காலத்தின் வரைவுதனில் காவியங்கள் இளைப்பாறும்.கால ஓட்டத்தில் நொடிகள் மான்களென துள்ளிக் குதித்து,நிமிடங் களாய் நேரங்களாய், நாட்களாகி,வாரங்களின் நீட்சியில் மாதங்கள் பன்னிரெண்டாய்,வருடம் ஒன்றாகும்.
"ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்"என்பர் வாழ்வியல் கவிஞரெல்லாம்.'அந்த ஒரு நிமிடம்'என்று பின்னோக்கிப் பயணிக்க பலரின் வாழ்க்கையில் மறக்க வொண்ணா தருணங்கள் உண்டு.காலத்தை மீறிய வாழ்க்கை இல்லை. ஆனால் காலத்தை வென்ற மனிதர்களும் அவர் தம் மகத்துவமும் வரலாறாய், இலக்கியமாய், திரைச் சுவையாய் நிலைப்பதுண்டு.
மாதங்களின் பெயர்களை தலைப் புகளாய்க் கொண்டு'தை பிறந்தால் வழி பிறக்கும்''தை பொறந்தாச்சு', 'சித்திரா பௌர்ணமி''வைகாசி பொறந்தாச்சு','ஆடிப் பெருக்கு', 'கார்த்திகை தீபம்'போன்ற தமிழ்மாத திரைப்படங்களும்,ஜனவரி 1, பிப்ரவரி14,ஏப்ரல் மாதத்தில்,மே மாதம், ஜூன் R,டிசம்பர் பூக்கள் எனும் ஆங்கில மாதங்கள் போற்றும் திரைப்படங்க ளும் பல்வேறு கதைகளுடன் வெள்ளித் திரை கண்டன.
மாதங்கள் வாழ்த்தும் தமிழ்த்திரை கானங்கள் செவிகள் நிறைத்து மனதில் மகுடம் சூட்டிக் கொண்டன. முதலி்ல் தமிழ் மாதங்களைக் கொண்டாடிய பாடல்களைப் பார்ப்போம்.இதில் முதன்மையான,
"தை பொறந்தா வழி பொறக்கும்
தங்கமே தங்கம்
தங்க சம்பா நெல் விளையும்
தங்கமே தங்கம்"
எனும் அ.மருதகாசியின் பாடல், கே.வி.மகாதேவன் இசையில் டி.எம்.எஸ்,P.லீலா,எல்.ஆர். ஈஸ்வரி, மற்றும் பொன்னுசாமி ஆகியோர் குரல்களில் காலம் வென்றது.மாசி மாதத்தில் தேன்கலந்து சுவை கூட்டிய பாடலே 'தர்மதுறை'திரைப் படத்தில் கே.ஜே.ஏசுதாஸ் ஸ்வர்ணலதா மனம் மயங்கிப் பாடிய,
"மாசி மாசம் ஆளான பொண்ணு
மாமன் எனக்கு தானே
நாளை எண்ணி நான் காத்திருந்தேன்
மாமன் உனக்குத்தானே"
எனும் இசைஞானியின் இசையில் நனைந்த,பஞ்சு அருணாச்சலத்தின் பாடல்.
பங்குனி மாதத்தை முன் நிறுத்தி சித்திரை மாதத்தை எதிர்நோக்கும் பாடலே 'தேடி வந்த செல்வம்'திரைப் படத்தில் டி.ஜி.லிங்கப்பாவின் இசையில் மனம் குழையச்செய்த, தஞ்சை ராமைய்யாதாஸின்,
பங்குனி போயி சித்திரை வந்தா பத்திரிக்க
வந்துடும்
கல்யாண பத்திரிக்க வந்துடும்
அதபாத்தவுடனதான் எனக்கு
நித்திரையும் வநதுடும்"
எனும் டி.எம்.எஸ்.P.சுசிலா குரல்களில் ஒலித்த எளிமையான வரிகள்.
'ராமன் எத்தனை ராமனடி' திரைப் படத்தில் சித்திரை மாதத்தை சிறகடித்துப் பறக்கச்செய்த பாடலே, P.சுசிலா ஏகாந்தமாய்ப் பாடிய,
"சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்
முத்துரதங்கள் ஊர்வலம் போகும்"
எனும் மெல்லிசை மன்னர் மகத்துவமாய் மெட்டுகட்டிய,கவியரசு கண்ணதாசனின்,ரயில் பயணப் பாடல்.
'நினைவுச்சின்னம்'திரைப்படத்தில் வைகாசி மாசத்திற்கு வாழைமரம் கட்டியது இளயராஜாவின் இசையில் இளையோன் கங்கை அமரனின் பாடல் வரிகளாக
வைகாசி மாசத்துல பந்தல் ஒன்னு போட்டு
ரெண்டு வாழை மரம் கட்டபோறேன்டி
என்று எஸ்.பி.பி.யும் கே.எஸ் சித்ராவும் இசையால் வாழைமரத் தோரணம் கட்டிய பாடல்.
ஆனி மாதத்தையும் ஆவணி மாதத்தையும் ஒன்றாகக் கோர்த்து தேனிசையாய் வந்தது'பாமா விஜயம்' திரைப்படத்தில் P.சுசிலா,சூலமங்களம் ராஜலட்சுமி,எல்.ஆர் ஈஸ்வரி மூவரும் மகிழ்ச்சியில் மனமுவந்து பாடிய
"ஆனி முத்து வாங்கிவந்தேன்
ஆவணி வீதியிலே;
அள்ளி வைத்து பார்த்திருந்தேன்
அழகுக் கைகளிலே"
எனும் மெல்லிசை மன்னரின் இசையில் ஊரிய கண்ணதாசனின் வரிகள்.
அதே போன்று ஆடி,ஜப்பசி இரண்டு மாதங்களையும் ஒருசேர அன்பால் அணைத்து,நம்மை மனமுருகச்செய்த பாடலே 'வில்லன்' திரைப்படத்தில் வித்யாசாகரின் இதமான இசையில் நனைந்த,
"ஆடியல காத்தடிச்சா ஐப்பசியில் மழையடிக்கும்
ஆறுகுளம் ஊத்தெடுக்கும் அன்பு மகனே"
எனும் பாடு நிலா எஸ்.பி.பி குரலில்,குளிர்ந்த பாடல்.
இதே எஸ்.பி.பி,எஸ்.ஜானகயுடன் இணைந்து இளையராஜாவின் இன்னிசையில் வாலியின் வரிகளை கும்மாளமாக்கியது,
"ஆடி மாச காத்தடிக்க வாடி உன்ன சேத்தணைக்க
மானே மாங்குயிலே"
எனும் ரஜினியின்'பாயும் புலி' திரைப்படப்பாடல்.
ஆவணி மாதத்தை மங்கையுடன் சுவைக்க வைத்து,சுகம் கண்ட பாடலே, 'உத்தரவின்றி உள்ளே வா'திரைப் படத்தில் காதலைக் கொண்டாடிய,
"மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
நாளிலே நள்ள நாள் நாயகன் வென்ற நாள்"
எனும் காதல் களிப்பேற்றிய பாடல்.எஸ்.பி.பி P.சுசிலா ஆகியோ ரின் தெவிட்டாக்குரல்களில், தென்றலாய் வீசிய இப்பாடலை, கவியரசு எழுத மெல்லிசை மன்னர் இசையால் இனிக்கச் செய்தார்.
தீபத்தை கையல் ஏந்தி கார்த்திகை மாதத்தை. காணச்செய்தது 'வீரத் திருமகன்'திரைப்படத்தில் P.சுசிலா குழுழனவினருடன் பாடிய
"ஏற்றுக தீபம் போற்றுக தீபம்
கார்த்திகை தீபம்"
எனும் விஸ்வனாதன் ராமமூர்த்தி யின் இரட்டை சிறகுகளில் பறந்த, ஒற்றைக்கவிஞன் கண்ணதானின் பாடல் பறவை.
மார்கழி என்றவுடன் மார்பில் குழவி எனத் தழுவுகின்ற இரண்டு பாடல்கள் உண்டு.'சங்கமம்' திரைப் படத்தில் உன்னிகிருஷ்ணன் மதுமிதா குரல்களில் நம்மோடு கொஞ்சி விளையாடிய,
"மார்கழி திங்களல்லவா
மதி கொஞ்சும் நாளல்லவா
இது கண்ணன் வரும் பொழுதல்லவா".
எனும் ஏ.ஆர்.ரெஹமான் இசையில், என்றும் சோடைபோகாத மற்றுமொரு கண்ணன் பாடலாய் அமைந்த வைரமுத்துவின் மகத்தான வரிகள்.
புனிதமாகப் பலரால் கருதப்படும் மார்கழி மாதத்தின் பெயர் போற்றும் இன்னொரு பாடலே,மே மாதம் திரைப் படத்தில் இடம் பெற்ற
"மார்கழிப்பூவே மார்கழிப்பூவே
உனமடிமேலே ஓர் இடம் வேண்டும்"
எனும் ஷோபா சங்கரின் கனமான குரல்களில் ஏக்க மலர்கள் தூவி,மணம் பரப்பிய பாடல்.இந்த நெஞ்சை முட்டும் வரிகளும் கவிப்பேரரசின் கற்பனை யில் இசைப்புயலின் தணிந்த வேகத் தில் நம் எல்லோயையும் இனம் புரியா ஏக்கத்தில் தள்ளியது.
மார்கழி மாத்தின் மகிமையை பெண்மைக்கு வழங்கி கவுரவித்த, 'பாவமன்னிப்பு'திரைப்படத்தின் "மாதங்களில் அவள் மார்கழி"எனும் வரி, P.B.சீனிவாஸ் பாந்தமாய்ப்பாடிய "காலங்களில் அவள் வசந்தம்" பாடலுக்கு,பிரகாசம் கூட்டியது. விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் கண்ணதாசனின் கவிதைச்சிறப்பில், காலத்தில் நின்ற பாடலிது.
மார்கழி மாதத்துடன் மோகமும் கலந்து நம்மை மயக்கத்தில் திக்குமுக்காடச் செய்த பாடலொன்று சிவாஜி கணேசனும் சாவித்திரியும் ஜோடி சேர்த்து நடித்த பிராப்தம் திரைப்படத் தில் இடம் பெற்றிருந்தது. நடிகை சந்திரகலாவுக்காக எல்.ஆர்.ஈஸ்வரி இனிமையாய்ப்பாடிய,
இது மார்கழிமாதம்
இது முன்பனிக்காலம்
கண்ண மயக்குது மோகம்
ஏன் நடுங்குது தேகம்
என காதல் மயக்கத்தை கவிதை யாக்கி எம்.எஸ்.வி இசையில் மனக் கண்களுக்கு தையலால் மையிட்ட கவியரசின் வரிகள்.
மேற்சொன்ன பாடல்களில் புரட்டாசி மாதப் பெயர் அல்லாது இதர பதினோரு மாதங்களின் பெயர்களும் ஒரு முறையோ அல்லது இருமறையோ இடம் பெற்றிருந்ததைக் காணலாம்.
ஆங்கில மாதங்களைப் பொறுத்த வரை, திரைப்பட தலைப்புகளில் ஓரளவு இடம்பெற்றிருந்தாலும் பாடல்கள் மிகக்குறைவே. அவற்றில் 'இதயம்' படத்தில் இளைஞர்களின் ஏமாற்றத்தை பிரசவித்த,
"ஏபரல் மேயிலே பஙுமையேயில்ல
காஞ்சு போச்சுடா"
என்ற இளயராஜா இசையமைத்து தானே தீபன் சக்ரவர்த்தி எஸ்.என் சுரேந்தருடன் சேரந்து பாடிய, வாலியின் பாடலும், சரணின் 'ஜே ஜே' படத்தில் சுசித்ரா,ரீமா சென்னுக்காக பரத்வாஜ் இசையில் பாடிய,
"மே மாச தொன்னூத்தெட்டில் மேஜர் ஆனேனே"
எனும் வைரமுத்தவின் மாறுபட்ட பாடலும்,
'பிரியமானவளே' திரைப்படத்தில் வாலியின் வரிகளிலும் எஸ்.ஏ.ராஜ் குமார் இசையிலும் அமைந்து,சங்கர் மகாதேவன் &ஹரினி குரல்களில் குதூகலம் பரப்பிய,
"ஜூன் ஜூலை மாத்தில்
ரோஜாப்பூவின் வாசத்தில்
ஜூனியர் சூரியன் கையில் கிடைக்கும்"
பாடலும்,அதே வாலி வரியமைத்து ஹாரிஸ் ஜெயராஜ் இசை கொட்டி, கிருஷ் மற்றும் அருணும் பாடிய
"ஜூன் போனால் ஜூலைக் காற்றே
கண் பார்த்தால் காதல் காற்றே"
எனும் 'உன்னாலே உன்னாலே' திரைப்படப் பாடலும், இறுதியாக 'அலைபாயுதே' திரைப்படத்தில் ரெஹ்மானின் இசையில் சங்கர் மகாதேவனும் பிரபல இந்திப் பாடகர் ஆஷா போஸ்லேயும் உரத்த குரல் களின் கரகோஷத்தால் பரவசமூட்டிய
"செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம்
வாழ்வின் துன்பத்தை தொலைந்து விட்டோம்
அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம்
வாழ்வின் இன்பத்தை தொலைத்து விட்டோம்"
எனும் வைரமுத்தவின் மாத முரண் பாடுகளை முன் நிறுத்திய பாடலும், தமிழ்த்திரையுலகின் ஆங்கில மாதப் பெருமைகளாகும்.
மாதங்கள் கால ஓட்டத்தின் எல்லைக்கற்கள்.அந்த எல்லைக்கற் களை கவிதை மாலைகளாய் தொடுத்து பல இசைக்கரங்களால் அலங்கரித்த அற்புதத்தை, தமிழ்த் திரை தளராது அரங்கேற்றியது என்பதை,இப்பதிவில் கண்டோம். விட்டுப் போன மாதங்களும் அவை பற்றிய பாடல் வரிகளும் நினைவுப் புத்தகத்தின் சில மறதிப் பக்கங்களே!மாதங்களோடு சேர்த்து மாதங்களை சிரசில் ஏற்றிய பாடல் களையும், மனமகிழ்ந்து போற்றுவோம்!
============0============
சிறப்பு சார்.... அருமையான பாடல்களை பற்றிய பதிவு
ReplyDeleteமிக்க நன்றி.
Delete