Monday, May 23, 2022

இறைவன் இருக்கின்றானா?

"இறைவன் இருக்கின்றானா?

மனிதன் கேட்கிறான்

அவன் இருந்தால் உலகத்திலே
எங்கே வாழ்கிறான்
நான் ஆத்திகனானேன்
அவன் அகப்படவில்லை
நான் நாத்திகனானேன்
அவன் பயப்படவில்லை"

   கலைஞரின் எழுத்துவண்ணத்தில் உருவான'அவன் பித்தனா'{1966}எனும் திரைப்படத்திற்காக கவியரசு கண்ணதாசனின்,கற்பனை ஊற்றாய் உருவெடுத்த, இந்த அருமையான பாடல் வரிகள்.கேட்போர் நெஞ்சங்களில் அழுத்தமாய் விழுந்து அர்த்தமுள்ள,ஆழமான,விடை அறியா பல கேள்விகளை,விட்டுச் சென்றன,
    டி.எம்.சௌந்தராஜன்,பி.சுசீலாவின் கம்பீரமான,தெளிவான குரல்களில், என்றும் மனக்கடலில் முத்துக்குளிக்கச் செய்த பாடல்களில் இதுவும் ஒன்றாகும்."யார்  இந்த இறைவன்?எங்கிருந்து வந்தான்? என்ன இவனது பூர்வீகம்?"மதங்களுக்கு முந்திய வனா?மதங்களால்  மனிதர் மனதில் மின்கலமாய்ப் பொறுத்தப் பட்டவனா?உலகம் முழுவதும் மார்தட்டும் மனித இனத்திற்கு, மாறுவேடங்களில் காட்சியளிக்கும்  இவனது உண்மையான உருவமென்ன?
    இதற்கான விடையையும் 'வளர்பிறை' {1962}திரைப்படத்தில்,கவியரசு கண்ணதாசனே வழங்கியிருக்கிறார். 

"பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டு 
புரியாமலே இருப்பான் ஒருவன் 
அவனை புரிந்துகொண்டால் அவன்தான் இறைவன்".

  இப்படி புரியாத இறைவனுக்கு பல பெயர்கள் சூட்டி,அவனை பல மதங்களுக்குள் சிறைவைத்து,தனது இறைமேலாண்மையையை நிலைநிறுத்த அன்றாடம் போராடிக்கொண்டிருக்கிறான் மனிதன்.

"தென்னை இளநீருக்குள்ளே தேங்கியுள்ள ஒட்டுக்குள்ளே தேங்காய்யைப்போலிருப்பான் ஒருவன் 
தெரிந்துகொண்டால் அவன்தான் இறைவன்".
 
  என்று கவியரசு எழுதிவைத்ததற்கு முரணாக,மதத்தை தென்னையாக்கி, மதவெறியால்  இளநீரை  மாசுபட்ட  நீராக்கி,தேக்கிவைத்த தறிகெட்ட ஓடுகளில் தேங்காயை தேடும் மனிதன் பார்வைக்கு என்றேனும்,உண்மையிலேயே இறைவன் எட்டக்கூடுமோ? 

  இதே கண்ணதாசன் 'திருவருட்ச்செல்வர்' {1967}திரைப்படத்தில் ,

"இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி 
எங்கெங்கோ அலைகிறார் ஞானத்தங்கமே 
அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே"
 
  என்று விடுகதை கூறி,அதற்கான விடையை 'சரஸ்வதி சபதம்' {1966}திரைப்படத் தில் தெளிவாகக்காண வைத்தார்.

"தெய்வம் இருப்பது எங்கே 
அது இங்கே வேறெங்கே"
  
என்று தொடங்கி, 

"தெளிந்த
நினைவும் திறந்த
நெஞ்சும் நிறைந்ததுண்டோ 
அங்கே" 

 என்று ரத்தினச்சுருக்கமாய் விடையளித்து அதனைத் தொடர்ந்து,
 
"பொன்னும் பொருளும் நிறைந்தவர் நெஞ்சம் 
பொய்யில் வளர்ந்த காடு"
 
என்றும்,
 
"எண்ணும் எழுத்தும் நிறைந்தவர் நெஞ்சம்
இறைவன் திகழும் வீடு"
 
   என்றும்,மாயத்திரைவிலக்கி,மனசாட்சியில் இறைவனை காணவைத்தார்.மேலும் அதே பாடலில் அவர்,
 
"ஆடை அணிகலன் ஆடம்பரங்கள் 
ஆண்டவன் விரும்புவதில்லை 
அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும் 
ஆலய வழிபாடில்லை"
 
    என்று வழிபாட்டுப்பாதைக்கு வரிகளால் விளக்கேற்றிவைத்தார்.இங்கே குறிப்பிட்ட முதல் பாடலைத் தவிர மற்ற மூன்று பாடல்களில் இரண்டை, டி.எம்.சௌந்தராஜனும்,'இருக்கும் இடத்தை'பாடலை சீர்காழி கோவிந்த ராஜனும் பாடியிருந்தனர்.இதில் இன்னுமொரு சுவையான செய்தி என்னவெனில், புதிருக்கும் கேள்விக்குமான பாடல்களுக்கு முன்பே,அவற்றுக்கான விடைகளை கவியரசு கண்டிருந்தார் என்பதாகும்.இதற்கு மேற்கண்ட நான்கு திரைப்படங்கள் வெளியான ஆண்டுகளே சாட்சி.        
    இறைவனைப்பற்றிய கவிஞர்களின் கற்பனை ஒருபுறமிருக்க,இறைவன் இருக்கின்றானா இல்லையா எனும் எதிரும் புதிருமான சிந்தனைகளோடு, மனிதனின் மூளை அவ்வப்போது மல்லுகட்டுவதுண்டு.
    பிறக்கையிலே யாருமிங்கே ஆத்திகராய், நாத்திகராய்,பிறப்பதில்லை  மனிதரில்  சிலர் தங்கள் உடலில் பச்சை குத்திக்கொள் வதுபோல மண்ணில் பிறந்த அனைவருக்கும் மத,மொழி,சாதி அடையாளங்கள் கால அட்டவணையிட்டு  அளிக்கைப்படுகின்றன. 
    சடங்குகளும் சம்பிரதாயங்களும்,சாதி மதத்தின் பெயரால் இறைமையை பின்னுக் குத்தள்ளி,மனித அடையாளங்களுக்கு முன்னுரிமை அளிக்கையில் உயர்வு தாழ்வு நிலைகளால் உந்தப்பெற்ற மனித சமூகம்,சமத்துவம் மறந்து உயர்நிலைப் போர் நடத்துகையில்,இறைவன் யார் என்றும்,இறைவன்மீது நம்பிக்கை வேண்டுமா என்றும்,கேள்விகள் எழுகின்றன.மதத்தினை விழுங்கும் சாதிப் பெருமை மதத்துடன் சேர்த்து இறைவனையும்  விழுங்குகிறது.
    இன்றைக்கு தமிழகத்தில் நாத்திகச் சிந்தனையில் ஊறிப்போன,பலருக்கும் நாத்திக ஊற்றாய் அமைந்த,தந்தை பெரியார் கூட,அவரது 25 வயதில் வாரணாசியில் அவருக்கு இழைக்கப்பட்ட மேற்சாதிக் கொடுமைகளால்தான் நாத்திகத்தின் நாடித் துடிப்பை முதன் முதலில் உணர்ந்தார். 
   ஆத்திகத்தையும் நாத்திகத்தையும் சிறிதுநேரம் மறந்து,மனித வாழ்வின் பல பிரச்சனைகளை யோசிக்கையில்,பிறப்பு இறப்பு கணக்குகளையும் காரணங் களையும் சிந்திக்கையில்,சாதியும் மதமும் சவக்குழி காணக்கூடும்.இந்த கோரமான உண்மையினைத்தான்,சவக்குழிக்கும் எரியூட்டலுக்கும் போராடிய,கோவிட தொற்றில் உயிரிழந்தோரின் உடல்கள் வெளிப்படுத்தின. 
   மதமின்றி இங்கு இறைவனுக்கு என்ன வேலை எனும் கேள்வி எழுகையில்,இறை வனுக்கும் இறைவழிபாட்டிற்கும் மதம் தேவைதானா,எனும் மறுபுறக்கேள்வியும் எழக்கூடும்.இதனால்தான் நேரு(Nehru), பெட்ரண்ட் ரஸ்ஸல்(Bertrand Russell) போன்ற அறிவுசார்ந்த சிலர், நாத்திகச் சிந்தனைக்கு அப்பாற்பட்டு,மதம் மற்றும் இறைவன் போன்ற நிலைப்பாடுகளுக்கு இடம்கொடுக்காமல்,தங்களது ஆழ்ந்த அறிவாற்றலை எழுத்துக்களாய், கட்டுரைகளாய் மக்களிடம் பகிர்ந்து கொண்டனர்.
    நற்சிந்தனை,மனித நேயம்,சமத்துவம் பேணல்,எனும் முக்கூடலில் மனசாட்சியை மைய்யமாக வைத்து வெளிப்படும் ஒவ்வொரு செயலிலும்,பூஜ்ஜியத்தை ஆளும் கண்ணுக்குப் புலப்படா இறைவனைக் காணமுடியும். எம்மதத்திராயினும்,நம்மில் பலரும் இக்கட்டான,இன்னல்களில் சிக்குண்டு போகும் காலங்களில் மட்டுமே, இறைவனை திமாக நினைக்கிறோம்.
   மாறாஅன்றாட வாழ்வில் இறைவனை பங்காளி ஆக்கிவிட்டால் 'சிக்கெனைப் பிடித்தேன் எங்கெழுந்தருள்வது  இனியே'எனும் அறைகூவல் மனிதன்/ இறைவன் உறவின் வாடிக்கையாகும்.நம்முள் குடிகொண்ட குண சீலங்களை நாமே சுட்டிக்காட்டி,"இறைவன் இருக்கின்றானா"என்று ஒருபோதும் நாம் கேட்கப்போவ தில்லை.வேண்டுமெனில்,இப்பதிவின் துவக்கத்தில் குறிப்பிடப்பட்ட 'அவன் பித்தனா'திரைப்படத்தின் எதிர்வினைதாக்கமாக ஒலிக்கும் 

"மனிதன் இருக்கிறானா?.
இறைவன் கேட்கிறான்
அவன் இருந்தால் உலகத்திலே
எங்கே வாழ்கிறான்
நான் அன்பு காட்டினேன்
அவன் ஆட்கொள்ளவில்லை
இ[எ] ந்தத் துன்பம் தீர்க்கவும்
அவன் துணை வரவில்லை". 

   எனும் கவியரசின் வரிகளை,இறைவனை தேடும் நிலைப்பாட்டிற்கு,பதிலடிப் படலமாக எடுத்துரைக்கலாம் !
  
ப சந்திரசேகரன்.   

No comments:

Post a Comment