Friday, August 25, 2023

அன்றும் நேற்றும்,இன்றும் நாளையும்

 

  வாழ்க்கைப்பொழுதுகளின் நினைவலை கள்,நிகழ்ச்சி நிரல்களை  உள்ளடக்கிய  காலக் கணக்குப் புத்தகங்களின் பக்கங்களே!.'அன்று' என்பது கடந்துவந்த பாதையின் தொலைதூரப்பக்கம்; 'நேற்று' என்பது நடந்து முடிந்த நெருங்கிய பயணம். இன்றைய நிஜங்கள் நாளைய நிழல்கள். இந்த காலப் புத்தகங்களை தமிழ்த் திரைப் படங்களும்  கட்டுக்கோப்பாக, திரைப்படத் தலைப்புகளாகவும் பாடல்களாகவும் நளினமாக கோர்த்திருக்கன்றன! 

  'அன்று கண்ட முகம்' என்றும் 'நேற்று இன்று நாளை'என்றும்'இன்றுபோய் நாளை வா'&'இன்றுபோல் என்றும் வாழ்க'என்றும், 'நாளை நமதே' 'நாளைய செய்தி''நாளை உனது நாள்'என்றும், காலத்தை முறைப் படுத்தும் வகையில்  திரைத் தலைப்புகளாய் அள்ளித்தந்திருக் கிறது தமிழ்த்திரை. 

  பாடல்களில்,அன்றும் இன்றும் என்று பாலமமைக்கும் வண்ணம், 

"அன்று வந்ததும் இதே நிலா 

இன்று வந்ததும் அதே நிலா 

என்றும் உள்ளது அதே நிலா

இருவர் கண்டதும் ஒரே நிலா" 

என்று 'பெரிய இடதுப்பெண்'படத்தில் டி.எம்.சௌந்தராஜனும் பி.சுசீலாவும் பாடிய பாடலாகவும், 

"அன்று ஊமை பெண்ணல்லோ 

இன்று பேசும் பெண்ணல்லோ

என்றும் உனக்காக தமிழ் பேசும்"

பெண்ணல்லவோ"

  என்று 'பார்த்தால் பசிதீரும்' திரைப்படத் தில் ஏ.எல் ராகவனும் பி.சுசீலாவும் மகிழ்ச்சி பொங்கப் பாடிய பாடலும்,'நாடோடி' திரைப் படத்தில் டி.எம். எஸ்ஸும் பி.சுசிலாவும் கடந்த கால நினை வலைகளை புரட்டிப் பார்த்த,

"அன்றொருநாள் இதே நிலவில்

அவரிருந்தார் என் அருகே

நான் அடைக்கலம் தந்தன் என் அழகை

நீ அறிவாயோ வெண்ணிலவே"

  எனும் இதய கானமும்,அன்றைய பொழுதுகளை,இன்று வென்று நிலை நாட்டின.இந்த மூன்று பாடல்களையும் கவியரசு எழுத,முதல் இரண்டிற்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி இணைந்தும் மூன்றாவது பாடலுக்கு எம்.எஸ்.வி. தனித்தும் என்றென்றும் இனிக்கும் வண்ணம் இசைச்செறிவூட்டினர்.

  நேற்றோடு இன்றையபொழுதை இரண்டறக் கலந்து,காதல் சங்கமத்தில் இரண்டு இதயங்கள் ஒன்றாகும் உணர்வப் பரவசத்தை வெளிப்படுத்திய பாடலே, 'வாழ்க்கைப்படகு'திரைப்படத்தில் P.B.ஸ்ரீ நிவாஸ் குரல் குழைந்து பாடிய,

"நேற்று வரை நீ யாரோ நான் யாரோ

 இன்று முதல் நீ வேறோ நான் வேறோ"

 எனும் இதமான பாடல்.இப்பாடலையும் கண்ணதாசன் எழுத,விஸ்வநாதன் ராம மூர்த்தி அழகுற இசையமைத்திருந்தனர். இதே கண்ணதாசன் வரிகள் எழுதி எம்.எஸ் விஸ்வநாதன் இசையமைத்த நேற்றைப்  பற்றிய பாடல் ஒன்று டி.எம்.சௌந்தராஜ னின் கனத்த குரலில்,நடிகை சாவித்திரி தயாரித்து இயக்கிய'பிராப்தம்'திரைப் படத்தில் இடம் பெற்றது.

''நேத்து பறிச்ச ரோஜா

நான் பாத்து பறிச்ச ரோஜா

முள்ளில் இருந்தாலும்

முகத்தில் அழகுண்டு

நேரம் போனால் வாசம் போகும்.

வாசம் போனாலும் பாசம் போகாது''

என்ற அப்பாடல் வரிகள்,ரோஜா மலரோடு நேற்றைய நினைவுகளை மக்கிப் போகாது, காலப்பெட்டகத்தில் பத்திரப்படுத்தியது.

  நேற்றைய பொழுதை நெஞ்சில் நிலை நிறுத்தி,இன்றைய மாற்றத்தை சொல்லால் சொல்லாது,மனதிற்குள் மூடி மறைத்த காதலாக,

"நேற்று இல்லாத மாற்றம் என்னது

காற்று என் காதில் ஏதோ சொன்னது

இதுதான் காதலென்பதா

இளமை பொங்கிவிட்டதா"

  என்று,பொழுது புலரச்செய்தது'புதிய முகம்'திரைப்படத்தில் சுஜாதா மோகன் பாடிய சுகமான பாடல் வரிகள். வைரமுத்து வின் புதுமை சிந்தும் வரிகளுக்கு இசைப் புயல் ஏ.ஆர்.ரெஹ்மான் தேனாய் இசையூட்டி யிருந்தார்.

  இன்றைய பொழுதின் சுகமும் ஆனந்தமும் அவரவர் அனுபவங்களின் திரட்சி என்றா லும், போரில் தோல்வி முனையில் நிற்கும் ஒருவனுக்கு அவனின் எதிரி ஒருநாள் காலக்கெடு வழங்கிட,அவ்வாறு தோல்வி யின் பிடியில் சிக்குபவனின் ஆதங்கமும் மன உளைச்சலும் சொல்லி லடங்கா. அப்படிப்பட்டதோர் சூழலை'சம்பூரண ராமாயணம்' திரைப்படத்தில் இராவண னாக நடித்த டி.ஸ்.பகவதிக்காக,சி.எஸ் ஜெயராமன் மனமுருகப்பாடி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது 

'இன்று போய் நாளை வாராய்

என எனையொரு மனிதனும் புகலுவதோ'

  எனும் அற்புதப் பாடல். ஒவ்வொரு சொல் லுக்கும் தேவையான அழுத்தம் கொடுத்துப் பாடிய இப்பாடல், இன்று கேட்டாலும் நெஞ்சை உலுக்கி நிலை குலையச்        செய்யும்.அ.மருதகாசியின் இந்த உணர்வு பூர்வமான வரிகள் கே.வி.மகாதேவனின் உன்னத இசையோடு ஜெயராமனின் தனித்த குரலமைப்பால் கேட்போருக்கு தவிப்பை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.

  இன்றைய மகிழ்ச்சியை ஒய்யாரமாய் வெளிப்படுத்தியது 'காசேதான் கடவுளடா' திரைப்படத்தில் பி.சுசிலா குரல் மகிழ்ச்சி யில் துள்ளிப் பாடிய,

"இன்று வந்த இந்த மயக்கம்

என்னை எங்கெங்கோ கொண்டு செல்லுதம்மா"

  வாலியின் வரிகளை முழமையாய் உள் வாங்கி வசந்தமழை பொழிந்தார் எம்.எஸ். விஸ்வநாதன்.இதேபோன்றொரு பரவசம் ஏற்படுத்திய பாடலே 'வைதேகி காத்திருந் தாள்' திரைப்படத்தில் நம்மை முழுமையாய் வசப்படுத்திய, 

"இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே

இன்பத்தில் ஆடுது என்மனமே

கனவுகளின் சுயமவரமோ

கண்திறந்தால் சுகம் தருமோ?"

   என்ற ஜெயச்சந்திரனின் அதிர்வுகளை ஆனந்தமாக்கி,அகத்தில் சொர்க்கம் காணச்செய்த பாடல்.கங்கை அமரின் கனவில் மகிழ்சிக்கொடி கட்டிய இப்பாடல், அவர் தமையனாரின் இசை மழையில் இன்பமுற குளித்தது.

  நாளைய பொழுதை நம்பிக்கையடன் எதிர் கொண்ட 'நாளை நமதே' திரைப்படத்தில் எஸ்.பி.பியின் குரலில் கம்பீரமாய் நம்பிக்கை கோபுரமமைத்த,

"அன்பு மலர்களே நம்பி இருங்களே

நாளை நமதே இந்த நாளும் நமதே

தர்மம் உலகிலே இருக்கும் வரையிலே

நாளை நமதே எந்த நாளும் நமதே"

  என்று நம்பிக்கையில்,விரக்தியை விரட்டியடித்து வீரத்தை விளைநில மாக்கியது. வாலியின் வரிகளும் எம்.எஸ்.வியின் இசையும் இப்பாடலுக்கு 'எக்ஸ்பிரஸ்வே' அமைத்துக்கொடுத்தது. 

  முடிவாக,'நாளை'என்ற நாளைக் குறிப்பிட்டு அதற்கு ஒரு வேளையையும் கணக்கிட்டு,நிலாவை அந்த நேரத்திற்கு வா எனச் சொல்லி வேண்டுகோள் விடுத்து பி.சுசிலா தன் இணையற்ற இனிய குரலாலும்,தரமான பால் வரிகளாலும் தேசிய விருதுபெற்ற 'உயர்ந்த மனிதன்' திரைப்படப் பாடலான,

"நாளை இந்த வேளைபார்த்து ஒடிவா நிலா

இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா"

 எனும், 

 அன்று அறுபதுகளில் ஒலிக்கத் தொடங்கி, நேற்றும்,இன்றும் என்றும்,தமிழாலும், இசையாலும்,இதயங்களை வென்ற குரலாண்ட பாடல்.வாலியின் இந்த வசந்த வரிகளுக்கு சாகா வரம் தந்தார் எம்.எஸ். விஸ்வநாதன்.

  அன்றும்,இன்றும்,என்றும் மனித இனத்தை புனித உணர்வுகளாலும்,புரிந்த, புரியாத சொற்களாலும்,ஆழந்த நெளிவு சுளிவு களாலும்,திரண்ட பல குரல்களாலும், திவ்ய மாய் உள்ளக்கிளர்ச்சியினை ஏற்படுத்தும்  சக்தி,இசைக்கு மட்டுமே உண்டு்என்பதில், யாருக்கும் அய்யமிருக்கப் போவதில்லை.

                        ==/====≈==========0=====≈==========/==.



 


 

1 comment:


  1. ......இசைக்கு மட்டுமே உண்டு் என் பதோடு மட்டும் அல்லாமல் இசையை இரசிப்பவருக்கும் உண்டு என்பதில், யாருக்கும் அய்யமிருக்கப் போவதில்லை.

    ReplyDelete