Saturday, August 5, 2023

இரவின் மடியில் இனிதாய் இளைப்பாறிய தமிழ்த்திரை.

 "இரவின் மடியில் உலகம் உறங்கும்

நிலவின் அழகில் மலரும் மயங்கும்

என் மன வேதனை யார் அறிவார்

உண்மையைச் சொன்னால் யார் உணர்வார்"

  என்று,இரவின் மடியில் உறங்கும் உலகிற்கிடையே மனதை உலுக்கும் வேதனையை,மற்றவர் அறிவரோ எனும் ஆழ்மனக்குமுறலை வெளிப் படுத்தி, P.B.சீனிவாஸின் மென்மைக் குரலில் சோகத்துடன் வசீகரித்த பாடலை,எத்தனை பேர் கேட்டிருப்பரோ தெரியாது.

  கண்ணதாசன் எழுதி வேதாவின் இசை யில் வெளிவந்த இந்த வித்தியாச மான பாடல்,சரசா B.A எனும் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்தது.இரவுப் பொழுதை பல் வேறு கோணங்களில் திரைப்படத்தலைப்பு களாகவும், பாடல்களாகவும்,தனிப் பெருமை யுடன் கொண்டாடியது தமிழ்த்திரை.

   அண்ணாவின்'ஓர் இரவு'தொடங்கி 'பகலில் ஓர் இரவு','முதல் இரவு' நடு இரவில்' 'இரவின் நிழல்''இரவுப் பாடகன்''இரவுக்கு ஆயிரம் கண்கள்', போன்ற தமிழ்த்திரை தலைப்புகள் இரவின் அசாதாரணத் தன்மையையும் இரவுப் பொழுதோடு தொடர்புடைய அந்தரங்க நிகழ்வுகளையும், சொல்லாண்மையுடன் வெளிப்படுத்தின.

  இரவை இதிகாசமாக்கிய திரைப்பாடல் களில் 'குலேபகாவலி' திரைப் படத்தில் இடம்பெற்ற,ஏ.எம்.ராஜா ஜிக்கி பாடிய,

மயக்கும் மாலை பொழுதே நீபோபோ

இனிக்கும் இன்ப இரவே நீ வாவா

இன்னலைத் தீர்க்கவா"

எனும் பாடல்,இதயத்தை இதமாய் வருடிக் கொண்டே இருக்கும்.

இரவைக்கொண்டாடி களேபரம் கண்ட,

"இரவினில் ஆட்டம்

பகலினில் தூக்கம்

இதுதான் எங்கள் உலகம்

எங்கள் உலகம்"

   எனும் டி.எம்.எஸ் பாடிய 'நவராத்திரி' படப்பாடல்,இரவின் இறுமாப்பை என்றென்றும் பறைசாற்றும்.

 'கர்ணன்'திரைப்படத்தில் டி.எம்.எஸ். P.சுசிலா இசையால் இசைந்து பாடிய,

"இரவும் நிலவும் வளரட்டுமே

நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே

தரவும் பெறவும் உதவட்டுமே

நம் தனிமை சுகங்கள் பெருகட்டுமே"

  எனும் சுகமான பாடல்,இரவை சொர்க்கமாக்கி கற்பனையில் களிப்பூட்டியது.

  ஜெய்சங்கரின் அறிமுகப் படமான'இரவும் பகலும்'திரைப்படத்தில், டி.எம்.எஸ் குரலில் தத்துவ சிந்தனைகளால் உலகத்தையும் இதயத்தையும் ஒன்றாக்கிய,

"இரவும் வரும் பகலும் வரும்

உலகம் ஒன்றுதான்

உறவும் வரும் பகையும் வரும்

இதயம் ஒன்றுதான்"

  என்று,உணர்வுகளை ஒருநிலைப்படுத்தி உள்ளத்தை உறங்கச்செய்த பாடல்,இரவின் அமைதியை நெஞ்சில் நிலைநிறுத்தியது.

  P.சுசிலாவின் இனிமைக்குரலில்'குலமகள் ராதை'திரைப்படத்தில் நாம் கேட்டு மெய் மறந்த,

"இரவுக்கு ஆயிரம் கண்கள்

பகலுக்கு ஒன்றே ஒன்று

அறிவுக்கு ஆயிரம்

உறவுக்கு ஓன்றே ஒன்று"

பாடலும்,

  'கற்பகம்'திரைப்படத்தில்,கே.ஆர்.விஜயா வின் திருமணத்தோழியாகத் தோன்றி, அவரை முதலிரவுக்குள் முறைப்படுத்தும் வண்ணம் சாவித்திரி பாடுவதாக P.சுசிலாவின் குரலில் அமைந்த,

"ஆயிரம் இரவுகள் வருவதுண்டு.

ஆனால் இதுதான் முதலிரவு

ஆயிரம் உறவுகள் வருவதுண்டு

ஆனால் இதுதான் முதல் உறவு"

 என்று காமமின்றி தாம்பத்யத்தின் தரமுயற்றிய பாடலும்,

  முகம் காணாத் தாயினை கனவினில் கண்டு,நிஜவாழ்வில் தாயைக்கண்டு நலம் காணத்துடிக்கும் அன்பு மகளின் ஏக்கத்தை வெளிப்படுத்தும் வண்ணம்,'காவியத் தலைவி' திரைப்படத்தில் இடம்பெற்ற P.சுசிலாவின் கனத்த குரலில் நம் நெஞ்சத்தில் சோகத்தை எடை குறையாமல் இறக்கி வைத்த 

"ஒரு நாள் இரவு பகல்போல் நிலவு

கனவினிலே என் தாய் வந்தாள்

கண்ணா சுகமா கிருஷ்னா சுகமா

கன்மணி சுகமா சொல் என்றாள்"

   எனும் இரவில் பாசத்தை பொழியச்செய்த பாடலும்,ஒன்றாகச்சேர்ந்து இரவோடு நம் நினைவுகளை இறுக்கமாய்க் கட்டிப் போடும்.

  இரவுப்பொழுதின் இன்ப ஊற்றினை, எல்.ஆர் ஈஸ்வரி 'குழந்தையும் தெய்வமும்'படத்தில் பாடிய

"ஆஹா இது நள்ளிரவு

இரவுக்கும் வரவுக்கும்

இருவரின் உறவுக்கும்

பொன்னான பொழுதல்லவா

இதை சொல்லாமல் நான் சொல்லவா" 

  எனும் மனம் மயக்கும் பாடலும். எஸ்.பி.பால சுப்பிரமணியம்,எஸ்.ஜானகி குரல்களில் இதமாய் நம் ஸ்பரிசங்களை வருடிய,

"பனிவிழும் இரவு நனைந்தது நிலவு

இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது

பூப்பூக்கும் ராப்போது பூங்காற்றும் தூங்காது"

எனும் பாடல் வரிகளும்,இரவுப்பொழுதுக்கு புதிய பரிமாணம் படைத்தன.

  இரவின் மடியில் நம்மில் பலரையும் இளைப்பாறச்செய்யும் இன்னும் எத்தனை யோ பாடல்கள் தமிழ்த்திரையிசையில் உண்டு.ஆனாலும், இசையின் இனம்புரியா ஏற்ற இறக்கங்களை கவிதை வரிகளில் உள்ளடக்கிய பிரதானப் பாடல்கள்,இப்பதி வில் குறிப்பிடப்பட்டுள்ளன.

  மேலே குறிப்பிட்ட பாடல்களில் ,குலேபகாவலி, பாடலை தஞ்சை. N.ராமைய்யாதாஸ் எழுதியிருந்தார். 'நவராத்திரி' மற்றும்'இரவும் பகலும்' பாடல்களுக்கு ஆலங்குடி சோமு வரி வடிமைக்க, 'கற்பகம்'',குழந்தையும் தெய்வமும்'' மௌனராகம்' திரைப்படங் களுக்கு வாலியும்,இதர ஐந்து பாடல்களை கண்ணதாசனும் கற்பனை களஞ்சியத் திலிருந்து களமிறக்கினர்.

   இசையமைப்பாளர்கள் விஸ்வநான் ராமமூர்த்தி(குலேபகாவலி, கர்ணன்) டி.ஆர். பாப்பா(இரவும் பகலும்) கே.வி.மகாதேவன் (கற்பகம்,குலமகள் ராதை&நவராத்திரி) எம்.எஸ் விஸ்வநாதன் (குழந்தையும் தெய்வமும்& காவியத் தலைவி)மற்றும் இளையராஜா(மௌன ராகம்) எல்லோரும் இணைந்து இரவுக்கும் இசைக்கும் ஒரு சேர அமரத்துவம் அளித்தனர்.

  இப்பதிவில் இச்சைக்குமட்டுமே இசை வாகி/இசையாகி,இரையூட்டும் 'ராத்திரி'ப் பாடல்கள் தவிர்க்கப்பட்டுள் ளன.மாறாக, இரவுப்பொழதை பல்வேறு உணர்வுத் தேடல்களுக்கென களமமைத்த பாடல்கள் மட்டுமே முன்னிலைப்படுத்தப் பட்டுள்ளன.

  இரவின் மடியில் உலகமே உறங்கும் உண்மைச்சூழலில்,இரவோடு உறவாடும் உள்ளக்கிடக்கையில்,உயிரோட்டம் அதிர்ந்து தலைப்பு களாய்,கவிதை வரிகளாய்,தமிழ்த் திரைக்கு வண்ணம் பூசி,காலம் காலமாய் இரவைக் கொண்டாடிக்கொண்டிருக்கின் றன,என்பது படைப்புக்கும் படைப்பாளிக ளுக்கும் பெருமை சேர்க்கும் நிலைப்பாடா கும்.

             =======/0======0=========





8 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Nice. My favourite songs Iravin madiyil and Iarvukku aayiram kangal.

    ReplyDelete
  3. ஒ(லி)ளியற்ற இரவுகளைக் கூட ஒ(லி)ளி அமைத்து பகல் பொழுதுளி லிலும் (!) நம்மை எல்லாம் பரவசப் படுத்திய ஒவ்வொரு படைப்பாளிகளும், தமிழ்த் தாயின் செல்லப் பிள்ளைகள் என்றால் அதை நம் முன் வரிசைப் படுத்தியவர்? அதே தமிழ்த் தாயின்..அருமைப் புதல்வன்.🙏🏻🌹

    ReplyDelete
  4. சிறப்பு சார்.... அருமையான பதிவு.. முன்னொரு காலத்தில் இதே போன்று இரவு பாடல்களாக கேட்டுக்கோண்டிருந்து ஞாபகம் வருகிறது.... நன்றி சார்

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு.மணிகண்டன்

      Delete