Tuesday, May 17, 2022

கரகத்தால் கிறங்கவைத்த இரு திரைப்படங்கள்

   




   தமிழ்த்திரைப்பட உலகம் தோன்றிய காலந்தொட்டே,நாட்டுப்புற பாடல்கள், காட்சிகளின் தொடர்ச்சியில் பொருந்தும் வண்ணமோ, அல்லது தொடர்பற்று தனிப்பெரும் காட்சியாகவோ, இடம்பெற்றிருக்கின்றன.'வண்ணக்கிளி' திரைப்படத்தில் இடம்பெற்ற, 

சித்தாட கட்டிக்கிட்டு சிங்காரம் பண்ணிக்கிட்டு 

மத்தாப்பு சிங்காரி ஒருத்தி மயிலாக வந்தாளாம் 

எனும் பாடலும்,'குமுதம்' திரைப்படத்தில் இடம்பெற்ற 

மாமா மாமா மாமா ஏம்மா ஏம்மா ஏம்மா 

எனும் பாடலும்,'படித்தால் மட்டும் போதுமா' திரைப்படத்தில் வந்த 

நல்லவன் எனக்கு நானே நல்லவன் 

சொல்லிலும் செயலிலும் வல்லவன் 

 எனும் பாடலையும் சேர்த்து ,பல்வேறு பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்களாக தமிழ்த் திரைக்கு அழகும் பொலிவும் கூட்டியுள்ளன. 

  பாடல்கள் மட்டுமல்லாது கதையும் கருத்தும் கதாபாத்திரங்களும் நதிகளாய் சங்கமிக்கும் கடலென உருவெடுத்து, தமிழ்த்திரையை தரமுடன் அலங்கரித்து, நாட்டுப்புற கலையினை அழியா நினைவுகளாய்,நம் நெஞ்சங்களில் பதித்துச் சென்ற தமிழ்திரைப்படங்கள் இரண்டினைப் பற்றி,இப்பதிவினில் காணலாம்.அந்த இரண்டு படங்களுமே, சிரசு தாங்கும் கரகத்துக்கு சிறப்பு அங்கீகாரம் பெற்றுத்தந்த திரைப்படங்க ளாகும்.

    இவற்றில் முதலாவதாக வெளியான 'கரகாட்டக்காரன்'{1989}எனும் திரைக் காவியம் இதிகாச திரைப்படமான 'தில்லானா மோகனாம்பாள்' திரைப் படத்தின் கலைத்திறன் போட்டியினை வேறு ஒரு கோணத்தில்,திரைப்பட ரசிகர்கள் பார்வையில் கொண்டுவந்து நிறுத்தியது. கங்கை அமரன் இயக்கத்தில்,அவரது மூத்த சகோதரர் இசைஞானி இளையராஜாவின் இணையில்லா இசையில், 'கரகாட்டக்காரன் திரைப்படம் வெள்ளி விழாக் கண்டது. கவுண்டமணி, செந்தில், கோவை சரளா போன்றோரின் நினைவகலா நகைச்சுவையோடு, ராமராஜன்/ கனகாவின் காதலையும் சேர்த்து, காதலின் பலத்தை கரகாட்டத்திற்கு இயல்பாக கூட்டி,திரைப்படம் முழுவதும் கரகத்தால் பலரையும் கிங்கவைத்த பெருமை, என்றென்றும் கங்கை அமரனுக்கு உண்டு .

  'கரகாட்டக்காரன்'திரைப்படத்தின் தனித்தன்மையே ,துவக்கம் முதல் இறுதி வரை கரகத்தை தலைக்கவசமாகக் கொண்டு,கரகக்கலையின் கம்பீரத்தை ரசிகர்களுக்கு காணிக்கையாக்கிய  இயக்கமும்,இசையுமாகும்."முந்தி முந்தி விநாயகனே''என்று துவங்கி, இரு முறை இடம்பெறும்'மாங்குயிலே பூங்குயிலே' பாடல் காட்சிகளில் ஒன்றில்,கரகத்தை அவ்வப்போது இணைத்து,இறுதியில் 'மாரியம்மா மாரியம்மா'பாடல்வரை,கரகம் சுமந்த சிரசின் கலைப்பெருமையை கலைத்தாயில் இரு புதல்வர்களும் கச்சிதமாய் வெண்திரையில் விருட்சமாக்கினர்.  

   கரகத்தின் மேன்மையை,கிராமத்தின் பெருமிதத்துடன்,காட்சிகளும் வசனங்களும் சூழலுடன் பொருந்தி, திரைப்படம் காணவரும் அனைவரின் நெஞ்சங்களையும் கரகத்தால் கிறங்கவைத்த திரைப்படமே 'கரகாட்டக்காரன்'.கவுண்டமணி செந்திலின் வாழைப்பழ நகைச்சுவைக் காட்சியும், பாடல்களின் இனிமையும், இத்திரைப்படத் தின் வெற்றிக்கு இன்னுமொரு வலுவான காரணமாய் அமைந்தது.

   கரகாட்டக்காரனுக்குப்பிறகு  இராமநாராயனின் இயக்கத்தில் உருவான 'துர்கா' திரைப்படத்தில் கனகா தலையில் கரகத்துடன் நடனமாடினார் என்பது குறிப்பிடத் தக்கது.மேலும் அவர் நடனமாடும் அக்காட்சியில் இடம்பெறும் பாடலுக்கு 'மாங்குயிலே'பாடலின் இசைஞானியின் இசை வடிவம், இசையமைப்பாளர்கள் சங்கர் கணேஷால் பயன் படுத்தப்பட்டது என்பதும் இன்னுமொரு சுவையான செய்தியாகும்.   

   கங்கை அமரனின் கரக வெற்றிக்குப் பிறகு கிட்டத்தட்ட பத்தாண்டுகள் கழித்து வெளிவந்த திரைப்படமே என் ஆசை ராசாவே{1998}.கஸ்தூரி ராஜாவின் இயக்கத் தில் செவாலியர் சிவாஜி கணேசனும் ராதிகாவும் நடித்து கரகத்தால் கிறங்க வைத்த இன்னுமொரு திரைப்படம்தான்,'என் ஆசை ராசாவே'.ஆனால் 'கரகாட்டக்காரன்' திரைப் படத்தைக் காட்டிலும் கதைக் கருவின் ஆழமும் கதாபாத்திரங்களின் நெகிழ்ச்சி யூட்டும் உணர்வுப் பரிமாற்றமும்'என் ஆசை ராசா'வின் தனிச் சிறப்பாகும்.

  ஆனால்,கரகாட்டக்காரனின் பொழுது போக்கு அம்சங்கள் எதுவுமே இல்லாததால் சிவாஜி இருந்தும்,அதன் வெற்றியை இத்திரைப்படம் பெறவில்லை. திரைப்படத் தின் இறுதிக்காட்சியில் காலில் சலங்கை கட்டி,தலையில் கரகம் ஏற்றி,நடிகர் திலகம் தனது முகத்தின் என்றென்றும் முழுமை பெற்ற நடிப்பு முதிர்ச்சியுடன் களமிறங்கி, இறுதிக்காட்சியினை இறுக்கமாக  இறக்கிவைத்தார் .

  தேவாவின் இசையில் மலேஷியா வாசுதேவன் மற்றும் ஸ்வர்ணலதா குரல்களில் "கட்டணும் கட்டணும்"பாடல் கரகாட்டதால் கரகோஷத்தை ஏற்படுத்தியது.திரைப் படத்தின் பல பாடல்கள் கிராமத்துன்,கலைப் பார்வையையும்,சிவாஜி ராதிகா வோடு ,முரளி,சுவலட்சுமி,ரோஜா மணிவண்ணன்,விஜயகுமார் ஆகியோரின்  நடிப்புக் கூட்டணியும்,முரசுக்கொட்டி முத்திரை பதிக்க,'என் ஆச ராசா'வை நம் ஆசை ராசா க்கியது.

   திரைப்படத்தில் மூன்றுமுறை ராதிகா உச்சரிக்கும்'கேவலம் கரகத்துக்காக' எனும் சிவாஜியால் ஜீரணிக்கமுடியாத சொற்களால்,அவரின் வைராக்கியத்துடன் தானும் தன மகன் முரளியும் என்றென்றும் கரகத்திலிருந்து பிரிக்கமுடியாதவர்கள் என்று திட்டவட்டமாய்ப் பறைசாற்றியது. 

  நாட்டுப்புற கலையினை கிராமியப் பாடல்களின் முதன்மையுடன் விளக்கும் வண்ணம்,கஸ்தூரிராஜா 'நாட்டுப்புற பாட்டு'எனும் திரைப்படத்தினையும் இயக்கி வெளியிட்டார்.சிவகுமார் குஷ்பு நடிப்பில் உருவான இத்திரைப்படத்தில் தன்  மனைவி குஷ்புவின் கலை ஆர்வத்தை சந்தேகத்துடன் பார்க்கும் கணவராக சிவகுமார் நடித்திருந்தார்.ஆனால் இத்திரைப்படம்,கரகத்தை முன்னிறுத்த வில்லை. 

  இருப்பினும்,கரகாட்டக்காரனும் என் ஆசை ராசாவும்,கரகாட்டத்தை கலைத்தாயின் சீர்மிகு படைப்புகளில் ஒன்றாய் மிகவும் அழுத்தமாக நம் நினைவுகளில் விட்டுச் சென்றன என்பதும்,கரகாட்டத்தின் கிறக்கம் இப்படங்களை நினைக்கும் போதெல் லாம் ரசிகர்களுக்கு கிட்டும் என்பதும் திண்ணமே !                 

                                                  ============0==============

No comments:

Post a Comment