"நட்ட கல்லை தெய்வமென்று
நாலு புட்பம் சாத்தியே
சுற்றிவந்து மொணமொண என்று
சொல்லும் மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ
நாதன் உள்ளிருக்கையில்!
சுட்ட சட்டி சட்டுவம்
கறிச்சுமை அறியுமோ "
எனும் பதினெட்டு சித்தர்களில் ஒருவரான,சிவவாக்கியர் வடித்த பழைய கவிதை வரிகளை,கலைத் தாயின் மூத்த பிள்ளை சிவாஜி கணேசனின் முதல் படமான பராசக்தியில் வசனமாகக் கேட்ட நினை வுண்டு.
"இறைவனை கல்லில் தேடாதே உன் உள்ளில் தேடு"என்ற சிந்தனையை கவிதைகளாக்கி காலம் வென்ற பாடலிது. கல்லையும் கடவுளையும் அடிப் படையாகக் கொண்டு இரண்டு மாறுபட்ட கோணங்களில் சிந்தித்து, இரு வேறு கருத்துக்களால்,எவ்வகையிலும் தொடர்பில்லாத இரு திரைப்படங் களில்,மறக்க வொண்ணா பாடல்களாக்கினார் கவியரசு கண்ணதாசன். இதில் முதலில் வெளிவந்த,சிவாஜியின் நடிப்பில் உதயமான மகாகவி காளிதாஸ் திரைப்படத்தில் நாம் கேட்ட,
கல்லாய் வந்தவன் கடவுளம்மா அதில்
கனியாய் கனிந்தவள் தேவியம்மா
எனும் வரிகள் மூலம்,கடவுள் கல்லில் தோன்றிய கதையைச் சொன்னார் கவியரசு.ஆனால் அவரே,கடவுள் மீண்டும் கல்லான கதையை,தனது முரண்பட்ட கற்பனை மூலம்,எம்.ஜி.ஆர் நடித்து வெளிவந்த என் அண்ணன் திரைப்படத்தில்,
கடவுள் ஏன் கல்லானார்
மனம் கல்லாய்ப்போன மனிதர்களாலே
எனும் மனக்குமுறலாய் வெளிப்படுத்தினார்.இவ்விரு பாடல்கள் மூலம் மனிதன் மனமுருக வேண்டிடின்,கல்லில் கடவுள் உதயமாவார் என்றும், மாறாக மண்ணில் மனிதம் மடிந்திடின்,கடவுள் எப்படி காட்சியளிப்பார், அவர் சாதாரண கல்லாகத்தானே இருக்க முடியும் என்றும்,சிந்திக்க வைக்கின்றன.
இதில் இரண்டாம் பாடல் பராசக்தி வசனத்துடன் நம்மை இணைக்கிறது என்று கூறுவதைக் காட்டிலும், கல்லைக் கடவுளாகக் காண்பதும்,கடவு ளைக் கல்லாக்குவதும், மனிதர்கள் கையில்தான் இருக்கிறது என்பதே, வலுவான உண்மையாகும் .தமிழ் சினிமாவின் இரண்டு தலையாய கதா நாயகர்கள் நடித்த இவ்விரண்டு படங்களின் பாடல் களையும், ஒரே கவிஞர் எழுத, டி.எம்.எஸ் எனும் ஒரே பாடகர் பாட,திரையிசைத்திலகம் கே.வி.மகா தேவன் என்ற ஒரே இசையமைப் பாளர் இசையமைத்தார் என்பது, இப்பாடல்களின் தனிச் சிறப்பாகும்.
கல்லும் கடவுளும் என்ற சஞ்சலக் கடலை கடந்து,கடவுள் வாழ்த்துக் குரள்களில் கடைசியான,
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேரா தார்
எனும் எளிமையான,ஆனால் ஏற்றமான குறள் மூலம்,கடவுளைக் கடக் காது பிறவிப்பெருங்கடல் நீந்த இயலாது என்று வலியுறுத்திக் கூறினார் வள்ளுவர்.'கடவுளை நம்பினோர் கைவிடப்படார்' எனும் வழக்கு மொழிக் கேற்ப,ஆத்திகரோ நாத்திகரோ,இறைவனை நம்பியோ அல்லது நம்பிக் கையை முன்வைத்தோதான் வாழ்கையினைத் தொடருகின்றனர்.
கடவுள்மீது நம்பிக்கை கொண்டோர் வழிபாடுகளை முன்னிறுத்தியே எந்த காரியத்தையும் தொடங்குகின்றனர். இந்த நம்பிக்கை அதிக பணம் மூலதனம் செய்து,இலாபம் ஈட்ட முனையும் திரைத்துறைக்கு,ஒரு கட்டாய சடங்காகிறது.வழிபாடு மட்டுமின்றி திரைப்பட தலைப்புகளிலும் பாடல்க ளிலும் கடவுளின் பலத்தை காணமுடிகிறது.கடவுளின் தாக்கம் தமிழ்த் திரைக்கு ஒரு அழுத்தமான முன்னோக்கிய பயணத்தை உறுதி செய்கி றது.
கடவுளைத் தலைப்பாகக் கொண்டு வெளிவந்த திரைப்படங்களில் கடவுளின் குழந்தை {1960} கடவுளைக் கண்டேன்{1963 }காசேதான் கடவு ளடா{1972} கடவுள் மாமா {1974} கடவுள் அமைத்த மேடை {1979} கடவுளின் தீர்ப்பு {1981}கடவுளுக்கு ஓர் கடிதம்{1982}அறை எண் 305-இல் கடவுள்{2008}, நான் கடவுள்{2009} ஓ மை கடவுளே {2020} போன்றவற்றை மிகவும் முக்கிய மானதாகக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.இந்த எல்லா படங்களுமே கருத்தாழத்திலும் கதைஉருவாக்கத்திலும்,ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபட்டிருந்தன என்பது,படைப்பாளிகளின் தனித் திறமையாகும்.
தமிழ்திரைப்படப் பாடல்களில் பல்வேறு கவிஞர்களின் மாறுபட்ட கற்பனையும் சிந்தனையும்,கடவுளை நாம் பல்வேறு கோணங்களில் காண ஏதுவானது. அவற்றில் தனித்தன்மைவாய்ந்த பல தரமான பாடல் கள் உண்டு.உதாரணத்திற்கு சாந்தி நிலையம் திரைப்படத்தில் பி.சுசீலா குழுவினருடன் பாடிய,
"கடவுள் ஒருநாள் உலகை காண தனியே வந்தாராம்
கண்ணில் கண்ட மனிதரையெல்லாம் நலமா என்றாராம்"
எனும் இனிமையான பாடல்,நலம் காக்கும் கடவுளை நலம் விசாரிக்கும் மனித பரிமானதுடன் வெளிப்படுத்தியது."குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று"என்போம் இதைத்தான் கல்லும் கனியாகும் திரைப்படத்தில் டி.எம்.எஸ் தனது அழுத்தமான ஆண்மைக்குரலில்,
"நான் கடவுளைக் கண்டேன்
என் குழந்தை வடிவிலே
அவன் கருணையைக் கண்டேன்
அதன் மழலை மொழியிலே"
எனும் எழில்மிகு பாடலால் இனிக்கச் செய்தார்.இவற்றில் முதல் பாடலை கவியரசு எழுத,இரண்டாம் பாடல் வாலியின் கற்பனையில் வரிகளாயின. இரண்டு பாடல்களுக்கும் மெல்லிசை மன்னரே இசையமைத்திருந்தார்.
காதலின் ஏமாற்றத்தையும் பிரிவாற்றாமையையும் உணருகின்ற ஒரு ஆண்மகன் தன் காதல் விரக்திக்குக் கடவுளைக் காரணம் காட்டுவதோடு நில்லாமல், கடவுளை யே பழிவாங்கத் துடிக்கும் விபரீதமான சிந்தனை யை வெளிப்படுத்திய பாடலே,எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடிப்பில் வெளி யான வானம்பாடி திரைப்படத்தில் கனமாக ஒலித்த,
"கடவுள் மனிதனாக பிறக்கவேண்டும்
அவன் காதலித்து வேதனையில் வாடவேண்டும்
பிரிவென்னும் கடலலையில் மூழ்கவேண்டும்
அவன் பெண் என்றால் என்னவென்று உணரவேண்டும்"
என்று தொடங்கி,அத்து மீறிய வெறுப்புடன் கடவுளைச் சாடிய,
"அவனை அழைத்து வந்து
ஆசையில் மிதக்கவிட்டு
ஆடடா ஆடு என்று
ஆடவைத்து பார்த்திடுவேன்
படுவான் துடித்திடுவான்
பட்டதே போதுமென்பான்
பாவியவன் பெண்குலத்தை
படைக்காமல் நிறுத்திவைப்பான்"
என்ற வரம்பு மீறி வலியுணர்த்திய பாடலாகும்.கவியரசின் அனுபவ பூர்வமான இவ்வரிகளில்,கே.வி.மகாதேவன் தனது தன்னிகரற்ற இசை யால்,கருத்துக்களின் கம்பீரத்தை இரட்டிப்பாக்கினார்.
இதே காதல் ஏமாற்றத்தினை வஞ்சிக்கப்பட்ட காதலும் இல்லறமும், பெண்மையின் கோணத்தில் மனம் நொந்து மடை திறந்த வரிகளே, இருமலர்கள் திரைப்படத்தில் வாலியின் கைவண்ணத்தில் எம்.எஸ். விஸ்வநாதன் இசையில்,
"கடவுள் தந்த இரு மலர்கள்
கண்மலர்ந்த பொன் மலர்கள்
ஒன்று பாவை கூந்தலிலே
ஒன்று பாதை ஓரத்திலே"
என்று பெண்மனத்தின் ஆழ்ந்த சோகத்தினை,பி.சுசீலா மற்றும் எல்.ஆர். ஈஸ்வரி குரல்களில், நீங்காமல் நெஞ்சில் பதித்த பாடலாகும்.
மனிதரில் கடவுளும் மிருகமும் உண்டு என்று கமல் ஆளவந்தான் திரைப் படத்தில் பாடிய பாடல்தான்,
"கடவுள் பாதி
மிருகம் பாதி
கலந்து செய்த கலவை நான்
வெளியே மிருகம்
உள்ளே கடவுள்
விளங்க முடியா கவிதை நான்
மிருகம் கொன்று
மிருகம் கொன்று
கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்
ஆனால்
கடவுள் கொன்று உணவாய்த் தின்று
மிருகம் மட்டும் வளர்கிறதே!
நந்தகுமாரா நந்தகுமாரா,
நாளை மிருகம் கொள்வாயா
மிருகம் தின்ற எச்சம் கொண்டு
மீண்டும் கடவுள் செய்வாயா?"
என்ற மனப்போர் மூலம்,மனிதனை முழுமையாய் மிருகமாக்காது, வன்மை தவிர்த்து,அதே நேரத்தில் மிருகவதை புரிந்து,மென்மையாய் அன்பு கலந்து,முரண்பாட்டுச் சிந்தனை முடக்கி,மனிதனுக்கு மீண்டும் கடவுளை மீட்டெடுக்கும் பாடல்.
அதே கடவுளை,முதலாளியாக்கிப் பார்த்தார் எம்.ஜி.ஆர் தனது
விவசாயி திரைப்படத்தில்.
கடவுளெனும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி
விவசாயி விவசாயி
எனும் அப்பாடல் எம்.ஜி.ஆரின் பல சமூதாயச் சிந்தனை பாடல்கள்போல் அவரது ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது.'ஆளவந் தான்' திரைப்படப் பாடலுக்கான கவிப்பேரரசின் வரிகளுக்கு ஷங்கர் இஷான்லாய் இசையமைக்க, 'விவசாயி'திரைப்படத்தின் A.மருதகாசியின் பாடலை டி.எம்.சௌந்தராஜன் பாட, கே.வி.மகாதேவன் வலுவான இசை அழுத்தம் கூட்டியிருந்தார்.
மனித வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் கடவுளின் பாதையில் கடந்து செல்லும் சம்பவங்களே என்பதை நம்பிக்கையோடு உணர்த்திய வரிகள் தான்,அவள் ஒரு தொடர்கதை திரைப்படத்தில் கண்ணதாசன் எழுதி எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பாடு நிலா எஸ்.பி. பி பாடிய,
"கடவுள் அமைத்து வாய்த்த மேடை
கிடைக்கும் கல்யாண மாலை
இன்னார்க்கு இன்னார் என்று
எழுதி வைத்தானே தேவன் அன்று"
என்ற மனித வாழ்வு முற்றிலும் கடவுளின் கணக்கே எனும் ஆழ்ந்த புரிதல் கொண்ட அற்புதமான பாடல்.
மொத்தத்தில் வள்ளுவரின் கடவுள் வாழ்த்துக் குறள்களில்,
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
எனும் முதல் குறள்,ஆதியாய் அந்தமாய் கடவுளே என்றென்றும் மனிதம் மேம்படும் முதற்பொருளாவான்,என்று அழுத்தம் திருத்தமாய் வெளிப் படுத்தியது போன்று,தமிழ்த் திரைப்படத் தலைப்புகளும் திரையிசை வரிகளும்,பல்வேறு கோணங்களில் கடவுளை சிரசேற்று அரங்கேற் றியுள்ளன.
===================================
No comments:
Post a Comment