Friday, June 24, 2022

'நான்'எனும் வட்டத்திற்குள் தமிழ்த்திரை.

யான் எனது எனும் செருக்கு அறுப்பான்

வானோர்க்கு உயர்ந்த உலகம்புகும்

   'நான்''எனது'எனும் மயக்கம் தவிர்ப்பவன்,தேவர்க்கும் எட்டாத உயரத்தை அடைவான் எனும் பொருள் தருகிறது,வள்ளுவரின் இக்குறள். இருப்பினும் நடைமுறை வாழ்வில், 'நான்''எனது'என்பன இரண்டும் மனிதவாழ்வினை இயக்கும் இலக்குகளாக அமைகின்றன.இந்த இலக்குகளை திரையுலகு தவறாமல் புள்ளிகளால் கோலமிட்டு புரிய வைத்திருக்கிறது.

   தமிழ்த்திரை,மேற்சொன்ன இலக்குகளை திரைப்பட தலைப்பு களாகவும் பாடல்களாகவும்,பல கோணங்களில் அழுத்தமாகவும் ஆழமாகவும்,படம் பிடித்துக்காட்டி யிருக்கிறது.தமிழ்த் திரைப்பட தலைப்புகளாக,'நான்', 'நானே ராஜா','நான் பெற்ற செல்வம்,'நான் வளர்த்த தஙகை','நான் கண்ட சொர்க்கம்','நான் சொல்லும் ரகசியம்','நான் வணங்கும் தெய்வம்' ,'நானும் ஒரு பெண்''நான் போட்ட சவால்','உனக்காக நான்','நானே ராஜா நானே மந்திரி''நான் வாழ வைப்பேன்' ,'நான் ஏன் பிறந்தேன்''நான் பாடும் பாடல்,' 'நானும் ஒரு தொழிலாளி' ,போன்ற எண்ணற்ற திரைப்பட  தலைப்புகள் திரை ரங்குகளை திகைப்புக்குள்ளாக்கியிருக்கின்றன.

   பொதுவாக,எம்.ஜி.ஆரின் திரைப்பட பாடல்களில்தான் 'நான்'எனும் சொல் மேலோங்கியிருக்கும்.ஆனால் திரைப் பட தலைப்புகளில்,நான் ஆணை யிட்டால்,நான் ஏன் பிறந்தேன், போன்ற படங்களைத் தவிர மேலே குறிப்பிட்ட வைகளில் பெரும்பாலான திரைப் படங்கள்,சிவாஜி கணேசன் நடித்தவை யாகும்.'நான்'எனும் சொல் பாடலில் இடம்பெறுகையில், பெருமிதம், தன்னம்பிக்கை,தன்னிரக்கம்,தன் நிலை அறியாமை,காதல் வயப்படுதல், தன்னையே களியாக்குதல், போன்ற பல்வேறு நிலைப் பாடுகளை தமிழ்திரைப் பாடல்களில் நம்மால் அறிந்துணர முடிந்தது.

   எம்.ஜி.ஆரின் திரைப்பாடல்களில், தன்நிலையறிதல்,தன்னம்பிக்கை,  தான் எனும் உயர்ச்சி, வெளிப்படை யாகவும்,உள்ளடங்கியும்,அர்த்தமுள்ள வரிகளால் அவரின் லட்சக்கணக்கான ரசிகர்களின் லட்சியக்கவானது.  'எங்க வீட்டுப் பிள்ளை'திரைப்படத்தில் இடம்பெற்று திரையரங்குகளில் அனைவரையும் எழுந்து உற்சாகமாக நடனமாடச் செய்த,"நான் ஆணை யிட்டால் அது நடந்துவிட்டால்"எனும் பாடல் இன்று கேட்டாலும் நாடி நரம் பெல்லாம் நல்லெண்ணங்களுடன் முறுக்கேறும். 'நம் நாடு'திரைப்படத்தில் நாம் கேட்டு ரசித்த, 

நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான் 

மனத்திலே துணிச்சலை வளர்த்தவன் நான் நான் 

எனும் பாடலை கேட்கையில் தன்னம்பிக்கையும் நெஞ்சுரமும் உச்சம் பெரும்,

'"நான் ஏன் பிறந்தேன்

இந்த நாட்டுக்கு நலமென புரிந்தேன்"

  எனும் கேள்விக்கணை தொடுக்கும் பாடலில் நாட்டுப்பற்று நடுநெஞ்சில் நங்கூரமிடும்.(படம்:-நான் ஏன் பிறந்தேன்).அதே திரைப்படத்தில், 

நான் பாடும் பாடல் நலமாகவேண்டும்

இசை வெள்ளம் நதியாக ஓடும்

அதில் இளநெஞ்சம் படகாக ஆடும்

  எனும் பாடல் வரிகள் தன் பாடலின் பெருமையையும்,அதனால் பிறருக்கு உண்டாகும் நன்மையையும் பாடலாய் முழக்கமிட்டது.

உலகம் பிறந்தது எனக்காக 

ஓடும் நதிகளும் எனக்காக 

மலர்கள் மலர்வது எனக்காக 

அன்னை மடியை விரித்தாள் எனக்காக 

 எனும் 'பாசம்'திரைப்படப் பாடல், நம்மை நாமாக உணரச் செய்து,நம் இலக்குகளை வென்றெடுக்கச் செய்யும்.'புதிய பூமி'திரைப்படத்தில் இடம்பெற்ற 

நான் உங்கள் வீட்டு பிள்ளை 

இது ஊரறிந்த உண்மை 

எனும் பாடல்,தனி நபர் ஒருவரை சமூகத்திற்குச் சொந்தமாக்கி,மனிதம் போற்றிது.

  இப்பதிவில் குறிப்பிட்ட அனைத்து எம்.ஜி.ஆர் பாடல்களும் அவரின் தனிப்பாடல்களின் உயிர் நாடியாக பலகாலம் விளங்கிய,டி.எம்.சௌந்த ராஜன் பாடினார் என்பது,தமிழ்த் திரையுலகின் தனிப்பெரும் வரலாறா கும்.மேலும் இப்பாடல்களில் 'பாசம்' திரைப்படப்பாடலை கண்ணதாசனும் 'புதியபூமி'பாடலை பூவை செங்குட்டுவனும்,இதர பால்கள் எல்லாவற் றையும் வாலி புணைந்தார் என்பதும் இன்னொரு சிறப்பான செய்தியாகும்.

    எம்.ஜி.ஆரின் குடியிருந்த கோயில் திரைப்படத்தில் கேட்ட, 

நான் யார் நான் யார் நான் யார் 

நாலும் தெரிந்தவர் யார் யார் 

  எனும் T.M.S பாடலும் 'அழகே உன்னை ஆராதிக்கிறேன்'திரைப் படத்தில் நடிகை லதாவுக்காக வாணி ஜெயராம் பாடி தமிழகம் முழுக்க ரசிகர்களால் கொண்டாடப்பட்ட, 

நானே நானா யாரோதானா 

மெல்ல மெல்ல மாறினேனா

 எனும் பாடலும்,தன்னிலை அறியா மனக்குழப்பத்தை அழுத்தமாய் புலப்படுத்தின.இதில் முதல் பாடலை கவிஞர் புலமைப்பித்தன் எழுத, இரண்டாவது பாடல் வாலியின் கற்பனையில் உருவாயிற்று.

 அதே நேரத்தில் 'சகோதரி' திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் J.B.சந்திரபாபு பாடிய,

நான் ஒரு முட்டாளுங்க 

ரொம்ப நல்லா பச்சவங்க 

நாலு பேரு சொன்னாங்க 

   எனும் பாடல்,தன்னை தாழ்த்தி அதன்மூலம் தகுதியற்றவரை தாழ்த்தும் உள்குத்தாக நுணுக்கமாய் அறியப்பட்டது.கண்ணதாசனின் கருத்துச் செறிவான இப்பாடல், 'சகோதரி'திரைப்படத்தின் மற்ற பாடல்களை பின்னுக்குத்தள்ளி சாகா வரம்பெற்றது.இப்பாடலின் பாதையில் இன்னும் சற்று தீவிரமாகப்பயணித்து முரண்பட்டு தன்னாராய்ச்சி செய்த பாடலே, ரஜினியின் 'பொல்லாதவன்' திரைப்படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியத் தின் வசீகரக் குரலில் அனைவரையும் வசிப்படுத்திய,

நான் பொல்லாதவன்

பொய் சொல்லாதவன்

என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்

வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்

   எனும் தன்னைத் தாழ்தி உயர்த்திய பாடல்.சந்திரபாபுவின் பாடலை எழுதிய கவியரசுதான் இப்பாடலையும் வித்தியாசமாக எழுதி,மனித முரண்பாடுகளை முழுநிலவாக்கினார்.

   இதுவரை சுட்டிக்காட்டப்பட்ட பாடல் கள் இடம்பெற்ற திரைப் படங்களில்  'சகோதரி'க்கு சுதர்சனமும்,'அழகே உன்னை ஆராதிக்கிறேன்'படத்திற்கு இளையராஜாவும் இசையமைக்க,இதர படங்கள் அனைத்திற்கும் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமுர்த்தி இணைந்தோ அல்லது எம்.எஸ்.விஸ்வ நாதன் மட்டுமோ இசையமைத்திருந் தனர்.

   'நான்'எனும் சொல்லுக்குள் பெருமிதமும் தாழ்வு நிலைகளும்,அவ்வப் போது எழக்கூடும்.பெருமிதம் தன்னைப்பற்றியோ மற்றவரைப்பற்றி தான் அடையும் பெருமிதத்தைப் பற்றியோ இருக்கலாம். தன்னைப் பற்றிய பெருமிதமே எம்.ஜி.ஆரின் 'எங்கள் தங்கம்'திரைப்படத்தில் டி.எம். எஸ்ஸும் பி சுசீலாவும் இணைந்து பாடிய, 

"நான் அளவோடு ரசிப்பவன் 

எதையும் அளவின்றி கொடுப்பவன்"

 என்ற பாடலாகும்.பிறரால் ஏற்படும் பெருமிதத்தை புளகாங்கிதத்துடன் வெளிப்படுத்திய பாடலே,'அன்பேவா' திரைப்படத்தில் எம்.ஜி.ஆருக்காக      டி.எம்.எஸ் பாடிய, 

"நான் பார்த்தத்திலே அவள் ஒருத்தியைத் தான் 

நல்ல அழகியென்பேன் நல்ல அழகியென்பேன் 

நான் கேட்டதிலே அவள் வார்த்தையைத்தான் 

ஒரு கவிதை என்பேன் ஒரு கவிதை என்பேன்" 

என்று பாராட்டுப்பரவசத்தை பறை சாற்றியதாகும்.

   எங்கும் நீக்கமர நிறைந்திருக்கும் பரம்பொருளைக் கூட,மனித அவதார மாய் நினைத்துப்பார்க்கையில்,

"மன்னனும் நானே மக்களும் நானே

மரம் செடி கொடியும் நானே"

என்றும்,

"பாட்டும் நானே பாவமும் நானே

பாடும் உனைநான் பாடவைத்தேனே"

  என்றும் பெருமித்தை வெளிப்படுத்தி 'நான்'என்பதை நிலைநிறுத்தும். இந்த இரண்டு பாடல்களும் சிவாஜி கணேசன் நடித்து வெளிவந்த முறையே'கர்ணன்'மற்றும் 'திருவிளை யாடல்'ஆகிய திரைப்படங்களில் இடம்பெற்றன.இரு பாடல்களையும் கண்ணதாசன் எழுத 'கர்ணன்' பாடலுக்கு மெல்லிசை மன்னரும் 'திருவிளையாடல்' திரைப்படத்திற்கு திரையிசைத் திலகமும் இசையமைத்தனர்.

   ஆனால்,இந்த ஆனந்த பெருமிதத்திற்கு முற்றிலும் மாறாக 'படித்தால் மட்டும் போதுமா'திரைப்படத்தில் சிவாஜிக்காக டி.எம்.எஸ் பாடிய 

"நான் கவிஞனும் இல்லை 

நல்ல ரசிகனுமில்லை 

காதலெனும் ஆசையில்லா 

பொம்மையுமில்லை: 

   எனும் தன்னிரக்கம் கலந்த வரிகள் ஆதங்க உணர்வுளை வேதனையுடன் வெளிப்படுத்தின.இப்பாடலும் கண்ணதாசனின் கற்பனையில் உருவாகி, விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் நம்மை இளைப்பாற்றியது.  

     'நான்'எனும் சொல் முழுமையாக நனைந்து கரைந்து போவது காதல் வசப்படும்போதுதான் என்பதை கவிதையாக வெளிப்படுத்தும் திரைப் படப்பாடல்கள் நிறைய இருந்தாலும்,  காதல் இன்பத்தில் நான் என்பதை நீ எனும் சொல்லுடன் சேர்த்து சர்க்கரைப் பொங்கலென இனித்த பாடலே 'சூரியகாந்தி' திரைப்படத்தில் எஸ்.பி.பி யும் ஜெயலலிதாவும் ஒருங்கிணைந்து பாடிய, 

"நான் என்றால் அது அவளும் நானும்"

என்ற மனம் மயக்கும் பாடல்.வாலியின் இப்பாடலுக்கும் மெல்லிசை மன்னரே இசையமைத்திருந்தார்.காதலின் சங்கமத்தில்,'நான் என்பதே இல்லை' என்பதை எளிமையாக உரைத்தது, கமலின் 'சூரசம்ஹாரம்' திரைப்படத் தில் கங்கை அமரன் எழுதிய,

"நான் என்பது நீ அல்லவோ 

தேவ தேவி" 

   எனும் பாடல். அருண் மொழியும் கே.எஸ்.சித்ராவும் பாடிய இந்த இனிய பாடலுக்கு,இசைஞானி இசையால், 'நான்'என்பதையே இல்லை என்றாக் கினார்.இதே கருத்தினை இன்னும் அற்புதமாய் வெளிப்படுத்தின 'குழந்தையும் தெய்வமும்' திரைப்படத்தில் கவிஞர் வாலி எளிமையாய் எழுதி ஏற்றம் கண்ட,

"நான் நன்றி சொல்வேன். 

என் கண்களுக்கு

உன்னை என்னருகே 

கொண்டு வந்ததர்க்கு

நான்நன்றி சொல்ல சொல்ல

நானும் மெல்ல மெல்ல 

என்னை மறப்பதென்ன"

   எனும் பொன்னான வரிகள். இப்பாடலுக்கு மெல்லிசை மன்னர் மேன்மையாய் இசையமைத்து,தானே P.சுசிலாவுடன் மெய்மறந்து பாடியிருந்தார் என்பது தேனினும் இனிமையாகும்.

  முடிவாக,நான் எனும் சொல் நதியாக ஓடி,தாய்மைக்கடலில் சங்கமிப்ப துண்டு.அப்படி நானாக இல்லாது, நல்வாழ்வு தந்த தாய்மையில் தன்னை இழக்கச்செய்த பாடலே,'தூங்காதே தம்பி தூங்காதே'திரைப்படத்தில் இசைஞானியின் சங்கீதக்கடலை தாய்மை எனக்கருதி,அதில் ரம்யமாய் கரைந்துபோன எஸ்.பி.பி.குரலில் இதமாய் ஒலித்த,

"நானாக நானில்லை தாயே 

நல்வாழ்வு தந்தாயே நீயே"

  எனும் இணையற்ற பாடலாகும்.இந்த மகத்தான வரிகள்,தமிழ்த்திரைக்கு வாலியின் வளமான காணிக்கை யாகும்.

  'நான்'எனும் வட்டத்திற்குள் தமிழ்த் திரைப்படங்கள்,தலைப்புகளாகவும் பாடல் வரிகளாகவும் இதிகாசம் படைத்திருக்கின்றன என்பது இங்கே குறிப்பிடப்பட்டது.இப்பதிவில் காணப்படும் உதாரணங்களாய் நினைவுக்கதவுகளை தட்டியவை ஒரு சில பாடல்களும்,திரைப்பட தலைப்புகளுமேயாகும்.தமிழ்த் திரையில் நாட்ட முள்ளோரை,இது குறித்து தோன்றும் எண்ணற்ற எடுத்துக்காட்டுகளும்,அவை எழுப்பும் சிந்தனைகளும் இப்பாதையினூடே மேலும் விரிவாக பயணிக்கச் செய்யும்.

ப.சந்திரசேகரன்

                            ==============0===============


     


No comments:

Post a Comment