மண்மணக்கும்,மனித மனம் மயங்கும் மாலைப்பொழதினை ஒரு அதிகாரத்தின் மூலம் காந்தக் கருத்துக்களாய் மகசூல் செய்து,களஞ்சியம் கண்டார் வள்ளுவர்.'பொழுது கண்டு இரங்கல்'எனும் அவ்வதிகாரத்தில் பத்து குரள்களுமே பரவசமூட்டுபவை என்றாலும் அதில் இரண்டை மட்டும் இப்பதிவில் முன்னிறுத்துவது இவ்வலைப் பதிவுக்கே பெருமை சேர்க்கும்.
மாலையோ அல்ல மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது
இதற்கான கலஞரின் குறளோவிய விளக்கம் பின்வருமாறு:-
'நீ மாலைப் பொழுதாக இல்லாமல் காதலரை பிரிந்திருக்கும்,மகளிர் உயிரைக் குடிக்கும்,வேலாக இருப்பதற்கு,உனக்கொரு வாழ்த்து.'
தமிழறிந்தோர் நெஞ்சம் நிறைந்த மற்றொரு குறளே,
காலை அரும்பி பகலெல்லாம் போதாகி
மாலை மலரும் இந்நோய்
இதற்கான கலைஞரின் விளக்கம்'காதல் என்பது காலையில் அரும்பாகி பகலெல்லாம் முதிர்ச்சி அடைந்து மாலையில் மலரும் நோய்' என்பதாகும்.
வள்ளுவரே தனது நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்களில்,ஒரு அதிகாரத்தை முழமையாக ஒரு பொழுதிற்கு ஒதுக்கியிருக்கிறாரெனில், பல லட்சக்கணக்கலான திரைப் பாடல்களில்,மாலைப் பொழதை வர்ணிக் கும் அல்லது விமர்சிக்கும்ஒரு சில பிரபலமான பாடல்களையாவது, இவ்வலைப்பதிவில் இதயம் குளிர பதிவிடத் தோன்றியது.
முதல் முதலாக நம்மை மாலை மயக்கத்தில் தள்ளிய பாடல்,ஏ.எம் ராஜா ஜிக்கி குரல்களில்,தஞ்சை ராமைய்யாதாசின் வரிகளை,விஸ்வநாதன் ராமமூர்தியின் இசைத் தொடக்க காலங்ளில்'குலேபகாவலி'திரைப்படத் தில் கேட்டு,இன்றும் கேட்டுக்கொண்டிருக்கும்,
"மயக்கும் மாலை பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீவா
இன்னலைத் தீர்க்கவா"
எனும் மோகத்ததில் மூழ்கடித்த பாடல்.
பின்னர் இதே தஞ்சை N.ராமைய்யாதாசின் வரிகளை,வேதாந்தம் ராகவைய்யாவின் மேன்மைமிகு இசையில்,P.B.சீனிவாசின் மென்மை யான அதிர்வுக்குரலில்,ஆனந்தம் அளந்த பாடலே,
"மாலையில் மலர்ச்சோலையில்
மதுவேந்தும் மலரும் நீயே"
எனும்'அடுத்தவீட்டுப்பெண்'திரைப்படப்பாடலாகும்.இந்த இரண்டு பாடல்களுக்கும் முன்னரே 'காவேரி' எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற,
"மஞ்சள் வெயில் மாலையிலே
வண்ணப்பூங்காவிலே
பஞ்சவர்ண கிளிகள் கொஞ்சும்
பரவசம் பார்".
எனும் பாடல் எம்.எல்.வசந்தகுமாரி சி.எஸ் ஜெயராமன் குரல்களில்,மாலைப் பொழுதை,நிறத்தால் அழகுபடுத்திப் பார்த்தது. இப்பாடலை உடுமலை நாராயணகவி எழுத,விஸ்வநாதன் ராமமூர்த்தி,ஜி.ராமநாதனுடன் இணைந்து,இசையமைத்திருந்தனர்.
மாலைப் பொழுதினில் காதலில் திளைக்கும் மகத்தான அனுபவத்தை, கண்ணதாசன் வரிகளில் பி.சுசிலாவும் டி.எம்.எஸ்ஸும்,'ஊட்டிவரை உறவு' திரைப்படத்தில்,
"அங்கே மாலை மயக்கம் யாருக்காக
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் என்று காத்திருந்தால்
ஒரு நாளல்லவோ வீணாகும்"
என்று சுகமாய்ப் பாட,அப்பாடல் காட்சியில் காதலர்களாக கே.ஆர் விஜயாவும் சிவாஜி கணேசனும் தோன்றி அசத்த,அதனைக் கண்டு சிவாஜியின் தந்தையாக நடித்த டி.எஸ்.பாலைய்யா கிடுகிடுக்க, காட்சியும் பாடலும் மெல்லிசை மன்னரின் இசையில், ரசிகர்களை திக்கு முக்காடச்செய்தது.
'தரிசனம்'என்னும் திரைப்படத்தில் கண்ணதாசனின் கருத்தாழமிக்க பாடலொன்றை எல்.ஆர்.ஈஸ்வரியும் டி.எம்.எஸ்ஸும் மோக நிலைப் பாட்டில் எதிர் எதிர் நிலையிலிருந்து பாடியிருந்தனர்.
"இது மாலை நேரத்து மயக்கம்
பூமாலை போலுடல் மணக்கும்"
என்று பெண் குரல் ஒலிக்க,அந்த உணர்வினை சாய்த்து,
"இது கால தேவனின் கலக்கம்
இதை காதல் என்பது வழக்கம்
ஒரு ஆணும் ஒரு பெண்ணும்
பெறப்போகும் துன்பத்தின் துவக்கம்"
என்று துறவு மனப்போக்கில் ஆண்குரல் ஆசையை முடக்கும்.இந்த முரண்பாட்டுக் குரல்களை சூலமங்களம் ராஜலட்சுமி தனது தரமான இசையால்,செவிகள் நிறைத்து இதயம் இறுகச்செய்தார்.
மாலைப் பொழுதில் மயங்கி,மறைந்த பாடலரசி ஸ்வர்ணலதா'சத்ரியன்' திரைப்படத்தில் பாடிய என்றும் நெஞ்சில் நீங்கா இடம்பெற்ற பாடலே,
"மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச"
எனும் இசை ஞானியின் இசையிலூறிய வாலியின் வசியமூட்டும் வரிகள்.
இந்த மன நிலையில் ஆண் மகனை வைத்துப் பார்க்கையில்,இளவெயில் மாலைப் பொழுதொன்றில் ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தது போல்,தன்னை தொலைத்தவர் சிலருண்டு. அப்படி மனதை தொலைத்த ஒருவரை குறிப்பிடும் பாடலே,'கஜினி' திரைப் படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கவிஞர் தாமரையின் வரிகளாய்,கார்த்திக் பாடிய,
"ஒரு மாலை இளவெயில் நேரம்
அழகான இலையுதிர் காலம்
வெகு தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்.
அங்கே தொலைந்தவன் நானே".
எனும் அபூரவப் பாடல்.
'அடுத்தவீட்டுப் பெண்'திரைப்படத்தில் மாலைப் பொழுதுக்கு தனி ஆவர்த்தனம் புரிந்த P.B சீனிவாஸ் பின்னர் எஸ். ஜானகியுடன் இணைந்து 'பாசம்' திரைப் படத்தில் மாலைப் பொழுதுக்கு பெருமை சேர்த்தார். அவரும் ஜானகியும் மாலையில் திளைத்த அப்பாடல்,
"மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தில்
மயங்கிய ஒளியினைப் போலே
மயக்கத்தை தந்தவள் நீயே
வழியில் வந்தவள் நீயே"
என்று கண்ணதாசன் வரிகளுக்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி மெட்டமைத்து,சீனிவாஸ் குரலில் அமுதகானமாய்த் தொடங்கும்.
மாலைப்பொழுதின் முடிவில் இருள் கவ்விட பறவைகள் ஒன்றை ஒன்று தேடுவதை பக்குவமாய் விளக்கிடும் பாடலை,'நீதியின் மறுபக்கம்'திரைப் படத்தில் கே.ஜே ஏசுதாஸும் எஸ்.ஜானகியும் இசைவானில் பறந்துப் பாடிடக் கேட்டிருப் போம்.
"மாலை கருக்கலில்
சோலைக் கருங்குயில் ஏன் பாடுதோ
சோடிக்குயிலொன்னு பாடிப்பறந்தத
தான் தேடுதோ
கண்ணுக்குள்ளே வா வா
நெஞ்சுக்குள்ளே போ போ
என் ஜீவனே"
எனும் நம் ஜீவனில் கலந்த வரிகளை,கவிப்பேரரசு எழுத இளையாரஜா இசையால் வரிகளை விண்ணுயர்த்தினார்.
மாலை வேளைக்கு பொன்வண்ணம் பூசிய,பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரின் இதய வீணை திரைப்படத்தில்,டி.எம்.எஸ்ஸும் பி.சுசிலாவும் சங்கர் கணேஷ் இசையில் பாடிய,
"பொன்னந்தி மாலைப் பொழுது
பொங்கட்டும் இன்ப நினைவு"
எனும் புலமைப்பித்தனின் பாடலும்,'நிழல்கள்'திரைப்படத்தில் இளையராஜாவின் இசைத்தட்டில்,பாடும் வானம்பாடி எஸ்.பி.பி.யின் மிகமெல்லிய குரலில் அமைந்த,
"ஹே ஹும் ல ல லா
பொன் மாலைப் பொழுது
இது ஒரு பொன் மாலைப் பொழுது
வானமகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்"
எனும் மெய் மறக்கச்செய்யும் வைரமுத்து வின் வரிகளும் மாலைப் பொழுதை மங்களகரமாக்கின.
. மாலைப்பொழுதிற்கு மகுடம் சூட்டிய பாடல்கள் எத்தனை வந்தாலும்,அவற்றை எல்லாம் கேட்டு நாம் பரவச முற்றாலும், கடந்த நூற்றாண்டின் திரை கடல் கடந்த பலருக்கும் வாழ்நாள் கனவுகளாய், நினைவுகளாய்,நிரந்தரம் கண்ட ஒரே பாடல்,'பாக்கியலட்சுமி'படத்தில் பி.சுசிலாவின் இமயக்குரலில் உணர்வு களின் உச்சம் தொட்ட,
"மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான்
கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை
காரணம் ஏன் தோழி"
என்று தொடங்கி,அதனிடையே தோன்றும்
"இளமையெலாம் வெறும் கனவுமயம்
அதில் மறைந்தது சில காலம்
தெளிவுமறியாது முடிவும் தெரியாது
மயங்குது எதிர்காலம்"
எனும் வரிகள் எல்லாம் சேர்ந்து, கவியரசின் கவிதை அமரத்துவத்தை விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசைக் களஞ்சியத்தின் விடுகதை பொக்கிஷமாய் விட்டுச்சென்றது.கடைசியில் இப்பாடலை குறிப்பிடுவதற்குக் காரணமே,இப்பாடலின் முதன்மைத்துவத்தை முத்தாய்ப்பாய் குறிப்பிட்டு,இந்த பதிவை முடிக்கத்தான். மொத்தத்தில் மாலைப் பொழுதுப் பாடல்கள் தமிழ்த்திரையின் அன்றாட தீபாவளித் திரு நாள் கொண்டாட்டங்களாசின்றன என்பதே காலக்கண்ணாடி காட்டும் மத்தாப்புக் காட்சி களாகும்.
=≈=====≈==0==≈=====≈=
Super analysis.
ReplyDeleteThank You.
Deleteகுறிப்பிட்ட பாடல்கள் எல்லாம் நெஞ்சை தொட்டு வருடிய பாடல்கள்......அருமை !! அய்யா!!
ReplyDeleteநன்றி.பிரபு.
Deleteஅற்புதமான பதிவு... அருமையான பாடல்கள்... சிறப்பு சார்.... நிழல்கள் படத்தில் வரும் இது ஒரு பொன் மாலை பழுது பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது.... அதே போல் மாலை பொழுதின் மயக்கத்திலேயும் கருத்தாழமிக்க அற்புதமான பாடல்.... சிறப்பு சார்
ReplyDeleteநன்றி திரு.மணிகண்டன்.
ReplyDelete