Monday, May 15, 2023

கல்லில் உதித்த கவிதை வரிகள்

"கல்லைத்தான் மண்ணைத்தான்

காய்ச்சித்தான் குடிக்கத்தான்

கற்பித்தானா"

  எனும் ராமச்சந்திர கவிராயர் வரிகளை நடிகர் திலகம் தனது முதல் படமான 'பராசக்தி'யில் கம்பீரமாகக் கூறுவதை நம்மில் பலரும் கேட்டு பரவசமுற்றிருப் போம்.இதேபோன்று சிவாக்கியார் எழுதிய

"நட்டகல்லை தெய்வமென்று நாலு புட்பம் சாத்தியே

சுற்றிவந்து மொணமொணன்னு சொல்லும் மந்திரம் ஏதடா

நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ"

 எனும் அரிய கவிதை வரிகளையும் சிவாஜி கணேசன் தனது சிம்மக்குரலால் உச்சரிக் கக் கேட்டிருப்போம்.

   கல்லை வைத்து,கல் தூண்,கல்லும் கனி யாகும்,கல்லுக்குள் ஈரம்,ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற திரைப்படத் தலைப்பு களும்,'கல்'எனும் சொல் கொண்டு காவியம் படைத்தன.

  கல்லைவைத்து கவிதை புனைந்த கண்ண தாசனின் கற்பனை,தனித்துவம் வாய்ந்தது. மாடர்ன் தியேட்டர்சின்'குமுதம்'திரைப்படத் தில் சீர்காழி கோவிந்தராஜனின் வெண் கலக்குரலில் நம்மை மெய்மறக்கச் செய்த,

"கல்லிலே கலை வண்ணம் கண்டான்

கண்பார்வை மறைத்தாலும் காணும் வகை தந்தான்"

  எனும் காலம் வென்ற பாடல்,கே.வி.மகா தேவன் இசையில் தமிழ்த்திரையிசையின் புகழ் பரப்பியது.இந்த வகையில்'ஆலய மணி'திரைப்படத்தில் டி.எம்.எஸ்&எல்.ஆர். ஈஸ்வரி குரல்களில் தேனிசையாய் நம் செவிகளில் நிறைந்த,

"கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா

கலை எல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா"

  எனும் கவியரசின் பாடல்,விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரின் இசையில்,பட்டி தொட்டியெல்லாம் பவனிவந்தது.பின்னர் 'ஆனந்தி'எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற கவியரசின்,

"கண்ணிலே அன்பிருந்தால்

கல்லிலே தெய்வம் வரும்

நெஞ்சிலே ஆசை வந்தால்

நீரிலும் தேனூறும்"

  எனும் மகத்தான டி.எம்.எஸ்,P.சுசிலா குரல்களில் மென்மையாய் ஒலித்த பாடல் வரிகள் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் ஆன்ம சுகம் தந்தது.'மகாகவி காளிதாஸ்' திரைப்படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் டி.எம்.எஸ் பாடிய,

"கல்லாய் வந்தவன் கடவுளம்மா

அதில் கனியாய் கனிஞ்சவள் தேவியம்மா

புல்லாய் மொளச்சவ தேவியம்மா

அதில் பூவாய் மலர்ந்தவள் காளியம்மா"    

     எனும் மேன்மைமிகு வரிகள் கண்ணதாச னின் தெயவீகக் கற்பனை வளத்தை காவியமாக்கியது.இதே கே.வி.மகாதேவன் இசைமிடுக்கில் 'என் அண்ணன்'திரைப் படத்தில் இதயம் நனையச்செய்த

"கடவுள் ஏன் கல்லானான்

மனம் கல்லாய்ப்போன மனிதர்களாலே"

  எனும் இயல்பான வரிகளினால்,கண்ண தாசன் சிறந்த தத்துவக்கவிஞர் மட்டுமல்ல; அவர் வாழ்வியல் உணர்ந்த நடைமுறைக் கவிஞருமாவார்,என்பதை வெளிப்படுத் தியது. டி.எம்.எஸ் குழுவினருடன் பாடிய இப்பாடல்,அவர் பாடிய மிகச்சிறந்த பாடல் களிளொன்றானது.

  கமலகாசனின் 'தசாவதாரம்'திரைப்படத் தில் ஹரிஹரன் குழுவினருடன் பாடிய

"கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது

கடவுள்மட்டும் கண்டால் கல்லடி தெரியாது"

  எனும் இறைவனை கல்லோடு கனியாக் கிய ஒளியூட்டும் வரிகள் கவிஞர் வாலியின் வரிகளிலும் ஹிமேஷ் ரேஷம்மியா இசையி லும் இதிகாசம் படைத்தது.இதேபோன்று திருவிளையாடல் திரைப்படத்தில் கே.வி. மகாதேவன் இசையில் டி.ஆர்.மகா லிங்கம் தனது வழக்கமான அசுரபலக் குரலில் பாடிய"இல்லாததும் இல்லை எனும் பாடலுக் கிடையே தவறாமல் கேட்க வேண்டிய,

"கல்லான உருவமும்

கனிவான உள்ளமும்

வடிவான சதுர்வேதனே!"

  எனும் கண்ணதாசனின் வரிகளில் ஒரு தெய்வீக பரவசத்தை அனைவரும் உணர்ந்திருப்பர்.

  கல்லை கடவுளிடமிருந்து பிரித்து காதல் வசப்படுத்திய வித்தியாசமான பாடல் ஒன்று எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவான 'சிவமனசுல சக்தி'எனும் திரைப்படத்தில் இடம் பெற்றது.

"ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல்

 மோதிக்கொண்டால் காதல்.

ஒரு சொல் சில மௌனங்கள் பேசாமல்

பேசிக்கொண்டால் காதல்"

  என்ற அமரர் நா.முத்துகுமாரின் நளின மான வரிகளை,யுவன் ஷங்கர் ராஜா இசை யூட்டி தானே பாடியிருந்தார்.அரிதான குரலில் ஒலித்த இப்பாடல் வரிகளில் 'ஒரு கல் ஒரு கண்ணாடி'எனும் சொற்கள்,பிறகு அதே இயக்குனர் எம்.ராஜேஷின் இன் னொரு திரைப்படத்தின் தலைப்பாயிற்று.

  திரைப்பட பாடல்கள் மட்டுமின்றி டி.எம்.எஸ் பாடிய "மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்"என்ற உருக்கமான பாடலில் "வெறும் கல்லானாலும் தணிகை மலை யில் கல்லாவேன்" எனும் இறையுணர்வில் திளைத்த வரி நம்மை இறைவன்பால் இறுக் கமாய் ஈர்த்ததுண்டு.'கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை' என சபரிமலை யாத்திரை செல்வோர் கூறுவது போல அறிவையும் ஆற்றலையும் ஆன்மாவையும் ஒருசேர மேம்படுத்தும் கல்வியிலும் உள்ளதே 'கல்' எனும் சொல். 'இளமையில் கல்'என்பதோர் பொன்மொழியும்'கல்லா தான் கற்ற கவி'எனும் பழம்பாடல் வரியும், உரசிப்பார்தாலே கல்லின் சிறப்பறியும் என்பதன் வெளிப்பாடாகும்.

  கற்கால மனிதன் கல்லில் தீப்பொறி கண்டான்.காலங்கள் கடந்தபின் கல்லில் சிற்பங்கள் செதுக்கி கல்கொண்டு வரலாற்று நினைவுச் சின்னங்களை வார்த் தெடுத்தான்.எண்ணும் எழுத்தம் கற்றபின் 'கல்'எனும் சொல்லால் கவிதைகள் இயற்றி காவியம் படைத்தான்.கல்லைப்பற்றிய கருத்துக்கள்,கல்வெட்டில் பொறிக்கப்பட வேண்டியவையாகும்."கரைப்பாற் கரைத்தால் கல்லும் கரையுமென்பர்" இருப்பினும் கல்லின்றி கனியுமோ நம் வாழ்வு, இப்புவியில்?

ப.சந்திரசேகரன்.


 


2 comments:

  1. சிறப்பு.... அருமையான பாடல்களை பற்றிய பதிவு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு.மணிகண்டன்.

      Delete