Friday, December 1, 2023

தமிழும் தமிழரும் தமிழ்த்திரையும்

"செந்தமிழ் நாடென்னும் போதினிலே

இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே"

  எனும் மகாகவி பாரதியின் கூற்று பாட லாக 'உத்தமபுத்திரன்' (1940)திரைப்படத் தில்,ஜி.ராமநாதன் இசையில், P.U.சின்னப்பா பாடிய தாகவும் பிறகு எல்.வைத்திய நாதன் இசையில்'ஏழாவது மனிதன்' (1982) திரைப்படத்தில் பி.சுசிலா பாடிய பாடலாகவும் இடம் பெற்றதோடு, இன்னும் சில திரைப்படங்களிலும் இடம்பெற்றிருக்கக் கூடும்.பாரதியின் மற்றொரு உயரிய 

வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்

வாழிய பாரத மணித்திருநாடு

  என்று தமிழையும் தமிழரையும் ஒருசேர வாழ்த்தும் வரிகளை ஏ.வி.எம்மின் 'நாமிருவர்'திரைப்படத்தில் தேவநாராய ணனும் டி.எஸ். பகவதியும்,ஆர் சுதர்சனத் தின் சிறந்த இசையில் பாடிடக் கேட்டு,கடந்த நூற்றாண்டைச்சேர்ந்த பலரும் மெய்சிலிர்த் திருப்பர்.

"செந்தமிழே உயிரே நறுந்தேனே

செயலினை வாக்கினை உனக்களித்தேனே

நைந்தாய் எனில் நைந்து போகும் என்வாழ்வும்

நன்னிலை உனக்கெனில் எனக்கும்தானே"

  எனும் பாவேந்தரின் பாட்டு திரைப்படங் களில் இடம் பெறவில்லை என்றாலும் இப் பாடலை அறியாத தமிழறிஞர்கள் இருந்திட வாய்ப்பில்லை. தமிழை சுவாசித்த தமிழ்த் திரை,தமிழையும் தமிழரையும் சொல்லா லும் இசையாலும் தூக்கிக் கொண்டாடியது. 

  செந்தமிழையும்,தமிழனையும் ஒருங்கி ணைந்து போற்றும் பாணியில் 'மதுரை வீரன்' திரைப்படத்தில் எம்.எல்.வசந்தகுமாரி தன் கனத்த குரலில் பாடிய,

"செந்தமிழா எழுந்து வாராயோ

உன்சிங்கார தாய்மொழியை பாராயோ"

 எனும் எழுச்சிமிகு கண்ணதாசன் வரிகளை ஜி.ராமநாதன் இசையில் கேட்கையில் வீறு கொண்டு எழத்தோன்றும்.மாறாக,

"செந்தமிழ் நாட்டு தமிழச்சியே

சேல உடுத்த தயங்குறியே"

  எனும் தமிழ் மகளிரின் உடைக்கலாச்சாரம் பேணும் வைரமுத்துவின் வரிகளை ஏ.ஆர்.ரெஹமான் இசையில் பாடிய சாகுல் ஹமீதின் 'வண்டிச் சோலை சின்னராசு'படப் பாடலைக் கேட்கையில்,தமிழ் மண்ணின் மாண்பு மெச்சப்படுவதை உணரமுடியும்.

"கன்னித்தமிழ் மனம் வீசுதடி

காவியத் தென்றலுடன் பேசுதடி"

  எனும் 'அடுத்த வீட்டுப்பெண்'திரைப் படத்தில் P.சுசிலா பாடிய தஞ்சை N.ரமைய்யாதாசின் அமுத கானமும்,

"தமிழுக்கும் அமுதென்று பேர்

அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்,உயிருக்கு நேர்"
என்று தொடங்கி வரிவரியாய் சொல் லெடுத்து தமிழுக்கு சிரம் தாழ்த்தி ஆலாபனை செயுயும் 'பஞ்சவர்ணக் கிளி' திரைப் படத்தில் அதே P.சுசலா பாடிய பாவேந்தரின் பாடலும், தமிழ் மொழியின் பெருமையினை பல் வேறு உருவகங்களாய் உர மேற்றி பறைசாற் றின.பின்னர்,அதே 'பஞ்சவர்ணக்கிளி' திரைப்படத்தில் தமிழை பெண்ணுடன் மைய்யப்படுத்தி,
"அவளுக்கும் தமிழென்று பேர்
என் உள்ளத்தில் அவளென்றும்
அசைகின்ற தேர்"

   எனும் கனிவான பாடலும்,வாலியின் வரிகளில் டி.எம்.எஸ்ஸின் கம்பீரக்குரலால், தமிழை தேனில் திளைக்கச் செய்தது. 'அடுத்த வீட்டுப்பெண்' திரைப்படத் திற்கு ஆதி நாராயணராவும்'பஞ்சவர்ணக்கிளி' படத்திற்கு விஸ்வ நாதன் ராமமூர்த்தியும் இசையால் இனிமை படைத்தனர்.
   பெண்ணை தமிழாக்கிய மற்றுமொரு பாடலே'பாவை விளக்கு'திரைப்படத்தில் சிதம்பரம் ஜெயராமன் தனது தனித்துவ குரலால்,சிம்மக்குரலோன் வரி வரியாய் வாசிக்க, அதனைப் பின் தொடர்ந்து பாடிய,

"வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி    என்னருகில் வந்தாள்
கண்ணசைவில் கோடி கோடி 
கற்பனைகள் தந்தாள்" 

எனும் எதுகை மோனையை ஏற்றி வைத்த பாடல்.
   A.மருதகாசியின் ஈடு இணையற்ற இவ்வரி கள், கே.வி.மகா தவன்  இசையில் மேலும் மேன்மையுற்றன.  
  பெண்ணை தமிழ் கொண்டு வருணிப் பதில் ஒருபடி மேலே போய்,'மாலையிட்ட மங்கை' திரைப்படத்தில் டி.ஆர்.மகாலிங் கம் பாடிய, இன்றும் இசைமேடைகளில் பலரும் பாடத் துடிக்கும்,கண்ணதாசன் வரிகளால் தமிழுக்கு தளிர் கொடுத்த, 

"செந்தமிழ் தேன்மொழியாள் 
நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்"

எனும் வரிகள்,விஸ்வநாதன் ராமமூர்த்தி யின் இசையில் வசந்தம் பரப்பி,அதனை விலை மதிப்பில்லா பாடலாக்கின.
   பெண்மையையும் ஆண்மையையும் தமிழோடு தவழச்செய்த,
"பழகும் தமிழே பார்த்திபன் மகனே
அழகிய மேனி சுகமா?"
என்று  கேள்விக்கனை தொடுத்த P.சுசிலாவின் குரலும்,
"பாவலன் கவியே
பல்லவன் மகளே
அழகிய மேனி சுகமே"
  என்று அதற்கு  மிதமாக பதிலளித்த ஏ.எம். ராஜாவின் குரலும் 'பார்த்திபன் கனவு' திரைப்படப் பாடலை, தமிழ்ச் சுவையின் இன்னொரு இளவேனில் ரகமாக்கியது. இப்பாட லையும் கண்ணதாசன் எழுத,அதற்கு வேதா ஏகாந்தமாய் இசை அமைத்திருந்தார்.
  தமிழின் சிறப்போடு எம்.ஜி.ஆர்.படப் பாடல்களின் சிறப்பை உறுதிப்படுத்திய
"அழகிய தமிழ் மகள் இவள்
இரு விழிகளில் எழுதிய மடல்"
எனும் 'ரிக்ஷாக்காரன்'திரைப்படத்தில் இடம்பெற்ற வாலி யின் வரிகள்,டி.எம்.எஸ் P.சுசிலா குரல்களில் எம்.எஸ்.விஸ்வநாத னின் இசையோடு சேர்ந்து,தமிழையும் எம்.ஜி.ஆரையும் மேலும் சிறப்பித்தது.
    வருணனைத் தமிழால் வாழ்த்துரை வழங்குவதில் பெண்கள் ஒருபோதும் சளைத்தவர்கள அல்ல என்பதை நிரூபித்த பாடலே,வாலி கவி புனைந்து எம்.எஸ் விஸ்வநாதனின் இசைக் கூடலில் p.சுசிலா வும் டி.எம்.எஸ்ஸும் பாடிய,
"மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ
நீ மூவேந்தர் வழிவந்த மன்னவனோ" 
  எனும் 'பிள்ளையோ பிள்ளை'திரைப்படப் பாடல்.
    தமிழ் மொழியையும் தமிழ் இனத்தையும் ஒருசேரப் பாராட்டி, 
"தமிழன் என்றோர் இனமூண்டு
தனியே அவர்க்கோர் இடமுண்டு
அமிழ்தம் அவனுடை மொழியாகும்
அன்பே அவனுடை வழியாகும்"
என்று நமக்கல் கவிஞர் புனைந்த ஒப்பற்ற கவிதை வரிகள் 'மலைக்கள்ளன்' திரைப்படத்தின் அறிமுகப் பாடலானது. எஸ்.எம்.சுப்பைய்யா நாயுடுவின் இசையில் பிரசவித்த இப்பாடல்,என்று கேட்டாலும் இனிக்கும். 
   செண்பகப்பாண்டியனின் அரசவைக் கவிஞர் நக்கீரரின் புலமையுடன் தமிழில் விளையாடிய ஈசனைப்பற்றி "நான் பெற்ற செல்வம்' 'திருவிளையாடல்'ஆகிய இரு திரைப்படங் களில் கண்டு களித்தோம்.
   "தமிழ் மாலை தனைச்சூடுவார்"என்று முருகனை வாழ்த்தி டி.எம்.எஸ் குரலில் பாடிய அம்பிகாபதியாகத் தோன்றிய சிவாஜி கணேசனின் வாய்வழிப் பாடலும், "வாடா மலரே தமிழ்த்தேனே" என்று அதே'அம்பிகாபதி'திரைப்படத்தில் சிவாஜி பானுமதிக்காக டி.எம் எஸ் & பானுமதி குரல்களில் ஒலித்த காதலைப் போற்றி.தமிழுக்கு தனிப்பெருமை கூட்டும்  பாடலும்.
   தமிழின் வழி நின்று மகளைப்போற்றிய
"தெம்மாங்கு பூந்தமிழே 
தென்னாடன் குலமகளே"
எனும் பார்மகளே பார் திரைப்படத்தில் டி.எம்.எஸ் பி.சுசிலா பாடிய "நீரோடும் வைகையிலே" எனும்  அமுத கீதமும்,
நல்ல மனதை தமிழால் வாழ்த்திய 
"நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க
தேன்தமிழ் போல் வான்மழைபோல்
சிறந்து என்றும் வாழ்க"
எனும் 'ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகி றது' திரைப்படத்தில்  கே.ஜே ஏசுதாஸ் பாடல் வரிகளும்,நன்மையுடன் தமிழை நலம்பெறச் செய்தன.இதே போன்று தமிழால் வாழ்த்துக் கூறிய பாடலொன்று பாலுமகேந்திராவின்  'மறுபடியும்'  திரைப் படத்தில் இடம் பெற்றது.
"நலம் வாழ என்னாளும் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தை கள்"
  எனும் வாஞ்சை உள்ளடக்கிய வாலியின் வரிகளுக்கு இசைஞானியின் இசையில் இதமாய் தன் குரலால் சுகம் கூட்டினார் எஸ்.பி.பி.
மேலும்;
"மதுரையில் பறந்த புலிக்கொடியை உன் கண்களில் கண்டேனே;
புதுமைகள் புரிந்த சேரன் வில்லை உன் புருவத்தில் கண்டேனே;
தஞ்சையில் பறந்த  புலிக்கொடியை உன் பெண்மையில் கண்டேனே.
இவை மூன்றும் சேர்ந்து தோன்றும் உன்னை,
தமிழகம் என்றேனே!"
  என்று 'பூவா தலையா'திரைப்படத்தில் பெண்மையை  பாக்களாக்கி,தமிழகத் திற்கே மகுடம் சூட்டிய டி.எம்.எஸ் பாடிய வாலியின் பாடல்,எம்.எஸ் விஸ்நாதன் இசையில் 'பூவா தலையா'திரைப்டத்தை நினைத்துப் பார்க்கும் காரணங்களில் ஒன்றானது.
   தமிழையும்,தமிழரையும்,தமிழகத்தையும் மறந்து, தமிழ்த் திரை வண்ணங்கள் படைக்க இயலுமோ? பாவலர்களோடு ஒருங்கிணைந்து தமிழ்த்திரை தமிழால் தமிழுக்கு ஆராதனை செய்திட,'தமிழ்','தமிழ் படம்','செந்தமிழ்ப்பாட்டு' 'வண்ணத்தமிழ் பாட்டு','அழகிய தமிழ் மகன்'தமிழன்',சங்கத் தமிழன்'' தமிழ்க்குடிமகன்'போன்ற திரைப் படத் தலைப் புகளும் தமிழை ஆரத்தழுவி அமர்க்களப் படுத்தின. மொத்தத்தில் தமிழால் தமிழ் திரைத்துறை தமிழுக்கும் தமிழ் மண்ணுக்கும் வாகை சூடியது.
             =============0=============
 

2 comments:

  1. விரிந்து பரந்த தமிழ் எனும் தேன் கடலில், தோய்த்த பலாச் சுளைகளாய்ஒவ்வொரு திரைப்பட பாடலும் தித்திதன

    ReplyDelete
  2. இனிய சொல்லாடல்.நன்றி.

    ReplyDelete