Sunday, October 2, 2022

தமிழ்த்திரையில் திரண்ட ஊர்கள்

"எந்த ஊர் என்றவனே

இருந்த ஊரைச் சொல்லவா 

அந்த ஊர் நீயும் கூட 

அறிந்த ஊர் அல்லவா"  


  என்று தொடங்கும் பாடலொன்று எஸ்.எஸ்.ராஜேந்திரன் &பத்மினி இணைந்து நடித்த 'காட்டு ரோஜா'எனும் திரைப்படத்தில் இடம் பெற்றிருந் தது.கே.வி.மகா தேவன் இசையில், P.B.ஸ்ரீனிவாஸ் பாடிய கண்ணதாச னின் இந்த அரிய பாடலில்,உடலூர், உறவூர்,கருவூர்,மண்ணூர்,கண்ணூர், கலையூர்,காலூர்,காளையூர் விழியூர், பாலூர் காதலூர்,கன்னியுர்,கீழூர், சேர்த்து,மேலூர் வேலூர்,பள்ளத்தூர், கடலூர்,மேட்டூர் போன்ற தமிழக ஊர்களும் இடம்பெற்றிருந்தன. கற்பனையால் எண்ணற்ற மாய ஊர்களைப் படைத்தார் கவியரசு கண்ணதாசன்.

  ஊர்களின் பெயர்களைத் தாங்கி நம்ம ஊர் நாயகன்,ஊர்க்காவலன்,ஊர் மரி யாதை,நம்ம ஊரு நல்ல ஊரு,எங்க ஊரு பாட்டுக்காரன்,எங்க ஊரு காவக் காரன்,தம்பிக்கு எந்த ஊரு,தம்பிக்கு இந்த ஊரு,படங்கள் மட்டுமல்லாது, ராமராஜனின் வெள்ளி விழாப் படமான கரகாட்டக்காரன் திரைப்படத்தில் நகைச்சுவையாய் அமைந்த, 

"ஊருவிட்டு ஊரு வந்து

காதல் கீதல் பண்ணாதீங்க"

 எனும் பாடலின் முதல் வரியே,பின்னர் அதே ராமராஜனின்,வேறொரு திரைப் படத் தலைப்பாயிற்று.

   ஊரைச்சுற்றிவந்த திரைப்பாடல் களில்'தேனிலவு'திரைப்படத்தில் தன்னை ஏமாற்றுபவனை நல்லவன் என ஒரு பெண் நம்பிப்பாடுவதாக அமந்த,ஜிக்கி குரலில் நாம் கேட்ட, 

"ஊரெங்கும் தேடினேன் 

ஒருவரைக் கண்டேன்

அந்த ஒருவரிடம் தேடினேன்

உள்ளத்தைக் கண்டேன்" 

  எனும் ஏ.எம்.ராஜாவின் இசையில் அமைந்த பாடலும்,'படிக்காத மேதை" திரைப்படத் தில் அதே கண்ணதாசன் வரிகளை கே.வி.மகாதேவன் இசையமைக்க,டி.எம்.எஸ்ஸும் சூலமங்கலம் ராஜலட்சுமியும் பாடிய, 

"ஒரே ஒரு ஊரிலே ஓரே ஒரு ராஜா

ஒரே ஒரு ராஜாவுக்கு ஒரே ஒரு ராணி"

  எனும் தெளிந்த நீரோடையாய் அமைந்த பாடலும்,ரஜினியின்'படிக்கா தவன்'திரைப்படத்தில் கே.ஜே. ஏசுதாஸ் அட்டகாசமாய்ப் பாடிய,

"ஊரத் தெரிஞ்சுகிட்டேன்

உலகம் புரிஞ்சுகிட்டேன்

கண்மணி ஏங்கண்மணி"

எனும் இளையராஜாவின் மேலான இசையிலமைந்த,வைரமுத்தவின்  மேன்மைமிகுப் பாடலும் தனியிடம் பிடிக்கும்.

   ஊர்களின் பெயர்களைக் கொண்டு திரைப்படத்தலைப்புகளைப் படைப் பதில் மன்னராக விளங்கிய,        இயக்குனர் பேரரசுவின் இயக்கத்தில் உருவான,திருப்பாச்சி,சிவகாசி, திருப்பதி,பழனி,மருதமலை,தர்மபுரி திருவண்ணாமலை,மற்றும் திருத்தனி ஆகிய திரைப் படங்கள் தனித்தன்மை வாய்ந்தவை. இவற்றோடு ஆர்.கே. செல்வமணியின் 'செங்கோட்டை', பிரியதர்ஷனின் 'காஞ்சிவரம்' மணி ரத்னத்ணின் 'பாம்பே' ஆர்.பன்னீர் செல்வத்தின் 'ரேணிகுண்டா',பாரதி கண்ணனின், 'திருநெல்வேலி' ப.ரஞ்சித்தின் 'மெட்ராஸ்'போன்ற திரைப்படங்களும் வந்தன.மேலும் மாநிலங்களின் பெயர் வைத்து சரத்குமார் நடித்த 'ராஜஸ்தான்' எனும் படமும் தமிழ்திரை கண்டது.

   ஊர்களின் பெயருடன் கதாநாயகன்/ கதாநாயகியின் பெயரையும் கொண்ட, மதுரை வீரன்,செங்கோட்டை சிங்கம், மலையூர் மம்பட்டியான்,சேலம் விஷ்ணு,கோயம்பத்தூர் மாப்பிள்ளை, புதுக்கோட்டையிலிருந்து சரவணன், திண்டுக்கல் சாரதி,அம்பா சமுத்திரம் அம்பானி,ரெங்கூன் ராதா,சித்தூர் ராணி பத்மினி,போன்ற திரைப்படத் தலைப்புகளையும் தமிழ்த்திரை சந்தித்த துண்டு. இவை எல்லாம் போதாதென்று 'வேலூர் மாவட்டம்' என்ற தலைப்பிலும் ஒரு திரைப்படம் இறங்கியது.ஊர்களின் பெயர்களைத் தாங்கி பயணித்த,நீலகிரி எக்ஸ்பிரஸ், மதராஸ் டு பாண்டிச்சேரி,திருமலை தென்குமரி,சிம்ளா ஸ்பெஷல்,போன்ற நினைவில் வேரூன்றிய திரைப்படங் களும் உண்டு.

 பல ஊர்களின் பெயர்களை பரிச்சியப் படுத்தும் சில பாடல்கள் தமிழ்த்திரை யில் கேட்டிருப்போம்.இதற்கு ஆரம்பப் புள்ளி இட்டதே,'மக்களைப் பெற்ற மகராசி' திரைப்படத்தில் சிவாஜிக்காக டி.எம்.எஸ் பாடிய,

"மணப்பாற மாடுகட்டி 

மாயவரம் ஏறுபூட்டி

வயக்காட்ட உழுது போடு செல்லக்கண்ணு"

   எனும் மறக்கமுடியாத பாடல். இப்பாட லில் ஆத்தூர்,மதுரை, பொள்ளாச்சி, விருதுநகர் ஆகிய ஊர்களின் பெயர்கள் வலம்வரும்.இதே திரைப் படத்தில்,

"அடி தாராபுரம் தாம்பரம் 

உன் தலையில கனகாம்பரம்

அட ஏகாம்பரம் சிதம்ரம்

உன் இடுப்புல பீதாம்பரம்"

  என்று இரண்டு ஊர்களை உள்ளடக் கிய எஸ்.சி.கிருஷ்ணனும்T.G ரத்ன மாலாவும் பாடிய நகைச்சுவை பாட லொன்றும் ரசிகர்களை வெகுவாக மகிழ்வித்தது.இப்பாடலை,கவிஞர் தஞ்சை ராமைய்யாதாஸ் எழுதியிருந் தார்.

  பேரறிஞர் அண்ணாவின்'காதல் ஜோதி'திரைப்படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் ஆனந்தமாய்ப்பாடிய,

"உன்மேல கொண்ட ஆச,உத்தமியே மெத்த உண்டு

சத்தியமா சொல்லுரேண்டி 

தங்க ரத்தினமே 

தாளமுடியாது கண்ணே 

பொன்னு ரத்தினமே"

என்ற காதல்சுவைப் பாட்டின் இடையே,

"ஈரோட்டு சந்தையிலே எனக்கு வேட்டி

எடுத்துக்குவோம்

காஞ்சிபுரம் சிலுக்குசேல தங்க ரத்தினமே

தந்து கண்ணாலம் கட்டிக்குவோம் தங்கரத்தினமே"

  எனும் இதயபூர்வமான வரிகள் இடம் பெரும்.இந்த சீர்காழியாரின் குழை வான பாடல்,டி.கே.ராமமூர்த்தியின் இனிய இசையில் நம் மனம் மயங்கச் செய்தது.

  இதே போன்று,கே.பாலச்சந்தரின் 'பூவா தலையா'திரைப்படத்தில்,

"மதுரையில் பிறந்த மீன்கொடியை

உன் கண்களில் கண்டேனே" 

  எனத்தொடங்கும் டி.எம்.சௌந்தர் ராஜன் பாடிய பாடலில்,தஞ்சை, காஞ்சி,குடந்தை, தூத்துக்குடி,போன்ற ஊர்களின் பெயர்கள் அணி வகுக்கக் காணலாம்.எம்.ஜி.ஆரின் 'தேர்த் திரு விழா'திரைப்படத்தில் ஜெயலலிதாவுக் காக பி.சுசிலா பாடிய,

"தஞ்சாவூரு சீமையிலே கண்ணு

தாவி வந்தேன் பொன்னியம்மா"

எனும் பாடல்,பூம்புகார்,மதுரை,ஆகிய ஊர்களைச் வேகமாகச் சுற்றி வரும்.  

    தஞ்சாவூரை முன் வைத்து வரையப் பட்ட  வைரமுத்துவின் வரிகளுக்கு தேவா இசையமைத்து பாடகர் கிருஷ்ணராஜ் பாடிய வசீகரப்பாடலே 'பொற்காலம்' திரைப்படத்தில் தொழி லோடு மணம்சேர்த்த,

"தஞ்சாவூரு மண்ணு 

தாமிரபரணி தண்ணிய விட்டு 

சேர்த்து சேர்த்து செஞ்சதிந்த பொம்ம

இது பொம்மையில்ல உண்ம"

எனும் ஒப்பற்றபாடல்.

இதே வேகத்தில்'சின்னப்பசங்க நாங்க' எனும் திரைப்படத்தில் இளைய ராஜாவின் இசையில் வாலியின் வரிகளை ரேவதி மற்றும் அவரைச் சுற்றியுள்ளோர் மகிழ்ச்சியுடன் பாடுவது போல,எஸ்.ஜானகி குழுவினருடன் பாடிய,

"என்னை மானமுள்ள பொண்ணு இன்னு 

மதுரையிலே கேட்டாக மன்னார்குடியில் 

கேட்டாக 

அந்த மாயவரத்துல கேட்டாக"

  எனும் சுகமான பாடலில், கோயமுத்தூர்,சின்னமனூர், கண்டமனூர்,மட்டுமல்லாது,மாநிலம் கடந்து 'நெல்லூரில கேட்டாக'என்றும், நாடு கடந்து,'சிங்கப்பூரில கேட்டாக' எனும் வேடிக்கையின் விருட்சத்தில், சுயப்பெருமை களைகட்டும். 

  மேலும்'அழகிய தமிழ்மகன்'திரைப் படத்தில் பென்னி யாள், அர்ச்சித், தர்ஷனா.கே.டி, ஆகியோர் குரல்களில் ஒலித்த,

"மதுரைக்கு போகாதடி 

அங்கே மல்லிப்பூ கண்ண வைக்கும்"

  என்ற பாடலில்,தஞ்சாவூர், தூத்துக்குடி,கொடைக்கானல் போன்ற ஊர்களின் பெயர்கள் பொங்கிவரும். இந்த மென்மையான பா.விஜயின் வரிகள்,ஏ.ஆர்.ரெஹமான் இசையில் தனி நர்த்தனமாடின.

 இசைப்புயல் ஏ.ஆர்.ரெஹ்மானின் ஏகபோக இசையில்,"யாதும் ஊரே யாவரும் கேளீர்"எனும் பாணியில் 'சிவாஜி'திரைப்படத்தில் ஆரவாரத்தை ஏற்படுத்திய,நா.முத்துகுமாரின், 

"பல்லே லக்கா பல்லே லக்கா

சேலத்துக்கா மதுரைக்கா மெட்ராசுக்கா

திருச்சிக்கா,திருத்தணிக்கா,

அண்ணன் வந்தா தமிழ்நாடும்

அமெரிக்கா"

  எனும் உலகளாவிய பாடலை எஸ்.பி.பி, பென்னி டயாள், ஏ.ஆர். ரெஹானா ஆகியோர் உற்சாகத்தை உரமாக்கி,பாடியிருந்தனர். 

  மதுரையின் பெயரைக் கொண்டாடிய வேறொரு பாடலை கார்த்தியும் கல்பனாவும்'திருவிளையாடல் ஆரம்பம்'திரைப்படத்தில் பரவசமாய்ப் பாடியிருந்தனர்.

"மதுர ஜில்லா மச்சான்தான்டி

என் ஜாதகத்தில் குரு உச்சம்தான்டி"

  எனும் விவேக்கின் குறும்புத்தனமான இப் பாடலில் 'பட்டுக்கோட்டை'எனும் ஊரின் பெயரும் இடம் பெரும். ஆடல் கலந்த இப் பாடலுக்கு D.இம்மான் இசையமைத்திருந்தார்.மதுரையின் மணம் பரப்பிய,நெஞ்சில் இனித்த மற்றொரு பாடலே'எங்க ஊரு பாட்டுக் காரன்'திரைப்படத்தில் மனோ,கே.எஸ் சித்ரா குரல்களில் நம்மை வசீகரித்த,

"மதுர மரிக்கொழுந்து வாசம்

என் ராசாத்தி ஒன்னுடைய நேசம்".     

    எனும் கங்கை அமரன் வரிகளிலும் இளையராஜாவின் இசை இனிமை யிலும்,தேனாய் இனித்த பாடல். 

 கமலின் 'பம்மல் சம்பந்தம்' திரைப் படத்தில் பா.விஜயின் வரிகள் கொண்டு,தேவாவின் இசையில் ஒலித்த பாடல் வரிகளே,

"திண்டுக்கல் பூட்ட போட்டு 

வாய பூட்டிக்கோ ஓஹோ 

கோயம்புத்துர் பஞ்ச வச்சி 

காத பொத்திக்கோ ஓஹோ 

ஏ காரைக்குடி உங்கப்பன் வீடு 

நீயும் போய்க்கோ ஓஹோ 

தஞ்சாவூர் பொம்மைக்கு 

இந்த தலைக்கணம் எதுக்கோ"   

 இந்த பாடலை சங்கர் மகாதேவனும் மகாலக்ஷ்மி அய்யரும் அமர்களமாய்ப் பாடியிருந்தனர். 

ஊரைச் சுற்றிவந்த பாடல்களில், ஊரைக்குறை கூறிய,

"மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் 

இங்க மெதுவா போறவங்க யாருமில்ல; 

சரியா தமிழ் பேச ஆளுமில்ல;

ஆம்பளைக்கும் பொம்பளைக்கும்

வித்யாசம் தோணல. 

அநியாயம் ஆத்தாடியோ!" 

  என்று வரிக்கு வரி,தமிழகத் தலை நகரைக் கிண்டலடித்த டி.எம் சௌந்த ராஜன் பாடலொன்று,கே பாலச் சந்தரின்'அனுபவி ராஜா அனுபவி' திரைப்படத்தில்,இன்னும் சென்னை வாழ் மக்களை மிரட்டிக் கொண்டிருக் கிறது.கண்ணதாசனின் இந்த விமர்சனப் பாடலுக்கு,மெல்லிசை மன்னர்,இசையால் கூடுதல் பலம் சேர்த்தார்.சென்னைக்குள் இருக்கும் இடங்களைக் குறிப்பிடும், 

"நான் ஜாம்பஜார் ஜக்கு நீ சைதாப்பேட்ட கொக்கு" 

எனும் மனோரமா பாடிய 'பொம்ம லாட்டம்'திரைப்படப் பாடலும், 'வண்டிச்சக்கரம்'திரைப்படத்தில் எஸ்.பி.பி பாடிய, 

"வா மச்சான் வா வண்ணாரப்பேட்ட"

பாடலும், 

'பம்மல் சம்பந்தம்'படத்தில் கமல் குழுவினருடன் பாடிய,

"ஆழ்வார் பேட்ட ஆண்டவா

வேட்டிய போட்டு தாண்டவா"

  எனும் பாடலும்,சென்னையை சுற்றி வரும் வித்தியாசமான பாடல்களாகும். இந்த பேட்டைகளைப்பற்றிய ஒர்'பேட்ட ராப்' பாடலும் சங்கரின்'காதலன்' திரைப் படத்தில் இடம்பெற்றது.

    மதுரையின் பெயர்கூறும் பாடல்கள் பலவும் மீனாட்சியின் புகழ் பரப்பின. 

"கூடலூரு குண்டு மல்லி 

வாட பிடிக்க வந்த வள்ளி "

  எனும் கங்கை அமரனின்'கும்பக்கரை தங்கைய்யா'திரைப்படப்பாடல் அவரின் அண்ணன் இசையில் மலேசியா வாசுதேவன்,கே.எஸ்.சித்ரா குரல்களில் மல்லியின் நறுமணத்தால் கும்பக்கரையையே கரைத்து  மணம் கமழச் செய்தது. 

  தமிழ்த்திரை வாகனத்தில் இப்பதிவு சுற்றிவந்த ஊர்கள் அதிகமில்லை. ஆனால்,பரந்து விரிந்த திரையுலகில் நாம் காணும் ஊர்கள்,நிசமான ஊர் களைக் காட்டிலும்,கற்பனையாலும் கருத்துக்களுக்காலும்,பார்க்கும் அல்லது கேட்கும் ஊர்களை,வரலாற் றுப் பக்கங்களில்,இதிகாசங்களாக்கு கின்றன. 

                 ======#======#======

 

4 comments:

  1. இன்னும் சில ஊர் பாடல்கள் இருக்கு போல உள்ளதே.

    ReplyDelete
  2. நிறையவே உண்டு.நினைவில் நின்றவை,பதிவைத் தொட்டன.

    ReplyDelete
  3. சிறப்பு சார்... ஏற்கனவே சில பாடல்களை கேட்டிருந்தாலும் இப்படி யோசித்தது கிடையாது. எவ்வளவு தகவல்கள் உங்கள் பதிவில். உங்கள் ஞாபகதிறனும் சிந்தனையும் வியக்க வைக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி திரு.மணிகண்டன்.

      Delete