"ஒராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நானறிவேன்"
('வல்லவனுக்கு வல்லவன்'திரைப் படம்; பாடல் டி.எம்.எஸ் குரலில்)
என்ற இதமான பாடல்,பல ஆயிரம் பார்வை களில் ஒற்றைப் பார்வையை,காதலின் பலத்திற்கு உறுதி மொழியாக்கியது. மாறாக,
"பார்வை ஒன்றே போதுமே
பல்லாயிரம் சொல் வேண்டுமே"
(படம் 'யார்நீ' பாடலைப் பாடியது டி.எம்.எஸ்& எல்.ஆர்.ஈஸ்வரி)
எனும் டூயட் பாடல் வரிகள்,காதலின் ஒற்றைப் பார்வைக்கு விடைகாண,ஓரா யிரம் சொற்கள் தேடியது.இந்தபாடல்கள் இரண்டிற்குமே வரிகள் கண்ணதாசன் எழுத,வேதா இசையில் வேகம் கூட்டினார். மாற்றுச் சிந்தனைகள் பார்வையின் பன்முகத்தன்மையை விரிந்து,பரந்து, பறக்கச் செய்தது.
"இன்னும் பார்த்துக்கொண்டிருந்தால் என்னாவது
இந்த பார்வைக்குத்தானா பெண்ணாவது"
('வல்லவன் ஒருவன்'திரைப்படத்தில் P.சுசிலாவும் டி.எம் எஸஸும் பாடியது)
என்று காதலின் கடோத்கஜ பார்வையை கேலி செய்த டூயட் பாடல்,மீண்டும் கண்ண தாசன் வரிகளைத்தாங்கி,வேதாவின் இசை யில் வேடிக்கைக் காட்டியது.
"மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப்பாட வேண்டும்
"நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்"
('கொடிமலர்'படத்தில் P.B.ஸ்ரீநிவாஸ் மெய் மறந்து பாடியது)
எனும் கண்ணதாசன்வரிகள்,விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் மௌனத்திற்கு பார்வை பலம் கொடுத்து பாடலாக்கியது.
இதே P.B.ஸ்ரீநிவாஸ் 'வாழ்க்கைப்படகு' திரைப்படத்தில் பாடிய "நேற்றுவரை நீ யாரோ நான் யாரோ"பாடலுக்கிடையே தோன்றும்,
"உன்னை நான் பார்க்கும்போது
மண்ணை நீ பார்க்கின்றாயே
விண்ணை நான் பார்க்கும்போது
என்னை நீ பார்க்கின்றாயே
நேரிலே பார்த்தாலென்ன
நிலவென்ன தேய்ந்தா போகும்"
எனும் வரிகள் மூலம் காதல் களியாட்டத் தில் பெண்மையின் கண்ணாமூச்சிப் பார்வை,கனிவான அத்தியாயங்கள் எழுத வல்லது எனும் சுவையான கற்பனை மந்திரத்தை,சொற்களால் சொல்லியடித் தார் கவியரசு.இப்பாடலுக்கும்,இரட்டையரே இசைக்கூட்டினர்.
"பார்த்து பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன்
நீ பாடும் மொழி கேட்கையிலே வார்த்தை இழந்தேன்"
என்று 'மணப்பந்தல்'திரைப்படத்தில் P.B.ஸ்ரீநிவாசும் P.சுசிலாவும் பாடிய பாடல் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில், கண்ணதாசன் வரிகளால் காத்திருந்ததை பார்த்திருந்ததாக்கி,கேட்டிருந்ததை மௌன மொழியாக்கியது.ஆனால்'நீ வருவாய் என' திரைப் படத்தில் கே.எஸ்.சித்ரா ஒரு முறை யும் ,S.P பாலசுப்பிரமணியம் ஒரு முறையும் பாடும் பா.விஜய்யின் வரிகளாய் எஸ்.ஏ.ராஜ் குமாரின் இன்னிசையில் கேட்ட,
"பார்த்து பார்த்து கண்கள் பூத்திருந்தேன்
நீ வருவாய் என
பூத்து பூத்து புன்னகை சேர்த்து வைப்பேன்
நீ வருவாய் என"
எனும் பாடல்,காத்துப் பார்த்திருப்பதை, பூக்களாய் பூக்கச்செய்து,புன்னகை பெருக்கியது.
"என்ன பார்வை உந்தன் பார்வை
இடை மெலிந்தாள் இந்த பாவை"
எனும் P.சுசிலாவின் பெண்குரலிலும்
"என்ன பார்வை உந்தன் பார்வை
என்னை மறந்தேன் இந்த வேளை"
எனும் கே.ஜே.ஏசுதாசின் ஆண்குரலிலும் எழுந்த'காதலிக்க நேரமில்லை'திரை கானமும்,
"முன்தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே"
எனும் நரேஷ் அய்யர்&பிரஷாந்தினி பாடிய 'வாரணம் ஆயிரம்' படப்பாடலும்,பார்வை யை மன்மதன் ரதியின் கனைகளாக்கி, காதல் களத்தில் பார்வையின் பாதிப்பை பரவசமாய் மனதில் பதியச்செய்தன. முன்னதை விஸ்வநாதன் ராமமூர்த்தி இசைக்கு கண்ணதாசன் வரியமைக்க, 'வாரணம் ஆயிரத்திற்கு',தாமரை கவிதை புனைய, ஹாரிஸ் ஜெயராஜ் உளம் நனைய இசை ஊற்றினார்.பார்வையின் பலத்தை பக்குவமாய்,ஏ.எல் ராகவனின் குரலில் மனதில் பதியம் போட்ட பாடலொன்று,1959 இல் வெளி வந்த'பாஞ்சாலி'எனும் படத்தில் இடம் பெற்றது.
"ஒருமுறை பார்த்தாலே போதும்
உன் உருவம்
மனதை விட்டு நீங்காது எப்போதும்"
எனும் எளிமையான அ.மருதகாசியின் வரிகளுக்கு கே.வி.மகாதவன் பாந்தமாய் இசையமைத்திருந்தார்.
பார்வையை பகிரும் வண்ணம் 'மரகதம்' திரைப்படத்தில் எஸ்.எம்.சுப்பைய்யா நாயுடு வின் மேலான இசையில் டி.எம்.சௌந்தரா ஜனும் ராதா ஜெயலட்சுமியும் பாடிய,
"கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு
அது காவியம் ஆயிரம் கூறும்"
எனும் ரா.பாலுவின் வரிகளும்,
'தங்கப்பதுமை'திரைப்படத்தில் விஸ்வ நாதன் ராமமூர்த்தியின் தேன்சுவை இசையில் டி.எம்.எஸ்ஸும் P லீலாவும் பாடிய,
"முகத்தில் முகம் பார்க்கலாம்
விரல் நகத்தில்
பவழத்தின் நிறம் பார்க்கலாம்"
எனும் பட்டுக்கோட்டையார் பாடலும், இலக்கிய நயத்தை வெண்திரையில் விதைத்து பார்வைக்கு பலம் கூட்டின.
மேலும் பார்வையை கிண்டலாக விமர்சித்து
"பார்த்தாலும் பார்த்தேன்
நான் உன்னப்போல பார்க்கல"
(படம்:-'ஆயிரம் ரூபாய்'கண்ணதாசன் வரிகளை P.B.ஸ்ரீநிவாசும் P.சுசிலாவும் கே.வி.மகாதேவன் இசையில் பாடியது)
என்று குறை கூறலும்,
''பார் மகளே பார் பார் மகளே பார்
நீயில்லாத மாளிகையை
பார் மகளே பார்
உன் நிழலில்லாமல் வாடுவதை
பார் மகளே பார்
தாய் படுத்த படுக்கையினை
பார் மகளே பார்
அவள் தங்க முகம் கருகுவதை
பார் மகளே பார்"
( படம்:-பார் மகளே பார்.விஸ்வநாதன் இசையில் டி.எம்.எஸ் பாடிய கண்ணதாசன் பாடல்)
என்று மகளைப் பிரிந்த வேதனையை பார்க்கச் சொல்லி விளிப்பதும்,
"உன்னைப்பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
உன் செயலைப் பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது"
('அடிமைப்பெண்'திரைப்படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் டி.எம்.எஸ் பாடிய வாலியின் வரிகள்)
என்று பார்வையின் ஏளனத்தை பறைசாற் றுவதும்,
"ஏன் சிரித்தாய் என்னைப்பார்த்து
உன் எழில்தனைப் பாடவா தமிழைச் சேர்த்து:
( பொன்னித்திருநாள் எனும் திரைப்படத் தில் கே.வி.மகாதேவன் இசையில் P.B.ஸ்ரீநிவாஸ் பாடிய கவிஞர்.பி.கே.முத்து சாமியின் கவிதை) என்று பார்வையின் காரணத்தைக் நளினமாகக் கோருவதும்,
பார்வை நாடகத்தின் பல சுவையான மேடைக் காட்சிகளே!
"பார்த்த நியாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ"
எனும்'புதிய பறவை'யின் P.சுசலாவின் நேரடிக் கேள்விக்கு,
"பார்த்தால் பசி தீரும் பருவத்தின் மெருகேறும்
தொட்டாலும் கை மணக்கும்
தொட்ட இடம் பூ மணக்கும்"
எனும் P.சுசிலாவின் 'பார்த்தால் பசி தீரும்' திரைப்படப்பாடல் பார்வையின் பதிலடி ஆகியிருக்குமோ?விஸ்வநாதன் ராமமூர்த்தி இசைக்கென,இவ்வரிகள் எழுதிய கண்ண தாசனின் கற்பனையே;இதன் எதிர்வினைக் காரணம் அறியும்.
"என்னைப் பாரு என் அழகைப்பாரு கண்ணாலே
ரெண்டு கண்ணாலே
பார்த்தால் இன்பலோகம் இங்கே தெரியும் தன்னாலே"
என்று விழிகளால் பந்தாடி பார்க்கச் சொல் லும் பாடலொன்றும்,'மனோகரா'திரைப் படத்தில் T.V.ரெத்தினம் குரலில் இடம்பெற் றது.உடுமலை நாராயணகவியின் இப்பாட லுக்கு எஸ்.வி.வெங்கட்ராமனும் டி.ஆர்.ராம நாதனும் இணைந்த இசையமைத்தனர்.
இதற்கு,
"நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான்
நல்ல அழகி என்றேன் நல்ல அழகி என்பேன்"
என்று'அன்பேவா'வின் வாலி எழுதிய. டி.எம்.எஸ்ஸி&P.சுசிலாவின் மறைமுக பதில்,மற்றொரு பார்வையாகும்.வாலி எழுதிய இப்பாடலுக்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர்.
இப்படியாகவும் இதற்கு மேலும் பல்வேறு பார்வைகளின் பதிவுகளுக்குள் பதிவான தமிழ்திரை,'என்னைப் பார்','பார் மகளே பார்','என்னைப்பார் என் அழகைப்பார்', 'பார்த்தால் பசி தீரும்','பார்த்தேன் ரசித் தேன்''பார்த்தாலே பரவசம்','பார்வையின் மறு பக்கம்',என்று பல பார்வை போற்றும் தலைப்புகளை தருவித்தது.மொத்தத்தில் தமிழ்த்திரை கண்டது, பன்முகப் பார்வை கள் மட்டுமன்று;அவற்றின் பல முனை தாக்கங்களும் தான்.
==============0================
👁️ பார்வயையே, இமை மூடச் செய்யும் பார்வை குறித்த ஒவ்வொரு பாடல்களும் 👁️
ReplyDelete