Wednesday, May 3, 2023

ஆசை !ஆசை !

   ஆசையில்லா மனிதரில்லை; ஆசையில் லையேல் வாழ்வில் அர்த்தமில்லை. ஆண்டி முதல் அரசன்வரை,அறிஞன் முதல் அசடன் வரை, அனைவரும் அயராது தோண்டிப் பார்க்க நினைக்கும் புதையலே ஆசை.மண் ணாசை,பெண்ணாசை பொன்னாசை என்று பிரிக்கப்பட்டு,அவற்றை அடைவ தற்கு அதிகார வேட்கை கொண்டுஅலையும் பயணமே வாழ்க்கை!அதற்கான தேடலே ஆசை!.

 "எட்டடுக்கு கட்டிடத்தில் எத்தனை ஓட்டை இதில் நல்ல ரத்தம் உள்ளமட்டும் எத்தனை சேட்டை" என்று பாடியது போல், வாடகைக்கு வாங்கிய உடலெனும் வீட்டிற்கு, ஆசையில் தோரணம் கட்டுகிறது மனம்.இறுதியில், "எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு ; தொல்லை இன்றியே தூங்கிடும் வீடு" என்று ஆனபின்பு ஆசை உறங்குவது கண்டு,அதன் அங்கலாய்ப்புகளை ஆன்மா கலாய்க்கிறது.

  ஆசையின் அங்கலாய்ப்புகளை உணர்ந்து தானோ என்னவோ,கண்ணதாசன் ஆசை யை துன்பத்தின் துவக்மாகக் கண்டு,

"ஆசை வைத்தால் அது மோசம்

அன்பு வைத்தால் அது துன்பம்

பாசம் கொள்வது பாவம் 

பழகிப் பிரிவது துயரம்" 

  என்று நொந்துபோன மனதின் வேதனை யை வரிகளாக்கி 'தங்கமலர்'எனும் திரைப் படத்திற்கு அதனை காணிக்கையாக்கி னார்.டி.ஜி.லிங்கப்பா இசையமைக்க, P.B.சீனிவாஸ் தனது மிருது வான குரலால் அப்பாடலை நினைவில்  அதிர்வலைகளாக் கினார்.

   ஆனாலும் ஆசைக்கடலில் ஆபரணத் தோணி ஓட்டும் திரையுலகு, தலைப்பு களால்,கதைக்களத்தால், வசனங்களால் பாடல்களால்,ஆசைக்கு நினைவுச் சின்னம் எழுப்புகிறது.வழக்கம் போல்,இதில் தமிழ்திரையுலகும் ஆசையுடன் களமிறங்கி, வரலாறு படைத்திருக்கிறது.  

   தமிழில் முதலில் M.நடராஜன் இயக்கத் தில் ஜெமினி கணேசனும் பத்மினியும் இணைந்து நடித்த 'ஆசை'(1956)திரைப்படம் வெளிவந்தது பின்னர் அதே'ஆசை'எனும் பெயரில் அஜித்தும் சுவலட்சுமியும் நடித்த திரைப்படம் வசந்த் இயக்கத்தில் 1995-இல் வெளியானது.ஆசையை மைய்யப்படுத்தி 'ஆளுக்கொரு ஆசை' 'அண்ணாவின் ஆசை' 'ஆசை அண்ணா அருமை தம்பி' 'ஆசை முகம் ''ஆசை அலைகள்''என் ஆசை மச்சான்''ஆசையில் ஓர் கடிதம்'போன்ற பல்வேறு தலைப்புகளைக்கொண்ட திரைப்படங்களை நாம் காண நேர்ந்தது.

  ஆசையை குறிப்பிட்டு முதலில் நாம் கேட்ட பாடல்,தஞ்சை N. ராமதாஸ் எழுதி ஜமுனா ராணியின் மனம் மயக்கும் குரலில்,    

"ஆசையும் என் நேசமும் 

ரத்த பாசத்தினால் ஏங்குவதை பாராயடா

என் ஆவலும் நிறைவேறிடும் 

என் ஆருயிரே நீ அருகில் வாராயடா"

எனும் ஆருயிரை அரவணைத்த வரிகளாகும்.

  விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் இப்பாடல் 'குலேபகாவலி'திரைப்படத்தை கலாபக்காதல் செய்யத் தூண்டியது. 

  இதைத்தொடர்ந்து தத்துவ சிந்தனையுடன் கவியரசு கண்ணதாசனின் கற்பனை ஊற்றில் பெருக்கெடுத்த,காலம் வென்ற பாடலே,'தை பிறந்தால் வழி பிறக்கும்' திரைப்படத்தில் திருச்சி லோகநாதனின் கணீர் குரலில் ஒலித்த, 

"ஆசையே அலைபோலே

நாமெலாம் அதன் மேலே 

ஓடம்போல் ஆடிடுவோமே 

வாழ் நாளிலே" 

  இப்பாடலின் ஒவ்வொரு வரியும் நம் நெஞ்சில் நிறையும் வண்ணம்,அற்புதமாய் இசையமைத்திருந்தார் திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன்           

  இதனைத் தொடர்ந்து'கல்யாண பரிசு' திரைப்படத்தில் ஒலித்தது,ஏ.எம்.ராஜா ஜிக்கி குரல்களில் இதமாய் நம்மை களிப்பூட்டிய,பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின், 

"ஆசையினாலே மனம் 

அஞ்சுது கெஞ்சுது தினம் 

அன்புமீறி போனதாலே

அபிநயம் புரியுது முகம்"

  எனும் பாடல்.இத்தேனிசை  கீதத்திற்கு ஏ.எம்.ராஜாவே அவரது மென்மையான குரலுக்கு இசை தந்து, குணம் கண்டார். 

  ஜமுனா ராணியின் குரலில் கேட்ட பாடலைப்போல் நம்மை பரவசமூட்டிய மற்றொரு பாடலே,'மறுபடியும்'திரைப்படத் தில் இசைஞானியின் இசையில் எஸ். ஜானகி குழைந்து குதூகலம் கண்ட,

"ஆச அதிகம் வச்சு 

மனச அடக்கி வைக்கலாமா,

என் மாமா;

ஆள மயக்கிபுட்டு 

அழக ஒளிச்சு வைக்கலாமா,

என் மாமா"

  எனும் வாலியின் வசீகரிக்கும் வரிகள். இளையராஜாவின் இசை பின்னூட்டத் திலும்,ஜானகியின் கவர்ந்திழுக்கும் குரலிலும்,நம் ஆசையை கட்டவிழ்த்தது இப்பாடல். இது போல கட்டவிழ்க்கப்பட்ட ஆசையை,காற்றில் தூதுவிடும் கபடநாடகக் கலையாகக் கற்றுத்தந்த மற்றொரு பாடலே,'ஜானி' திரைப்படத்தில் S.P.ஷைலஜா பாடிய,

"ஆசைய காத்துல தூதுவிட்டு

ஆடிய பூவுல வாடை பட்டு

சேதியைக் கேட்டொரு ஜாடை தொட்டு

பாடுது பாட்டு ஓண்ணு

குயில் கேட்குது பாட்ட நின்னு" 

எனும் கங்கை அமரன் எழுதி அவரது தமையன் இசை ஞானி இளையராஜா இன்பம் பொங்கச் செய்த இதமான வரிகளாகும்

   இந்த பாடலுக்கு முன்னரே வந்திருந்தா லும்,இதற்கு எசப்பாட்டு பாடுவதுபோல அமைந்திருந்தது அறிஞர் அண்ணாவின் கதைக்களத்தில் உருவான'காதல் ஜோதி' திரைப்படத்தில் சுப்பு ஆறுமுகம் எழுதி, டி.கே.ராமமூர்த் தியின் இசையில் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய,  

"உன்மேல கொண்ட ஆச உத்தமியே நித்தமுண்டு

சாத்தியமா சொல்லுறேண்டி தங்க ரத்தினமே

தாளமுடியாது கண்ணே பொண்ணு ரத்தினமே" 

  பின்னர் "ஆசை ஆசை" என்று அடுக்குத் தொடராய் நம் நினைவில் நின்ற பாடல்கள் இரண்டு உண்டு.இந்த வகையில் முதலில் நாம் கேட்ட பாடல், லிங்குசாமியின் 'ஆனந்தம்'திரைப்படத்தில் கே.ஜே யேசு தாஸ் பாடிய, 

"ஆசை ஆசையாய் இருக்கிறதே 

இதுபோல் வாழ்ந்திடவே

பாச பூ மழை பொழிகிறதே 

இதயங்கள் நனைந்திடவே" 

   கவிஞர் கலைக்குமாரின் தூய்மையான ஆசை சிந்தனையை,எஸ்.ஏ ராஜ்குமார் தனது மென்மையான இசைத்துளிகளால் மெருகூட்டினார்.இதே போன்று 'தூள்' திரைப்படத்தில் பா.விஜய்யின் கவித்துவத் தில் விளைந்து சங்கர் மகாதேவன், சுஜாதா குரல்களில் நம் உணர்வுக்கூட்டினில் துள்ளிவிளையாடிய, 

"ஆசை ஆசை 

இப்பொழுது பேராசை 

இப்பொழுது ஆசைதீரும் 

காலம் எப்பொழுது" 

  எனும் வரிகள்,வித்யாசாகரின் இசையில் கேட்போரை ஆடவைத்து ஆனந்தம்பரப்பின.

  காதலர்களின் நெஞ்சங்களில் ஆசையை நிதானமாய் நிரப்பிய பாடலொன்று விஜய் யின் 'மின்சார கண்ணா' திரைப் படத்தில் இடம் பெற்றிருந்தது.ஹரிஹரனும், சுஜாதாவும் லயித்துப்பாடிய, 

"உன்பேர் சொல்ல ஆசைதான் 

உள்ளம் உருக ஆசைதான் 

உயிரில் கரைய ஆசைதான் 

......................................................

உன்தோள் சேர ஆசைதான் 

உன்னில் வாழ ஆசைதான் 

உனக்குள் உறைய ஆசைதான்" 

   என்று அடுக்கடுக்காய் ஆசைகளை மூட்டி அழகுபார்த்த வாலியின் வரிகளை, தேனிசை தென்றலாக்கினார்,தேவா.

  தாயையும்,தாய்ப்பாசத்தையும்,காசிருந் தாலும் ஆசைப்பட்டாலும் வாங்க முடியாது என்றது'வியாபாரி'எனும் திரைப்படத்திற் காக கவிஞர் பரிணாமன் எழுதிய, 

"ஆச பட்ட எல்லாத்தையும் 

காசிருந்தா வாங்கலாம்

அம்மாவ வாங்க முடியுமா 

நீயும் அம்மாவ வாங்க முடியுமா" 

  எனும் மனம் நெகிழ்ச் செய்த பாடல். ஹரிஹரன்,உன்னிகிருஷ்ணன்,சுஜாதா எனும் மூவரின் கூட்டுக்குரல்களில் அமைந்த பாடல்,தேவாவின் இசையில் ஆசையை ஓரம் கட்டி,பாசக்கொடி படர விட்டது.

  இப்படி ஆசையைப்பற்றி இன்னும் எத்தனையோ தமிழ்த்திரைப்பாடல்கள் இருக்கக்கூடும்.ஆனால் அவற்றை எல்லாம் மிஞ்சி,பிரம்மாண்ட ஆசைகளை அனுத் திரளாக்கி நம்மை இன்பத்தில் அதிரவைத்த பாடலே,ஏ.ஆர்.ரஹ்மானின் தொடக்கப் படமான 'ரோஜா'வுக்காக கவிப்பேரரசு வைரமுத்து புனைந்த, 

"சின்ன சின்ன ஆசை 

சிறகடிக்க ஆசை" 

  எனும் மின்மினியின் விண்ணைத்தொட்ட பாடல்.வரிக்கு வரி பெரிய பெரிய ஆசை களை சிறியதாக்கி,சீரும் சிறப்பும் ஆசை யிலும் உண்டு எனும் உண்மையை,சரித்திர மாக்கிய இப்பாடல்,ஆசைக்கு மகுடம் சூட்டியது. 

   வெண்ணிலவைத் தொட்டு முத்தமிடவும், தன்னை இப்பூமி சுற்றிவரவும்,மணம் பரப்பும் மல்லிகையாய் மாறிவிடவும், தென்றலுக்கு மாலையிட்டு,சோகங்களை வீசிவிட்டு,கணக்கற்ற ஆசைகளால் உலகையே கார்குழலில் கட்டிவைக்கவும் ஆசைப்பட்ட இப்பாடலின் கற்பனையில், ஆசையே மிரண்டு,சுருண்டு விழுந்தது .

"சட்டி சுட்டதடா

கை விட்டதடா"

என்று ஆசையை உதறித்தள்ள நினைத் தாலும்,

"விட்டுவிடும் ஆவி 

பட்டுவிடும் மேனி 

சுட்டுவிடும் நெருப்பு 

சூனியத்தில் நிலைப்பு"

  என வாழ்வின் வெறுமை விதைகளை மண்ணில் விதைத்தாலும்,மனிதம் தழைப்ப தென்னவோ ஆசைகளின் உரத்தினிலே தான்.ஆசை கொள்வோம்,ஆயுள் வரை, அடுத்தவர் மனம் நோகாமல்!ஆன்மாவுக் கும் ஆசை உண்டு,சிவலோக பதவி பெற!.      

ப.சந்திரசேகரன்.        

4 comments:

  1. ஆசையின் அட்டவணை அருமை

    ReplyDelete
  2. சிறப்பு சார்.... அருமையான பதிவு

    ReplyDelete