பட்டதைக் கண்டு,பத்மினி அலறிக் கொண்டே பேசிய ஆவேசமான வசனமும், அதைத் தொடர்ந்து ஜெயராமனின்"கண்ணை கொடுத்தவனே பறித்துக்கொண்டாண்டி''எனும் பாடல் வரியும் இப்போதும் நெஞ்சில் நின்று கனக்கிறது. இப்படத்தின் பாடல்கள் பலவும், விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையில், இசை ரசிகர்களுக்கு விருந்தாயின.
பின்னர் 1960-இல் கே.சோமுவின் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த 'பாவை விளக்கு'திரைப்படத்தில்,
பெண்ணொருத்தி என் அருகில் வந்தாள்
தமிழ் பெண்ணொருத்தி என்னருகில் வந்தாள்
வண்ணத்தமிழ் பெண் ணொருத்தி என்னருகில் வந்தாள்
என்று வரி வரியாய் சிவாஜி கணேசன் வசனமாய் எடுத்துக்கொடுக்க, சி.எஸ்.ஜெயராமனின் வித்தியாசமான குரலில் தமிழமுதமாகியது ஒரு பாடல். இலக்கிய நயம்கொண்ட இப்பாடலுக்கு, திரைஇசைத்திலகம் கே.வி மகாதேவன் இசைத்தேன் கலந்தார்.
1961-இல் ராஜாமணி பிக்செர்ஸ் தயாரிப்பில் ஏ.பீம்சிங் இயக்கி அமரத்துவம் பெற்ற,'பாசமலர்'திரைப்படத்தில்"ஆனந்தா நான் என் கண்ணை யே ஒங்கிட்ட ஒப்படைக்கிறேன்;அதுல ஆனந்த கண்ணீரத்தான் நான் எப்பவும் பாக்கணும்" என்று சிவாஜி கணேசன் உணர்வு பொங்க கூறிட, அதற்கு உடனே ஜெமினி கணேசன்"அது என் கடமை ராஜு நீ கவலைப் படாதே"என்று பதில் சொல்ல,உடனே சிவாஜி "நன்றி ஆனந்தா மிக்க நன்றி"என்று கூறிவிட்டு தனது சகோதரி சாவித்திரி யைப் பார்த்து,"மஞ்சள் குங்குமத்தோட நீ நீடூடி வாழனும்"என்று வாழ்த்தியபின் எல்.ஆர் ஈஸ்வரி குழுவினருடன் பாடிய என்றும் இனிக்கும் பாடலே"வாராயென் தோழி வாராயோ;மணப்பந்தல் காண வாராயோ''.விஸ்வநாதன் ராம மூர்த்தி இசையில்,இன்றும் தமிழ் திரையிசைகானங்களில் தனியிடம் பெற்ற ஒரு திருமண விழாப் பாடலாகும்.
பின்னர் 1962-இல் ஏ வி எம் தயாரிப்பில் ஏ பீம்சிங் இயக்கத்தில் உருவான வெற்றிப் படமான 'பார்த்தால் பசிதீரும்' திரைப்படத்தில் தமிழ் தெரியா தன் காதலியான சாவித்திரிக்கு ஜெமினி கணேசன் தமிழ் கற்றுத்தருவதாக 'ஆனா ஆவன்னா' சாவித்திரி எ ன்று அகர வரிசையில் தொடங்க அதைத்தொடர்ந்து ஒவ்வொரு எழுத்தினையும் சாவித்திரி எடுத்துரைக்க ஏ.எல்.ராகவன் பி.சுசீலா குரல்களில் அமுதமென ஒலித்த பாடலே "அன்று ஊமை பெண்ணல்லோ இன்று பேசும் பெண் ணெல்லோ".கண்ணதாசனின் ஆழமான வரிகளுக்கு விஸ்வநாதன் இனிமையாய் ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர்
எம்.வி ராமன் இயக்கி இதே ஜெமினி கணேசனும் சாவித்திரியும் இணைந்து நடித்து 1962 -இல் திரைக்கு வந்த 'கொஞ்சும் சலங்கை'படத்தில். எஸ் ஜானகி அருமையாய் குரலுயர்த்திப்பாடிய "சிங்கார வேலனே தேவா" எனும் பாடலின் துவக்கத்தில் நாயகனைக் கண்ட நாயகி"நீங்களா"என்று கூற அதற்கு ஜெமினி கணேசன் தனக்கே உரிய குழைவுக்குரலில்'சாந்தா உட்கார் ஏன் பாட்டை நிறுத்தி விட்டாய்? ன் இசையென்ற இன்ப வெள்ளத் திலே நீந்துவதற்கு ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதே சாந்தா'என்றதும்,அதற்கு சாவித்திரி'என் இசை உங்கள் நாதஸ்வரத் திற்கு முன்னால்' என்று சொல்லி முடிப்பதற்கு முன்னரே,மீண்டும் ஜெமினி "தேனோடு கலந்த தெள்ளமுது;கோல நிலவோடு சேர்ந்த குளிர்த்தென்றல் இந்த சிங்கார வேலன் சன்னதியில் நமது சங்கீத அருவிகள் ஒன்றுகலக்கட்டும்; பாடு சாந்தா பாடு''என்று தமிழின் சுவையினை தாரைவார்த்துக் கொடுத்தவுடன், மீண்டும் ஜானகியின் இசைமுழக்கம் தொடரும்.
எஸ்.எம் சுப்பையா நாயுடுவின் இசைத்துடிப்பில் காரைக்குறிச்சி அருணாச்லத் தின் நாதஸ்வரமும், எஸ்.ஜானகியின் பாடலும் ஒருங்கிணைந்து'கொஞ்சும் சலங்கை'யினை கோபுரத்தில் ஏற்றிவைத்தது. இவையனைத்தும் தமிழ்த்திரைப்பட வரலாற்றின் பொற்காலமாகும்.
இதே ஜெமினி கணேசன் குரல் கொடுத்து துவக்கி வைத்த பாடலொன்று ஜெமினி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் C.ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் 1965-இல் திரைக்கு வந்த 'வாழ்க்கைப்படகு' திரைப்படத்தில் கேட்க நேர்ந்தது."சிரிடா கண்ணா சிரி ஆண்டவன் புண்ணியத்துல நீயாவது எப்போதும் இந்த புன்னகையோடவே இருக்கணும்" என்று ஜெமினிகணேசன் கூற, அதைத்தொடர்ந்து P.B.ஸ்ரீனிவாசின் காந்தக் குரலில் இதமாய் இதயம் தழுவியது,"சின்ன சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ" எனும் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையில் உதித்த பாடல்.
அதே ஆண்டு அதே இரட்டையர்கள் இசையமைத்து ஏ.வி.எம் ஸ்டுடியோ வில் சரவணா பிக்செர்ஸ் தயாரித்து கே.ஷங்கர் இயக்கத்தில் உருவான மறக்கமுடியா இன்னுமொரு அருமையான தமிழ்திரைப்படமே 'பஞ்ச வர்ணக்கிளி'.ஆர்.முத்து ராமன் ஜெய்ஷங்கர் கே.ஆர்.விஜயா நடிப்பில் வெளியான இத்திரைப்படத்தில் ''கண்ணன் வருவான் கதை சொல்லுவான்'' எனும் பி சுசீலா பாடிய அமுதான பாடல் இருமுறை வரும்.
இரண்டாவது முறை சோகமாக தொனிக்கும் அப்பாடலின் இடையே முத்துராமன் பேசும் வசனமே"அண்ணி ஏன் நிறுத்திட்டீங்க நான் காதலிச்ச அந்த குரலை மீண்டும் கேட்கணும்போல இருக்கு''எனச் சொல்ல,அதற்கு கே.ஆர் விஜயா ''உங்களுக்கில்லாத பாட்டா''என்று கூறுவார்.முத்துராமன் வானொலியில் கேட்டுக் காதலித்த குரலுக்குச் சொந்தக்காரியான கே.ஆர் விஜயா முத்துராமனின் அண்ணியென தவறாக புரியப்பட்டதன் பின்னணியில் வந்த பாடலே அது. இப்பாடலுக்கு இடையே வரும் வசனத்தில் இன்னும் சில வரிகள் கூட இருக்கும்.
1968-இல் ஏ.வி.எம் தயாரிப்பில் உருவான நடிகர் திலகத்தின் நூற்று ஐம்பதாவது திரைப்படமான உயர்ந்த மனிதன் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் டிஎம் எஸ் மற்றும் மேஜர் சுந்தராஜன் ஆகிய மூவரும் போட்டி போட்டு வசனத்தால் வெற்றிக் கொடி நாட்டிய"அந்த நாள் நெஞ்சிலே வந்ததே நண்பனே"பாடல் என்றென்றும் நினைவை விட்டகலா ஒன்றாகும்.
வியட்நாம் வீடு சுந்தரத்தின் இயக்கத்தில் 1973-ஆம் ஆண்டு வெளியான 'கெளரவம்'திரைப்படத்தில்'பாலூட்டி வளர்த்தகிளி பழங்கொடுத்து பார்த்த கிளி நான் வளர்த்த பச்சைக்கிளி நாளை வரும் கச்சேரிக்கு'எனும் அழுத்தமான பாடல் டி எம் சௌந்தராஜன் குரலில் கம்பீரமாய் ஒலித்து திரையரங்கில் வானொலியிலும் வெகுவாக நம்மை ஆட்கொண்டது.
அப்பாடலின் தனிச்சிறப்பே பாடல் தொடங்குவதற்கு முன்னர் இளையவர் சிவாஜி கணேசன் அவரின் பெரியப்பா மூத்த சிவாஜியின் கடும் கோபத் திற்கு உள்ளாகி வீட்டைவிட்டு வெளியேற,பாரிஸ்டர் ரஜினிகாந்த் வேட மணிந்த மூத்த சிவாஜி,தன் மனைவி பண்டரிபாயைப் பார்த்து "செல்லம்மா எங்கடி அந்த பய,ஆத்தவிட்டு போய்ட்டானா? அது வேற ஒண்ணுமில்லடி.கிளிக்கு ரக்க மொளச்சிடுச்சு ஆத்தவிட்டே பறந்து போயிடுச்சு" என்று அவருக்கே உரிய பாணியில் கண்ணீருடன் கர்ஜனை செய்து,பாடலைத் தொடங்குவார். சிம்மக்குரலோனின் வசனத்துடன் தொடங்கி மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் இசையில் பாலூட்டிய பாடல், தமிழ்த்திரை பாடல்கள் வரிசையில் தனி முத்திரை பதித்தது.
1974- ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் அவரின் குடும்பத் தயாரிப்பு நிறுவனமான சிவாஜி Productions தயாரித்து பி.மாதவன் இயக்கத்தில் நடித்து,திரை அரங்குகளை கூட்டத்தால் திணறடித்த,'தங்கப் பதக்கம்' திரைப்படத்தில், டி.எம்.சௌந்தராஜனின் பாடலுக்காக,பிழையறியா சிவாஜியின் உதட்டசைப்பில்,ஆழ்ந்த சோகத்தை உட்புகுத்திய பாடலே,
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனைதான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி .
இப்பாடலுக்கு நடுவே,சிவாஜியின் மருமகளாக நடித்த பிரமீளாவின் "மாமா காஞ்சுபோன பூமியெல்லாம் வற்றாத நதியைப்பாத்து ஆறுதல் அடையும்;அந்த நதியே வறண்டு போனா! துன்பப்படறவங்களெல்லாம் தங்களோட துன்பத்த தெய்வத்துக்கிட்ட முறையிடுவாங்க.தெய்வமே கலங்கி நின்னா அந்த தெய்வத் துக்கு யாரால ஆறுதல் சொல்லமுடியும்?" என்று வினவ,சோகத்தில் ஊறிய சோதனை பாடல் தொடரும்.'தங்கப் பதக்கம்'திரைப்படத்தின் அபார வெற்றிக்கு M.S விஸ்வநாதன் இசையில் இப்பாடல் காட்சியும் ஒரு வகையில் பங்களித்தது எனலாம்.
இறுதியாக,1991 -ஆம் ஆண்டு கமலகாசன் நடித்து சந்தானபாரதியின் இயக்கத்தில் வெளியான'குணா'திரைப்படத்தில்"கண்மணி என்னோட காதலி"எனும் பாடலின் குறுக்கே கமல் வசனமாக ஒவ்வொரு வரிகளையும் சொல்ல அவரது காதலியாக வந்த அபிராமி அதனை தொடர்வதாக காட்சி அமைந்திருந்த அப்பாடல் வித்தியாச மாக இருந்து,நல்ல வரவேற்பைப்பெற்றது. வசனத்துடன் கச்சிதமாய்ப் பொருந்தி தமிழ் திரையிசைக்கு மாறுபட்ட பரிமாணம் படைத்த பெரும்பாலான பாடல்களை இப்பதிவின் கண்டோம். விட்டுப்போனவை நினைவில் ஒட்டாமல் போனவையாகக் கொள்ளலாம்.
ப.சந்திரசேகரன்
==============0================