கர்ம வினைக்கும் கர்னணனுக்கும் தொடர்புகூறும் கருவுருவாக்கம், கர்ணன் எனும் இதிகாச கதாபாத்திரத்திற்கும்,மனிதவாழ்விலும் வெள்ளித்திரையிலும் நாம் காணும் நிகழ்வுகளுக்கும்,முறையாகப் பொருந்தும் கருத்து வடிவாகும். அமெரிக்க ஆன்மீக எழுத்தாளரும் உற்சாகமூட்டும் பேச்சாளாருமாகிய Wayne Walter Dyer "கர்ம வினை என்பது "மற்றவர் உன்னை எப்படி நடத்துகின்றனர்;நீ அதனை எவ்வாறு எதிர் கொள்கிறாய்"என்பதேயாகும் என்று கூறுகிறார்.
இந்த கருத்தினைத்தான் "உள்ளத் தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா;வருவதை எதிர்கொள்ளடா"எனும் உள்ளத்தில் உரம்போட்ட பாடல் உணர்த்தியது .இது கிட்டத்தட்ட அறிவியல் ஆசான் நியூட்டனின் மூன்றாவது விதியான ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர் வினை உண்டு என்பதற்கு ஒப்பான ஒரு கருத்தாகிறது.
உலக இதிகாசங்களாகிய கிரேக்க மொழியில் ஹோமர்{Homer} படைத்த ஓடிஸீ{Odyssey}, 'இலியட்' {Iiad}இலத்தீனில் வர்ஜில்{Virgil} உருவாக்கிய 'ஈனியட்' {Aenead}மற்றும் ஆங்கிலத்தில் ஜான் மில்டன்{John Milton} எழுதிய பேரடைஸ் லாஸ்ட் {Paradise Lost} ஆகிய அனைத்துமே, ஆன்ம பலத்தை, தியாகத்தின் வாயிலாகவோ,வீரத்தின் வெளிப் பாடாகவோ,புலப்படுத்தின.
இந்து மதத்தின் இதிகாச இதயக் கனிகளான மாகாபாரதம், இராமா யணம் போன்றவை"தருமத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் முடிவில் தர்மமே வெல்லும்"என்பதை வலியுறுத்தின.இதில் கவ்வும் சூதினை வினை என்றும்,வெல்லும் தர்மத்தை எதிர்வினை என்றும் விளக்கம் கூறலாம்.
ஆனால் மகாபாரதத்தில் நாம் சந்தித்த கர்ணனை,ஒரு புறக்கணிக்கப் பட்ட,வஞ்சிக்கப்பட்ட கதாபாத்திரமாகவே காணமுடிகிறது.குந்திதேவி சூரியதேவன் எனும் தாய் தந்தையரால் புறக்கணிக்கப்பட்டு, தனது பாண்டவ வம்ச அரைசகோதரர்களாலும் ஒதுக்கப்பட்டு,இறை அவதாரமாகிய கண்ணனால் வஞ்சிக்கப்பட்ட கர்ணன்,தனது ஈடு இணை யற்ற தருமத்தாலும் தியாகச் செழுமையாலும் மகாபாரதத்தின் முதன்மை கதாபாத்திரம் ஆகிறான்.ஒடுக்கப்பட்ட ஒரு ஆன்மாவுக்கு அடைக்கலம் நல்கிய கவுரவர்கள், தன்னை கண்டுகொள்ளாத பாண்டவ அரை சகோ தரர்களைவிட மிகவும் உயர்ந்த பங்காளிகளாகவே, கர்ணனின் மனதிற் குள்,நீங்கா இடம்பெறுகின்றனர்.
எனவே மகாபாரதம் எனும் இதிகாசம்,புறக்கணிப்பிற்கும்,அப்புறக்கணிப் பிற்கு முற்றிலும் காரணமான பெற்றோர்களுக்கும் இடையே நடைபெறும் வினை /எதிர்வினை போராட்டமே! இந்து மதம் சார்ந்த இந்த இதிகாசம் மாறுபட்ட வகையில் மாறுபட்ட எழுத்தாளர் களால் எழுதப்பட்டு,மாறுபட்ட விமர்சனங்களுக்கு உட்படுத்தப்படுகிறது.மகாபாரதத்தை பொறுத்த மட்டில் நஞ்சு கொண்டு நஞ்சை கட்டுப்படுத்துவது போல,சூதின் மூலக்கரு கொண்டு சூதினை வெல்வது சரியே,என்று காட்டுகிறது.
இதற்கென அவதார மெடுக்கும் இறைவன் கண்ணனே,சகுனி எனும் நஞ்சினை தனது சூழ்ச்சியினால் வெல்கிறார்,எனும் இதிகாச நிகழ்வுகள் அரங்கேறும் வேளையில், கர்ம வினையின் கருத்தாழம் கரைகாண்கிறது. வினையின் பலன் விளைந்தே தீரும்;நல்வினையாயின் நற்பலன்; தீவினை யாயின் தீவினைக்கு இரை."தீதும் நன்றும் பிறர்தர வாரா"எனும் புறநானூற்றின் அழுத்தத்தையும் இதனுடன் இணைத்துக் காணலாம்.
ஆனால் இந்த சதுரங்க ஆட்டக்களத்தில் பகடைக்காயாக கர்ணன் உருட்டப்பட்டு,அவனது தர்மம் களவா டப்பட்டு,அவனது வீரம் வஞ்சிக்கப் பட்டு,ஒரு செயல்பாட்டு வினையின் பிரம்மாண்டப் பொருளாக விஸ்வ ரூபம் எடுக்கிறான்.அவன் படும் வேதனைக்கு சற்று அதிகமாகவே அவனை புறக்கணித்த அவன் அன்னை குந்திதேவியும்,அவனுடைய அரை சகோதரர்களான பாண்டவர்களும் நெஞ்சுறைந்து,கூனிக்குறுகிப் போகி றார்கள் எனும் நிலையினைக் காண்கையில்,அவர்களின் வினைப் பயனை அறுவடை செய்கிறார்கள் என்று முடிவு கொள்ளலாம்.
மனசாட்சியின் உறுத்தல்களுக்கு மாற்று மருந்தே இல்லை.எனவே கர்ணனின் கதாபாத்திரம் கொண்டு கண்ணன்,கவுரவர்ளின் விரல்களால் அவர்களின் கண்ணைக் குத்தினார் என்பதைக் காட்டிலும் அதனினும் மேலான வேதனையை,கர்ணனை புறக்கணித்தவர்களுக்கு ஏற்படுத்தி னார் என்றுதான் காணவேண்டும.கர்ணன் எனும் சொல் கர்மாவிற்கு இணையானது; கர்ணனின் புறக்கணிப்பு,அவனை புறக்கணித்தோர்க்கு எதிர்வினையானது.
இந்த அற்புதமான கர்ணனின் கருவுருவை பத்மினி பிக்ச்சர்ஸ் தயாரிப் பில் வெளியான கர்ணன் திரைப்படம் கம்பீரமாக வெண்திரை நிகழ்வாக் கியது. நடிகர் நிலம் நடிப்பில் உருவான இத்திரைப்படம் தமிழ்த்திரைப் பயணத்தின் ஒரு மைல்கல்.செவாலியர் சிவாஜி கணேசனை மறந்து இத்திரைப் படத்தை நினைத்துப்பார்க்கவே இயலாது. இத்திரைப்படம் திரையரங்கில் வெளியான நாள்,தமிழ் மொழிக்கும் தமிழ் மண்ணுக்கும் ஒரு பொன்னாள் என்றால் அது மிகையல்ல!
இதே புறக்கணிப்பு கருவுருவாக்கத்தை தாங்கி தமிழில் மேலும் இரண்டு திரைப்படங்கள் வெளியாயின.இதில் அர்ஜுன் நடித்து செல்வாவின் இயக்கத்தில் உருவான 'கர்ணா' எனும் திரைப்படம் தனி மனிதன் ஒருவ னின் புறக்கணிப்பு ஆதங்கத்தை சிறப்பாக வெளிப்படுத்தியது.ஒரு காவல்துறை அதிகாரி யின் இரட்டைக் குழந்தைகளில் ஒன்று உடல் ஊன முற்ற குழந்தையாய்ப் பிறக்க, சுயகவுரவம் கருதி அக்குழந்தையினை புறக்கணித்த தந்தைக்கும்,அவ்வாறு புறக்கணிக் கப்பட்ட மகன் பின்னர் பெருமைமிகு வழக்கறிஞராகி,முடிவில் அவனைப் புறக்கணித்த தந்தை கொடுங்குற்றவாளிகளை கைது செய்ய மகனின் தயவினை நாட வேண்டிய சூழ்நிலையில்,சுயநலத்தின் உறுத்தல்கள்,தந்தையின் முதுமை யை பதம் பார்த்தன.இதைத்தான் 'ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும்' என்கிறார், சிலப்பதிகாரம் ஈன்ற இளங்கோ அடிகள் .
இவற்றையெல்லாம் கடந்து,சமீபத் தில் மாரி செல்வராஜின் இயக்கத் தில் தனுஷ் நடித்து வெளியான 'கர்ணன்',ஒரு வஞ்சிக்கப்பட்ட சமூதாயத் தின் இதிகாசமானது.சாதி வெறி சகதியினால் அலைக்கழிக்கப்பட்டு, காவல் துறையினால் கொடுமைப்படுத்தப்பட்டு,பொறுமை எல்லையி னைக் கடக்க வீறுகொண்டெழும் தாழ்த்தப்பட்ட இனம்,சமூகப்புறக் கணிப்பின் எதிர்வினையாகிறது.பேரூந்துகள் நிறுத்தம் மறுக்கப் பட்டு ,கல்வி வாய்ப் புகள் கதைவடைக்க,பிரசவத்திற்கும் தாய்மைக்கும் கூட அங்கீகாரம் கிட்டாத நிலையில்,கர்ணன் எனும் பெயர் சூட்டப்பட்ட, சுயமரியாதை நிரம்பப்பெற்ற இளைஞன் தலைமையில்,மொத்த கிராமமும் எதிர் வினைக்கு மல்லு கட்டுகிறது.
காட்சிகள் ஒவ்வொன்றும் நடைமுறை வாழ்வின் துல்லியமான படப் பிடிப்புகளாகி,ஒவ்வொரு வீட்டின் மூலை முடுக்கெல்லாம் பயணித்து, நிழல் மூலம் நிசம் அரங்கேற, பிரமித்துப்போகக்கூடிய ஒரு அற்புத திரைக் காவியமே மாரி செல்வராஜின் 'கர்ணன்'.மையப்புள்ளியை வலுவாகப் பற்றி நகரும் திரை சம்பவங்களில் கர்ணன் எனும் இதிகாச நாயகன் மட்டுமல்லாது, வேறு மகாபாரத பெயர்கள் தாங்கிய துரியோதனன், அபிமன்யு, திரௌபதை,எனும் கதா பாத்திரங்களும் ஆழமாக இடம் பிடிக்கின்றனர்.
இதிகாசமும் இயல்பு வாழ்க்கையும் ஒன்றான மனப் பிரமையில் நாமிருக்க,முன்னங்கால்கள் கட்டப் பட்ட கழுதையொன்று அடிமைத் தனத்தை பறைசாற்ற,கிராமத்து சிறுவன் ஒருவன் ஒற்றைக் குதிரை யுடன் போருக்குத் தயாராக,வலிப்பு வந்து கேட்பாரற்று மாண்டு போன கர்ணனின் இளைய சகோதரி, களிமண் பொம்மையென அவ்வப்போது காட்சிதர, வித்தியாசமான எதிர்வினைக் காட்சிகளால் வியப்பில் ஆழ்ந்து போகிறோம்.
தனுஷ் குன்றிலிருந்து அருவியில் குதித்து வாள் கொண்டு இரண்டாக மீன் பிளக்கும் காட்சிமுதல்,இறுதியில் காட்டுமிராண்டிக் கொடுங்கோல னான காவல் அதிகாரியின் கழுத்தை அறுக்கும் வரை,வீரத்தில் அடர்ந்து வலிமையுடன் பயணிக்கிறார்.தனி மனித புறக்கணிப்பே தாங்காது என்றால்,சமூகப் புறக்கணிப்பின் வீரியம் எதிர்வினையாகையில் கண் சிவந்து மண் சிவக்கும் மாட்சிமையே, மாரி செல்வராஜின் கர்ணன்.
தனுஷ் தலைமையேற்க,லால் பால்,ஜி.எம்.குமார்,சண்முகராஜன் ராஜீஷா விஜயன்,யோகி பாபு, நடராஜன் சுப்பிரமணியன் {காவல்துறை அதிகாரி யாக என்ன ஒரு அழுத்தமான கொடூரம்} எல்லோரும் அருமையாக அரங் கேறுகின்றனர்.சந்தோஷ் நாராயணன் இசை அடித்தட்டு மக்களின் ஆழ் மனதை அரவணைத்து அங்குலம் அங்குலமாய் சங்கமிக்கிறது."கண்டா வரச்சொல்லுங்க"பாடலின் புதுமையும் ஏற்ற இரக்கமும் சமூக ஏற்றத் தாழ்வினை சூசகமாக இசைப் புரிதலாக்குகிறது.மொத்தத்தில் அடித்தட்டு மக்களின் நியாய உணர்வுகளை குப்பைதொட்டியிலிடும் மனிதகுலமே ஒரு மாபெரும் குப்பைத் தொட்டி எனலாம்.
சுயநலம் சுத்தியலாகவும்,சூது ஆயுதம் செய்யும் அடித்தளமாகவும் இருக்குமெனில்,புறக்கணிப்பே அச்சூழ்நிலையில் உருப்பெறும் ஆயுத மாகும்.வேறு கோணத்தில் பார்க்கையில்,புறக்கணிப்பின் எதிர்வினை புரட்சி என அறியலாம்.'சாது மிரண்டால் காடு கொள்ளாது'எனும் பழ மொழிக்கேற்ப,குனியக் குனிய குட்டுப்பட்டு எழுகையில், எதிர் வினைத்தாக்கம் இரட்டிப்பாகும். இதுவே கர்ணனின் கருவுருவாகும் இதுவே கர்மா கற்றுத்தரும் பாடமுமாகும்.
பின்குறிப்பு:- எனது முன்னாள் மாணவர் ஒருவரின் வேண்டுகோளை ஏற்று ஏற்கனவே இவ்வலைப்பதிவில் பதிவிடப்பட்ட The Karna Concept எனும் ஆங்கிலக் கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.இது அக்கட்டுரையின் முழுமையான மொழி பெயர்ப்பல்ல. மேலும் ஒரு சில கருத்துகளையும் சேர்த்து,தமிழ் மொழிக்கேற்ப தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.
ப.சந்திரசேகரன்
This review has deep thoughts which is coming from Mahabharatham character Karnan. Will the movie again with this perspective. Thank you sir.
ReplyDelete