Friday, November 11, 2022

நல்லதுக்கு நாற்றுநடும் தமிழ்த்திரை

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது நன்று

  எனும் வள்ளுவர் வாக்கினை நெஞ்சில் தாங்கி நின்று, தமிழ்த்திரை யின் நன்றல்லா படைப்புகளை புறம் தள்ளி,இந்நாள் வரை என் நினைவில் நிற்கும் திரைத்துளிகள்'நல்ல' எனும் சொல்லழகால் திரைப்படத் தலைப்பு களாகவும் பாடல்களாகவும் தமிழ்த் திரையினை அலங்கரித்ததை இங்கே பதிவாக்குகிறேன்.

  பொதுவாக நன்மையை மட்டு மல்லாது,நன்மை அல்லா நிலைகளை யும்'நல்ல தலைவலி'நல்ல காய்ச்சல்' 'நல்லா நாக்க பிடுங்கற மாதிரி கேளு' போன்ற சொற்பயன்பாடுகள்,நன்மை நிலை கடந்து நிற்பது,மொழியின் நன்மையோ அன்றின் தீமையோ,யார் கூறுவர்!.

  ஆனால்,நல்ல எனும் முன்சொல் கொண்ட,என்.எஸ்.கிருஷ்ணனின் 'நல்ல தம்பி',எம்.ஆர்.ராதாவின் 'நல்ல இடத்து சம்மந்தம்', ஜெமினி கணேச னின் 'நல்ல தீர்ப்பு',சிவாஜி கணேச னின்'நல்லதொரு குடும்பம்', எம்.ஜி.ஆரின் 'நல்லவன் வாழ்வான்'& 'நல்ல நேரம்',ஜெய்சங்கரின் 'நல்லதுக்கு காலமில்லை' ரஜினி காந்தின் 'நல்லவனுக்கு நல்லவன்', விஜயகாந்த்தின் 'நல்லவன்',போன்ற பல திரைப்படங் களை தமிழ்த்திரை தந்திருக்கிறது.

   பாடல்களைப் பொறுத்தமட்டிலும் 'நல்ல'எனும் சொல் எம்.ஜி.ஆர் திரைப் படங்களில் நிறைவுடனே  இடம்பெற்றி ருக்கிறது.'பெற்றால்தான் பிள்ளையா' திரைப்படத்தில்  கருத்துச் செறிவுடன் அமைந்த

'நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி

இந்த நாடே இருக்குது தம்பி'

  எனும் பாடலும்,'நம்நாடு'திரைப் படத்தில் அறிவுறையாய் அமந்த,

"நல்லபேரை வாங்கவேண்டும் பிள்ளைகளே

நம் நாடு எனும் தோட்டத்திலே

நாளை மலரும் முல்லைகளே"

   எனும் அழகான பாடலையும் டி.எம்.எஸ் பாட, இரண்டு பாடல்களை யும் வாலி எழுதி,மெல்லிசை மன்னர் பலமுறை கேட்டு ரசிக்கும் வண்ணம் இசையமைத்திருந்தார்.

  எம் ஜி.ஆரின் 'விவசாயி'திரைப்படத் தில் உடுமலை நாராயணகவி எழுதிய,

"நல்ல நல்ல நிலம் பாரத்து நாமும் விதை விதைக்கனும்

நாட்டு மக்கள் மனங்களிலே நாணயத்தை வளர்க்கனும்" 

  எனும் தரமான பாடலை,திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் இசையில், டி.எம்.எஸ் பாடியிருந்தார்.

  நல்லதைக் கொண்டாடும் குடும்பங் களில் நன்மை பெருகுமென்பர்.இது தொடர்பாக'நம்ம வீட்டு லட்சுமி' திரைப் படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய,

"நல்ல மனைவி நல்ல பிள்ளை

நல்ல குடும்பம் தெய்வீகம்"

  எனும் நல்லபாடலை,கவியரசு கண்ணதாசனும் மெல்லிசை மன்னர் விஸ்வநாதனும் இணைந்து மனதில் சுகம் பரப்பி,நல்லதை நயம்பட நிலை நிறுத்தினர்.இதுபோன்ற கருத்தை மைய்யப்படுத்தித்தான்,'தங்கப் பதக்கம்' திரைப்படத்தில் டி.எம்.எஸ் ஸும் P.சுசிலாவும் பாடிய,

"நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்.

அன்புமணி வழங்கும் 

சுரங்கம் வாழ்க"

எனும் பாடல்,அதே கண்ணதாசன் வரிகளிலும்,எம்.எஸ்.வி.இசையிலும் இனிமை கொட்டியது.

"நல்லாத்தான் யோசிக்கிறீங்க

நமக்கென்ன கொறஞ்சுபோச்சு"(சொந்தம்)

   என்று நம்பிக்கை உரமூட்டுவதும், நல்ல உள்ளங்களை வாழ்த்தும் வகையில்,

'நல்ல மனம் வாழ்க

தாடுபோற்ற வாழ்க

தேன் தமிழ் போல் வான்மழைபோல்

சிறந்து என்றும் வாழ்க'(ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது)

"நீங்க நல்லாயிருக்கனும் நாடு முன்னேற

  இந்த நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற"(இதயக்கனி)

   என்று மனம் நிறைந்து வாழ்த்துவதும் நன்மையினை பிறருக்கு,வசந்தமென பரப்பும் பரவச உணர்வுகளாம்.

  இதில் முதலாவது பாடலை P..சுசலா பாடினார் என்பது தவிர வேறு விவரங்கள் பெற இயலவில்லை. இரண்டாவது கே.ஜே.ஏசுதாஸ் பாடலை கண்ணதாசன் எழுத,வே.தட்சினா மூர்த்தி இசையமைத்திருந்தார். மூன்றாம் டி.எம்.எஸ் P..சுசிலா குழுவின ருடன் பாடிய பாடல்,புலமைப்பித்தனின் வரிவடிவத்திலும் மெல்லிசை மன்ன ரின் இசையிலும்,எழுச்சிமிகு பாடலாக அமைந்திருந்தது.

  இதேபோல நல்லதை புறக்கணிக்கை யில் அல்லது உதாசீனப்படுத்துகை யில் ஏற்படும் மன உளைச்சலையும் வேதனையையும்,அந்நிலை அறிந் தோரே உணர்வர்.இந்த ஆழமான வேதனையை உணர்த்தும் பாரதியார் பாடலான

"நல்லததோர் வீணைசெய்தே 

அதை நலங்கெட புழுதியில் 

எறிவதுண்டோ

சொல்லடி சிவசக்தி 

எனை சுடர்மிகும் அறிவுடன் 

படைத்துவிட்டாய்" 

  எனும் வலியேற்றும் வரிகளை, எஸ்.பி.பி. குரலில் கேட்டு கேட்டு, நம்மில் சோகத்தின் விளிம்பினைத் தொடாதவர் இருக்க வாய்ப்பில்லை. எம்.எஸ்.வி இசையில் இந்த'வறுமை யின் நிறம் சிகப்பு'திரைப்படப்பாடல் இப்போது கேட்டாலும் மனம் கனக்கும்.

   நல்லதைப் பிறர்கூறக்கேட்பதும்,நாம் நல்லவர் என பிறர் மதிப்பிடுதலைக் கண்டு மகிழ்வுறுதலும்,மனித வாழ்வின் மாயையின் ஒரு நிலையே! இருப்பினும்,நாம் தல்லவர் என்று நமக்கு நாமே உறுதிப்பட நினைப்பது, தன்னம்பிக்கையின் தரநிலையாகும். இந்த வகையில் அமைந்ததே'படித்தால் மட்டும் போதுமா'திரைப்படத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் திடமான இசையில் கண்ணதாசனின் வரிகளான, 

"நல்லவன் எனக்கு நானே நல்லவன்

சொல்லிலும் செயலிலும் வல்லவன்"

   எனும் டி.எம்.எஸ் P.B.சீனிவாஸ் இரு வரும் குழுவினருடன் பாடி ,கேட்போர் நெஞ்சங்களில் என்றென்றும் அதிர்வுகளை ஏற்படுத்தும் கம்பீரப் பாடல். 

  மண்ணில் மனிதர் எல்லோரும் நல்லவரே என்று நினைக்கும் பட்சத்தில் வாழ்க்கை மணக்கிறது. இனிக்கிறது.நம்பிக்கை ஒளியூட்டும் 'எல்லோரும் நல்லவரே' எனும் கருத்து  'கிருஷ் ணபக்தி'திரைப்படத்தில் P.U.சின்னப் பாவின் இனிய குரலில் பாடல் வரிகளாகவும் பின்னர் அதுவே 1975-இல் ஒரு திரைப்படத் தலைப்பாக வும் மனதைக் கவர்ந்தது.'எல்லோரும் நல்லவரே'எனும் அத்திரைப்படத்தில், கே.ஜே.ஏசுதாஸ் குரலில் அமைந்த, அமரர் புலமைப்பித்தனின்

"பகை கொண்ட உள்ளம்

துயரத்தின் இல்லம்.

தீராத கோபம் யாருக்கு லாபம்"

  எனும் தத்துவம் நிறைந்த பாடல் வி.குமாரின் மென்மையான இசையில் மனிதச் சிந்தனையை மாண்பறச் செய்தது. நல்லதை நினைத்தாலே நன்மை பெருகுமென்றும்,தீமையை புரிந்தால் மட்டுமே தீமையாகும் என்றும்,நெறியியல் உரைத்தாலும், நல்லதை நினைத்து நல்லதை செய்கையில்,நன்மை இரட்டிப்பாகிறது என்பதை, நல்லவர்கள் பலரும் நமக்கு அவ்வப் போது உணர்த்துகின்றனர். இதைத்தன் தமிழ்த்திரை தலைப்பு களாலும்,கதை வடிவாலும்,பாடல்களா லும்,நமக்கு அடிக்கடி நினைவறுத்து கிறது.

                                  ============0============


2 comments:

  1. சிறப்பு... நல்ல நல்ல பாடல்களை மீண்டும் நினைவுபடுத்தியமைக்கு நன்றி சார் ..

    ReplyDelete