Monday, September 18, 2023

ஆயிரத்தின் ஆற்றலில் நாட்டம்.

 

 "ஆயிரம் கரங்கள் நீட்டி 

 அணைக்கின்ற தாயே போற்றி 

 அருள் பொங்கும் முகத்தைக் காட்டி 

இருள் நீக்கம் தந்தாய் போற்றி

தாயினும் பரிந்து சால 

சகலரை அணைப்பாய் போற்றி

தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம் 

துணைக்கரம் கொடுப்பாய் போற்றி

தூயவர் இதயம் போல

துலங்கிடும் ஒளியே போற்றி

தூரத்தே நெருப்பை வைத்து 

சாரத்தை தருவாய் போற்றி

ஞாயிறே நலமே வாழ்க 

நாயகன் வடிவே போற்றி

நானிலம் உளநாள் மட்டும் 

போற்றுவோம் போற்றி போற்றி"

  எனும்'கர்ணன்'திரைப்பட துவக்கப்பாடல் டி.எம்.சௌந்நராஜனின் கனத்த குரலிலும், சீர்காழி கோவிந்தராஜனின் வெண்கலக் குரலிலும், திருச்சி லோகனாதனின் தடம் புரளாக் குரலிலும், P B.ஸ்ரீநிவாஸின் காந்தக் குரலிலும்,ஒருங்கே பிசிரற்றி ணைந்து பரவசமாய் ஒலிக்க, அப்பாடலை திரையரங் குகளில் கேட்ட மாத்திரத்தில் பலரும் மெய் மறந்து ஆனந்தத்தில் திளைத்திருப்பர்.

   இறையொளியை மனக்கண்முன் அப் பாடல் நிறுத்திட,ஆயிரம் என்ற சொல்லுக்கே ஆக்கமூட்டும் ஆற்றல் பிறந்ததாக உணர முடிந்தது.கண்ண தாசனின் தமிழ்மொழி சார்ந்த கவிதை அக்கறையும்,விஸ்வநாதன் ராமமூர்த்தி யின் மேன்மைமிகு இசையும்,ஆயிரம் தாங்கிய பாடலை பாசுரமாக்கியது.

   சென்னையில் ஆயிரம் விளக்கு என்றொரு பகுதி உண்டு.அங்கே உள்ள 1880 இல் ஆற்காடு நவாபால் கட்டப்பட்ட ஒரு மசூதியில்,ஒரு காலத்தில் மக்கள் திரண்டு கூடும் அரங்கக்கூட்டத்தின் மாலை வேளைகளில்,ஆயிரம் எண்ணை விளக்கு கள்  கொளுத் தப்பட்டதாகவும், அதனால் அம்மசூதிப் பகுதிக்கு ஆயிரம் விளக்குப் பகுதி எனப் பெயர் வந்ததாகவும், இணைய வழிச்செய்திகள் மூலம் அறியநேர்கிறது. மதங்களுக்குள் ஒளிப் பரிமாற்றம் இருப்பதையும் அதில் 'ஆயிரம்' எனும் சொல் அழகின் ஊட்டம் பெறுவதை யும் உணரலாம். 

  இதே உணர்வுடன் 'அரச கட்டளை'திரைப் படத்தில் டி.எம்.எஸ் எழுச்சியுடன் பாடிய

 "ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்

ஆதவன் மறைவதில்லை.

ஆணைகளிட்டே யார் தடுத்தாலும்

அலைகடல் ஓய்வதில்லை"

  எனும் ஆற்றலை உருவகப்படுத்திய ஆக்கம் நிறைந்த வரிகள்,கேட்போர் அனைவரின் நெஞ்சங்களிளும் வீரத்தை பீறிட்டு பாய்ச்சி வேதனைகளை ஒருசேர விரட்டியிருக்கும்.என்.எம். முத்துக்கூதனின் மின்னும் சொற்கள் கே.வி.மகாதேவனின் மடை திறந்த இசையில்,இடியென முழங்கின. ஆயிரத்தின் தரம் தாழ்த்தாமல் ஆதவனை முன் நிறுத்தியது இப்பாடல்.

   முதல் பாடல் ஆயிரத்தின் ஆற்றலை ஆன்மீக ஒளியென படரவிட்டது. இரண்டாம் பாடலோ ஆயிரத்தின் ஆற்றலில் ஆதவனை முன் நிறுத்தியது.இதே போன்றொரு முன் நிறுத்தலில்,பெண்மையை ஆயிரத்தின் ஆற்றலுடன் ஒப்பிட்டு,'வாழ்க்கைப் படகு' திரைப்படத்தில் P.சுசிலா பாடிய  கவியரசு கண்ணதாசனின், 

"ஆயிரம் பெண்மை மலரட்டுமே

ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே

ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கென்றே

சொல் சொல் சொல் 

தோழி சொல் சொல் சொல்"

    எனும் அற்புதமான வரிகள்,

பெண்ணின் பெருந்தக்க யாவுள

கற்பெனும் 

திண்மை உண்டாகப் பெறின்

   என்ற வள்ளுவரின் திருக்குறளை மீண்டும் தெளிவுறச் செய்தது. கண்ணதாசன் வரிகளிலமைந்த மற்றுமொரு ஆயிரத்துக்கு முதன்மை அளித்த பாடலே 'நிறம் மாறாத பூக்கள்' திரைப்படத்தில் மலேஷியா வாசுதேவன், எஸ்.பி.ஷைலஜா,ஜென்சி,குரல்களில் பாந்தமாய் நம் உணர்வுகளை அள்ளிச் சென்ற,

"ஆயிரம் மலர்களே மலருங்கள்

அமுத கீதம் பாடுங்கள்,ஆடுங்கள்

காதல் தேவன் நீங்களோ நாங்களோ,

நெருங்கி வந்து சொல்லுங்கள்"

  என்று,காதல் மலர்களை ஆயிரம் உணர்வு களின் நாற்கொண்டு மாலைகட்டிய வரிகள்.'வாழ்க்கைப் படகு' பாடலுக்கு மெல்லிசை மன்னர்களும் 'நிறம் மாறாத பூக்களுக்கு' இசைஞானியும் இசைமழை பொழிந்தனர்

    தமிழ் இலக்கியத்தில் எட்டுக்கு எட்டுத் தொகையும்,பத்துக்கு பத்துப் பாட்டும், பதிற்றுப் பத்தும் உண்டு. எட்டுத்தொகை யிலேயே புறநானூறு, அகநானூறு,ஐங்குறு நூறு என்று மூன்று நூறுகள் உண்டு. ஆயிரம் இல்லை ன்றாலும் முத்தொள்ளா யிரம் எனும் தொகை நூலில் சேர,சோழ, பாண்டிய மன்னர்களைப் பாராட்டிப் பாடும் இரண்டாயிரத்து எழுநூறு பாடல்கள் உண்டு.

  ஆயிரம் எனும் எண்ணுக்கு எப்போதுமே ஒரு சிறப்புத்தன்மையுண்டு. அதனால்தான் 'ஆயிரத்தில் ஒருவன்','ஆயிரத்தில் ஒருத்தி' எனும் சொற்களும்,திரைப்படத்தலைப்புக ளும்,ஒரு நபரின் தனித்தன்மையை வெளிப்படுத்துகின்றன.பாடல்களிலும், 

"உன்னை நான் சந்தித்தேன்

நீ ஆயரத்தில் ஒருவன்" 

மற்றும்

"ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ  

உலகம் அறிந்திடாத பிறவியம்மா நீ"

  எனும் பாடல்கள் 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்திலும்'கை கொடுத்த தெய்வம்' திரைப்படத்திலும் இடம் பெற்றன.முதல் பாடலை வாலியும், இரண்டாம் பாடலை கண்ணதாசனும் எழுத,இரண்டிற்கும் விஸ்வநாதன் ராமமூர்த்தி அமர்க்களமாக வும்,அழகாகவும் இசையமைத்திருந்தனர்.

  இதற்கிடையே நண்பர் ஒருவர்'அடிமைப் பெண்'திரைப்படத்தில் எஸ்.பி.பாலசுப்ர மணியம் முதலாவதாக தன் குரலை தமிழ்த்திரையில் சிறப்பாக அரங்கேற்றி ஆயிரம் நிலவினை பெண்மையில் ஒளிபெறச்செய்த,

"ஆயிரம் நிலவே வா" 

  பாடலை நினைவுறுத்தினார்.ஆயிரத்தை யும் பெண்மையையும் ஒருசேர வாழவைத்த இப்பாடலுக்கு கே.வி.மாகதேவன் தன் மேலான இசையால் அமரத்துவம் அளித்தார்.புலமைப்பித்தனின் வரிகளில் கோலோச்சிய இப்பாடல் என்னாளும் அவர் புகழ் பாடும்.

 சில நேரங்களில் ஆயிரத்தை நாம் சாதாரணமாக மதிப்பிடுவதுண்டு. அந்த வகையில்தான் "ஆயிரம்தான் இருக்கட் டுமே அவங்க பேசனது தப்புதானே"என்று கூறி ஆயிரத்தின் மேன்மையை அப்புறப் படுத்துவோம்.இதன் அடிப்படையில்தான் 'நெஞ்சில் ஓர் ஆலயம்' திரைப்படத் தில் P.B.ஸ்ரீநிவாஸ் பாடிய "நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை" பாடலுக்கிடையே,

"ஆயிரம் வாசல் இதயம்

அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்

யாரோ வருவார் யாரோ இருப்பார்

வருவதும் போவதும் தெரியாது" 

  என்ற வரிகள் ஆயிரத்தை அசட்டையாகக் கடந்து செல்லும். கண்ணதாசனின் இந்த கடந்து செல்ல முடியா வரிகள் கொண்ட பாடலை, விஸ்வநாதன் ராமமூர்த்தி,தங்கள் இணையற்ற இசையால் இதயத்தில் நிலை நிறுத்தினர்.இதே கருத்துப்பாதையில் பயணித்த மற்றுமொரு பாடலே'வழிகாட்டி' எனும் திரைப்படத்தில் இப்ராஹிம் இசையில் எம்.கே.ஆத்மநாதன் புனைந்த,

"ஆயிரம்பேர் வருவார் ஆயிரம் பேர் போவார்

ஆனாலும் ஒருசிலர்தான் மனிதராக வாழ்வார்"

எனும் மனிதனின் தரத்தை உள்ளுணரச் செய்த பாடல்.

  ஆயிரத்தின் பிரம்மாண்டத்தை பெரி தொன்றுமில்லை என்றாக்கிய இப்பாடலை பி.சுசிலா,மிக எளிதாகப்பாடி,சாதரணமாகக் கடந்து சென்றார்.இதேமனநிலையை பிரதி பலிக்கும் வண்ணம் ஆயிரம் இரவுகளை யும் ஆயிரம் உறவுகளையும் பின்னுக்குத் தள்ளி 'கற்பகம்' திரைப்படத்தில் பி.சசிலா பாடிய,

"ஆயிரம் இரவுகள் வருவதுண்டு ஆனால்

இதுதான் முதலிரவு

ஆயிரம் உறவுகள் வருவதுண்டு ஆனால்

இதுதான் முதலுறுவு"

  எனும் பாடல் இல்லறத்தின் மேன்மையி னையும் அதன் அர்த்தமுள்ள துவக்கத் தையும் ஆயிரத்துக்கும் மேலாக உயர்த்தி நிறுத்தியது.வாலியின் பெருமைசாற்றிய இப்பாடலுக்கும் விஸ்வநாதன் ராம மூர்த்தியே இசையால் முடிசூட்டினர்.

   ஆயிரம் பொய்கூறியாவது ஒரு திருமணம் நடத்தி வைப்போம் என்பர்.('ஆயிரம்  பொய்' எனும் தலைப்பபடன் ஒரு திரைப்படமும் வந்தது).உயர்ந்தாலும் தாழ்ந்தாலும், ஆயிரம் எனும் எண்,அன்றாட வாழ்வின் அரும் பொருளே.ஆயிரத்தின் ஆற்றலினை காதலுக்கு அர்ப்பணித்து 'சிவாஜி' திரைப் படத்தில் கவிப்பேரரசு புனைந்த"சஹானா சாரல் வீசுதோ" பாடலுக்கிடயே தோன்றும்,

"ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது.

நூறாண்டுகள் தாண்டியும் வாழுமிது"

   என்ற வரிகளால்,ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்திடும் காதலை, காலத்துடன் பிணைத்துவைத்தார். இதைத்தான்'ஆயிரம் ஜென்மங்கள்' கண்ட காதல் என்று கூறுகிறோமோ என்னவோ!உதித் நாராயணும் சின்மயியும் இணைந்து செவிகளை இன்பத்தில் ஆழ்த்திய இப் பாடலை,இசைப் புயலின் இதமான இசை மனசுக்குள் மலர்களாய்த் தூவியது.

  வாழ்க்கை மேடையில் மனிதனுக்கு எப்போதுமே,

"ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம்"

தான்.

   'பாத காணிக்கை'திரைப்படத்தில் கவியரசு எழுதிவைத்த  மனிதனின் இந்த இயல்பான ஆட்டத்தை போல்,ஆயிரத்தின் ஆற்றலே,அதன்மீது நாட்டம் கொள்ள வைத்து அதனை அகண்ட சாம்ராஜ்ஜிய மாக்கியோ,அல்லது பலவற்றை விரும்பச் செய்து  அவற்றில் ஏதேனும் ஒன்றை முன்னிறுத்தி,ஆயிரத்தைக் கடந்தோ, அதனைப்பற்றி பேசவைக்கிறது.'யானை இருந்தாலும் ஆயிரம் பொன்;இறந்தாலும் ஆயிரம் பொன்'எனும் பழம்பெறும் கூற்று உண்டு.அந்த வகையில் ஆயிரம் எனும் சொல்லின் ஆக்கமும் ஆற்றலும் அசாதாரணமானதே!.

பி.கு.ஆயிரம் சொல் கொண்ட திரைப்படங் கள்.

    ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி,ஆயிரம் ரூபாய்,ஆயிரம் பொய் ஆயிரம் ஜென்மங்கள்,ஆயிரத்தில் ஒருவன், ஆயிரத்தில் ஒருத்தி,ஆயிரம் வாசல் இதயம், வாரணமாயிரம்.( இன்னும் சில இருக்கக் கூடும்)

         ==============0===============




2 comments:

  1. ஆயிரம் நிலவே வா..ஓராயிரம் நிலவே வா என்ற பாடலை திரையில் முதலில் பாடிய SPB ஆயிரத்துக்கும் மேல் பாடல்கள் பாடியது அந்த ஆயிரத்திற்கு பல்லாயிரம் புகழ் சேர்க்கும்

    ReplyDelete
    Replies
    1. அதனையும் இணைத்துவிட்டேன் நண்பரே!

      Delete